COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, February 3, 2017

புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநில ஊழியர் கூட்டம்

ஜனவரி 26 அன்று விருத்தாசலத்தில் புரட்சிகர இளைஞர் கழக மாநில ஊழியர் கூட்டம் மாநிலச் செயலாளர் தோழர் தனவேல் தலைமையில் நடைபெற்றது. மாநிலத்தின் 13 மாவட்டங்களிலிருந்து 125க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் பற்றி கூட்டம் விவாதித்தது. இறுதியாக இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி உரையாற்றினார். அவர் தனது உரையில், தற்போதைய விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணங்கள், பண மதிப்பு அகற்ற நடவடிக்கை, சாதி ஆதிக்கக் கொலைகள், உழைப்பு சுரண்டல், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைமை மாற்றங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகிய பல்வேறு பிரச்சனைகள் ஊடகங்களால் ஜல்லிக்கட்டை முன்வைத்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றும், இது மத்திய, மாநில அரசுகளுக்கு உதவியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
வீதிக்கு வந்து போராடிய மாணவர், இளைஞர்களை அடிப்படையான வாழ்வாதாரப் பிரச்சனைகள் மீது போராட்டம் நடத்த, அவர்களை அமைப்பாக்க புரட்சிகர இளைஞர் கழகம் முயற்சி எடுக்க வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.
மதிய அமர்வில் மாலெ தீப்பொறியில் வெளியானஇளம் தலைமுறையினர் எப்படி கம்யூனிசம் கற்றறிய வேண்டும்?’ என்ற லெனினின் கட்டுரை விவாதிக்கப்பட்டது. தோழர் குமாரசாமி அது பற்றி விளக்கினார்.
பற்றியெறியும் பிரச்சனைகளான விவசாயிகள் தற்கொலை, மரணம், தமிழ்நாடு பயிற்சியாளர் நலன் காக்கும் நிலையாணைச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவது, உழைப்புச் சுரண்டல், காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதல் ஆகிய பிரச்சனைகள் மீது பகத்சிங் நினைவு தினமான மார்ச் 23 அன்று மாநிலம் முழுவதும் உறுதியேற்பு கூட்டங்கள் நடத்த கூட்டம் முடிவு செய்தது. கூட்டத்தில் புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி, மாநிலத் தலைவர் தோழர் ராஜகுரு, அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா ஆகியோர் உரையாற்றினர். தோழர் ராஜசங்கர் நன்றி கூறினார்.

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி கூட்டம்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநில அளவிலான கூட்டம் மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முற்போக்கு பெண்கள் கழகத்தின் அகில இந்திய தலைவர் தோழர் ரத்தி ராவ், பெங்களூர் பொறுப்பாளர் தோழர் காந்திமதி, சிபிஅய்எம்எல் மாநில குழு உறுப்பினரும் ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவருமான தோழர் .எஸ்.குமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். பிரிக்கால், காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை, அரசு அச்சகம், ஜிம்கானா கிளப் ஆகிய நிறுவனங்களின் பெண் தொழிலாளர்கள், கட்டுமான அரங்கில் இருந்தும் பெண் தொழிலாளர்கள் உட்பட 29 பெண்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். முற்போக்கு பெண்கள் கழகத்தின் முன்னாள் தேசியத் தலைவர் தோழர் கீதா தாஸ், மகாஸ்வேதா தேவி, ரமா கய்ராலா, தோழர்கள் ஸ்வப்பன் முகர்ஜி, பி.வி.சீனிவாசன், பிடல் காஸ்ட்ரோ, இன்குலாப், மணி, ஜோசப் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியலில் பெண்கள் பங்கு பற்றி கூட்டம் விவாதித்தது. மார்ச் 8 அன்று சர்வதேச உழைக்கும் பெண்கள் தின கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.


அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் ஊராட்சி மட்ட கூட்டங்கள்

அவிகிதொச மாநிலக் குழு முடிவுப்படி ஜனவரி 25 - 31 தேதிகளில் ஊராட்சிகளில் பொதுப் பேரவைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பணமதிப்பகற்றும் நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட கிராமப்புற தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அவர்கள் வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும், நூறு நாள் வேலைத்திட்டக் கூலி பாக்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும், நாள் கூலி ரூ.500 என உயர்த்தப்பட வேண்டும், ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை வேண்டும், விவசாயிகள் கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டும், பொது விநியோகத் திட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் மீது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜனவரி 26 அன்று திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கத்தில் நடைபெற்ற குடியரசு தின கிராம மகாசபைக் கூட்டத்தில் அவிகிதொச கோரிக்கைகள் தீர்மானங்களாக முன்வைக்கப்பட்டன. கலந்து கொண்ட மக்கள் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி அரசு பதிவேட்டிலும் தீர்மானங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்தக் கூட்டத்தில் அவிகிதொச மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன் கலந்து கொண்டார். அதே நாளில் செங்குன்றம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்திலும் மக்கள் மன்றத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்தக் கோரிக்கைகள் அரசுக்கு எதிரானவை என அரசு அதிகாரிகள் முதலில் தயக்கம் காட்டினர். கோரிக்கைகளுக்கு பெருந்திரள் மக்கள் ஆதரவு இருந்ததால் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அவிகிதொச மாநிலத் தலைவர் தோழர் பாலசுந்தரம், மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், அசகளத்தூர் அண்ணா நகர் கிளையில் ஜனவரி 25 அன்று  கூட்டம் நடைபெற்றது. இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், அகில இந்திய மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் வெற்றிவேல் கலந்து கொண்டனர். ஜனவரி 27 அன்று சேந்தநாடு ஊராட்சியில் கூட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் ஜனவரி 25 துவங்கி பல்வேறு ஊராட்சிகளில் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. புளியந்துறை, தாண்டவன்குளம், வருஷபத்து, புதுப்பட்டினம், திருமுல்லைவாசல் ஆகிய ஊராட்சிகளில் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. கூட்டங்களில் இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோவன், அவிகிதொச முன்னணி தோழர்கள் அமிர்தலிங்கம், ஹரிகிருஷ்ணன், ஆசைத்தம்பி, பழனிச்சாமி ஆகியோர் பங்கெடுத்து வருகின்றனர்.

Search