‘உலகப் பாட்டாளி
வர்க்கப் புரட்சி வெல்லற்கரியது’
....பழைய
முதலாளித்துவ - ஜனநாயக அரசியல் அமைப்புச் சட்டங்கள் சம்பிரதாயமான சமத்துவம்,
கூட்டம் கூடும் உரிமை
பற்றிச் சொல் வன்மையுடன் அளந்தன; ஆனால் எமது
பாட்டாளி வர்க்கத்தின், விவசாயிகளின்
சோவியத் அரசியல் அமைப்புச் சட்டம் சம்பிரதாய சமத்துவம் என்ற போலித்தனத்தை அகற்றி
எறிந்துவிட்டது.
முதலாளித்துவக் குடியரசுவாதிகள் அரசு பீடங்களைக் கவிழ்த்தபோது
அவர்கள் முடியரசுவாதிகளுக்கும் குடியரசுவாதிகளுக்கும் இடையிலான சம்பிரதாய
சமத்துவம் பற்றிக் கவலைப்படவில்லை. முதலாளித்துவ வர்க்கத்தை ஒழித்துக் கட்டும்
விஷயத்தில் துரோகிகள் அல்லது முட்டாள்கள் மட்டுமே முதலாளி வர்க்கத்திற்கு
சம்பிரதாய சமத்துவம் வேண்டும் என்று கோர முடியும். சிறந்த கட்டடங்கள் எல்லாம்
முதலாளித்துவ வர்க்கத்திற்குச் சொந்தமாக இருக்கும் பொழுது தொழிலாளர் மற்றும்
விவசாயிகளுக்குக் ‘கூட்டம் கூடும்
சுதந்திரம்’ என்பது ஒரு
காசின் மதிப்புக் கூடப்பெறாது. எமது சோவியத்துகள் செல்வந்தர்களிடமிருந்து
நகரத்திலும் கிராமத்திலும் இருந்த சிறந்த கட்டடங்கள் எல்லாவற்றையும் பறிமுதல்
செய்து அவை அனைத்தையும் தொழிலாளர், விவசாயிகளுக்கு
அவர்களது சங்கங்களுக்கும் கூட்டங்களுக்குமாக உடைமை மாற்றி அளித்துள்ளன. இது
உழைக்கும் மக்களுக்கான எமது கூட்டம் கூடும் சுதந்திரமாகும்! இதுவே எமது சோவியத்,
எமது சோசலிச அரசியல்
அமைப்புச் சட்டத்தின் பொருளும் உள்ளடக்கமும் ஆகும்!
இதனால்தான்
நாங்கள் அனைவரும் இன்னும் என்ன இன்னல்கள் எதிர்காலத்தில் உற்றபோதிலும் எமது
சோவியத் குடியரசு வெல்லற்கரியது என்பதில் உறுதியாக நம்பிக்கை கொண்ருக்கிறோம்.
அது
வெல்லற்கரியது., காரணம்
வெறிபிடித்த ஏகாதிபத்தியவாதிகளின் ஒவ்வொரு தாக்குதலும், சர்வதேச முதலாளி வர்க்கம் எம்மீது சுமத்தும்
ஒவ்வொரு தோல்வியும், தொழிலாளர்
மற்றும் விவசாயிகளின் மேலும் மேலும் அதிகமான பகுதிகளைப் போராட்டத்தில்
எழுச்சியுறும்படி செய்கின்றன. அளப்பரிய தியாகம் செய்து அவர்கள் படிப்பினை பெற
உதவுகின்றன, அவர்களை
உருக்குப் போல உறுதிப்படுத்தி மிகவும் பரந்த அளவில் புதிய செயல்வீரத்தைத்
தோற்றுவிக்கின்றன.
அமெரிக்கத்
தொழிலாளர் தோழர்களே, உங்களிடமிருந்து
உதவி விரைவில் வராது இருக்கலாம் என்பதை நாங்கள் அறிவோம். ஏனெனில் புரட்சி, வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களில்
வெவ்வேறு வேகத்தில் (வேறு வகையில் இருக்க முடியாது) வளர்ச்சியடைந்து வருகிறது.
அய்ரோப்பியப் பாட்டாளி வர்க்கப் புரட்சி அண்மைக் காலத்தில் மிகவும் விரைவாக
முதிர்ச்சியடைந்து வந்தபோதும், அது அடுத்த சில
வாரங்களுக்குள் வெடிக்காமல் போகலாம். நாங்கள் உலகப் புரட்சியின் தவிர்க்கவொண்ணாத்
தன்மையில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஆனால் இந்தப் புரட்சி தவிர்க்கவொண்ணாத
வகையில் ஒரு நிர்ணயமான குறுகிய கால அளவில் வரும் என்று நம்பும் அளவுக்கு நாங்கள்
அத்தகைய முட்டாள்கள் என்று இதனால் அர்த்தமல்ல. எமது நாட்டில் 1905 மற்றும் 1917ஆம் ஆண்டுகளில் இரண்டு மாபெரும் புரட்சிகளை
நாங்கள் கண்டிருக்கிறோம். புரட்சிகள் உத்தரவு போடப்பட்டோ உடன்படிக்கை மூலமோ
நடப்பனவல்ல என்பதை நாங்கள் அறிவோம். சோசலிசப் பாட்டாளி வர்க்கத்தின் எமது ருஷ்யப்
படைப் பிரிவை முன்னணிக்குக் கொண்டு வந்தது சூழ்நிலையேயாகும். அதற்கு காரணம்
ருஷ்யாவின் விதிவிலக்கான பின்தங்கிய தன்மை என்பதையும், எமது திறன்கள் காரணமல்ல என்பதையும், உலகப் புரட்சி வெடிப்பதற்கு முன்னால் பல தனிப்
புரட்சிகள் தோற்கடிக்கப்படலாம் என்பதையும் நாங்கள் அறிவோம்.
இருப்பினும்
நாங்கள் வெல்லற்கரியவர்கள் என்பதை உறுதியாக நம்புகிறோம். காரணம் மனித குலத்தின்
மனவெழுச்சியை ஏகாதிபத்தியப் படுகொலையால் தகர்க்க முடியாது. மனித குலம் அதை
முறியடிக்கும். ஏகாதிபத்திய யுத்தத்தின்
துன்பத் தளைகளைத் தகர்த்த முதல் நாடு எமது நாடாகும். இந்தத் தளைகளை உடைப்பதற்கான
போராட்டத்தில் நாங்கள் மிகப் பெரும் துயரார்ந்த உயிர்ச் சேதங்களை அடைய நேர்ந்தது.
எனினும் அவற்றை நாங்கள் உடைத்தோம். ஏகாதிபத்திய சார்புத் தன்மையிலிருந்து நாங்கள்
சுதந்திரமாகியுள்ளோம், நாங்கள் உலகம்
முழுவதும் காணும்படி ஏகாதிபத்தியத்தைப் பூரணமாக அழித்தொழிக்கும் போராட்டத்தின்
பதாகையினை உயர்த்தியுள்ளோம்.
நாங்கள்
முற்றுகையிடப்பட்ட கோட்டையினுள் இருப்பது போலத் தற்போது உள்ளோம், உலக சோசலிசப் புரட்சியின் இதர படைப் பிரிவுகள்
எமக்கு உதவிக்கு வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் படைப்பிரிவுகள்
இருக்கின்றன. அவை எம்மு டையவற்றைக் காட்டிலும் எண்ணிக்கையில் அதிகமானவை.
ஏகாதிபத்தியத்தின் அட்டூழியங்கள் எந்தளவு நீடித்துத் தொடர்கின்றனவோ, அந்தளவுக்கு அப்படைப் பிரிவுகள்
முதிர்ச்சியுற்று, வளர்ந்து மேலும்
அதிக வலுவடைந்து வருகின்றன. தொழிலாளர்கள் தமது சமூகத் துரோகிகளான கோம்பர்ஸ்கள்,
ஹெண்டர்சன்கள், ரெனொடேல்கள், ஷெய்டெமன்கள் மற்றும் ரென்னர்களிடம் இருந்து
விலகிக் கொண்டு வருகிறார்கள். தொழிலாளர்கள் மெதுவாக ஆனால் உறுதியாக கம்யூனிஸ்டு,
போல்ஷ்விக்
போர்த்தந்திரங்களைப் பொருத்தமாகத் தழுவிப் பாட்டாளி வர்க்கப் புரட்சியை நோக்கி
அணிவகுத்து முன்செல்கிறார்கள்; அது மட்டுமே
அழிந்து வரும் கலாச்சாரத்தை, அழிந்துவரும்
மனித குலத்தைக் காப்பாற்றும் ஆற்றலுடையதாகும்.
சுருங்கக்கூறின்,
நாங்கள்
வெல்லற்கரியவர்கள், காரணம் உலகப்
பாட்டாளி வர்க்கப் புரட்சி வெல்லற்கரியது.
(1918, ஆகஸ்ட் 20 அன்று அமெரிக்க
தொழிலாளர்களுக்கு லெனின் எழுதிய
இந்தக் கடிதத்தில் இருந்து)
அமெரிக்க
முதலாளித்துவ வர்க்கத்தினர் தங்களது நாட்டின் சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் பற்றி ஜம்பமடித்து மக்களை
ஏமாற்றுகிறார்கள். ஆனால் இந்த முதலாளித்துவ வர்க்கத்தினரோ அல்லது வேறெந்த
முதலாளித்துவ வர்க்கத்தினரோ, அல்லது உலகில்
உள்ள எந்த ஓர் அரசாங்கமோ உண்மையான சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகத்தின் அடிப்படையில் எங்களது
அரசாங்கத்தோடு ஒரு போட்டியை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ள அஞ்சுகிறார்கள்.
துண்டுப் பிரசுரங்களை அரசாங்கத்தின் பெயரால் எந்த மொழியிலாகிலும் வெளியிடப்
பெற்றவைகளை, அந்த நாட்டின்
சட்டங்கள் பற்றிய வாசகம், அதன் அரசியல்
அமைப்புச் சட்டம் பற்றிய வாசகம், ஏனையோர் மீதான
அதன் மேம்பாடு பற்றிய ஒரு விளக்கம் முதலியன அடங்கிய பிரசுரங்களைப் பரிமாறிக்
கொள்ளுவதற்குரிய சுதந்திரத்தை எங்களது அரசாங்கத்திற்கோ, இன்னொரு அரசாங்கத்திற்கோ உத்தரவாதமளிக்கும் ஒரு
ஒப்பந்தம் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
இப்படிப்பட்டதொரு
சமாதானமான, நாகரிகம் மிக்க,
சுதந்திரமான, சமத்துவமான, ஜனநாயக ஒப்பந்தத்தை எங்களோடு உலகில் உள்ள எந்த
ஒரு முதலாளித்துவ அரசாங்கமும் செய்து கொள்ளத் துணியாது.
ஏன்? ஏனென்றால் சோவியத் அரசாங்கங்கள் நீங்கலாக,
மற்றெல்லா அரசாங்கங்களும்
மக்கள் திரளினரை ஒடுக்கியும், ஏமாற்றியும்
அதிகாரத்தில் இருக்கின்றன. ஆனால் 1914 - 1918 மாபெரும் போர் இந்த மாபெரும் ஏமாற்றத்தை
அம்பலப்படுத்தியது.
(1919, ஜுலை 20, அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரது வினாக்களுக்கான விடைகளில் இருந்து)