‘சோசலிச உலகத்தின்
பொதுத் தோற்றம்
சோவியத் குடியரசின் உருவில்
எம்முன் எழுந்து
வருகிறது’
ஊழல் பிடித்த
முதலாளித்துவ பத்திரிகைகள், எமது புரட்சி
செய்கிற ஒவ்வொரு தவறையும் பற்றி, உலக முழுதிற்கும்
ஓலமிடட்டும். எமது தவறுகளைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை. புரட்சி தொடங்கி விட்டது என்பதால்
மக்கள் முனிவர்களாகி விடவில்லை. பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டு, மிதித்துத் துவைக்கப்பட்டு, வறுமை, கொடுமை, அறியாமையினால்
பலவந்தமாகப் பீடிக்கப்பட்டிருந்த உழைப்பாளி வர்க்கங்கள் ஒரு புரட்சியை
நடத்தும்போது தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. மேலும் நான் முன்பே ஒரு முறை
சுட்டிக் காட்டியிருந்தது போன்று முதலாளித்துவ சமுதாயம் என்ற பிணத்தை, ஒரு சவப்பெட்டியில் ஆணியறைந்து புதைத்துவிட
முடியாது.
முதலாளித்துவப் பிணம் அழுகிப் போய் நம்மிடையே சிதைவுற்று, காற்றைத் தூய்மை கெடுத்தும், எமது வாழ்க்கையில் நச்சூட்டியும் வருகிறது;
பழமையானதும் அழிந்து
வருவதும் அழுகிப் போனதுமான ஆயிரக்கணக்கான இழைகள் மற்றும் தளைகளில் புதியதும்
பசுமையானதும் இளமையானதும் வீரியம் மிக்கதும் ஆனவற்றைச் சிக்குறச் செய்கிறது.
எதைப் பற்றி
முதலாளி வர்க்கமும் அதன் அடிவருடிகளும் (எமது சொந்த வலதுசாரி சோசலிஸ்டு
புரட்சியாளர்கள் மற்றும் மென்ஷ்விக்குகள் உட்பட) உலகம் முழுதுக்கும் கூக்குரலிடுகி
றார்களோ, நாங்கள் புரியும்
ஒவ்வொரு நூறு தவறுகளுக்கும் 10,000 மாபெரும்
வீரஞ்செறிந்த செயல்கள் புரியப்படுகின்றன. அவை மேலும் மகத்தானவை மேலும்
வீரஞ்செறிந்தவை. காரணம் அவை ஒரு தொழில் வட்டாரம் அல்லது தொலைவில் உள்ள கிராமத்தில்
அன்றாட வாழ்க்கையினிடையே எளிமை யாகவும் ஒதுக்கமாயும் நடைபெறுபவை. தமது வெற்றிகளைப்
பற்றி உலக முழுதிற்கும் கூக்குரலிட்டுக் கூறும் வழக்கமில்லாத (அதற்கான
வாய்ப்பில்லாத) மக்களால் புரியப்பட்டவை.
இதற்கு நேர்மாறான
நிலைமை உண்மையில் ஏற்படினும் சரி - அவ்வாறு கருதுவது தவறு என்பதை நான் அறிவேன்
-நாங்கள் புரிந்த 100 சரியான
செயல்களுக்கு 10,000 தவறுகளைச்
செய்தாலுங்கூட, அப்படியிருந்தாலுங்கூட
எமது புரட்சி மகத்தானதாயும் வெல்லற்கரியதாகவும் இருக்க வேண்டும். உலக வரலாற்றின்
பார்வையிலும் அவ்வாறே நிச்சயமாக இருக்கும்; காரணம் முதல் தடவையாகச் சிறுபான்மையோர் அல்ல,
செல்வந்தர் மட்டுமல்ல,
கல்வி கற்றவர்கள்
மட்டுமல்ல, ஆனால் உண்மையான
மக்கள் திரளினர், விரிவான பெரும்
பான்மையான உழைப்பாளி மக்கள் தாமே புதிய வாழ்க்கையைக் கட்டிவருகின்றனர்; தமது சொந்த அனுபவம் மூலம் சோசலிசக்
கட்டுமானத்தின் மிகவும் கடினமான பிரச்சனைகளைத் தீர்த்து வருகிறார்கள்.
இத்தகைய பணியின்
போக்கில் இழைக்கப்படும் ஒவ்வொரு தவறும் தமது முழு வாழ்வையும் மறு அமைப்புச் செய்து
கொள்வதிலான பல லட்சக்கணக்கான சாமான்யத் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் இந்த மிகவும்
கடமையுணர்வும் முனைப்பார்வமும் கொண்டதான பணியின் போக்கில் இத்தகைய ஒவ்வொரு தவறும்
சுரண்டும் சிறுபான்மையினர் அடையும் ‘குறையில்லாத’ ஆயிரம் லட்சம்
வெற்றிகளைக் காட்டிலும் - அவர்கள் உழைக்கும் மக்களை மோசடி செய்து ஏமாற்றுவதில்
அடையும் வெற்றிகளை விடவும் - சால மதிப்புடையதாகும். ஏனெனில் இத்தகைய தவறுகள் மூலமே
தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒரு புது வாழ்வை நிர்மாணிக்கக் கற்றுக் கொள்வார்கள்;
முதலாளிகள் இல்லாமல்
வாழக் கற்றுக் கொள்கிறார்கள்; இந்த வழியில்
மட்டுமே அவர்கள் - ஆயிரக்கணக்கான தடைகளின் ஊடே - வெற்றிகரமான சோசலிசத்தை நோக்கித்
தமக்கென ஒரு பாதையை வகுத்துக் கொள்வார்கள்.
அவர்களது
புரட்சிகரப் பணிகளின் போக்கில் எமது விவசாயிகளால் தவறுகள் செய்யப்படுகின்றன,
ஆனால் இவர்கள் ஒரே அடியாக
1917 அக்டோபர் 25 - 26
(பழைய பாணி) ஒரே இரவில்
நிலத்தில் தனியுடமையை முற்றாக ஒழித்துவிட்டார்கள்; இப்போது மாதத்திற்கு மாதம் மிகப்பெரிய
இடர்ப்பாடுகளை வென்று சமாளித்து, தமது தவறுகளைத்
தாமே திருத்திக் கொண்டு, பொருளாதார
வாழ்வில் புதிய நிலைமைகளை அமைத்தல், குலாக்குகளை எதிர்த்துப் போராடுதல், உழைக்கும் மக்களுக்கு (செல்வந்தருக்கு அல்ல) நிலம் வழங்குதல், கம்யூனிஸ்டு பெருவீத விவசாயத்திற்கு மாறிச்
செல்லுதல் போன்ற மிகவும் கடினமான கடமைகளுக்குப் பயன்தரும் வழியில் தீர்வு
காண்கிறார்கள்.
அவர்களது
புரட்சிகரப் பணிகளின் போக்கில் எமது தொழிலாளர்களால் தவறுகள் செய்யப்படுகின்றன.
ஆனால் அவர்கள் ஏற்கனவே சில மாதங்களுக்குப் பிறகு ஏறத்தாழ எல்லா ஆகப்பெரிய
ஆலைகளையும் தொழிற்சாலைகளையும் தேசவுடமையாக்கி விட்டார்கள், கடினமான அன்றாட வேலை மூலம் தொழில்துறையின்
முழுக் கிளைகளையும் நிர்வாகம் செய்யும் புதிய கடமையைக் கற்றுக்கொண்டு
இருக்கிறார்கள்; தேசவுடமையாக்கப்பட்ட
நிறுவனங்களைச் செயல்பட வைத்திருக்கிறார்கள்; சோம்பல், குட்டி முதலாளித்துவ மனப்பாங்கு, தன்னலம் ஆகியவற்றின் வலிமை மிக்க எதிர்ப்பை
வென்று அகற்றி, புதிய சமூக
உறவுகள், புதிய உழைப்புக்
கட்டுப்பாடு, உறுப்பினர்கள்
மீது தொழிலாளர் தொழிற்சங்கங்களின் புதிய செல்வாக்கு ஆகியவற்றுக்கான அடித்தளத்தைச்
செங்கல்லுக்கு மேல் செங்கல்லாகக் கட்டி வருகிறார்கள்.
1905ஆம் ஆண்டிலேயே
மக்களின் வலிமை மிகுந்த எழுச்சியால் படைக்கப்பெற்ற எமது சோவியத்துகள் அவற்றின்
புரட்சிகரப் பணிகளின் போக்கில் தவறுகள் செய்கின்றன. தொழிலாளர் விவசாயிகளின்
சோவியத்துகள் ஒரு புதிய மாதிரி அரசாகும்; ஒரு புதிய உயர் மாதிரி ஜனநாயகம், பாட்டாளி வர்க்க சர்வாதி காரத்தின் ஒரு வடிவம்; முதலாளி வர்க்கம் இல்லாமலும் முதலாளி
வர்க்கத்திற்கு எதிராகவும் அரசை நிர்வாகம் செய்யும் ஒரு சாதனம். முதல் தடவையாக
இங்கு ஜனநாயகம் மக்கட் திரளுக்கு, உழைக்கும்
மக்களுக்குச் சேவை செய்கிறது. இன்னும் ஆக ஜனநாயகமானது என்று கருதப்படும் எல்லா
முதலாளித்துவக் குடியரசுகளிலும் கூட இருப்பது போன்று செல்வந்தருக்கான ஜனநாயகம்
என்ற நிலை இங்கு போய்விட்டது. முதல் தடவையாக பத்துக் கோடிப் பேர் ஈடுபடுத்தப்படும்
அளவிற்குப் பாட்டாளி வர்க்க மற்றும் அரைப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைச்
செயலாக்கும் பிரச்சனையை மக்கள் எடுத்துச் சமாளிக்க முயல்கிறார்கள் - இந்தப்
பிரச்சனைக்குத் தீர்வு காணாவிட்டால் சோசலிசம் குறித்து பேசவே முடியாது.
புலமைப்
பகட்டர்களும் அல்லது முதலா ளித்துவ - ஜனநாயகம் அல்லது நாடாளுமன்றத் தப்பெண்ணங்கள்
திருத்த முடியாத அளவுக்குத் திணிக்கப்பட்ட மனங்களைக் கொண்ட நபர்களும் எமது
சோவியத்துகளைப் பற்றியும், உதாரணமாக நேரடித்
தேர்தல் இல்லாதது பற்றியும் குழம்பிப் போய் தலையசைத்து மறுப்பைத் தெரிவிக்கட்டும்.
இந்தப் பேர்வழிகள் 1914 -1918ஆம் ஆண்டுகளின்
மாபெரும் எழுச்சிகளின் காலகட்டத்திலிருந்து எதையும் மறக்கவில்லை. எதையும் கற்றுக்
கொள்ளவில்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உழைக்கும் மக்களுக்கான புதிய
ஜனநாயகத்துடன் இணைப்பது -உள்நாட்டுப் போரை அரசியலின் மக்கள் ஆகவிரிவான முறையில்
பங்கு பற்றுவதோடு இணைப்பது - இத்தகைய இணைப்பை ஒரேயடியாகக் கொண்டுவர முடியாது;
மேலும் இது நைந்துபோன
மாமூல் நாடாளுமன்ற ஜனநாயகத்தோடு பொருந்துவதும் அல்ல. ஒரு புதிய உலகத்தின், சோசலிச உலகத்தின் பொதுத் தோற்றம் சோவியத்
குடியரசின் உருவில் எம்முன் எழுந்து வருகிறது. இந்த உலகம் தயார் நிலையில் இருந்து
உருவான ஒன்றல்ல, ஜுபிடரின் தலையிலிருந்து உதித்தெழுந்த மினர்வா
போல எழுவது அல்ல என்பதில் வியப்புக்கு இடமில்லை.
(1918, ஆகஸ்ட் 20 அன்று
அமெரிக்க
தொழிலாளர்களுக்கு
லெனின் எழுதிய
இந்தக் கடிதத்தின்
மேலும் சில
பகுதிகள் அடுத்த இதழில்)