தலையங்கம்
(மாலெ தீப்பொறி 2017 மார்ச் 01 – 15)
பழனிச்சாமி பதவி விலகட்டும்!
சட்டமன்றத் தேர்தல்களுக்கு பரிந்துரைக்கட்டும்!
சட்டமன்றத் தேர்தல்களுக்கு பரிந்துரைக்கட்டும்!
டிசம்பர் 16 மாலெ தீப்பொறியில் இருந்து
‘பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் தமிழ்நாட்டிற்கு வரலாறு அளித்த கொடைகள். இன்றைய கழகங்கள் தமிழ்நாடு சுமக்கும் பிணச் சுமைகள். ஒருவர் இறந்துவிட்டால், ஒருவர் நோய்வாய்ப்பட்டால், அவரிடம் இருந்திராத நற்பண்புகளை எல்லாம் அவரிடம்
‘கழகங்களின் அரசியல், தனிமனித வழிபாட்டை கலாச்சாரரீதியாக புதிய சிகரங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளது. ராமச்சந்திரன் கட்சிக்காரர்களைக் கன்னத்தில் அறைவாராம். அடித்து உதைப்பாராம். ஜெயலலிதா காலில் விழ வைத்தார். இன்று அது ரத்தத்தில் ஊறி இயல்பு குணமாக மாறி, சின்னம்மா சசிகலா முன் குனிந்து கும்பிட வைக்கிறது. தமிழக இடதுசாரி கட்சித் தலைவர்கள் அண்ணாதுரை, ராமச்சந்திரன், கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களை பெயர் சொல்லி அழைப்பது இல்லை. இனி அம்மாவின் உடன்பிறவாச் சகோதரியை எப்படி அழைக்கப் போகிறார்களோ?’
‘பிம்பப் பொறிகளில் இருந்து தமிழக மக்கள் விடுதலை பெற, தமிழ்நாட்டின் இடதுசாரி கட்சிகள் அவர்களை தயார்ப்படுத்தவில்லை. பிம்பப் பொறிகளை எதிர்த்துப் பகைத்துக் கொண்டால், அது அரசியல்ரீதியாக முட்டாள்தனம் என்று கருதினார்கள்’.
‘படுகொலை செய்யப்பட்ட சர்வாதிகாரி சீசர் இறந்த இடத்தில், அண்டோனியஸ், சீசரைக் கொன்றவர்களுக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழ வைப்பதாக, ஷேக்ஸ்பியரின் ஜ÷லியஸ் சீசர் நாடகம் சொல்லும். மக்களிடம் சீசரின் உயில் படித்துக் காட்டப்பட்ட பிறகு, மக்கள், சீசரின் இறந்த உடலை தொட்டுப் பார்க்க முயற்சி செய்தார்களாம். சீசரின் ரத்தத்தை தங்களின் கைத் துணிகளில் நனைத்துக் கொள்ள விரும்பினார்களாம். சீசர், ஒவ்வொரு ரோமானியருக்கும் 75 ட்ராக்மா (1,875 அய்க்கி அமெரிக்க டாலர்) சேர வேண்டும் எனவும் தனது தோட்டங்கள், பூங்காக்கள், நிலங்கள் அனைத்தும் மக்கள் நடக்க, மனம் மகிழ்ந்து பொழுது போக்க மக்களிடம் தரப்பட வேண்டும் எனவும் எழுதியிருந்தானாம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா நிச்சயமாக, பெரியவர் பாண்டியன் மொழியில், மக்கள் சக்தி சசிகலாவை மக்களுக்கு விட்டுச் சென்றுள்ளார்!’
டிசம்பர் 2016ம் பிப்ரவரி 2017ம்
அப்போது, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, விசிக, அதிகாரபூர்வ இடதுசாரி கட்சிகள் ஜெயலலிதாவிற்கு வஞ்சகமில்லாமல் புகழஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார்கள்.
இப்போதும், பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள், பிரச்சனையின் சாரமான விசயத்தில் இருந்து நகர்ந்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மேன்மையை உயர்த்திப் பிடிக்கிறார்கள். பொதுவாக இடதுசாரிகள் தங்கள் கைகளில் இருந்த கமண்டல புனித நீரில் இருந்து யார் தலையில் நீர் தெளிக்கிறார்களோ அவர்களே மதச்சார்பற்ற சக்திகள் என்று சொன்ன ஒரு காலம் இருந்தது. இப்போது, நாடாளுமன்ற ஜனநாயக விழுமியங்களின் மொத்த குத்தகை தாரர்களாக அவர்கள் மாறியுள்ளார்கள். முதலாளித்துவ கட்சிகள், நாடாளுமன்ற முடக்குவாதத்தில் சிக்கிக் கொள்ளாமல், தங்கள் வசதிக்கேற்ப, நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளை, மனம்போன போக்கில் பல பத்தாண்டுகளாக பல நேரங்களில் கையாண்டு வருகிறார்கள். அவர்களுக்கு அதில் எந்தத் தயக்கமும் இல்லை.
ஜெயலலிதா இறந்தவுடன், பன்னீர்செல்வத்தின் கலகத்துக்குப் பிறகு சசிகலாவா பன்னீர்செல்வமா என போட்டி துவங்கியது. ஆளுநர், பாஜக சார்பாக, பிரச்சனையை விரைவில் முடிக்க வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தார். தமிழ்நாட்டில் அதிமுக என்ற கட்சி மற்றும் ஆட்சியின் மீது, பாஜகவின் பிடி இறுகியிருக்க கிடைத்த வாய்ப்பை எல்லாம் மத்திய அரசு ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்ததில் இருந்தே, பயன்படுத்தத் துவங்கியது. இந்து முன்னணியின் சசிகுமார் மர ணத்தை ஒட்டி கோவையும் திருப்பூரும் இந்துத்துவா சக்திகளின் கைகளுக்கு சென்றபோது, தமிழ்நாட்டு அரசு எந்திரத்தின் மீது சங் பரிவாரின் பிடி வெளிச்சத்துக்கு வந்தது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை துவக்குவதிலும், சங் பரிவார் ஆதரவு தன்னார்வ நிறுவனங்கள் சாதிய சக்திகள் நவீன சாமியார்கள் பாத்திரம் வகித்தனர்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, பன்னீர்செல்வம் கலகத்தை அடுத்து, இடதுசாரி கட்சி கள் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு என்பதற்கு அழுத்தம் வைத்தனர். அப்போதே மாலெ கட்சி பிப்ரவரி 9 அன்று, பாஜகவின் அரசியல் சதிகளை முறியடிப்போம், கொள்ளைக் கூட்டம் தமிழ்நாட்டை கைப்பற்ற அனுமதியோம், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டு வருவோம், மீண்டும் மக்கள் வாக்குகள் பெற்று புதிய ஆட்சி அமையட்டும் என்ற முழக்கங்களை முன்வைத்தோம். அப்போது நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஆரத்தழுவியர்கள், நான்கரை ஆண்டுகள் இன்னமும் ஆள்வதற்கு மக்கள் வாக்குகள் படி உரிமை இருக்கும்போது, தேர்தல் நடத்துமாறு கேட்கலாமா என்றும், தேர்தல் நடத்தச் சொல்லி கேட்பதன் மூலம் பாஜக வந்துவிட வாய்ப்பு உருவாகாதாக என்றும் கேட்டார்கள்.
பாஜக ஏற்கனவே தமிழ்நாட்டில் முக்கியமான ஆட்டக்காரர்களில் ஒருவராக உள்ளது என்பதையும், தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மதிமுக போன்ற எல்லா கட்சிகளுமே கடந்த காலத்தில் பாஜகவுடன் உறவு வைத்துள்ளன என்பதையும், மத்திய பாஜக ஆட்சிகளை மாறி மாறி ஆதரித்துள்ளன என்பதையும், மசூதி இடிப்பை, குஜராத் கலவரத்தை கழகங்கள் கேள்விக்கு உள்ளாக்க வில்லை என்பதையும், இசுலாமியர், கிறித்துவர் வாழும் பகுதிகளில் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மோசமாக பயன்படுத்தி சங் பரிவார் தன் செல்வாக்கை வளர்க்கிறது என்பதையும், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு அடுத்து கூடுதலான சட்டமன்ற தொகுதிகளில் பாஜகதான் முதலிடத்தில் வந்துள்ளது என்பதையும், நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இப்போதும் தமிழ்நாட்டின் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகளில் நிறைய சசிகலா ஆதரவு, கொஞ்சம் பன்னீர்செல்வம் ஆதரவு என்பது தாண்டி, கணிசமான சங் பரிவார் ஆதரவு அதிகாரிகள் உள்ளனர் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. மேற்குவங்கத்தில் திரிணாமூலுக்கு மாற்றாக ஓர் ஆபத்தான இந்து அணிதிரட்டலில் இறங்குவதன் மூலம் இடதுசாரிகளிடம் இருந்து இரண்டாம் இடத்தை பறிக்க பாஜக முயன்று வருகிறது, கேரளத்தில் புதிய புதிய பகுதிகளுக்கு பூகோளரீதியாகவும் புதிய சமூக சக்திகள் மத்தியிலும் வளர்ந்துள்ளது, நாடு முழுவதும் அதற்கு போட்டியாளரான காங்கிரஸ் கட்சி தனது வரலாற்றுச் சரிவில் இருந்து மீளவில்லை.
மக்கள் வாக்களித்துள்ளபடி இன்னும் நான்கு வருடங்களுக்கு மேல் ஆள்வதற்கு அவர்களுக்கு சட்டப்படி இடம் இருக்கும் போது, சட்டமன்ற பெரும்பான்மை அறிந்து கொண்டு ஆள வழி செய்யாமல், தேர்தல் என்று கேட்பது ஜனநாயத்துக்கு விரோதமான தில்லையா என்ற கேள்வி, தவறான அடிப் படையில் எழுப்பப்படுகிறது. மக்களுக்காகத்தான் ஆட்சிகள் இருக்க வேண்டும். ஜனநாயகம் என்றால் மக்களாட்சி என்பதோடு கூடவே, மக்களுக்கான ஆட்சியாகவும் இருக்க வேண்டும். மக்களாட்சி என்பதை, நிபந்தனை இல்லாமல், என்ன ஊழல், என்ன ஒடுக்குமுறையில் ஈடுபட்டாலும் அய்ந்து வருடங்களுக்கு ஆள உரிமை உண்டு என்று சொல்வது, ஏற்கத் தக்கதல்ல. தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகள் ஒப்புக்குக் கூட கவனிப்பாரற்று பின்னே தள்ளப்பட்டிருந்த நிலையில் விவசாய நெருக்கடியும் வாழ்வாதார நெருக்கடியும் ஏகப்பெரும்பான்மை மக்களை திணறடித்துக் கொண்டிருந்தபோது, அஇஅதிமுகவின் இரண்டு கூட்டங்களும் தமிழ்நாட்டை கொள்ளையடித்த, சூறையாடிய கொள்ளையடிக்கும், சூறையாடும் கூட்டங்களாக இருந்தபோது, சட்டமன்ற பெரும்பான்மை அறிவது என்பது, கொள்ளையர்கள் ஆள இடம் தருவது என்று மட்டும் ஆகுமே தவிர, அதற்கும் ஜனநாயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பெரும்பான்மை பலப்படி ஆளட்டும் என்ற பார்வை விவரமில்லாத, உயிர்ப்பில்லாத, வறட்டுத்தனமான, சம்பிரதாய ஜனநாயகப் பார்வையாகும். மக்கள் நலனுக்கு மக்கள் விருப்பங்களுக்கு புறம்பான பார்வையாகும். சங் பரிவார் சதிக் கூட்டங்கள், கொள்ளை கும்பல்கள், அரசியல் நிகழ்ச்சிநிரலை தீர்மானிப்பதற்கு இடம் தராமல், மீண்டும் அரசியல் கட்சிகளை மக்களிடம் வா என இழுப்பதுதான், ஜனநாயகத்தின் தேவையாக இருக்கும்.
நமது இந்த நிலைப்பாடு தனித்ததாக இருந்த சமயம், கூவத்தூரில் சசிகலா ஆதரவு கும்பல் தங்க வைக்கப்பட்டிருந்தது. பன்னீர் செல்வம் அணி நாளும் வளர்வதாக தினமலர் மற்றும் சில காட்சி ஊடகங்கள் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். கவனமாக விவாதத்தை சசிகலா, பன்னீர்செல்வம் என்ற அளவில் சுருக்கி நிறுத்தினார்கள். இப்போதும் பிரேக்கிங் நியூசில், மக்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு இடமே இல்லாமல் போனது.
பிப்ரவரி 14 அன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தது. தீர்ப்பு வந்த பிறகு சசிகலா சிறை சென்றார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவிக்கு சசிகலாவால் முன்னிறுத்தப்பட்டார். ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் தந்தார். இரண்டு நாட்களிலேயே பழனிச்சாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரினார். சட்டமன்றத்தில் அமளி நடந்தது. திரும்பவும் விவாதம் சட்டமன்ற மாண்புகள் தொடர்பானதாக, சபாநாயகர் இருக்கை, சட்டமன்ற தாள்கள், நாற்காலிகள், ஒலிபெருக்கிகள் ஆகியவற்றின் புனிதம் தொடர்பானதாகவும் மாறியது. குரல் வாக்கெடுப்பு நடத்தியது சரியா, ரகசிய வாக்கெடுப்புதான் நடத்தியிருக்க வேண்டுமா, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்றிய பிறகு வாக்கெடுப்பு நடத்தியது சரிதானா, ஸ்டாலின் தவறு செய்தாரா, பழனிச்சாமி, தனபால் தரப்பு தவறு செய்ததா என்பதாக விவாதங்கள் மாற்றப்பட்டன.
நாடாளுமன்ற ஜனநாயக முறை நிலவுகிற நாடுகளில், அதிகாரங்களை பிரித்து வைத்தல் (Separation of Powers) என்ற கோட்பாடு நிலவுவது, கவனிக்கத் தக்கதாகும். சட்டம் இயற்றும் துறை, நீதித்துறை, ஆட்சித் துறை அதனதன் வேலையை பார்க்க வேண்டும். நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவை தண்டித்த பிறகும், மக்களால் ஜெயலலிதாவை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால், அவ்வாறு தேர்வு செய்வதன் மூலம் ஜெயலலிதா வழக்கில் குற்றவாளி அல்ல என்றும், அவர் விடுதலை செய்யப்படுகிறார் என்றும், மக்கள் சட்டப்படி சொல்ல முடியாது. உச்சநீதிமன்றத்துக்கு, ஜெயலலிதா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது, சசிகலா தண்டனை அனுபவித்தாக வேண்டும் என்று சொல்ல அதிகாரம் உண்டு. ஆனால் யார் சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம், நாடாளுமன்ற உறுப்பினராகலாம், மாநிலத்தில், மத்தியில் ஆட்சி அமைக்கலாம் என்று சொல்லும் அதிகாரம் கிடையாது.
ஜெயலலிதா, வீட்டுக்கே பதிவாளரை வரவழைத்து 3000 ஏக்கர் நிலத்தை கட்டாயப்படுத்தி குறைந்த விலைக்கு வாங்கும் சூறையாடலை, முறைகேடான சொத்துக் குவிப்பை செய்துள்ளார் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. குற்றம் செய்தது ஜெயலலிதா, உடந்தையாக இருந்தது சசிகலா, இளவரசி, சுதாகரன் என்று தீர்ப்பளித்துள்ளது. ஜெயலலிதா செத்துப் போனதால், தண்டனையில் இருந்து பிழைத்துக் கொண்டார். அப்படி இருக்கையில், பழனிச்சாமி, அம்மா, சின்னம்மா வழியில் ஆட்சி நடத்துவேன் என்று சொல்லும்போது, அது குற்றவாளிகளை பின்பற்றுவேன், அவர்களைப் போல் சூறையாடி சொத்து குவிப்பேன் என்று தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் துணிச்சலாக சொல்வதாகாதா? இதற்கு வேறு ஏதாவது பொருள் உண்டா? தப்பித் தவறியும், பழனிச்சாமி அம்மாவும் சின்னம்மாவும் ஊழல் செய்தவர்கள், நான் அவர்கள் வழியில் செல்ல மாட்டேன், அவர்களுக்கு அப்பாற்பட்ட ஊழலற்ற ஆட்சி தருவேன் என்று சொல்வாரா? நிச்சயம் சொல்ல மாட்டார் என்பது நாடறிந்த விசயம்.
அப்படியிருக்க, ஜெயலலிதாவுக்கு அய்ந்தாண்டுகள் ஆள மக்கள் வாக்களித்ததால், பழனிச்சாமிக்கு இன்னொரு நான்காண்டுகள் வாய்ப்பு தருவோம், சசிகலா பழனிச்சாமி ஆள்வது சமூக நீதி ஆட்சிகள், எண்ணிக்கை பெரும்பான்மை பிற்படுத்தப்பட்டோர் ஆட்சிகள் என்றெல்லாம் பேசுவது, மக்களாட்சித் தத்துவத்துக்கு, ஜனநாயகத்துக்கு, மக்கள் சார்பு அறநெறிகளுக்கு புறம்பானைவை ஆகும். ரகசிய வாக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும், எதிர்க்கட்சிகள் இருக்கும்போது வாக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும் என்ற வாதங்களை எல்லாம் விட, இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் தேர்ந்தெடுத்த மக்களுக்கு திருப்பி அழைக்கும் உரிமை வேண்டும் என்ற உலக கம்யூனிச இயக்க முழக்கத்தின் நியாயத்தை, மக்கள் சார்பு அறநெறி வலிமையை உணர்த்துவதுதானே சரியாக இருக்கும்.
இந்த நேரத்தில் திமுகவின் செயல்பாடு பொது வெளியில் விவாதத்துக்கு வந்துவிட்டது. மு.க.ஸ்டாலின் மிகவும் நேரடியாக, சட்ட மன்றத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும், ஆனால், அதற்கு மாறாக, சீக்கிரம் அதிகாரம் வர வேண்டும், அதற்கு ஆளுநர் மூலம் ஆட்சி கலைக்கப்பட வேண்டும், அதற்கு சட்டமன்றத்தில் அமளி நடக்க வேண்டும் என்ற அணுகுமுறையை எடுத்துள்ளதாக மக்கள் கருதுகிறார்கள். ஊடகங்களும் எழுதுகிறார்கள். மிகுந்த அவப்பெயரைப் பெற்று மக்களிடம் இருந்து முற்றிலுமாக அந்நியப்பட்டிருந்த சசிகலா - பழனிச்சாமி கும்பலுக்கு, மூச்சு விட ஸ்டாலின் வாய்ப்பு தந்துள்ளார். அவர்கள் இப்போது ஸ்டாலின் - பன்னீர்செல்வம் கூட்டு என்கிறார்கள். அவர்கள் அருந்ததியரான சபாநாயகரை அவமதித்து விட்டார்கள் என்கிறார்கள். பழனிச்சாமி தரப்பு சாமர்த்தியமாக தனது சட்டமன்ற உறுப்பினர்களை வாயை மூடிக்கொண்டு அமர்ந்திருக்க வைத்தது. கையைக் கட்டிவிட்டது. தனபாலை மட்டும் களத்தில் இறக்கியது. அது பாஜக - பன்னீர்செல்வம் சதி என்று பேசாமல் ஆளுநர் - பன்னீர்செல்வம் சதி என்று பேசாமல், திமுக - பன்னீர்செல்வம் சதி என்று பேசியது. தமிழ் நாட்டில் உள்ள திமுக எதிர்ப்பு கருத்துக்களோடும் அதிமுகவில் இருக்கும் இயல்பான திமுக எதிர்ப்போடும் தன்னை பொருத்தி நிறுத்திக் கொள்ள முயன்றது.
இப்போது பழனிச்சாமி 122 வாக்குகளை பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லை. மக்கள் குறைகளை கேட்பதற்கு, தீர்ப்பதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவ்வளவு எளிதாக மக்கள் மத்தியில் போக முடியாது. அவர்கள் அப்படிச் செல்பவர்களும் அல்ல. மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுள்ள இந்த அரசு, ஊழல் குற்றவாளிகள், ஜெயலலிதா, சசிகலாவுக்கு விசுவாசமான இந்த அரசு, இனி, ஒரு நாள் கூட பதவியில் நீடிப்பது மக்களுக்கு நல்லதல்ல. சட்டமன்ற பெரும்பான்மை, இவர்களுக்கு மக்களை ஆளும் ஜனநாயக உரிமையை இன்றைய சூழலில் நிச்சயம் தராது. திமுகவும் கூட சட்டமன்ற அமளிகள், வழக்குகள் மூலம் காலம் தள்ளுவது, மக்களுக்கு இழைக்கிற துரோகமாகவே அமையும்.
வெறும் அதிகாரம், அதனால் கைகூடும் விசயங்கள் என்ற பசை மட்டுமே ஆட்சியை கட்டி நிறுத்திவிட முடியாது. தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளும் மக்கள் மத்தியில் இருந்து முற்றிலுமாக தனிமைப்பட்டுள்ளனர். மக்கள் பிரச்சனைகளும் எதிர்ப்பும் மேலும் தீவிரமடைகின்றன. வெறும் 122 பேர் ஆதரவு, கட்சிக்குள் கோஷ்டிகள், சாதிவாரியான நிர்ப்பந்தங்கள், பதவிகளுக்கான போட்டி, சிறையில் இருந்து சசிகலாவும் வெளியில் இருந்து டிடிவி தினகரனும் அதிகார மய்யங்களாக செயல்படுவது, மத்திய அரசு வசதிப்படும்போதெல்லாம் மத்திய புலனாய்வு துறையை ஆளும் கட்சியினர் மீது ஏவ, எல்லா வாய்ப்புக்களையும் உருவாக்கித் தந்துள்ள ஆளும் கட்சியினர் என்ற நிலைமைகள், ஆட்சி எப்போதும் கவிழலாம் என்ற உள்ளார்ந்த முரணை கொண்டுள்ளன.
பழனிச்சாமி பதவி விலகட்டும். ஜெயலலிதாவும் சசிகலாவும் அவர்களது கூட்டாளிகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும்விதமாக, பழனிச்சாமி பதவி விலகி, சட்டமன்றத் தேர்தல்களுக்கு பரிந்துரை செய்யட்டும்.
ஆட்சி வேண்டும் என்று கேட்கிற எல்லா கட்சிகளும் மக்கள் வாக்கு வேண்டும் என்று கேட்டு, மக்கள் முன் வந்து நிற்கட்டும்.