COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, March 17, 2017

புரட்சிகர இளைஞர் கழகம்
மாநில அலுவலகம்
1/10, 11ஆவது தெரு, கருணாநிதி நகர், அயனாவரம், சென்னை - 23. 2674 3384
மின்னஞ்சல்: amudhanguru@gmail.com

பெறுநர்

உயர்திரு முதன்மைச் செயலர் அவர்கள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
தமிழ்நாடு அரசு,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை 600 009

உயர்திரு தொழிலாளர் ஆணையர் அவர்கள்
தமிழ்நாடு அரசு,
டிஎம்எஸ் வளாகம்,
சென்னை 600 006

அம்மையீர்/அய்யா,

பொருள்: எங்கள் அமைப்பின் மார்ச் 23 பகத்சிங் நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு கோரிக்கைகளில் தங்கள் துறை தொடர்பானவற்றை நிறைவேற்ற கோருதல்.

இந்தியா ஓர் இளைய நாடு என்றும், தமிழ்நாட்டிற்கு அதன் மிகப்பெரும் அளவிலான இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு பெரிய பலம் என்றும் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 2.5 கோடி. தமிழ்நாட்டில் அரசாங்கம் தரும் புள்ளி விவரங்கள்படி வேலை இல்லையென வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து கொண்டோர் எண்ணிக்கை 31.12.2016 அன்று 81,33,734 பேர் ஆகும். பதிவு செய்யாமல் வேலை கிடைக்காமல் இருப்பவர்களும் கணிசமாக உள்ளனர்.
இந்தப் பின்னணியில், இன்று அதிகம் படித்தால் குறைந்த சம்பளம் என்ற அவல நிலை, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இருக்கிறது. தமிழ்நாடெங்கும் பொறியியல் பட்டம் மற்றும் பட்டய படிப்பு படித்த சில லட்சம் இளைஞர்களுக்கு, மாதம் ரூ.7000 முதல் ரூ.8000 சம்பளம் கூட தரப்படுகிறது. கணிசமான இளைஞர்கள் பயிற்சியாளர்களாக, நிரந்தரமற்ற பலவகை தொழிலாளர்களாக, ஒப்பந்தத் தொழிலாளர்களாக கடுமையாகவும் கொடூரமாகவும் சுரண்டப்படுகிறார்கள். திருமாங்கல்யத் திட்டம் தமிழ்நாட்டின் அவமான சின்னமாகும்.
தமிழ்நாட்டில் சட்ட உரிமைகளோ, சலுகைகளோ, பாதுகாப்போ இல்லாத, சங்கமாகும் வாய்ப்பு பெறாத பல லட்சக்கணக்கான அமைப்புசாரா இளம் தொழிலாளர்கள் உள்ளனர். தொழிலாளர்கள் பெரும்பான்மை பலத்துடன் சங்கம் அமைக்கும்போது கூட முதலாளிகள் அந்த சங்கங்களை அங்கீகரிக்காமல், கூட்டு பேர உரிமையை காலில் போட்டு மிதிக்கிறார்கள். போதாக்குறைக்கு, அரசும் சில லட்சம் தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையை பறிக்கும் விதம், ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ காம்போனன்ட் தொழில்களை பொது பயன்பாட்டு சேவை என அறிவிக்கிறது.
இந்தப் பின்னணியில், பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.20,000 அறிவித்திடுக
இன்று தமிழகமெங்கும், தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் நலன்களை காக்க வேண்டும் என்ற குரல்கள், பல தரப்புகளில் இருந்தும் எழுகின்றன. இந்த குரல்கள் எழுவதற்கான அடிப்படை நிலைமைகள், தமிழ்நாட்டில் நிச்சயமாய் நிலவுகின்றன. தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதி செய்ய, தமிழ்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தி பொருளாதாரத்திற்கு துடிப்பையும், சுயசார்பையும் வழங்க, தமிழ்நாடு அரசு உழைப்பவர் எவரானாலும் மாதம் ரூ.20,000 குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படும் என அறிவித்து அமல்படுத்த வேண்டும். கூடவே மாறும் பஞ்சப்படி என்பதையும் இணைத்திட வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும்
சம வேலைக்கு சம ஊதியம் என்பது அரசி யலமைப்பு சட்டத்தில் வழிகாட்டும் கோட்பாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோட்பாட்டை அரசும், அரசுத்துறை நிறுவனங்களும் கறாராக அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் இருந்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வரை, வட வேங்கடம் முதல் குமரி வரை தமிழ்நாட்டில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படுவதில்லை. முன்மாதிரி வேலை அளிப்பவர் என்ற விதத்தில் தமிழ்நாடு அரசு, இப்போதைய இந்திய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹார் சம வேலைக்கு சம ஊதியம் தர வேண்டும் என வழங்கிய தீர்ப்பை, கறாராக அமல்படுத்த வேண்டும். அரசுப் பணி நடக்கிற எல்லா இடங்களிலும் இந்த கோட்பாட்டை அமல்படுத்தி, இங்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படுகிறது என எழுத்தால் விளம்பரப்படுத்த வேண்டும்.
இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், மாம்பாக்கம், படப்பை, சுங்குவார்சத்திரம் மண்டலம், இராணிப்பேட்டை, திருச்சி மற்றும் கோவை தொழில் மண்டலங்கள் என தமிழகம் எங்கும் ஒப்பந்த தொழிலாளர் முறை நீக்கமற நிறைந்துள்ளது. முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு.அரிபரந்தாமன், ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டம் 1970, ஒப்பந்தத் தொழிலாளர் நலன்களை காக்கவில்லை, இந்த சட்டத்திற்கு பிறகுதான் ஒப்பந்தத் தொழிலாளர் முறை பிரும்மாண்டமாய் பெருகி வளர்ந்துள்ளது என்று சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் தொழிலாளர் துறை அலுவலர்கள் தான், இந்த சட்டத்திற்கு கீழான பதிவு மற்றும் உரிமம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டத்திற்கு தமிழக அரசு 1975ல் விதிகள் இயற்றியுள்ளது. விதி 25(2) (V) (a)படி முதன்மை வேலை அளிப்பவரின் தொழிலாளி செய்யும் அதே வேலையையோ அல்லது அதே போன்ற வேலையையோ ஒப்பந்தத் தொழிலாளி செய்யும் பட்சம், ஒப்பந்தத் தொழிலாளிக்கு முதன்மை வேலையளிப்பவரின் தொழிலாளி பெறுகிற அதே சம்பளம், விடுமுறை, வேலை நேரம் மற்றும் வேலை நிலைமைகள் வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படாவிட்டால் ஒப்பந்ததாரர்களின் உரிமம் நீக்கப்படலாம், விதி 25 (2) (V) (b) படி அதே வேலை அதே போன்ற வேலை இல்லாத இடங்களில், தொழிலாளர் ஆணையர் குறிப்பிடுகிற சம்பளம் விடுமுறை வேலை நேரம் மற்றும் பணி நிலைமைகள் வழங்கப்பட வேண்டும்.
துரதிஷ்டவசமாக தமிழக அரசு இதுவரை இந்த விதிகள் 25 (2) (V) (a) மற்றும் 25 (2) (V) (b) அமலாகின்றனவா என்பதை கண்காணிப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாடு எங்கும் விதி 25 (2) (V) (a) மற்றும் 25 (2) (V) (b) கறாராக அமலாவதை தமிழக அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும். மாநகராட்சி, பேரூராட்சி போன்ற அரசு துறை நிறுவனங்களில் கூட, பதிவும் உரிமம் பெறுவதும் நடப்பதில்லை. அத்தகைய இடங்களிலும் தமிழக அரசு மேற்கூறிய விதிகளை அமல்படுத்த வேண்டும்.
நிலையாணைகள் திருத்தச் சட்டத்திற்கு பொருத்தமான விதிகளை உடனடியாக இயற்றுக
வாராது வந்த மாமணியாய், தமிழ்நாட்டில் நிலையாணைகள் சட்ட அட்டவணையில் திருத்தச் சட்டம் மூலம், பயிற்சியாளர்கள் தகுதி காண் பருவ நிலையில் உள்ளவர்கள், பதிலிகள், தற்காலிக தொழிலாளர்கள், தற்செயல் தொழிலாளர்கள் ஆகியோரின் வேலைவாய்ப்பு மறு வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான விதிகள் இயற்றவும் இத்தகைய தொழிலாளர்கள் ஒரு தொழில் நிறுவனத்தின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் எவ்வளவு சதவிகிதம் இருக்கலாம் என விதி இயற்றவும் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த திருத்தச் சட்டத்திற்கு 26.06.2016 அன்று ஒப்புதல் தரப்பட்டது. சட்டத் திருத்தம் 04.07.2016 அறிவிப்பாணை மூலம் அமலுக்கு வந்தது. 20.07.2016 அன்று தமிழக அரசு மூன்று மாதங்களுக்குள் விதிகளை திருத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதன் பின்னர் தமிழக அரசு வேலை அளிப்பவர்களின் அமைப்புகளையும் மய்ய தொழிற்சங்கங்களையும் அழைத்து விவாதித்ததாக தெரிகிறது. ஆனால் வேலை அளிப்பவர்கள் திருத்தங்கள் எதுவும் வேண்டாம் என நிர்ப்பந்தம் கொடுப்பதாக தெரிகிறது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புதல் பெற்ற திருத்த சட்டத்தை இன்னமும் அமல்படுத்தாமல் இழுத்தடிப்பது முறையல்ல.
திருத்தச் சட்டம் அட்டவணை அயிட்டம் 10 a படி பயிற்சியாளர்கள், இதர நிரந்தரமற்ற தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு, மறு வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் தொடர்பாக அரசு விதிகள் கொண்டு வரலாம். அதாவது நிலையாணைகளில் மாற்றம் கொண்டு வரலாம்.
மத்திய பயிற்சியாளர் சட்டப்படியான பயிற்சியாளர்கள் தவிர மற்ற பயிற்சியாளர்கள் தொழிலாளர்கள் என்ற விவரிப்புக்குள் வருவார்கள். திருமாங்கல்யத் திட்டம் நிலவும்  ஜவுளி தொழிலில் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசு குறைந்தபட்சச் சம்பளம் நிர்ணயம் செய்தது சரி என நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.
சங்கங்களோடு பேசும்போது, புதிய விதிகளால் முதலீடு வராமல் போய்விடக் கூடாது என அரசு கவலை தெரிவித்தது. இந்தியாவிலேயே அதிக முதலீடு பெற்றுள்ள மகாராஷ்ட்ரா, 1977லேயே நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் காக்கும் விதம், நிலையாணைகளை திருத்தியுள்ளது; அப்படி இருந்தும் அங்கே முதலீடுகள் வருவது குறையவில்லை.
நாங்கள் பின்வரும் திருத்தங்களை வலியுறுத்துகிறோம்:
1.            தகுதிகாண் பருவ நிலை (புரொபேஷன்) காலம் ஆறு மாதங்களை தாண்டக் கூடாது. ஆறு மாதங்கள் முடிந்தவுடன் மறு உத்தரவு ஏதும் இல்லையெனில், அந்தத் தொழிலாளி நிரந்தரமானவராக கருதப்படுவார்.
2.            பயிற்சிக் காலம், ஒருபோதும் ஒரு வருடத்தை தாண்டக்கூடாது.
3.            தற்காலிக/தற்செயல்/குறிப்பிட்ட கால வேலைவாய்ப்பு தொழிலாளர்கள் ரெகுலர் உற்பத்தியில் ஈடுபட்டால், அவர்கள் 240 நாட்கள் வேலை செய்தாலே பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். இத்தகைய தொழிலா ளர்களுக்கு வேலை இல்லை என்றால், அவர்கள் வெளியேற்றப்படும் போது, அவர்களது விவரங்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, அந்தப் பட்டியல்படி மட்டுமே புதிதாக ஆள் எடுக்கப்பட வேண்டும்.
4.            அனைத்துவகை நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாடு அமல்படுத்தப்பட வேண்டும்.
5.            எந்த ஒரு தொழில் நிறுவனத்திலும் அனைத்து வகை நிரந்தரமற்றத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கையில் 5 சதவீதம் தாண்டக்கூடாது.
14.05.2008 அன்று நிறைவேற்றப்பட்ட திருத்த சட்டத்திற்கு, உதவாது இனி ஒரு தாமதம் என்ற அடிப்படையில், உடனடியாக உயிர் கொடுக்க வேண்டும்.
ஆட்டோமொபைல் ஆட்டோ காம்போனென்ட் தொழில்களை சகட்டுமேனிக்கு பொதுப் பயன்பாட்டுச் சேவையென அறிவிப்பதை கைவிடுக
தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் காம்போனென்ட் தொழில்களில் சில லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஆட்டோமொபைல்கள் இன்னமும் சாமான்ய மற்றும் கீழ் நடுத்தர மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பாட்டில் இல்லை.
ஆகவே, இந்தத் தொழில் பொது அவசரம் அல்லது பொது நலன் என்ற அடிப்படையில் பொது பயன்பாட்டு சேவையாகாது. தமிழக அரசு முதலாளிகளோடு போடுகிற புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஆட்டோ, ஆட்டோ காம்போனென்ட் தொழில்களை, பொதுப் பயன்பாட்டுச் சேவை என அறிவிப்பது சட்ட விரோதமானது. அநியாயமானது. இந்தத் தொழில்களில் அனைத்து வேலை நிறுத்தங்களையும் சட்ட விரோதமாக்குவதற்காக, அரசு இந்த அப்பட்டமான மூலதன விசுவாச நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இனி ஆட்டோமொபைல், ஆட்டோ உதிரிபாக தொழில்களை பொதுப் பயன்பாட்டு சேவை என அரசு அறிவிக்கக் கூடாது.
தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம் வேண்டும்
பெரும்பான்மை தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிற சங்கத்தை அங்கீகரிக்க தொழிற்சங்கச் சட்டத்தில் தனியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை எந்த சங்கத்திற்கு இருக்கிறது என்று அறிந்து அந்த சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு டிவிசன் பெஞ்ச், பாக்ஸ்கான் வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
தமிழக அரசு நடத்துகிற போக்குவரத்து கழகம், நுகர்பொருள் வாணிப கழகம் ஆகியவற்றில் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை பலம் அறிந்து தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. தவிர, மேற்கு வங்க மற்றும் கேரள மாநில அரசுகள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை ஆதரவை அறிந்து தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்குவதை சட்டபூர்வமாக்க, தொழிற்சங்கங்கள் சட்டம் 1926ல் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளன.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக ரகசிய வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை பலம் அறிந்து சங்க அங்கீகாரம் வழங்குவதற்கு தொழிற்சங்கங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்தக் கோரிக்கைகளுக்காக எங்களது புரட்சிகர இளைஞர் கழகமும் போராடுகிற தொழிலாளர்கள் இயக்கங்களும் கடந்த சில ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறோம். இருந்தும் தமிழக அரசு இதுவரை இவ்வளவு அடிப்படையான கோரிக்கைகள் மீது, எந்த காத்திரமான (சீரியஸ்) பேச்சுவார்த்தைகளும் நடத்தியதாக தெரியவில்லை.
எங்களது மார்ச் 23 உறுதியேற்பு நிகழ்ச்சியை ஒட்டி இந்த கோரிக்கைகளை தமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறோம். மார்ச் 31, 2017க்குள் இந்தக் கோரிக்கைகள் மீது எங்களை அழைத்து பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அரசு பல லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வாதாரப் பிரச்சனையில் தொடர்ந்து குற்றமய அலட்சியம் காட்டினால், எங்கள் அமைப்பு இளைஞர்களை திரட்டி போராட வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
                                                தங்கள் உண்மையுள்ள
ராஜகுரு
                    மாநிலத் தலைவர் தனவேல்

மாநிலப் பொதுச் செயலாளர்

Search