கம்யூனிஸ்ட் கட்சியும் இசுலாமியர்களும்
(கோவை மாவட்ட இககமாலெ தோழர்களுடன் நடந்த விவாதத்தில் இருந்து)
மதவாதம் என்பது பழைய அடிப்படையில் இல்லை. இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஏகாதிபத்தியம், ‘இசுலாமிய எதிர்ப்பு’ பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ஈடுபடுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் இளநிலை கூட்டாளிகளாக இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தேசபக்தி என்பது
பாகிஸ்தான் எதிர்ப்பு மற்றும் இசுலாத்தை சாத்தான்மயமாக்குவது என்பதாக உள்ளது.இதுபோன்ற ஒரு பின்னணியில்தான், விடுதலை பெற வாய்ப்பிருந்த இசுலாமிய இளைஞர்கள், போபால் சிறையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு மோதல் படுகொலை என்ற பெயரால் கொல்லப்பட்டனர். அரசியல்வாதிகள் - காவல்துறை கூட்டால், நீதித்துறையின் அலட்சியம் அல்லது ஒத்துழைப்பால், 10, 15, 20 ஆண்டுகள் வரை சிறையில் இருந்த பல இசுலாமியர்கள், குற்றமற்றவர்கள் என்று சிறையில் இருந்து விடுபடுகின்றனர். அவர்களுக்கு நட்டஈடும் நியாயமும் வழங்கப்படுவதில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பாக நவுஷத் என்ற இசுலாமியர், 20 வருடங்களாக சிறையில் இருப்பவர், மகளின் திருமணத்தை நடத்த பிணையில் வெளியே வர வாய்ப்பு கேட்டுள்ளார். இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட அமர்வம், சதி செய்து கொல்வதற்கு முன்பு குடும்பம் பற்றியெல்லாம் யோசித்து இருக்க வேண்டும், கொலை செய்தவர்களுக்கு பெயில் இல்லை என நியாயம் பேசியது. இவர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட வர். இவர் குண்டு வைத்தவர் என்பதல்ல வழக்கு. இவர் சதியில் பங்கேற்றவர் என்று சொல்லி தண்டிக்கப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். இதே விசயத்தில், இசுலாமியர் அல்லாதோர் மற்றும் வசதி படைத்தவர்கள் என்றால், நீதிமன்றம் இப்படி நடந்து கொள்ளுமா என்ற இயல்பான கேள்வி இசுலாமியர், ஜனநாயக பிரிவினர் மத்தியில் எழுகிறது.
இவையனைத்தும் சேர்ந்து, இந்தியாவில், நமக்கு இந்துத்துவா ஆட்சியில் இடம் இருக்கிறதா என, இசுலாமியர்களை அய்யப்பட வைக்கிறது. தேசிய பிராந்திய முதலாளித்துவ கட்சிகள், வன்மையான இந்துத்துவா அல்லது மென்மையான இந்துத்துவா என்றே இருக்கின்றன.
இடதுசாரிகள் மீது இசுலாமியர்களுக்கு நல்லெண்ணம் இருந்தாலும், இந்துத்துவாவை எதிர்த்து, மோதி தடுத்து நிறுத்தும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு, அணிதிரட்டல் ஆற்றல், அமைப்பு பலம் இடதுசாரிகளுக்கு இல்லை என்பதும் தெரிகிறது.
இத்தகைய புறநிலை காரணங்களால், அவர்கள் இசுலாமிய அடையாளத்துக்குள் சுருங்கி நிற்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அங்கே, அடிப்படைவாதத்துக்கும் இடம் உள்ளது. ஆனபோதும், பழைய வகை லீக்குகளுக்கு பதிலாக, புதுவகை இசுலாமிய அடையாள கட்சிகள், அமைப்புகள் நமக்காக உரத்து குரல் எழுப்பும், சண்டை போடும் என நம்புகிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் இந்த நிலைமைகளை புரிந்துகொண்டு இசுலாமியர் தொடர்பான விடாப்பிடியான, இணக்கமான, அணுகுமுறையை கையாள வேண்டும். பொறுப்போடும் பொறுமையோடும் விடாப்பிடித்தன்மையோடும் வேலை செய்ய வேண்டும். முன்னணிகளை ஈர்க்க தளராத முயற்சிகள் தேவை. அதே நேரம் வலுவான ஏகாதிபத்திய கார்ப்பரேட் எதிர்ப்பு, மக்கள் திரள் அணிதிரட்டல்களை இடதுசாரிகள் சாதிக்கும்போது, அதனோடு உள்ளார்ந்த விதத்தில் வருகிற மதச்சார்பின்மையோடு, பரந்த இசுலாமியர்கள் நிச்சயம் உறவாடுவார்கள். அப்போது, அவர்கள் பொது வெளியில் பொதுவான ஜனநாயக இயக்கத்தோடு திரள் திரளாய் கைகோர்ப்பார்கள்.
மதம் தொடர்பான நமது அணுகுமுறை ஒருபோதும் வறட்டு, முரட்டு நாத்திக அணுகுமுறையாக அமைய முடியாது. மதம் மக்களை மயக்கும் அபினி என ஒற்றை வாக்கியத்தில் தட்டையாக மொத்த கதையையும் முடித்து விட முடியாது. மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் நெடுமூச்சு. மதம் ஆன்மா இல்லாத உலகின் ஆன்மா. மதம் இதயம் இல்லாத உலகத்தின் இதயம். அது தலைகீழ் உலகப் பிரக்ஞை.
கடவுளோ, மதமோ மனிதரைப் படைக்கவில்லை. மனிதரே கடவுளையும் மதத்தையும் படைக்கிறார்கள். வாழ்வின் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லாத சமூக, பொருளாதார நிலைமைகளில் மக்கள் வாழ்வதால்தான், மதத்திற்கான அடிப்படை உருவாகிறது. தமது வாழ்க்கையின் மீது மனிதர்களுக்கு கட்டுப்பாடு ஏற்படும்போது, மனிதர்களுக்கு மதமோ, கடவுளோ தேவைப்படுவதில்லை. இது நமது அடிப்படையான நிலை.
கூடவே, அரசில் இருந்து, அரசு நிறுவனங்களில் இருந்து, பொது வாழ்வில் இருந்து மதத்தை பிரித்து நிறுத்துவதுதான் மதச்சார்பின்மை என்கிறோம். மதம் தனிப்பட்ட மனிதர்கள், அவர்களது தனிப்பட்ட இடங்களில் அனுசரிப்பதற்கானது. அதற்கு, பொது வெளியில் இடம் இருக்கக் கூடாது. மதச்சார்பின்மை, என்பது சர்வமத சம்மதம் அல்ல. மாறாக, அது, ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், அரசு நிறுவனங்களில் இருந்து, பொது வாழ்வில் இருந்து மதத்தை விலக்கி வைப்பதாகும்.
இந்த அடிப்படையான நிலைப்பாட்டை, கம்யூனிஸ்ட் கட்சியில் மதநம்பிக்கையோடு எவரும் இருப்பதற்கு தடையில்லை என்று, சிலர் தவறாக வியாக்கியானம் செய்தார்கள். இதற்கு மார்க்சிய நூல்கள், அரசு தொடர்பாக சொன்ன விசயத்தை, வஞ்சகமாக துணைக்கு அழைத்தார்கள். தோழர் லெனின் அரசும் புரட்சியும் நூலில், மிகவும் தெளிவாக கம்யூனிஸ்டுகள் மத நம்பிக்கையோடு இருக்க முடியாது என தெளிவுபடுத்தினார்.
கட்சிக்கு அறிமுகமாகும்போது, கட்சிக்குள் நுழையும்போது ஒருவர் மத நம்பிக்கையோடு இருக்கலாம். ஆனால், விடாப்பிடியான விவாதங்கள் மூலம் விஞ்ஞானபூர்வமான கருத்துக் களை ஏற்க வைத்து மத நம்பிக்கைகளில் இருந்து அவர்கள் விலகி வர உதவ வேண்டும்.
பின்குறிப்பு: கோவையில் ஆதியோகி சிலையை திறக்க மோடி வந்ததற்கு எதிராக புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினர் ‘மிகுந்த கரிசனத்துடன்’ இசுலாமியர்களை ஏன் அமைப்பு பொறுப்புக்களில் கொண்டு வருகிறீர்கள் என்று நமது தோழர்களிடம் கேட்டிருக்கிறார்கள். ‘எது நடக்க வேண்டுமோ அது சரியாகவே நடக்கிறது’ என்று நமக்கு நன்றாக தெரிகிறது.