COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, March 31, 2017

முதலாளிகள் மனம் மகிழ தொழிலாளர்களுக்கு தண்டனையா?
மாருதி, பிரிக்கால் தொழிலாளர்களை விடுதலை செய்!

தொழிலாளர்கள் சங்கம் அமைத்தது அவ்வளவு பெரிய குற்றமா? முதலாளிகள், தங்களுக்குச் சாதகமான அரசாங்கம் இருக்கும்போது, தங்கள் கட்டளைகளை நிறைவேற்றுகிற அரசாங்கங்கள் இருக்கும்போது, மேலும் மேலும் தங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ள சங்கம் அமைக்கிறார்கள். தொழிலாளர்கள் சங்கம் அமைப்பது மட்டும் எப்படி குற்றமாகிவிடும். இதுவரையிலும் மாருதி தொழிலாளர்கள் சங்கம்
அமைத்ததற்காக தந்திருக்கும் விலை மிகப் பெரியது. இப்போது அவர்களில் 13 பேருக்கு முதலாளித்துவ நலன் காக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது. முதலாளிகள் மனம் மகிழ தொழிலாளர்களுக்கு தண்டனையா என்று இந்திய தொழிலாளர் வர்க்கம் கேட்கிறது. இந்த அநீதிக்கு எதிராக, மாருதி தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து, குர்கானிலும் மனேசரிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்துகிறார்கள்.
அந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாக, மார்ச் 16 அன்று ஏஅய்சிசிடியு தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. ஏஅய்சிசிடியுவில் இணைந்துள்ள தொழிலாளர் சங்கங்களின் தொழிலாளர்கள் மார்ச் 16 அன்று உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். புரட்சிகர இளைஞர் கழகத் தோழர்கள் செயல்படுகிற ஆலைகளிலும் தொழிலாளர்கள் உணவுப் புறக்கணிப்பு செய்தனர்.
இந்த எதிர்ப்புகளுடன் மார்ச் 16 அன்று அம்பத்தூரில் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டது. அம்பத்தூர், திருவெற்றியூர், திருபெரும்புதூர் பகுதிகளின் பல்வேறு ஆலைகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் தொழிலாளர் முன்னோடிகளும் கலந்துகொண்ட இந்தப் பட்டினிப் போராட்டத்துக்கு ஏஅய்சிசிடியு மாவட்டத் தலைவர் தோழர் பழனிவேல் தலைமை தாங்கினார். பட்டினி போராட்டத்தை இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி துவக்கிவைத்தார். ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார் பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தார். பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்று மீண்ட தோழர் குணபாலன் பட்டினி போராட்டத்தில் கலந்துகொண்டார்.

போராட்டத்தில் இககமாலெ, புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம், முற்போக்கு பெண்கள் கழகம், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் தலைவர்களும் சிஅய்டியு மற்றும் ஏஅய்டியுசி தலைவர்களும் கண்டன உரையாற்றினர்.

Search