COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, February 27, 2017

உச்சநீதிமன்றத் தீர்ப்புப் படி ஜெயலலிதா ஊழல் குற்றவாளி

ஜெயலலிதா 01.07.1991 முதல் 30.04.1996 வரை தன் வருமானத்திற்கு சற்றும் பொருந்தாத அளவிற்கு தன் பெயரிலும், சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயரிலும் சொத்துக் குவித்தார் என்பதுதான் அவர் மீது வனையப்பட்ட குற்றச்சாட்டாகும்.
ரூ.66,65,20,395 சேர்த்து வைத்திருந்தார் என்றும்,
ஓர் அரசு ஊழியர் என்ற விதத்தில் இது அவரது வருமானத்திற்கு பொருந்தாதது என்றும் வழக்கு போடப்பட்டது.
ஜெயலலிதா வருமானத்திற்கு புறம்பாக ரூ.53,60,49,954 சொத்து குவித்தார் என்றும், அவர் உள்ளிட்ட நால்வரும் இதற்காக குற்றமய சதி செய்தனர் என்றும், சசிகலா, இளவரசி, சுதாகரன் என்ற மற்ற மூவரும் அவருக்கு உடந்தையாக இருந்தனர் என்றும் இந்த வழக்கில் கர்நாடக செசன்ஸ் நீதிபதி டி.குன்ஹா தீர்ப்பளித்தார்.
ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தார். சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோருக்கு அதே தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தார்.
வங்கிக் கணக்குகள் முடக்கப்பட வேண்டும், நகைகள் விற்கப்பட வேண்டும், அரசாணை 120 மற்றும் 1183படியான அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கு நடத்திய செலவிற்காக அபராதத் தொகையில் இருந்து ரூ.5 கோடி கர்நாடக அரசுக்கு தரப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் மற்றும் அமிதவ ராய், குன்ஹா தீர்ப்பை அப்படியே மறு உறுதி செய்துள்ளார்கள். ஆகவே இப்போது அபராதத் தொகையை வசூல் செய்ய ஜெயலலிதாவின் சொத்துக்கள் விற்கப்பட வேண்டும். ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பு 1996ல் சில நூறு கோடிகளாக இருந்தது. ஆனால் இப்போது அவை நிச்சயம் சில ஆயிரம் கோடிகள் மதிப்பு பெறும்.
சொத்துக் குவிப்பு வழக்கு நடந்தபோது 1996ல் போயஸ் தோட்ட வீட்டின் மதிப்பு ரூ.16 கோடி என ஜெயலலிதா தரப்பு வாதாடியது. 2016ல் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டபோது இந்த வீட்டின் மதிப்பு ரூ.43.96 கோடி என ஜெயலலிதா தெரிவித்தார். இது அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டு விதிகள் அடிப்படையிலான கணக்காகும். சந்தை மதிப்பு எங்கேயோ போகும்.
கொடநாடு எஸ்டேட்டின் 3000 ஏக்கர் நிலத்தின் மதிப்பு இன்னும் எங்கேயோ போகும்.
ஜெயலலிதா இறந்ததால்தான் இந்த வழக்கு தண்டனையில் முடிந்ததா என்றும் கூட, சில கேள்விகள் எழுந்துள்ளன. உச்சநீதி மன்றத்தில் இரு தரப்பு வாதங்கள் முடிந்து தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு, 8 மாதங்கள் ஓடின. ஜெயலலிதா உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் இருந்தபோது தீர்ப்பு வழங்கப்படவில்லை. அவர் 05.12.2016 அன்று இறந்து, நாட்டின் முதன்மை அரசியல் கட்சிகள், குடிமை சமூகம் அவர் புகழ் பாடிக் கொண்டிருந்த நேரத்தில், தீர்ப்பு வழங்கப்படவில்லை. அஇஅதிமுகவில் அதிகாரப் போட்டி உச்சத்தை அடைந்த நேரத்தில், 14.02.2017 அன்றுதான் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1996ல் துவங்கிய வழக்கு முடிவதற்கு 21 வருடங்கள் ஆயின.
பாஜக தலைமையிலான கர்நாடக மாநில அரசு, ஜெயலலிதாவிற்கு சாதகமாக நிர்ப்பந்தம் கொடுத்தது; இறுதி வரை விட்டுக் கொடுக்காமல் இந்த வழக்கை விடாப்பிடியாய் நடத்திய வழக் கறிஞர் ஆச்சார்யா விடம், நீங்கள் அட்வகேட் ஜெனரலாக இருப்பதா அல்லது ஜெயலலிதா வழக்கு சிறப்பு பப்ளிக் பிராசிக்யூட்டராக இருப்பதா என்பதை தேர்வு செய்யுங்கள் என்றது. அவர் உயர் பதவியான அட்வகேட் ஜெனரல் பதவியைக் காட்டிலும், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் பொறுப்பையே தேர்ந்தெடுத்தார்.
உயர்நீதிமன்றத்தில், 10ஆம் வகுப்பு மாணவரைக் காட்டிலும் மோசமாக தப்புத்தப்பாய் கணக்குப் போட்டு, ஜெயலலிதாவை விடுதலை செய்த, நீதிபதி குமாரசாமியை மக்கள் கேலி செய்தனர். சந்தேகப்பட்டனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் தாமதத்துக்கு அரசியல் தயக்கங்கள், சூழல்ரீதியான செல்வாக்கு போன்றவை காரணமாக இருக்கலாமோ என்ற ஓர் எண்ணமும் கூட மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால், இன்றளவில், ஊழல் முறைகேடு என்ற கோணத்தில் யோசிப்பதாக தெரியவில்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பு, சொத்து பதிவு செய்யும் அரசு பதிவாளர்கள் ஜெயலலிதா வீட்டிற்கு வரவழைக்கப்பட்டனர் என்றும் குறைந்த விலைக்கு விற்குமாறு நில உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர் என்றும் சொல்லியுள்ளது. இந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். 

Search