COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, February 14, 2017

கருவறுக்கும் இந்துத்துவ கும்பலை தலையெடுக்க விடக் கூடாது
ஜல்லிக்கட்டில் நந்தினியும், அஇஅதிமுக அதிகாரச் சண்டையில் ஹாசினியும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். காபந்து முதலமைச்சராக இருப்பவரும் முதலமைச்சராக உரிமை கோரி காத்திருப்பவரும் இந்த இரண்டு சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை பற்றி பேசவில்லை. கொடூரமான இந்த இரண்டு  கொலைகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதால், இவர்கள் இரண்டு பேரும் தங்களது பொறுப்பை நிறைவேற்றிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது
.
நந்தினியின் நடுங்க வைக்கும் கொலையைச் செய்தவர்கள், சில காலமாக, கும்பலாக, அந்தப் பகுதியில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள். அவர்களது பல்வேறு குற்றச்செயல்களை கண்டுகொள்ளாமல், காவல் துறையும் துணை நின்றதால்தான் நந்தினி படுகொலை செய்யப்படுவது, உடலைக் கிழிப்பது, வயிற்றில் உள்ள சிசுவை வெளியே எடுப்பது வரை அவர்களுக்கு துணிச்சல் இருந்தது.
டிசம்பர் 29 அன்று காணாமல் போன நந்தினியை, டிசம்பர் 30 அன்று அவரது தாயார் புகார் கொடுத்ததன் பேரில் தேடிய காவல் துறையினர், ஜனவரி 14 அன்றுதான் பிணமாகக் கண்டுபிடித்தனர். மணிகண்டன்தான் குற்றவாளி என்று நந்தினியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜனவரி 4 அன்று மணிகண்டனை அழைத்து விசாரித்து (நலம் விசாரித்தார்களா) அனுப்பிவிட்டனர். அதன் பிறகுதான் மணிகண்டனின், அவனது கூட்டாளிகளின் வெறியாட்டம் நடந்திருக்கிறது. ஜனவரி 3 அன்று மணிகண்டனையும் அவனது கூட்டாளிகளையும் கைது செய்திருந்தால் நந்தினி இன்று நம்முடன் இருந்திருக்கக் கூடும். நந்தினி படுகொலைக்கு, கொலையாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட காவல்துறையினரும் முக்கிய காரணம்.
இந்த நிலைமையிலும் அந்தக் கயவர்களுக்கு உறுதுணையாய் இருக்கிற அரியலூர் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராஜசேகரன் சுதந்திரமாகத்தான் இருக்கிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நந்தினியைக் கொன்ற பிறகு அவரது உடலைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்தானா? அல்லது அவள் உயிருடன் இருக்கும் போதே அப்படிச் செய்தானா? நான்கு பேர் சேர்ந்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியபோது, அந்தச் சிறுமி தன்னைக் காப்பாற்ற எந்தக் கடவுளை அழைத்தாள்? எந்த அளவுக்கு கொடூரமான சித்திரவதையை, வலியை அவள் அனுபவித்திருக்க வேண்டும்? மாதவம் செய்திட வேண்டும் என்றானே. இதற்காகவா?
நந்தினி படுகொலை, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குஜராத்தின் கவுசர் பானு ஷேக்கை நினைவுக்கு கொண்டு வருகிறது. இந்துத்துவ வெறி தலைக்கேறிய கும்பல், அந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து கருவை வெளியே எடுத்தது; பிறகு மயங்கி விழுந்த அந்தப் பெண்ணை எரித்துக் கொன்றது. தெஹல்காவின் ரகசிய காமிராக்கள் முன்னால், பாபு பஜ்ரங்கி, இதை தனது வீரச்செயலாக  விவரித்தார்.
கவுசர் பானு என்ற இசுலாமியப் பெண்ணுக்கு குஜராத்தில் நடந்ததுதான் நந்தினி என்ற தலித் பெண்ணுக்கு தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. நடத்தியவர்கள் இந்துத்துவ வெறியர்கள். அதே செயல்முறை. இந்துத்துவ அதிகாரத்தை, சாதியாதிக்கத்தை நிகழ்த்திக்காட்ட அந்த வெறியர்களுக்கு பெண்ணுடல் தேவைப்படுகிறது.
பெண்கள் அரைகுறை ஆடை அணிவதும் மேற்கத்திய நாகரிகத்தை பின்பற்றி, கட்டுப்பாடற்று நடந்துகொள்வதும் அவர்கள் மீது நடக்கும் வன்முறைகளுக்குக் காரணம் என்று சில நாட்களுக்கு முன்னர் கூட சங் பரிவார் கூட்டம் கத்தியது. நந்தினியும் ஹாசினியும் அரைகுறை ஆடை அணியவில்லை. மேற்கத்திய நாகரிகம் என்ன, தமிழ்நாட்டின் நகர நாகரிகமே இன்னும் நந்தினிக்குத் தெரியாது. நாகரிகம் என்றால் என்ன என்று புரிந்துகொள்ளும் நிலை ஹாசினிக்கு இன்னும் வரவேயில்லை. தலித் பெண் நந்தினியை இந்து முன்னணியின் கயவன் ஒருவன் நம்பிக்கை வார்த்தைகள் சொல்லி அழைத்துச் சென்றான். அவன் பாதகம் செய்பவன் என்று ஏழு வயது ஹாசினிக்கு தெரிந்திருக்கவில்லை. அவளுக்கு நேர்ந்த கொடுமைக்கு சங் பரிவார் கூட்டத்திடம் என்ன பதில் இருக்கிறது?
நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் ஸ்வாதி கொலை செய்யப்பட்டபோது, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை ஓடோடிச் சென்று அவரது குடும்பத்தினரை அவர்கள் வீட்டில் சந்தித்து ஆறுதல் சொன்னார். சாதி, மதம், இனம், நிறம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு, பெண்கள் மீது வன்முறை நடந்தால் அதற்கு எதிராகச் செயலாற்றுவது அவசியம்தான். ஆனால் நந்தினி மிகக் கொடூரமாக கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் கிழிக்கப்பட்டு, சிசு வெளியே எடுக்கப்பட்டு, கொல்லப்பட்ட கொடுமையான நிகழ்வில் தமிழிசையின் வீரத்துடிப்பு என்ன ஆனது? நந்தினி தலித் பெண் என்பதால் துடிப்பு நின்று போனதா? இந்தக் கொடுங்குற்றத்தைச் செய்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களைப் பாதுகாக்கும் பெருங்கடமை முன்னுக்கு வந்துவிட்டதா?
ஸ்வாதி கொலையிலும் ஸ்வாதிக்கு நியாயம் கிடைக்கவில்லை. குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட ராம்குமார் விசாரணை நிறைவுறும் முன்னரே சிறைக்குள்ளேயே ‘தற்கொலை’ செய்துகொண்டார் என்று சொல்லப்பட்டுவிட்டது. விடை கிடைக்காத பல கேள்விகளை ராம்குமாருடன் சேர்த்துப் புதைத்துவிட்டது தமிழ்நாட்டின் காவல்துறை.
சென்ற ஆண்டு இறுதியில் கோவையில் இந்து முன்னணியைச் சேர்ந்த சசிகுமார் இறுதி ஊர்வலத்தில் இசுலாமியர் பகுதிகளில் திட்டமிட்டுச் சென்ற இந்துத்துவ கும்பல், அவர்களது உடைமைகளை சூறையாடியது; அஇஅதிமுகவின் காவல்துறை அதற்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்து வன்முறையை வேடிக்கை பார்த்தது. இன்று நந்தினி படுகொலை செய்யப்படும் வரை, அஇஅதிமுகவின் காவல்துறை  குற்ற நடவடிக்கைகளுக்கு துணை நிற்கிறது. அதற்கு முன்பும் இசுலாமிய இளைஞர்களை வேட்டையாடுவதில் அஇஅதிமுக அரசாங்கம் எந்த தயக்கமும் சுணக்கமும் காட்டவில்லை. அஇஅதிமுகவின் பாசிச நடவடிக்கைகளுடன், அதன் குற்றமய அலட்சியத்துடன், பாஜகவின் இந்துத்துவ வெறியாட்டம் கைகோர்த்துக் கொண்டு தமிழக மக்களை, இசுலாமியர்களை, தலித்துகளை பலிகொள்ளும் ஆபத்தான போக்கு, வெவ்வேறு தளங்களில் தெளிவாக வெளிப்பட துவங்கிவிட்டது.
பாபு பஜ்ரங்கி 2016ல் பிணையில் வெளியில் வந்துவிட்டார். மணிகண்டனும் அவனது வெறி பிடித்த கூட்டாளிகளும் அதுபோல் வெளியில் வந்து விடக் கூடாது. அதுதான் நந்தினிக்கு நியாயம் வழங்குவதாக, மீண்டும் நந்தினிகள் நிகழ்வதைத் தடுப்பதாக இருக்கும். பாபு பஜ்ரங்கியே ஒப்புக்கொண்ட குற்றத்திற்கான தண்டனையில் இருந்து அவரைப் பாதுகாக்க, மருத்துவர்கள், காவல்துறையினர், நீதிமன்றம் என அனைவரும் முயற்சி எடுத்தனர். மணிகண்டனுக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் அதுபோன்ற ஒரு பாதுகாப்பு எந்த விதத்திலும் கிடைத்துவிடக் கூடாது. படித்த பெண், விவரம் தெரிந்த பெண், காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றி பாலியல் வன்முறை செய்தான் என்று சொல்ல முடியாது என்ற ஒரு தீர்ப்பு வேறு, இப்போது மணிகண்டன் போன்றவர்களுக்கு ஆதரவாக முன்வந்து நின்று அச்சுறுத்துகிறது. மணிகண்டனுக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க ராஜசேகரன் எடுக்கும் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டுமானால், அவரும் கைது செய்யப்பட வேண்டும்.
ஆனால், இதற்கு தீவிரமான போராட்டங்கள் அவசியம். அவை மட்டுமே நந்தினிகளை, ஹாசினிகளை பாதுகாக்கும். கருவறுக்கும் இந்துத்துவா கும்பலை தலையெடுக்க விடாமல் தடுக்கும். நந்தினிகள், ஹாசினிகள் அழைக்கிறார்கள். அவசரம்.

அரியலூர் தலித் சிறுமி நந்தினி படுகொலையை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் தலித் சிறுமி நந்தினி இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நந்தினியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கரூரில் 10.02.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஏஅய்சிசிடியுவுடன் இணைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் தோழர் இராஜமாணிக்கம் தலைமை வகித்தார். ஏஅய்சிசிடியு கரூர் மாவட்டச் செயலாளர் தோழர் பால்ராஜ் கண்டன உரையாற்றினார்.இகக(மாலெ) மாவட்டப் பொறுப்பாளர் தோழர் இராமச்சந்திரன், மாவட்ட முன்னணிகள் தோழர் வேல்முருகன், தோழர் சந்திரசேகர், தோழர் சாலமன், தோழர் கோபிராஜன், தோழர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Search