COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, February 3, 2017

சோவியத் ரஷ்யாவில் கல்வி

கற்போம், கற்போம்,
மீண்டும் ஒரு முறை கற்போம்

கம்யூனிஸ்ட் இறுமாப்பு, கல்லாமை, கையூட்டு ஆகியவை கம்யூனிசத்தின் மூன்று எதிரிகள் என்று லெனின் குறிப்பிடுகிறார். நமது நாட்டில் கல்லாமை இருக்கும்வரை, அரசியல் கல்வி பற்றி பேசுவதில் பொருளில்லை, இது ஓர் அரசியல் பிரச்சனை அல்ல, ஆனால் அது இல்லாமல் அரசியல் பற்றி பேசுவதில் பயனில்லை என்கிறார்.
கல்வி இல்லையென்றால் அங்கு வதந்திகள் இருக்கும், கிசுகிசுக்கள் இருக்கும், தேவதைக் கதைகள் இருக்கும், தப்பெண்ணங்கள் இருக்கும், ஆனால் அரசியல் இருக்காது என்கிறார். சோவியத் ரஷ்யாவின் வகுப்பறைகள் அனைத்திலும்கற்போம், கற்போம், மீண்டும் ஒரு முறை கற்போம்என்ற லெனினின் வாசகம் எழுதப்பட்டிருந்தது.
பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. கல்விக்குக் கட்டணமில்லை. அரசு கல்வி வழங்கியது. லூனாசார்ஸ்கி கல்வி அமைச்சராகவும் (மக்கள் கமிசார் என்று அழைக்கப்படுகிறார்) நதேழ்தா குரூப்ஸ்காயா துணை அமைச்சராகவும் இருந்தனர்.
1918ல் லூனாசார்ஸ்கி சொல்கிறார்: “லெவோவ் மற்றும் கெரன்ஸ்கியின் ஆட்சிக்கு உதவிகள் செய்து வந்த அறிவாளிப் பிரிவினர், தொழிலாளர்களின் விவசாயிகளின் அரசாங்கத்துக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர். அதற்கு எதிராக நாச வேலை செய்கின்றனர். ஆயினும் கடந்த பிப்ரவரி முதல் நாம் நிறைய பயனுள்ள பணிகள் செய்திருக்கிறோம். பழைய கல்வி முறை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. பழைய கல்வியாளர்கள் நீக்கப்பட்டுவிட்டார்கள். ‘சர்ச் மற்றும் லத்தீனைஅடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டம் துடைத்தெறியப்பட்டுவிட்டது. இருபாலரும் சேர்ந்து படிக்கும் முறை புகுத்தப்பட்டுவிட்டது.
புதிய பள்ளிஎன்பது என்ன? ‘தாழ்ந்த நிலையில்இருக்கும் உழைக்கும் மக்களுக்காக ஆளும்வர்க்கம் அமைத்த பள்ளிகள் போல் நிச்சயம் அது இருக்காது. இந்தவர்க்ககல்வியை ஒழிக்க, யாருக்கும் எந்த சிறப்பு சலுகையும் இல்லாத, ‘அனைவருக்கும் ஒரே தரத்திலான கல்விஎன்ற கோட்பாட்டை நாம் கடைபிடிக்க வேண்டும். பண்ட உற்பத்தியில் மக்கள் பிரதான காரணிகளாக இருப்பதால், அதைத் தொடர்ந்து, ‘புதிய பள்ளிமாணவர்களை வேலை செய்ய தயார் செய்வதாய் இருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. ஆசிரியர்களும் உழைப்பு செலுத்தும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். புதிய பள்ளியின் முழக்கம் இதுதான்: ‘வாழ்வது வேலை செய்வதற்காகவே’. எனவே நமது கல்வி முறையின் துவக்கப் புள்ளியாக, நமது கல்வி முறையின் தலைமைப் பொருளாக, தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு, ‘வேலை செய்வதைநாம் எடுத்துக் கொள்கிறோம். சமூக உழைப்பின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக நமது மாணவர்கள் தங்களை உணர வேண்டும். இளம் பெண்களும் ஆண்களும் பெரிய உற்பத்தியாளர்களாக மாற தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். மட்டுமின்றி, கல்வியின் பிரதான நோக்கம், மனரீதியான, உடல்ரீதியான நடவடிக்கைகளின் அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கிய மானுட கலாச்சாரத்தின் பல்வேறு வடிவங்கள் பற்றிய அறிவுதான் என்பதை நாம் காணத் தவறக் கூடாது. தொழில்நுட்பரீதியான கல்வியை பொருத்தமான விதத்தில் முழுமையாக்கும்படி, கலை மற்றும் உடல் கல்வி இருக்க வேண்டும். கல்விரீதியான சுதந்திரமும் பள்ளியில் சுதந்திரமும் இருக்க வேண்டும். நமது தொன்ம நினைவுச் சின்னங்களை நாம் பாதுகாக்க வேண்டும்; ஏனென்றால் இவைதான் பண்டைய ரஷ்ய நாகரிகத்தின் சாட்சிகள்; ஆனால் அதே நேரம், நவீன உலகத்தின் உணர்வுகளோடு முழுமையாக தொடர்புடைய கலை உருவாவதை பார்க்கும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்: விடுதலை நோக்கிய இன்னும் பல வெற்றிகள் நோக்கி நம்மை இட்டுச் செல்லும் கலை அது.
1918ல் சோவியத் அரசாங்கம் மாஸ்கோவில் மட்டும் புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களைத் திறந்தது. இன்னும் கூட புதிய பள்ளிக்கூடங்களை திறந்திருக்க முடியும். ஆனால் புதிய ஆசிரியர்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தது. 1918ல் சோவியத் ரஷ்யாவில் புதிதாக ஆறு பல்கலை கழகங்கள் திறக்கப்பட்டன. பழைய ஆட்சியின் கடந்த இருநூறு ஆண்டுகளில் மொத்த ரஷ்யாவிலும் வெறும் 12 பல்கலை கழகங்கள்தான் இருந்தன.
பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் பற்றி கணக்கெடுப்பு நடக்கிறது. மொத்த கல்வி முறையும் மறுபுனரமைப்பு செய்யப்படுகிறது. இரண்டு பள்ளிப் பருவங்கள் இருக்கும். ஒன்று அய்ந்தாண்டுகளுக்கானது. மற்றொன்று நான்காண்டுகளுக்கு. முதல் வகை அனைவருக்கும் கட்டாயமானது.
மாஸ்கோவின் நவநாகரிக நடன மற்றும் மது விடுதியானமேக்சிம்காபி விடுதியின் பெரிய கட்டிடம், இப்போது கைப்பற்றப்பட்டுவிட்டது; அது ஒரு பகல் மற்றும் இரவு நேரப் பள்ளியாக செயல்படும்.
தெருக்களின் கட்டுப்பாடற்ற தாக்கங்க ளில் இருந்து குழந்தைகளை மீட்க, மாஸ்கோவின் பல பகுதிகளிலும் சிறுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன”.
கல்லாமையை அழித்தொழிப்பது என்ற ஓர் ஆணையை 1919ல் லெனின் வெளியிடுகிறார். நாட்டின் அரசியல் வாழ்க்கையில் உணர்வு பூர்வமாக பங்கேற்கும் வாய்ப்பை குடியரசின் மொத்த குடிமக்களுக்கும் வழங்குவது  நோக்கம் என்று அதில் சொல்லப்பட்டது. அதன்படி
             8 முதல் 50 வயதில் உள்ள ஒவ்வொரு வரும் ரஷ்ய மொழியோ அல்லது அவர்களது சொந்த மொழியோ (அவர்கள் தாய்மொழி என்று குறிப்பிடவில்லை) எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். செம்படையிலும் ராணுவத்தின் பிற நிறுவனங்களில் இருப்பவர்களும் இந்தத் திட்டத்துக்கு உட்படுவார்கள்.
             கல்லாமையை அழித்தொழிக்கும் கடமையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்ற அளிப்புத் துறைகள் முன்னுரிமை தர வேண்டும்.
             கல்வி பயிலாதவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதைத் தடுப்பது குற்றம்.
             கல்வி அமைச்சகம் (கல்விக்கான மக்கள் கமிசாரியட்) இரண்டு வாரங்களுக்குள் இதற்கான நடவடிக்கைகள் பற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும். கல்வியறிவு பெற்றவர்கள் போருக்கு அழைக்கப்படாவிட்டால், அவர்கள் கல்வி இயக்கத்தில் ஈடுபட வேண்டும். அவர்கள் செய்யும் பணிக்கு ஊதியம் உண்டு.
             தொழிற்சங்கங்கள், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் செல்கள், கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்புகள், பெண் தொழிலாளர்கள் மற்றும் பிறருக்கான ஆணையங்கள் போன்ற உழைக்கும் பிரிவினரின் எல்லா அமைப்புகளும் கல்லாமையை ஒழிக்கும் பணியில் நேரடியாக ஈடுபட வேண்டும்.
             எழுதப் படிக்க கற்கும் தொழிலாளர்களின் வேலை நேரம் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும். கூலி குறைக்கப்படாது.
             மக்கள் அரங்கங்கள், தேவாலயங்கள், மனமகிழ் மன்றங்கள், தனியார் வீடுகள், ஆலைகளில் உள்ள பொருத்தமான அறைகள், சோவியத் நிறுவனங்கள் ஆகியவற்றை கல்வி அமைச்சகம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அரசு நிர்வாகத்துக்கு செலவிடப்படுவதைப் போல் 8.5 மடங்கு கல்விக்காக செலவிடப்பட்டது. 1940ல் கல்விக்கு ஒதுக்கப்பட்டதை விட 4.2 மடங்கு கூடுதலாக 1950லும் 1.7 மடங்கு கூடுதலாக 1959லும் நிதி ஒதுக்கப்பட்டது. சோவியத் ரஷ்யா, கல்விக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய, தன்னிடம் இருந்த குறைவான அந்நிய செலாவணியில்  பெருமளவில் செலவு செய்தது. வாஷிங்டனில் இருந்த சோவியத் யூனியன் தகவல் மய்யம், தி சோவியத் யூனியன்: விவரங்கள், விவரணைகள், புள்ளிவிவரங்கள் என்ற தலைப்பில்,  1929ல் வெளியிட்ட விவரங்கள்படி, 1924 - 1925ல் கல்விக்காக 181.3 மில்லியன் டாலரும் 1925 - 1926ல் 236.4 மில்லியன் டாலரும் 1926 - 1927ல் 317.2 மில்லியன் டாலரும் 1927 - 1928ல் 400 மில்லியன் டாலரும் ஒதுக்கப்பட்டது. (1925ல் ஒரு டாலரின் மதிப்பு ரூ.28). 1927ல் ரஷ்யாவில் மட்டும் 2 லட்சம் குழந்தைகளுக்கு 4,000 விளையாட்டு மைதானங்கள் இருந்தன. 1913ல் 60% என இருந்த கல்வி விகிதம்  1939ல் 87.4% என அதிகரித்தது.
நாட்டின் விவசாயம், தொழில் மற்றும் பிற திட்டங்களுக்கு அடுத்து எந்தவிதமான விஞ்ஞானிகள், பொறியாளர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள், மருத்துவர்கள், பிற தொழில்நுட்ப வல்லுநர்கள் எந்த எண்ணிக்கையில் தேவை என மதிப்பிடப்பட்டு அதன் அடிப்படையில் கல்லூரிகளிலும் பல்கலை கழகங்களிலும் மாணவர் சேர்க்கை திட்டமிடப்பட்டது.
உயர்கல்வி, மாணவர்களின் சொந்த மொழியில் வழங்கப்பட்டது. உயர்கல்வி மாணவர்களுக்கு உதவித் தொகை, மானியக் கட்டணத்தில் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் இருந்தன. பெற்றோர்களின், உறவினர்களின் உதவியின்றி அவர்கள் படிக்க முடியும். வேலை செய்து கொண்டே படிப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் இருந்தன. 1924 - 1925 மற்றும் 1925 - 1926ல் 129 கல்லூரிகளும் பல்கலை கழகங்களும் இருந்தன. 1926 - 1927ல் 136 என இந்த எண்ணிக்கை உயர்ந்தது. 1959ல் 766 உயர்கல்வி நிறுவனங்கள் இருந்தன. 1914ல் ரஷ்யாவின் கல்லூரிகளிலும் பல்கலை கழகங்களிலும் 1.27 லட்சம் மாணவர்கள் இருந்தனர். 1940ல் இது 8.12 லட்சம், 1950ல் 12.47 லட்சம், 1959ல் 21.5 லட்சம் என அதிகரித்தது. 1987ல் 69 பல்கலை கழகங்கள் உட்பட 896 உயர்கல்வி நிறுவனங்களில் 58.7 லட்சம் மாணவர்கள் இருந்தனர்.
குறள் வடிவில் சொல்ல வேண்டுமானால், சோவியத் அரசாங்கம், மதுக்கூடத்தைக் கைப்பற்றி அதைக் கல்விக் கூடமாக்கியது. கல்விக்கு முழுமையாக பொறுப்பேற்றது.

பெஸ்ப்ரிசார்னி (வீடுகளற்ற குழந்தைகள்): உலகப் போரின் விளைவால், உள்நாட்டு போராட்டங்களால், பஞ்சங்கள் ஏற்பட்டதால், குறிப்பாக, அந்நிய நாடுகளின் நிதி பெற்ற படைகளால், புதிதாக உருவான சோவியத் அரசை தாக்கிய ராணுவ சாசகங்களால் நடத்தப்பட்ட படுகொலைகளால், பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாக்கப் பட்டார்கள்; தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். புதிய அரசின் துவக்க நாட்களில், பரந்த நிலப்பரப்பில் சிதைந்து கிடந்த இந்த பெற்றோரற்ற குழந்தைகள் பிரச்சனையை சமாளிக்க போதுமான வாய்ப்பு தரும் அளவுக்கு ஆதாரங்கள் இல்லை. அந்தக் குழந்தைகளின் அக்கம்பக்கத்து வீட்டார், உறவினர் யாரும் உயிருடன் இருந்தாலும் அவர்களிடமும் அவர்களை பராமரிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. வாழ்வதற்கான கடுமையான போராட்டத்தின் ஊடே இறுகிப் போன, அந்த வீடுகளற்ற குழந்தைகள், முரட்டு மனிதர்களாக வளர்ந்தார்கள். நாடெங்கும் சுற்றித் திரிந்தார்கள். நகரங்களில் கொள்ளயடிக்கும் இடம் தேடி அலைந்தார்கள். அவர்கள் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தார்கள்.
இது போன்ற முரட்டுக் குழந்தைகள் 10 லட்சம் பேர் இருப்பதாக 1922ல் மதிப்பிடப்பட்டது. பொருளாதாரத்தை மீட்பது நோக்கி நாடு நகரத் துவங்கியபோது, இந்தக் குழந்தைகள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுத்து அவர்கள் பயனுள்ள குடிமக்களாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக அரசாங்கம் கோடிகோடியாக செலவழித்தது. பல லட்சக்கணக்கான குடிமக்கள் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் இதற்காக நேரமும் ஆற்றலும் செலுத்தினர். நாடெங்கும் வீடற்ற குழந்தைகளுக்கான சிறப்பு காலனிகளும் பள்ளிகளும் உருவாயின; நாட்டின் ஆகச்சிறந்த கல்வியாளர்கள் இந்தப் பிரச்சனையை தீர்க்க தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். கட்டுப்பாடு விதிக்கும், தண்டனைக்கு உள்ளாக்கும் நடைமுறைக்கு மாறாக, அனுதாபத்துடன் விஞ்ஞானபூர்வமான வழியில் இந்தப் பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

உக்ரேனில் மட்டும் இன்று 200 காலனிகள் உள்ளன; ஒவ்வொன்றிலும் 60 முதல் 3,000 குழந்தைகள் வரை இருக்கிறார்கள். 1928 வசந்தம் வந்தபோது, 25,000க்கும் குறைவான வீடற்ற குழந்தைகள்தான் இன்னும் அவர்களது முரட்டு வாழ்க்கையில் தொடர்கிறார்கள் என்று அதிகாரிகள் மதிப்பிட்டனர்; இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படுகிறது. (1929)

Search