கொள்ளை கும்பல்
ஆட்சியின் நிதிநிலை அறிக்கை வெளிப்படுத்தும்
அனைத்தும் தழுவிய
குற்றமய அலட்சியம்
பயிரிழப்பால்
உயிரிழந்த தமிழக விவசாயிகளின் உறவினர் நீதி கோரி, நிவாரணம் கோரி 17 நாட்களுக்கும் மேலாக டில்லியில் போராடிக்
கொண்டிருக்கிறார்கள். மன அழுத்தம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று மனதோடு
பேசிய மோடி, தங்கள் மன
அழுத்தத்தை மட்டுமின்றி, துன்பங்களை,
பிரச்சனைகளை பொதுவில்
வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த விவசாயிகள் பற்றி அக்கறை காட்டவில்லை.
தமிழக
சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை பற்றி விவாதம் நடத்திய ஆட்சியாளர்களும் இந்த
விவசாயிகள் போராட்டம் பற்றி பேசாமல், இடைத்தேர்தலில் அக்கறை செலுத்தினார்கள்.
விவசாயிகளின்
இந்தத் தீவிரமான போராட்டம் நடந்து கொண்டிருக்கும் பின்னணியில் வெளியிடப்பட்டு
விவாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் 2017 - 2018 நிதிநிலை அறிக்கை, அவர்கள்
எழுப்புகிற எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. அவர்கள் சந்திக்கிற எந்தப்
பிரச்சனைக்கும் தீர்வு காண வழி சொல்லவில்லை. விவசாயிகளை, அவர்கள் எதிர்கொள்கிற துன்பங்களை முழுக்க
முழுக்க புறக்கணிப்பதாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. அதாவது இந்த ஆண்டு
முழுவதும் விவசாயிகள் நிலையில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை என்று அறிக்கை
சொல்கிறது.
வறட்சி நிவாரணப்
பணிகள் மற்றும் புயல் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.60,000 கோடி வரை கேட்டுள்ளதாகவும் பயிரிழப்பால்
பாதிக்கப்பட்ட 32 லட்சத்து 30 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வங்கி கணக்குகளில் செலுத்தப்படுவதாகவும்
அறிக்கை சொல்கிறது. அதாவது ஒருவருக்கு ரூ.7,000! விவசாயிகள் விவசாயத்துக்காக அவர்கள் வாங்கிய
கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்கள் சாவை நோக்கி
விரட்டப்படுவதற்கு கடன் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. கடன் தள்ளுபடி
அறிவிக்கப்படாமல் அவர்கள் சற்று மூச்சு விடுவதே சிரமம் என்ற நிலைமை இருக்கும்போது,
அந்த தீவிரமான, உடனடி நெருக்கடிக்கு ரூ.7,000 தவிர வேறு எந்தத் தீர்வும் நிதி நிலை
அறிக்கையில் காணப்படவில்லை.
தமிழ்நாட்டின்
கிராமப்புறத்தில் நிலவுகிற நெருக்கடியை சமாளிக்க, சில பத்தாயிரம் கோடிகள் உடனடியான வேண்டும்
என்று மாநில அரசே மத்திய அரசிடம் கேட்கும் நேரத்தில் கிராமப்புற வறுமை ஒழிப்புத்
திட்டங்களுக்கு ரூ.469 கோடி ஒதுக்கீடு
என்று அறிக்கை சொல்கிறது. கோடிக்கணக்கான கிராமப்புற வறிய மக்கள் வாழ்வாதாரம்
இழந்து தவிக்கும் நிலையில் இந்த ரூ.469 கோடியில் யாருடைய வறுமையை எந்தத் திட்டத்தை அமலாக்கி ஒழிக்கப் போகிறார்கள்?
தமிழக அஇஅதிமுக அரசின்
குற்றமய அலட்சியம், ஏற்கனவே
துன்பத்தில் இருக்கும் விவசாயிகளை கிராமப்புற மக்களை கேலி செய்கிறது.
விளைபொருட்களுக்கு
கூடுதல் விலை, கட்டுப்படியாகிற
விலை வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டிருக்கும்போது, குறைந்தபட்ச ஆதார விலையில் மத்திய அரசு
நிர்ணயிப்பதை விட கூடுதலாகத் தர வெறும் ரூ.200 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
விவசாயிகள் துயர் தீர்க்க இது எந்த விதத்திலும் உதவப் போவதில்லை.
ஜெயலலிதா வழியில்
நடப்பதாகச் சொல் லும் பழனிச்சாமி அரசு மிகச்சரியாக ஜெயலலிதா போல் மேல்பூச்சு
திட்டங்களை முன் வைக்கிறது. சிறுகுறு விவசாயிகள் கூட்டுறவு குழுக்கள்
உருவாக்கப்பட்டு 100 விவசாயிகள்
கொண்ட குழுவுக்கு மூலதன நிதியாக ரூ.5 லட்சம் தரப்படும். இந்த ஆண்டில் இதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. இந்தத் திட்டத்தில் 2 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று
சொல்லப்படுகிறது. மீதமுள்ள விவசாயிகள் என்ன ஆவார்கள்? அந்த ரூ.5 லட்சத்தை வைத்து 100 விவசாயிகள்தான் என்ன செய்து விட முடியும்?
விவசாயிகள் தற்கொலைகளை,
அதிர்ச்சி மரணங்களைத்
தடுக்கும் நகர்வு எதையும் இந்த அறிவிப்பில் காண முடியவில்லை. சொந்த வருமானம்,
மத்திய வரிகளில் மாநில
அரசின் பங்கு, மத்திய அரசின்
திட்ட மானியங்கள் என ரூ.1,59,363 கோடி வருமானம்
உள்ள மாநிலத்தில் விவசாயிகள் துயர்தீர்க்கும் நடவடிக்கைக்காக இவ்வளவுதான் ஒதுக்க
முடியுமா?
வறட்சியை
கணக்கில் கொண்டு நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்கள் வேலை திட்டம் என்று அறிவித்த பிறகு
ரூ.1000 கோடி மட்டுமே
ஒதுக்கப்படுகிறது. ஓராண்டில் எத்தனை பேருக்கு, என்ன கூலியில், எத்தனை நாட்கள் வேலை இந்த ஒதுக்கீட்டில் உறுதி
செய்யப்படும்? சட்டக் கூலி
அமலாக்கம், கூலி பாக்கி என
பல்வேறு பிரச்சனைகளை இந்த ஒதுக்கீட்டில் மாநில அரசு எப்படி சமாளிக்கும்?
வேலை உறுதித்
திட்டத்தில் 65,874 பேர் தூய்மைப்
பணியாளர்களாக வேலை செய்வார்கள் என்று அறிக்கை சொல்கிறது. இவர்களை தூய்மை காவலர்கள்
என்று அரசு அழைக்கிறது. இப்படிச் சொல்லிவிட்டால், மற்ற தூய்மைப் பணியாளர்கள் வரையறைகளுக்குள்
இவர்கள் வர மாட்டார்கள். தொழிலாளர் உரிமைகள் என்று கேள்வி கேட்க முடியாத நிலையில்
என்றும் இருப்பார்கள்.
வறட்சியால்
விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் அதன் தீய விளைவுக ளுக்கு பலியாகிக்
கொண்டிருக்கும்போது, பாசன வசதிகளை
மேம்படுத்த பெரிய திட்டங்கள் வேண்டும் என்று கோரிக்கை எழும்போது நீர்நிலைகளைப்
பாதுகாக்க குடிமராமத்து முறையில் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டும் இந்தத் திட்டத்தில் பணிகள்
நடந்துள்ளதாக குறிப்பிடும் அறிக்கை அதனால் விளைந்த மேம்பாடுகள் என்ன என்று
குறிப்பிடவில்லை. விவசாயிகளின் தற்கொலைகள், மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வதை அந்த
நடவடிக்கைகள் தடுக்கவில்லை. அதேபோன்ற விளைவற்ற
நடவடிக்கைகளே மீண்டும் தொடரும் என்று அறிக்கை சொல்கிறது. முந்தைய நிதிநிலை
அறிக்கைகளில் சொல்லப்பட்ட அதே திட்டங்கள் குறிப்பிடப்பட்டு நீர்வள ஆதாரத்துக்கென
ரூ.4790 கோடி ஒதுக்கீடு என்று
நிதி நிலை அறிக்கை சொல்கிறது. இந்த ஆண்டும் இது ‘செல்ல வேண்டிய இடங்களுக்குச்’ சென்று சேரக் கூடும்.
விவசாயிகளுக்கும்
கிராமப்புற வறிய மக்களுக்கும் கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம்
போன்ற அடிப்படையான நடவடிக்கைகளுக்கும் செய்யப்பட்டுள்ள ஒதுக்கீட்டையும் நெடுஞ்சாலை
போக்குவரத்துக்கு செய்யப்பட்டுள்ள ஒதுக்கீட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால்
கார்ப்பரேட் நிறுவனங்களை, ஒப்பந்ததாரர்களை
கொழுக்க வைக்க தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அம்பலமாகும்.
146 கி.மீ சாலையை
நான்கு வழிச்சாலையாக தரமுயர்த்த ரூ.1400 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு, இனிமேல்தான்
துவங்கப்படவுள்ள இந்தத் திட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.1508 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத்
திட்டம் அரசு - தனியார் பங்கேற்பில் நடக்கிற ஒரு திட்டம். ஒரு கிலோ மீட்டர் சாலையை
தரமுயர்த்த ரூ.10 கோடி செலவு
ஆகுமா? நெடுஞ்சாலைத் துறைக்கென
இந்த ஆண்டு ரூ.10,067 கோடி மொத்த
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 100 விவசாயிகளுக்கு
ரூ.5 லட்சம், 150 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.1000 கோடி, ரூ.2 லட்சத்தில்
கட்டப்படும் குடிசை மாற்று வாரிய வீடு ஆகியவற்றை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
நெடுஞ்சாலைத்
துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற நிதியை வேறு சில ஒதுக்கீடுகளுடனும் ஒப்பிட்டுப்
பார்த்து தமிழக அரசின் நிஜமான அக்கறை யார் மீது என்று தெரிந்து கொள்ள முடியும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில், விடுதிகளில் உள்ள கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம்
மாணவர்களுக்கு உணவுக்கு ரூ.120 கோடி
ஒதுக்கப்படுகிறது. அதாவது ஒரு மாணவருக்கு ஓர் ஆண்டு உணவுக்கு ரூ.8,000! ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு ரூ.10 கோடி செலவாகும் போது ஓராண்டு உணவுக்கு,
அதுவும் நன்றாக உண்ணும்
பருவத்தினருக்கு அற்பத் தொகை. தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கவும் 12 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மேம்பட்ட ஆரம்ப சுகாதார
நிலையங்களாக மாற்ற ரூ.43.76 கோடி. தேசிய
நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்நோக்கு
சிகிச்சை மய்யங்கள் அமைக்க ரூ.15.09 கோடி.
இவற்றையும் அந்த ரூ.10 கோடியுடன்
ஒப்பிட்டுப் பார்த்தால் மக்கள் மீதான அரசின் அக்கறை தெரியும்.
திருச்செங்கோட்டைச்
சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.246 கோடிக்கு ரூ.500,
ரூ.1000 தாள்களை மாற்றியிருக்கிறார். 40% வரி கட்ட ஒப்புக்கொண்டிருக்கிறார். அவர் யார்,
எப்படி பணத்தை மாற்றினார்
போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஒருவர் சர்வசாதாரணமாக இவ்வளவு பெரிய தொகை
வைத்திருக்க முடிகிற ஒரு மாநிலத்தில் மக்களுக்கு பயன்படும் திட்டங்களுக்கு சற்று
தாராளமாக நிதி ஒதுக்கலாம்.
வளர்ச்சி,
வளம் எனப் பேசும் அறிக்கை
வேலைவாய்ப்பு பற்றி முன்வைக்கும் திட்டமும் ஒதுக்கீடும் வெந்த புண்ணில் வேல்
பாயச்சுகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டரை லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளதாகவும் 73,558 இளைஞர்கள் வேலை
வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் சொல்லும் அறிக்கை வரும் ஆண்டில் 1 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.150 கோடி ஒதுக்குகிறது. வேலை வாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலை கிடைக்கும் என்று காத்திருப்போர் எண்ணிக்கை
கிட்டத்தட்ட 82 லட்சம்.
அஇஅதிமுக அரசு இந்த வேகத்தில் போனால், அடுத்த 500 ஆண்டுகளில்
இவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்துவிடும். மெச்சத்தக்க தொலைநோக்கு
பார்வைதான்.
விவசாயத்துக்கு
தண்ணீர் இல்லாமல் தமிழ்நாட்டின் விவசாயிகள் உயிரிழப்பது இன்னும் முடிவுக்கு வராத
நிலையில் குடிநீர் பஞ்சம் துவங்கிவிட்டது. ஒரு குடம் நீருக்கு சில கிலோ மீட்டர்
தொலைவுக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருந்து கொண்டு வரும் நிலை வந்துவிட்டது.
இந்த நிலையில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.500 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த
நிதியில் எப்படி சமாளிக்கப் போகிறார்கள், திட்டங்கள் என்ன என்று சொல்லப்படவில்லை.
எதற்காக என்று
விவரமாகச் சொல்லப் படாமல் சில ஒதுக்கீடுகள் உள்ளன.
புதுமையான
நிர்வாக முயற்சிகள் 2015 - 2016ல் துவங்கப்பட்டு
ரூ.138.39 கோடி செலவிடப்பட்டு
70 முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டதாக நிதிநிலை அறிக்கை சொல்கிறது. இந்தத் திட்டம் 2015 -
2016லேயே
துவக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் துவக்கப்பட்ட
ஒன்றுக்கும் உதவாத திட்டங்களை கூட பெரிதாக விளம்பரப்படுத்தியவர்கள் இந்தத் திட்டம்
பற்றி பெரிதாக பேசாமல் விட்டது ஏன்? மக்கள் நலன் காக்கும் திட்டம் என்று அஇஅதிமுக ஆட்சி அறிவித்த திட்டங்களே
மக்களுக்குச் சென்று சேர்வதில்லை என்பது தெளிவாகத் தெரியும்போது இதுபோன்ற
திட்டங்கள் ஒரு சிலர் கொள்ளையடிக்கும் திட்டம் என்பது பளிச்சென தெரிந்து விடும்
என்பதால் விளம்பரப்படுத்தாமல் விட்டார்களா? என்ன புதுமை திட்டம், எங்கு, எந்தத் துறையில் அமலானது, இதனால்
மாநிலத்துக்கு ஏற்பட்ட நன்மை என்ன என எதுவும் அறிக்கையில் சொல்லப்படவில்லை.
தமிழ்நாடு
முதலீடு ஊக்குவிப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு ரூ.1295 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. முதல்
கட்டத்தில் என்ன நடந்தது, முதலீட்டை
ஊக்குவித்ததால் என்ன தொழில் வளர்ச்சி வந்தது என்று இதுவரை யாருக்கும்
சொல்லப்படவில்லை.
மாநில சமச்சீர்
வளர்ச்சி நிதியம் மூலம் 105 பின்தங்கிய
வட்டாரங்களில் 475 திட்டங்களுக்கு
வரும் ஆண்டுக்கு ரூ.282 கோடி
ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. என்ன திட்டம்? யாருக்கு பயன்படும் திட்டம்? ரூ.50 லட்சம் செலவில் அமலாக்கப்படும் திட்டம் என்ன சமச்சீர் வளர்ச்சியை அந்தப்
பகுதியில் கொண்டு வரும்? சாலையா? வீடுகளா? நீர்த் தேக்கமா? தடுப்பணையா? மருத்துவமனையா? பள்ளிக் கூடமா? கல்லூரியா? என்ன பெயரும் சொல்லி என்ன செலவும் செய்து என்ன
கணக்கும் காட்டலாம். திட்டம் மாநில சமச்சீர் வளர்ச்சியை கொண்டு வருமோ இல்லையோ,
சில ஒப்பந்ததாரர்களுக்கு
நிச்சயமாக வளர்ச்சி கொண்டு வரும்.
நெடுஞ்சாலை
செலவுபோல், உள்கட்டமைப்புக்கு
என சில ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய திட்ட
தயாரிப்புக்கு ரூ.200 கோடி
ஒதுக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர் மாநாடு நடத்த ரூ.100 கோடி ஒதுக்கிய முதலமைச்சர் இறந்துவிட்டார்.
பழனிச்சாமி ஒரு திட்டத்தை தயாரிக்க இந்த அளவுக்கு நிதி ஒதுக்குகிறார். இந்தத்
திட்டத்தை தயாரிக்க என்ன காலக் கெடு, என்னதான் திட்டம் இது என்றும் எந்த விவரமும் அறிக்கையில் இல்லை.
உட்கட்டமைப்பு
மேம்பாட்டு திட்டத்தில் ஊக்க மூலதனத்தை ஈடு செய்வது என்ற பெயரில் ஏற்கனவே ஒரு ரூ.30 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இப்போது ரூ.270 கோடி ஊக்க மூலதனத்துக்காக ஒதுக்கப்படுகிறது.
இது ஜெயலலிதாவின் 2023 தொலைநோக்கு
திட்டத்தின் ஓர் அம்சம். இது யாருக்கு சென்று சேர்கிறது? என்ன உட்கட்டமைப்பு மேம்பாடு இதுவரை
நடந்துள்ளது? பதில் இல்லை.
மொத்தத்தில்
அறிக்கை ஒப்பந்த நிறுவனங்களுக்கு, கமிசன், கட்டிங் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்
கூடியதாகவும் சாமான்ய மக்களுக்கு சற்றும் பயனற்றதாக, அஇஅதிமுக அரசாங்கத்தின் தொடரும் குற்றமய அலட்சி
யத்தை எடுத்துச் சொல்வதாகவும் உள்ளது.
வாட் வரியின்
இடத்தில் ஜிஎஸ்டி வரி வர விருக்கும்போது, நிதிநிலை அறிக்கையும் வெளியிடப்படும் நாள் நெருங்கும்போது, அவற்றுக்கு முன்னரே பெட்ரோலுக்கான வாட் வரி
உயர்த்தப்பட்டு அந்த விலை உயர்வு அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் விலையிலும்
எதிரொலித்துவிட்டது. நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும் முன்னரே தனியார் பால்
நிறுவனங்களும் பால் விலையை சத்தமின்றி உயர்த்திவிட்டன. மக்கள் ஏற்கனவே இருந்த விலை
உயர்வை தாங்க முடியாமல் இருக்கும் போது இந்த உயர்வு இன்னும் கூடுதல் சுமை
ஏற்றியுள்ளது. இந்த விலை உயர்வை சமாளிக்கும் விதம், வாழ்வாதாரத்தில், வேலைவாய்ப்பில், வருமானத்தில் மேம்பாடு காண எந்த வழியும்
நிதிநிலை அறிக்கையில் இல்லை.
முதியோர்,
ஆதரவற்றோர், கணவனை இழந்தோர் என பல்வேறு பிரிவினருக்கு
உதவித் தொகை வழங்க ரூ.3790 கோடி
ஒதுக்கப்படுகிறது. 3,79,00,000 பேருக்கு இது
செல்ல வேண்டும். இது மாநிலத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி. இத்தனை
பேருக்கா உதவித் தொகை வழங்கப்படுகிறது? நம்ப முடியவில்லை. இந்த ஆயிரம் ரூபாய் வந்தாலும் அது பெரிய மாற்றத்தை
கொண்டுவந்து விடாது.
அஇஅதிமுகவின்
மத்திய அரசு எதிர்ப்பு தோற்றம், ஜனரஞ்சகவாதம்
ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட சாமான்ய மக்கள், பெரும் குழப்பத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். புதிய உலகம் எதுவும் கிடைக்காமல்,
பழைய உலகத்தையும்
இழந்துள்ளார்கள். ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என்ற தீர்ப்பு, எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளுக்கு வழக்கமாகச் செல்பவர்கள்
எண்ணிக்கையை, வெகுவாக குறைத்து
விட்டது. சாமான்ய மக்களின் துன்பங்கள் பெருகும் போதும், அவர்கள் வளர்ச்சியை, மாற்றத்தை, முன்னேற்றத்தை எதிர்ப்பார்க்கிறார்கள்.
எதிர்ப்பார்ப்பதுடன் நின்றுவிடவும் இல்லை. 2015ல் ஜெயலலிதா ஆட்சி நடத்தியபோதே, நடந்த போராட்டங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு
முதலிடத்தில் இருக்கிறது. 2017 துவக்கம் முதல்
தமிழக மக்கள் போராட்டங்களால் வீதிகள், அரங்குகள், வெளிகள்
நிறைந்திருக்கின்றன. மாநில அரசு பலவீனமாக இருப்பதையும் தமி ழக மக்கள்
பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்தப் போராட்டங்கள் ஆட்சியாளர்களின் குற்றமய
அலட்சியத்துக்கு பதில் சொல்லும்.