இந்தச் சுற்றில்
இந்துத்துவாவுக்கு வெற்றி
இறுதிச் சுற்றில்
மக்கள் போராட்ட அரசியலே வெற்றி பெறும்
சங் பரிவார்,
ஆர்எஸ்எஸ், பாஜக ஆபத்து பற்றி கூடுதலாக, மிகையாக, பீதி பரப்பப்படுவதாக அச்சு, மின்னணு ஊடகங்களில் பலர் சொன்னார்கள். யோகி
ஆதித்யநாத், சாக்ஷி மகராஜ்
ஆகியோரெல்லாம் பித்துப் பிடித்த ஓரஞ்சார சக்திகள், பாஜக அவர்களை சகித்துக் கொள்கிறது, பாஜக ஆட்சி என்றால், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வளர்ச்சி, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா என நம்மை நம்பச் சொன்னார்கள்.
இப்போது 403 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட
உத்தரபிரதேசத்தில், மக்கள் தொகையில் 19% பேர் இசுலாமியர்கள் உள்ள உத்தரபிரதேசத்தில்,
கோரக்பூர் மடாதிபதி யோகி
ஆதித்யநாத் முதலமைச்சராகியுள்ளார். உத்தரபிரதேசத்தின் முதலமைச்சராக யோகி வந்தவுடன்,
மோடி, புதிய இந்தியா வரும் என்றார். ஆதியோகி சிவன்
சிலையை கார்ப்பரேட் சாமியார் விருப்பப்படி திறந்தாயிற்று; யோகாவை ஏற்காதவர்கள், இறைவன் சிவனை ஏற்காதவர்கள் இந்தியாவை விட்டு
வெளியேறலாம் என்று சொன்ன யோகி உத்தரபிரதேச முதலமைச்சராகிவிட்டார். புதிய இந்தியா,
அதாவது, இந்து ராஷ்ட்ரா தயார் என்று மோடி சொல்கிறாரா?
இப்போதைய உத்தரபிரதேச
முதலமைச் சர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (இபிகோ) 147, 148, 149, 153 எ, 285, 295, 297, 302, 307, 336, 427,
435 மற்றும் 506 ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவானது ஊரறிந்த
விசயம்.
கலவரம் செய்வது,
கொடூரமான ஆயுதங்களுடன்
கலவரம் செய்வது, சட்டவிரோத
செயலுக்கு சட்டவிரோதமாகக் கூடுவது, இரண்டு
பிரிவுகளுக்கு இடையே மோதலைத் தூண்டுவது, எரியும் பொருட்கள் வைத்துக் கொண்டு கவனக் குறைவாய் நடந்து கொள்வது, ஒரு பிரிவின் மத உணர்வை புண்படுத்த வழிபாட்டுத்
தலத்தை சேதப்படுத்துவது, இடுகாடுகளில்
அத்துமீறி நுழைவது, கொலை, கொலை முயற்சி, பிறரது உயிருக்கும் உடலுக்கும் சேதம்
உண்டாக்கும் செயலில் ஈடுபடுவது, விஷமச் செயலில்
ஈடுபடுவது, எரிபொருளுடன்
விஷமச் செயலில் ஈடுபடுவது, குற்றமய
அச்சுறுத்தல் ஆகியவையே அந்தப் பிரிவுகள்.
யோகி, ‘கிரிமினல் யோகி’ என்றுதான் இத்தனை வழக்குகள். உத்தரபிரதேசத்தில்,
இந்தியாவில் இந்து
ராஷ்ட்ரா வரும் வரை ஓய மாட்டேன் என்று யோகி சபதமேற்றார். அவர் இட ஒதுக்கீட்டு
எதிர்ப்பாளர். பெண் வீட்டிற்குள், சமையலறைக்குள்
இருப்பதுதான் இந்து தர்மம் என்பவர். இசுலாமியர் பாகிஸ்தான் சென்று விட வேண்டும்
என்று விரும்புபவர். கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்.
முதலமைச்சர் என்ற
முறையில் யோகியின் முதல் சில நடவடிக்கைகள், இறைச்சிக் கூடங்களை மூடுவதும், காதலர், ஆண் பெண் சேர்ந்து இருப்பதை அவமானப்படுத்தி
தண்டிப்பதும் என்றுதான் அமைந்தன.
முதலமைச்சர் யோகி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.
சாதிகள் கடந்த வெற்றி பெற்றதாக பெருமை பேசும் பாஜக, சட்டமன்ற உறுப்பினர் அல்லாத இரண்டு பேரை துணை
முதலமைச்சர்கள் ஆக்கியுள்ளது. யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்டோர் வாக்கு களை
ஈர்க்க, உத்தரபிரதேச பாஜக
தலைவராக்கப்பட்ட குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்த கேசவ் பிரசாத் மவுரியா ஒரு துணை
முதலமைச்சர். தாகூர் (ராஜ்புத்) முதலமைச்சர் என்பதால், பார்ப்பனர் ஒருவர் இன்னொரு துணை முதலமைச்சர்
ஆக்கப்பட்டார்.
ஹிந்து ஹிருதய
சாம்ராட் (இந்து இதய சக்கரவர்த்தி) யோகியின் 47 பேர் கொண்ட அமைச்சரவையில் பார்ப்பனர், தாகூர், வைசியா, காயஸ்தா, கத்ரி, பனியா என்ற உயர்சாதியினர் 26 பேர் உள்ளனர். 15 அமைச்சர்கள் பிற்படுத்தப்பட்டோர். 5 அமைச்சர்கள் தலித்துகள். ஒருவர் (ஷியா)
இசுலாமியர். அமித் ஷா, மவுரியா ஆகியோர் முன்வைத்த சாதி கூட்டணி,
அமைச்சரவை உருவாக்கத்தில்
தகர்ந்து விட்டது. அப்பட்டமான உயர்சாதியினர் ஆட்சி உத்தரபிரதேசத்தில் திரும்பிவிட்டது.
இந்தப்
பின்னணியில், இந்து ராஷ்ட்ரா
நோக்கிய நடவடிக்கைககள் வேகம் பெறுவது தெளிவாகிறது.
அய்க்கிய
அமெரிக்காவில் வெறுப்பு/துவேஷ அரசியல், இசுலாமியர்பால் பகைமை அரசியல், சீக்கியர்களையும்
இந்துக்களையும் பலி வாங்குகிறது.
இசுலாமிய
வெறுப்பு அரசியலால், 2003 ஏப்ரல் 28 அதிகாலை குஜராத்தில் ஹனீப் பகட்வாலா கைது
செய்யப்பட்டார். 2002ல் குஜராத்தின்
அகமதாபாதில் நடந்த டிபன் பாக்ஸ் குண்டு வெடிப்பு வழக்கில் அவர் மீது குற்றம்
சுமத்தப்பட்டது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், சிறைவாசம், சித்திரவதை, மனைவி, தாயார் மரணம், 2006ல் பத்தாண்டுகள்
தண்டனை, 2012ல் ஆயுள் தண்டனை
என ஏப்ரல் 2003 முதல் வாழ்வில் 14 ஆண்டுகளை சிறைத் தின்னக் கொடுத்து, உச்சநீதி மன்றத்தால் பிப்ரவரி 2017ல் விடுதலை செய்யப்பட்டார். அவரிடம் உங்கள்
உயிர் வாழும் உரிமை, நீங்கள்
இசுலாமியர் என்பதால் 14 ஆண்டுகள்
மீறப்பட்டதற்கு நீங்கள் நட்டஈடு கோருவீர்களா எனக் கேட்கப்பட்டது. ‘திரும்பவும் பிரச்சனை வேண்டாம், வாழ்க்கையில் நகர்ந்து செல்ல விரும்புகிறேன்’
என பதில் சொன்னார். அவரது
நிலைமை புரிந்துகொள்ளக் கூடியது. உத்தரபிரதேச முதலமைச்சர் யோகியின் நடவடிக்கைகளும்
கூட நமக்குப் புரிகிறது.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கெஹார்
சமீபத்தில் சொல்லியுள்ள இரண்டு கருத்துக்கள் நீதிபரிபாலன முறை மற்றும்
மதச்சார்பின்மையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன. யாகூப் மேமனின் உச்சநீதிமன்ற
மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் ஒரு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தூக்கு தண்டனைக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு சீராய்வு மனுவும்
தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த விசயம் பற்றி பேசிய தலைமை நீதிபதி கெஹார்
பயங்கரவாதிக்கு இவ்வளவு வாய்ப்புக்கள் தரும் நீதிமுறை பலியானவர்களைப் பற்றி
போதுமான அளவுக்கு கவலைப்படுவதில்லை என்றார்.
குற்றம்
நிரூபிக்கப்படும்வரை ஒருவர் குற்றவாளி அல்ல. சட்டத்தின் முன் அனைவரும் சமம்,
யாகூப் மேமனானாலும்,
அமித் ஷாவானாலும்
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்ய உரிமை உண்டு, அப்படி இருக்க, குறிப்பாக, யாகூப் மேமனை பயங்கரவாதி எனக் குறிப்பிட்டு
அவரைப் போன்றவர்களுக்கு நீதிமன்றம் ஏதோ தாராளம் காட்டியது போன்ற தொனியில் தலைமை
நீதிபதியே பேசுவது இந்துத்துவாவின் இசுலாமிய வெறுப்பு அரசியலுக்கு உதவாதா?
இரண்டாவதாக,
நேரடி தொடர்பு இல்லாத
சுப்ரமணியம் சாமியின் வேறொரு வழக்கில், தலைமை நீதிபதி கெஹார், பாப்ரி மசூதி
பிரச்சனையை பேசி முடிக்கச் சொல்கிறார். இது சரியல்ல. திரேதா யுகத்தில் பிறந்து
வளர்ந்து வாழ்ந்ததாக, அதாவது லட்சம்
ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராமன் பிறந்த இடத்தில் பாப்ரி மசூதி கட்டப்பட்டுள்ளது,
அங்கே, அங்கேயேதான் அயோத்தி ராமனுக்கு கோயில்
கட்டுவோம் என்று அத்வானி, உமா பாரதி,
சங் பரிவார் கூட்டம்,
கல்யாண் சிங் உடந்தையாக
இருக்க, மத்திய காங்கிரஸ்
அரசு வேடிக்கை பார்க்க, டிசம்பர் 6,
1992ல் பாப்ரி மசூதியை
இடித்தார்கள். பாப்ரி மசூதி இருந்த இடம், யாருக்குச் சொந்தம் என்ற உரிமையியல் டைட்டில் சூட் வழக்கில் 30.10.2010 அன்று அலகாபாத் நீதிமன்ற லக்னோ அமர்வம்,
எவரும் கேட்காத
பாகப்பரிவினை தீர்ப்பு தந்தது. கூடவே, ‘இந்துக்களின் நம்பிக்கை அடிப்படையில்’ பாப்ரி மசூதி இருந்த இடமே ராமன் பிறந்த இடம் என சொல்லி இந்திய சாட்சிய
சட்டத்தை கேலிக்குள்ளாக்கியது. இப்போது, இசுலாமிய வெறுப்பின் மூலம் இந்தியாவை மகத்தானதாக்க, ட்ரம்ப் வழியில் மோடியும் யோகியும் ஆளும்போது,
இந்துக்களும்
இசுலாமியர்களும் பாப்ரி மசூதி பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என தலைமை
நீதிபதி சொல்வது, ஓநாயிடம் ஆட்டுக்
குட்டியை பேசச் சொல்வதாகாதா? இந்துத்துவா
கூட்டங்கள் தலைமை நீதிபதியின் ஆலோசனையை வரவேற்றுள்ளனர்.
இந்துத்துவா
ஆபத்து பரவி படர்கிறது என்பது உண்மைதான். அதே நேரம் எதிர்ப்பும் உருவாகி
வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தச் சுற்று இந்துத்துவாவுக்கு வெற்றி.
அடுத்தடுத்தச் சுற்றுகளிலும் இறுதிச் சுற்றிலும் மக்கள் போராட்ட அரசியல் நிச்சயம்
வெற்றி பெறும்.