கோவையில் மார்ச் 8 பொதுக் கூட்டம்
ரஷ்யப்
புரட்சியின் நூறாண்டு
நக்சல்பாரியின்
அய்ம்பதாவது ஆண்டு
பிரிக்கால்
தொழிலாளர் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு
ரஷ்யப்
புரட்சியின் நூறாண்டு, நக்சல்பாரியின்
அய்ம்பதாவது ஆண்டு, பிரிக்கால்
தொழிலாளர் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு ஆகியவற்றை அனுசரிக்கும் விதம் மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று
கோவையில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.
பிரிக்கால் தொழிலாளர்களின்
பத்தாண்டு காலப் போராட்டப் பதிவுகள் பிளக்ஸ் பேனர்களாக
காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கூட்டத்திற்கு கோவை மாவட்ட பிரிக்கால் ஒற்றுமைச்
சங்கத்தின் தலைவர் தோழர் நடராஜ் தலைமை வகித்தார். பிரிக்கால் பிளாண்ட் 1ல் பணிபுரியும் தோழர் விஜி, பிளாண்ட் 3ல் பணிபுரியும் தோழர் விஜயலட்சுமி ஆகியோர்
உழைக்கும் பெண்கள் தினத்தில் பிரிக்கால் தொழிலாளர் போரட்டத்தின் பொருத்தப்பாடு
பற்றிப் பேசினர். சங்கத்தின் செயலாளர் தோழர் சாமிநாதன் உரையாற்றினார்.
இரட்டை ஆயுள்
தண்டனையில் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு சிறை மீண்ட தோழர்கள் ராஜேந்திரன்,
சிவக்குமார், வேல்முருகன், சம்பத்குமார், குணபாலன், சரவணக்குமார் ஆகியோர் விண்ணதிரும்
முழக்கங்களுடன் கவுரவிக்கப்பட்டனர். தோழர் கவிதா கிருஷ்ணன் அவர்களுக்கு சால்வை
அணிவித்தார். சிறையிலிருந்தபோது தாங்கள் செய்த வேலைக்காக பெற்ற கூலி பணத்தை
சிறையிலிருக்கும் தோழர்கள் மணிவண்ணன், ராமமூர்த்தி ஆகியோரின் உச்சநீதி மன்ற மேல்முறையீட்டு வழக்குக்காக அளித்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் ‘தொழிலாளர்
ஒற்றுமை ஓங்குக’ என முழக்கம்
எழுப்பினர். இரண்டு தோழர்களையும் சிறை மீட்கும் வரை போராட்டம் ஓயாது என உறுதி
எடுத்துக் கொண்டனர்.
புரட்சிகர இளைஞர்
கழகத்தின் தோழர் பெரோஸ் பாபு கோவை மண்ணில் உழைக்கும் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க
மதவாத சக்திகள் எடுக்கின்ற முயற்சிகள் பற்றி குறிப்பிட்டார். இகக (மாலெ) மாவட்டச்
செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் இன்றைய தமிழக சூழலில் பிரதான அரசியல் கட்சிகள்
அம்பலப்பட்டு நிற்கும் போது, மய்ய நீரோட்ட
இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்ற முடக்குவாதத்தில் சிக்கி நிற்கும் போது புரட்சிகர
இடதுசாரிகளின் கடமை கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.
இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன் கோவை பிஎஸ்ஜி கல்விக்
குழுமத்தின் பல கோடி நில மோசடி பற்றி குறிப்பிட்டு பெருமுதலாளிகள் பேசும் அறம்,
நேர்மைகளை
கேள்விக்குள்ளாக்கினார்.
பிரிக்கால்
நிர்வாகத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்டு வெளியில் நிற்கும் நூற்றுக்கணக்கான
தொழிலாளர்கள் சார்பாக இரண்டு தோழர்கள் விடுதலைக்கு நிதி திரட்ட முடிவு செய்து
மேடையில் அறிவுப்பும் செய்தனர்.
கூட்டத்தில்
பேசிய அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் தேசிய செயலாளர் தோழர் கவிதா
கிருஷ்ணன் பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு நாளில், சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று
போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்த பெண் தொழிலாளர்களுக்கு சிறப்பு வணக்கம்
என்றார். இந்த நாளில் பெங்களூருவில் பெண் தூய்மைப் பணித் தொழிலாளர்கள் மிகப் பெரிய
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள், உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன,
உங்களைப் பார்க்கும்போது
மிகுந்த நம்பிக்கை கொள்கிறேன், வருங்கால வெற்றி
நமதாகட்டும் என்றார்.
ஏஅய்சிசிடியு
தேசியத் தலைவர் தோழர் குமாரசாமி தனது உரையில் பிரிக்காலில் நியாயம் கேட்டுப்
போராடிய தொழிற்சங்கத்திற்கு எதிராக நிர்வாகம் சதிவலை பின்னியது பற்றியும், அதற்கு எதிராக வீதிகளிலும், நீதிமன்றத்திலும் போராடி இன்று குற்றம்
சாட்டப்பட்ட 27 பேரில் 25 பேர் விடுதலை பெற்றிருப்பது பற்றியும் பகுதி
மக்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது என்றும் குறிப்பிட்டார்.
சிறையிலிருக்கும் இரண்டு தோழர்களையும் பிரிக்கால் தொழிற்சங்கம் மீட்டெடுக்கும்
என்று உறுதிபடக் கூறினார். தமிழக அரசியலில் எழுப்ப வேண்டிய கேள்வி ஜெயலலிதா சாவில்
மர்மம் உள்ளதா, இல்லையா என்பதல்ல,
மாறாக
நிரூபிக்கப்பட்டிருக்கிற ஊழலுக்கு துணை போன அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் தண்டிக்கப்பட
வேண்டும் என்பதே என்றார். பிஎஸ்ஜி கல்விக் குழுமத்தை தோலுரித்துக் காட்டினார்.
கோவை மாவட்ட
பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தின் பொருளாளர் தோழர் ஜெயப்பிரகாஷ்நாராயணன்
நன்றி கூறினார்.
சீர்காழியில்
சர்வதேச உழைக்கும் பெண்கள் தின பேரணி, ஆர்ப்பாட்டம்
சீர்காழியில்
மார்ச் 8 சர்வதேச
உழைக்கும் பெண்கள் தினத்தன்று கிராமப்புற உழைக்கும் பெண்களின் பேரணி மற்றும்
ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அனைத்திந்திய விவசாய
கிராமப்புற தொழிலாளர் சங்கம் மற்றும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக
பதாகைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற உழைக்கும் பெண்கள் அணிதிரண்டனர்.
இககமாலெ மற்றும் புரட்சிகர இளைஞர் கழக தோழர்களும் கலந்துகொண்டனர்.
நூறு
ஆண்டுகளுக்கு முன் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று ரஷ்யாவின் உழைக்கும்
பெண்கள் நடத்திய வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டங்களும்தான் ஜார் ஆட்சியை
தூக்கியெறிந்த மகத்தான ரஷ்யப் புரட்சியின் துவக்க போராட்டங்களாக அமைந்ததை நினைவு
கூரும் விதத்தில் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
விவசாயத்தை,
விவசாயத் தொழிலாளர்களை,
விவசாயிகளை அழிக்கின்ற
ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், விவசாய விரோத நாசகர கொள்கைகளுக்கு முடிவு
கட்டப்பட வேண்டும், கார்ப்பரேட்,
மதவெறி, சாதிவெறி, ஆணாதிக்க சக்திகள் பெண்கள் மீது நாளும்
நடத்தும் வன்முறைகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும், தமிழ்நாட்டின் கொள்ளைக் கும்பல் ஆட்சி ஒழிய
வேண்டும், நூறு நாள் வேலைத்
திட்டக் கூலி பாக்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும், நுண்கடன் நிறுவனங்களில் சுயஉதவிக் குழு பெண்கள்
பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பேரணிக்குப் பிறகு
நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு தேசியச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி, இககமாலெ மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோவன்,
மாவட்டக் குழு உறுப்பினர்
தோழர் பிரபாகரன், அனைத்திந்திய
விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தின் தோழர் அமிர்தலிங்கம், முத்துக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
தோழர்
ராணியம்மாள் மற்றும் தவமணி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஊராட்சிகளில்
இருந்தும் கலந்துகொண்ட பெண்கள் உரையாற்றினார்கள். ஒலிபெருக்கியை கையில் எடுத்த
கிராமப்புற வறிய உழைக்கும் பெண்கள், தங்கள் குரல் ஆட்சியாளர்களுக்கு எட்டும் விதம், நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஆறு நாட்கள்
வேலைதான் கிடைப்பதாகவும் அதற்கும் கூலி தரப்படுவதில்லை என்றும் ஊராட்சித் தலைவரை
பார்க்கச் சென்றால், அவர் தூங்கிக்
கொண்டிருப்பதாகவோ, வீட்டில் இல்லை
என்றோ சொல்லி தங்களை சந்திப்பதை தட்டிக் கழிப்பதாகவும் வங்கிகளில் கடன் திரும்பச்
செலுத்தச் சென்றால் கூட வங்கி அதிகாரிகள் தங்களை தரக்குறைவாக நடத்துவதாகவும்
புகார்கள் முன்வைத்தார்கள். வாக்குக் கேட்க வரும்போது காலில் விழும் ஆட்சியாளர்கள்
ஆட்சியைப் பிடித்த பிறகு தங்களை மறந்துவிடுகின்றனர் என்றார்கள். ரூ.1,000 மட்டுமேயான முதியோர் ஓய்வூதியத்தில் இன்று
இருக்கும் நிலைமைகளில் வாழ முடியுமா என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த படுமோசமான
நிலைமைகளுக்கு முடிவு கட்டியே தீர வேண்டும் என்றார்கள். அந்த உழைக்கும் பெண்கள்
எழுப்பிய கேள்விகள், மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஆளும் தகுதியை
இழந்துவிட்டார்கள் என்று குற்றம் சுமத்துவதாக, அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதாக
அமைந்திருந்தன.
சர்வதேச
உழைக்கும் பெண்கள் தின நிகழ்ச்சிகள்
சென்னை மற்றும்
திருவள்ளூர் மாவட்ட ஏஅய்சிசிடியுவும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும்
இணைந்து மார்ச் 8 அன்று நடத்திய
கூட்டத்துக்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் துணைத் தலைவர் தோழர்
குப்பாபாய் தலைமை தாங்கினார். முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர்
தேன்மொழி, அகில இந்திய
மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா, ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார் உரையாற்றினர்.
புதுக்கோட்டை
மாவட்டம் கந்தர்வகோட்டையில் இகக(மாலெ) மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ரேவதி
தலைமையில் சம உரிமை, அச்சமற்ற
சுதந்திரம் என்ற முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இகக(மாலெ) மாவட்டக்குழு
உறுப்பினர் தோழர் வனிதா முன்னிலை வகித்தார். புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநில
பொதுச் செயலாளர் தோழர் தனவேல் சிறப்புரையாற்றினார். புதுக்கோட்டை மாவட்டத்தில்
விவசாய நீர் ஆதாரத்தை உறிஞ்சும் கால்ஸ் சாராய ஆலை மூடப்பட வேண்டும், சிப்காட் என்ற பெயரில் நடக்கும்
விளைநிலப்பறிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மார்ச் 8 அன்று விழுப்புரம் மாவட்டம்
கச்சிராப்பாளையத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்
சங்கமும் இணைந்து சர்வதேச உழைக்கும் பெண்கள் தின கருத்தரங்கம் நடத்தின. அகில
இந்திய முற்போக்கு பெண்கள் கழக பகுதி அமைப்பாளர் தோழர் சின்னபொண்ணு தலைமை
வகித்தார். மாவட்ட அமைப்பாளர் தோழர் செண்பகவள்ளி, இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன்
உரையாற்றினர். பெண்கள் சுய உதவிக் குழுக்களை குறிவைத்து செயல்படும் தனியார்
நுண்கடன் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும், டாஸ்மாக் சாராயக் கடைகளை முற்றிலுமாக மூட வேண்டும், நாணய மதிப்பகற்றும் நடவடிக்கையால் வேலை,
வருமானம், வாழ்வாதாரம் இழந்த அனைவருக்கும் அவர்களது
வங்கிக் கணக்கில் ரூ.1,00,000 அரசாங்கம்
செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
புதுக்கோட்டையிலும்
விழுப்புரத்திலும் நடந்த கூட்டங்களில் விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன்
உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் சட்டக்
கூலி ரூ.203, 300 நாட்கள் வேலை,
குடும்பத்தில்
இருவருக்கும் வேலை, நாள்கூலி ரூ.500,
திட்டத்தைப் பேரூராட்சிப்
பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும், ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நாமக்கல்
மாவட்டம் குமாரபாளையத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக பகுதிப்
பொறுப்பாளர் தோழர் துர்காதேவி தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இகக(மாலெ)
மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் மலர்விழி, ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர்
ஏ.கோவிந்தராஜ், மாவட்டச்
செயலாளர் தோழர் சுப்பிரமணி உரையாற்றினர். குமரி மற்றும் சேலம் மாவட்டங்களில்
முன்னணி பெண் தோழர்களின் அரங்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நெல்லை ஆலங்குளத்தில்
பீடி பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்
தோழர்கள் பேச்சி, பாக்கியம்,
மல்லிகா, பியுசிஎல் அமைப்பின் தோழர் முரளி, அவிகிதொச தோழர் குண்டுமலை உரையாற்றினர்.