COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, February 14, 2017

சோவியத்துகளின் ஆட்சியில் ‘வேலை செய்யாதவனுக்கு உணவில்லை’
‘வேலை செய்யாதவனுக்கு உணவில்லை’ என்ற அடிப்படையான, முதன்மையான, பிரதானமான இந்த விதியைத் தொழிலாளர்கள் பிரதிநிதிகளின் சோவியத்துக்கள் ஆட்சிக்கு வரும்போது அமலாக்க முடியும், அமலாக்க வேண்டும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு வேலைச் சீட்டு உள்ளது. தற்சமயம் இது சந்தேகமின்றி முதலாளித்துவக் கூலி அடிமை முறைக்குரிய அத்தாட்சிப் பத்திரமாகத்தான், உழைப்பாளி இன்னின்ன புல்லுருவிக்குச் சொந்தமானவன் என்று காட்டும் அத்தாட்சிப் பத்திரமாகத்தான் இருக்கிறது, எனினும் இந்தச் சீட்டு தொழிலாளியை இழிவுபடுத்துவதல்ல.

சோவியத்துக்கள், வேலைச் சீட்டுக்களைப் பணக்காரர்களுக்கும், அதன்பின், படிப்படியாக மக்கள் தொகை முழுவதற்கும் வழங்கும் (ஒரு விவசாய நாட்டில் மிகப் பெரும்பாலான விவசாயிகளுக்கு வெகு காலம் வரைக்கும் வேலைச் சீட்டுகள் ஒரு வேளை தேவையில்லாமலே இருக்கலாம்). இந்த வேலைச் சீட்டு ‘மக்கள் மந்தையை’ குறிக்கும் ஒரு முத்திரைச் சீட்டாக, ‘கடைநிலை’ பகுதியினரைக் காட்டும் ஒரு தஸ்தாவேஜாக, கூலியடிமை முறையின் அத்தாட்சிப் பத்திரமாக, இனிமேல் இருக்காது. புதிய சமூகத்தில் ‘கூலிக்காரர்கள்’ என்று யாரும் இல்லை என்பதையும், மறு பக்கத்தில் வேலை செய்யாதவர்கள் என யாருமில்லை என்பதையும் காட்டுவதற்குரிய அத்தாட்சிச் சீட்டாக இருக்கும் இது.
பணக்காரர்கள், தங்கள் செயல்துறை எந்தச் சங்கத்தோடு அதிக நெருக்கமாகத் தொடர்புள்ளதோ, அந்தத் தொழிலாளர் அல்லது அலுவலகச் சிப்பந்திகள் சங்கத்திலிருந்து வேலைச் சீட்டு கட்டாயமாகப் பெற்றாக வேண்டும். அவர்கள் மனப்பூர்வமாகத் தங்கள் வேலையைச் செய்து வருகின்றனர் என்று வாராவாரம் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை அச்சங்கத்திடமிருந்து ஓர் அத்தாட்சிப் பத்திரமும் பெற்றுத்தர வேண்டும். இந்த அத்தாட்சிப் பத்திரம் இல்லாவிட்டால் உணவுப் பங்கீட்டுச் சீட்டுகளோ, பொதுவாக உணவுப் பண்டங்களோ பெற்றுக்கொள்ள முடியாது. பாங்கிகளைச் சீர்படுத்தவும், தொழில் நிலையங்களை இணைக்கவும் நமக்கு நல்ல ஸ்தாபன அமைப்பாளர்கள் தேவை. (இவ்விஷயத்தில் முதலாளிகளுக்கு அதிக அனுபவம் உண்டு. அனுபவம் வாய்ந்தவர்களை வைத்துக் கொண்டு வேலை செய்வது எளிது). என்ஜினியர்கள், விவசாய நிபுணர்கள், டெக்னீஷியன்கள், விஞ்ஞான முறையில் தனித் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர், முன்னைவிட மிகமிக அதிகமான அளவில் தேவை என்று பாட்டாளி வர்க்க அரசாங்கம் கூறும். இத்தகைய எல்லா வேலைக்காரர்களுக்கும் நாம் அவரவர் திறமைகளுக்குத் தக்கவையும் அவரவர்களுக்கு ஏற்கனவே பழக்கமானவையுமான வேலையளிப்போம். எல்லோருக்கும் சமமான சம்பளம் வழங்குவதை அமலுக்குக் கொண்டுவருவது படிப்படியாகத் தான் சாத்தியமாகக் கூடும். இடைக்காலத்தில், இந்தத் தனித் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதிகச் சம்பளம் தருவோம். ஆனால் அவர்களை எல்லாப் பக்கங்களிலிருந்தும் தொழிலாளர் கட்டுப்பாட்டின் கீழ் வைப்போம். ‘வேலை செய்யாதவனுக்கு உணவில்லை’ என்ற விதியை விலக்கு வில்லங்கம் எதுவுமின்றி முழுக்க முழுக்க அமல்நடத்துவோம். நமது வேலையின் ஸ்தாபன வடிவத்தைப் பற்றிக் கூறவேண்டுமானால், நாம் அதனைப் புதிதாகக் கண்டுபிடிக்கப் போவதில்லை; முதலாளித்துவத்தின் கீழ் தயாராக இருக்கும் ஸ்தாபன வடிவத்தை - பாங்கிகள், சிண்டிக்கேட்டுகள், சிறந்த பாக்டரிகள், சோதனை நிலையங்கள், விஞ்ஞான அகாடமிகள், முதலியவைகளை - அப்படியே எடுத்துக் கொள்வோம். ஆம், முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளின் அனுபவம் அளிக்கும் மிகச் சிறந்த மாதிரிகளை நாம் மேற்கொள்ள மட்டும் வேண்டியிருக்கும்.
முதலாளி வர்க்கம் முழுவதும் மிகப் பிடிவாதமாக எதிர்ப்பைக் காட்டும்; ஆனால் மக்கள் எல்லோரும் சோவியத்களில் ஸ்தாபனரீதியில் ஒன்றுபடுவதால் இவ்வெதிர்ப்பு தகர்த்தெறியப்படும் என்று நாம் கூறுகையில் கொஞ்சங்கூடக் கற்பனையுலகில் திரியாமல் மிக நிதானமான, காரியரீதியான மதிப்பீட்டின் அடிப்படையிலிருந்துதான் பேசுகிறோம். அசாதாரணமான பிடிவாதம் காட்டும், கட்டுக்கு இணங்கி வர மறுக்கும் முதலாளிகளை, அவர்களுடைய எல்லாச் சொத்தையும் பறிமுதல் செய்து சிறையிலிடுவதின் மூலம் நிச்சயமாகத் தண்டிக்கத்தான் வேண்டியிருக்கும். ஆனால் மறுபக்கத்தில், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி இன்றைய ‘இஸ்வேஸ்தியாவில்’ நான் படித்தது போன்ற நிகழ்ச்சிகள் தொகை தொகையாய்ப் பெருக்கம் அடையச் செய்யும்:
‘செப்டம்பர் 26ல், தொழிற்சாலைக் கமிட்டிகளின் மத்திய கவுன்சில் முன் இரண்டு எஞ்சினீயர்கள் வந்து, எஞ்சினீயர்களின் ஒரு குழு, சோஷலிஸ்ட் எஞ்சினீயர்கள் சங்கம் ஒன்று ஏற்படுத்தத் தீர்மானித்திருப்பதாகக் கூறினார்கள். இக்காலம் உண்மையிலே சமுதாயப் புரட்சியின் ஆரம்ப காலம் என்று அச்சங்கம் கருதுவதால் தொழிலாளர் மக்களுக்குச் சேவை செய்யத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது என்றும், தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டுத் தொழிலாளர் ஸ்தாபனங்களுடன் முழு இணக்கத்தோடு வேலை செய்ய விரும்புகிறது என்றும் அவர்கள் தெரிவித்தார்கள். அதற்கு தொழிற்சாலைக் கமிட்டிகளின் மத்திய கவுன்சிலைச் சேர்ந்த பிரதிநிதிகள் அளித்த பதிலில் தங்கள் ஸ்தாபனத்துக்குள்ளேயே ஓர் எஞ்சினீயர் செக்ஷனை மகிழ்ச்சியோடு அமைப்பதாகவும், உற்பத்தியில் தொழிலாளர் கட்டுப்பாடு செலுத்துவது சம்பந்தமான தொழிற்சாலைக் கமிட்டிகளின் முதல் மகாநாட்டின் அடிப்படைக் கோட்பாடுகளை அந்த எஞ்சினீயர் பகுதி தனது வேலைத் திட்டத்தில் உட்படுத்திக் கொள்ளும் என்றும் சொன்னார்கள். தொழிற்சாலைக் கமிட்டிகளின் மத்திய கவுன்சில் பிரதிநிதிகளும், சோசலிஸ்ட் எஞ்சினீயர்களின் முன்முயற்சிக் குழுவினரும் சேர்ந்த கூட்டம் ஒன்று வரும் சில நாட்களில் நடத்தப்படும்’ (இஸ்வேஸ்தியாத்ஸிக், செப்டம்பர் 27, 1917),
பாட்டாளி வர்க்கம், அரசாங்க எந்திரத்தை இயக்கிச் செல்ல முடியாது என்று கூறப்படுகிறது.
1905 புரட்சிக்குப் பிறகு 1,30,000 நிலப் பிரபுக்கள் ருஷ்யாவில் ஆட்சி செலுத்தினர். 15 கோடி மக்களின் மீது முடிவற்ற பலாத்காரச் செயலைப் புரிந்தும், அம்மக்களை எல்லையற்ற அவமானத்திற்கு உட்படுத்தியும், மிகப் பெரும்பான்மை மக்களை அரைப் பட்டினி நிலைக்கு விரட்டியும், மிகக் கடுமையான உழைப்பிற்கு அடிமைப்படுத்தியும் அவர்கள் ஆட்சி செலுத்தினர்.
அவ்வாறிருந்தும், 2,40,000 உறுப்பினர் கொண்ட போல்ஷெவிக் கட்சி ஏழை மக்களின் நலன் கருதி, பணக்காரர்களுக்கு எதிரான ருஷ்யாவில் ஆட்சி செலுத்த முடியாது என்று கூறப்படுகிறது. இந்த 2,40,000 பேருக்கும் வயது வந்த மக்கள் தொகையில் பத்து லட்சம் ஓட்டுகளின் ஆதரவு ஏற்கனவே கிடைத்திருக்கிறது. இதுதான் கட்சி அங்கத்தினர் தொகைக்கும் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஓட்டுத் தொகைக்கும் உள்ள விகிதாச்சாரமாகும். அய்ரோப்பாவின் அனுபவத்தைக் கொண்டு இந்த விகிதாச்சாரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் நடந்த பெத்ரோகிராத் டூமா தேர்தல்கள் இந்த விகிதாச்சாரத்தைக் காட்டுகின்றன. ஒவ்வொரு மாதமும் 20ஆம் தேதியன்று கிடைக்கும் கொழுத்த சம்பளத்துக்காக அல்லாமல் தங்களது இலட்சியங்களுக்காக சோசலிஸ்ட் அரசாங்கத்துக்கு விசுவாசம் பாராட்டுகிற பத்து லட்சம் மக்களைக் கொண்ட ‘அரசாங்க இயந்திரம்’ நமக்கு ஏற்கனவே இருக்கிறது.
அது மட்டுமல்ல, நமது அரசாங்க எந்திரத்தை உடனடியாகப் பத்து மடங்கு பெரிதாக்கிக் கொள்ளும் ‘மந்திர சாதனமும்’ நமக்கு இருக்கிறது. எந்த முதலாளித்துவ அரசாங்கத்துக்கும் இந்தச் சாதனம் இருந்தது கிடையாது. இருக்கவும் முடியாது. உழைப்பாளிகளை, ஏழை மக்களை, அரசாங்க நிர்வாகத்தின் அன்றாட வேலைகளில் ஈடுபடுத்துவதே இந்த மந்திர சாதனமாகும்.
இந்த மந்திர சாதனத்தை உபயோகிப்பது எவ்வளவு எளிது என்தையும் விளக்குவதற்குக் கூடியவரை மிகத் தெளிவான, எளிய உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.
அரசாங்கம் ஒரு குடியிருப்பு வீட்டிலிருந்து ஒரு குடும்பத்தைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றி இன்னொரு குடும்பத்தை அங்கே குடியமர்த்த வேண்டியிருக்கிறது. முதலாளித்துவ அரசாங்கம் அடிக்கடி இவ்வாறு செய்கிறது. நமது பாட்டாளி வர்க்க அல்லது சோசலிஸ்ட் அரசாங்கமும் இவ்வாறு செய்யும்.
முதலாளித்துவ அரசாங்கம், சம்பாதித்துப் போடுகிறவனை இழந்துவிட்ட காரணத்தால் வீட்டு வாடகை செலுத்தத் தவறிவிட்ட ஒரு தொழிலளார் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியேற்றுகிறது. போலீஸ் அல்லது மிலீஷியாவுடன், ஒரு முழுப் பட்டாளத்துடன், அமீனா வந்து சேருகிறான். தொழிலாளர் வாழும் வட்டாரத்தில் யாரையாவது வெளியேற்றம் செய்வதற்கு ஒரு கஸôக் ராணுவப் பிரிவே தேவைப்படுகிறது. ஏன்? ஏனென்றால் அமீனாவோ அல்லது மிலீஷியாக்காரர்களோ மிகப் பெரிய ராணுவப் படையின் பாதுகாப்பின்றி அங்கே போவதற்குச் சம்மதிப்பதில்லை. மக்களை வெளியேற்றும் காட்சி, பக்கத்தில் குடியிருப்பவர்களிடையே, புகலற்ற நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களிடையே, கடுஞ்சீற்றத்தையும், முதலாளிகள் மீதும் முதலாளித்துவ அரசாங்கத்தின் மீதும் கொடிய துவேஷத்தையும் கிளப்பி விடுகிறது. ஆகவே, அமீனாவும், மிலீஷியாக்காரர்களும் எந்த நிமிடத்திலும் பொது மக்களால் தலைவேறு கால்வேறாகப் பிய்த்தெறியப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். பெரிய ராணுவப் படைகள் தேவைப்படுகின்றன. நகரமாயிருந்தால் சில ரெஜிமென்டுகள் தேவையாகின்றன. அந்த ரெஜிமென்டுகளும் தொலைவில் தள்ளியிருக்கிற பிரதேசங்களிலிருந்துதான் கொண்டு வரப்பட வேண்டும். அதன் காரணம் என்னவென்றால் நகர்ப்புறத்து ஏழை மக்களின் வாழ்க்கை ராணுவத்தினருக்கு அறிமுகமில்லாததாய் இருக்க வேண்டும். அப்போர் வீரர்களை சோசலிசம் ‘தொற்றிக் கொள்ள’ கூடாது.
பாட்டாளி வர்க்க அரசாங்கம் மிகக் கஷ்டநிலையில் உள்ள ஒரு குடும்பத்தைப் பணக்காரனுடைய வீட்டில் கட்டாயப்படுத்திக் குடியமர்த்த வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். நமது தொழிலாளர் மிலீஷியாப் படையில் பதினைந்து பேர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்: இரண்டு மாலுமிகள், இரண்டு போர் வீரர்கள், வர்க்க உணர்வுள்ள இரண்டு தொழிலாளர்கள் (அவர்களில் ஒருவர் மட்டும் நமது கட்சியைச் சேர்ந்தவராக அல்லது அதன் அனுதாபியாக இருப்பதாக வைத்துக் கொள்வோம்), ஓர் அறிவுஜீவி, ஏழை உழைப்பாளிகள் எட்டுப்பேர், குறைந்தபட்சம் அய்வர் பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், பயிற்சித் திறனற்ற தொழிலாளர்கள் முதலியோர் கொண்ட இப்படை பணக்காரனுடைய மனைக்கு வந்து சேர்கிறது; பார்வையிடுகிறது. அதில் இரண்டு அறைகள் இருக்கின்றன என்பதைக் கண்டுகொள்கிறது. ‘நாட்டினரே, இந்தக் குளிர்காலத்திற்கு நீங்கள் ரெண்டு அறைகளுக்குள் நெருக்கி வசித்துக் கொண்டு, இப்போது நிலவறைகளில் வசித்து வரும் இரண்டு குடும்பங்களுக்கு மற்ற இரண்டு அறைகளைக் காலி செய்து கொடுக்க வேண்டும். எஞ்சினீயர்களின் உதவியால், (நீங்களும் ஓர் எஞ்சினீயர்தானே?) எல்லோருக்கும் நல்ல வீடுகள் கட்டித் தரும் வரையில் நீங்கள் சிறிது நெருக்கிக் கொண்டுதான் வசித்து வர வேண்டும். உங்களுடைய டெலிபோனைப் பத்து குடும்பங்கள் உபயோகிக்கும். கடைக்கு ஓடி, சாமான்கள் வாங்கி வருவது போன்ற சில்லறைக் காரியங்களுக்குச் செலவாகும் நேரத்தில் இது நூறு மணி வேலை நேரத்தை மிச்சமாக்கிக் கொடுக்கும். உங்களுடைய குடும்பத்தில் அரைகுறை உடல்வலுவுள்ள இருவர் - அய்ம்பத்து அய்ந்து வயது பெண்ணும் பதினான்கு வயதுப் பையனும் - இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலையில்லை. ஆனால் ஏதாகிலும் இலேசான வேலை செய்யலாம். இருவரும் நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் வேலை பார்த்து, இந்தப் பத்துக் குடும்பங்களுக்கும் உணவுப் பண்டங்கள் வினியோகம் சரியாக நடக்கிறதா என்று மேற்பார்வை செய்து அதற்குச் சரியான கணக்குகள் வைத்துக் கொள்ள வேண்டும். எங்கள் படையிலுள்ள மாணவர் இப்பொழுதே இந்த அரசாங்க உத்தரவின் இரண்டு பிரதிகளை எழுதிக் கொடுப்பார். சரியாக அதன்படி நடந்து வருவோம் என்று உறுதிச் சீட்டு தயை செய்து எழுதிக் கையொப்பமிட்டு எங்களிடம் தருவீர்களாக’.
பழைய பூர்ஷ்வா அரசாங்க எந்திரம், நிர்வாகம் ஆகியவற்றுக்கும், புதிய சோசலிஸ்ட் அரசாங்க இயந்திரம், நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உள்ள ஒப்புநிலையைத் தெளிவான உதாரணங்களைக் கொண்டு நன்கு எடுத்துக் காட்ட முடியும் என்று இது விளக்குகிறது என்பது என் அபிப்பிராயம்.
நாம் கற்பனையூரில் சஞ்சரிப்பவர்களல்ல. ஒவ்வொரு பயிற்சியற்ற தொழிலாளியும், சமையல் வேலை செய்யும் பெண்ணும் உடனடியாக அரசாங்க நிர்வாக வேலையை மேற்கொள்ள முடியாது என்பது நமக்குத் தெரியும்..... ஆனால் பணக்காரர்களோ, பணக்காரக் குடும்பங்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட உத்தியோகஸ்தர்களோதான் அரசாங்கத்தை நிர்வகிக்க, நிர்வாகத்தின் சாதாரணமான அன்றாட வேலையைப் பார்க்கத் திறனுள்ளவர்கள் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் கோருகிறோம். அதில்தான் நமக்கும், மேற்கூறிய கனவான்களுக்கும் வித்தியாசம். வர்க்க உணர்வுள்ள தொழிலாளியும் போர் வீரர்களும் அரசாங்க நிர்வாக வேலைக்குப் பயிற்சி பெற வேண்டும். அதை உடனடியாகத் தொடங்க வேண்டும் - அதாவது, எல்லா உழைப்பாளி மக்களையும் எல்லா ஏழை மக்களையும் இந்த வேலைக்காகப் பயிற்றுவிப்பதை உடனடியாகத் தொடங்க வேண்டும் - என்று நாம் கோருகிறோம்.
காடெட்டுகளுங்கூட மக்களுக்கு ஜனநாயக முறையைப் போதிக்கத் தயாராயிருக்கின்றனர் என்பதை நாமறிவோம். காடெட்டுச் சீமாட்டிகள், சிறந்த ஆங்கில, பிரெஞ்சு ஆதாரங்களுக்கிணங்க, பெண்களுக்குச் சம உரிமைகள் வேண்டும் என்பது பற்றி வீட்டு வேலை செய்யும் பெண்களிடையே சொற்பொழிவாற்றத் தயாராயிருக்கின்றனர்......
நமது கருத்தின்படி, போரால் விளைந்துள்ள, கண்டு கேட்டறியாத துன்பங்களையும் துயரங்களையும் தணிப்ப தற்கும், அதே சமயத்தில் போரால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பயங்கரமான புண்களை ஆற்றுவதற்கும் புரட்சிகரமான ஜனநாயகம் தேவை; ஏழைகளுக்குக் குடியிருப்பு இடங்களைப் பகிர்ந்து கொடுப்பது பற்றி மேற்சொல்லிய உதாரணத்தில் விவரித்தது போன்ற, புரட்சிகரமான நடவடிக்கைகள் தேவை. நகரத்திலும் நாட்டுப்புறத்திலும் உணவுப் பண்டங்கள், ஆடைகள், செருப்புகள், முதலியவற்றின் வினியோகத்திலும், நாட்டுப் புறப் பகுதிகளில் நிலம், முதலியவை சம்பந்தத்தையும் முற்றிலும் இதே விதமான வழிமுறை அனுசரிக்கப்பட வேண்டும். இவ்வித உணர்ச்சியோடு அரசாங்க நிர்வாக வேலையை நடத்துவதோடு இரண்டு கோடி இல்லா விட்டாலும் ஒரு கோடி மக்களைக் கொண்ட அரசாங்க இயந்திரத்தை, எந்த முதலாளித்துவ அரசிலும் ஒரு போதும் காணக் கிடைத்திராத இயந்திரத்தை, உடனடியாக இயங்கச் செய்ய முடியும். நம்மால் மட்டுமே இவ்வித இயந்திரத்தைப் படைக்க முடியும். ஏனெனில் மக்கள் தொகையில் மிகப் பெரும்பாலானரின் பூர்ணமான, தன்னலங்கருதாத அனுதாபம் நமக்கு நிச்சயமாக உண்டு. நம்மால் மட்டுமே இவ்வித இயந்திரத்தைப் படைக்க முடியும்; ஏனெனில் நீண்டகாலமாக முதலாளித்துவம் தந்த ‘பயிற்சியினால்’ (முதலாளித்துவத்தின் பள்ளியில் நாம் படிக்கச் சென்றது வெட்டியாக அல்ல) கட்டுப்பாடு செய்யப்பட்டிருக்கும், வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்கள் நமக்கு இருக்கின்றனர். இந்தத் தொழிலாளர்கள் தொழிலாளர் மிலீஷியாவை அமைக்கவும், அதைப் படிப்படியாய்ப் பெரிதாக்கி (அதை உடனே விரிவாக்கத் தொடங்கி) முடிவில் சர்வஜன மிலீஷியாவாகச் செய்ய முடியும். வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள் தலைமை தாங்க வேண்டும். ஆனால் அரசாங்க நிர்வாக வேலையில் உழைப்பாளி மக்கள் திரளையும், ஒடுக்கப்பட்ட மக்கள் திரளையும் அவர்கள் ஈடுபடுத்தலாம்.
இப்புதிய இயந்திரம் எடுத்துக் கொள்ளும் முதல் நடவடிக்கைகளில் தவிர்க்க முடியாதபடி தவறுகள் ஏற்படும். ஆனால் விவசாயிகள் பண்ணையடிமை முறையிலிருந்து விடுதலை பெற்றுத் தங்கள் காரியங்களைத் தாங்களே மேற்கொண்டு நடத்தப் புறப்பட்ட பொழுது தவறுகள் செய்யவில்லையா? நடைமுறையைத் தவிர, மக்களின் உண்மையான சுயாட்சியை நோக்கி உடனடியாகச் செல்வதைத் தவிர, மக்கள் தாங்களே ஆட்சிபுரியப் பயிற்சி பெறுவதற்கும், தவறுகளைத் தவிர்ப்பதற்கும் வேறு வழி ஏதாவதுண்டா? தங்களது சமூக நிலை முழுவதின் காரணமாக மூலதனத்தையே முற்றிலும் சார்ந்து கிடக்கிற விசேஷ உத்தியோகஸ்தர்கள் மட்டுமே அரசாங்கத்தை நிர்வகிக்க முடியும் என்பது பூர்ஷ்வா அறிவுஜீவிகளின் கண்மூடித்தனமான நம்பிக்கையாகும். அதைக் கைவிட வேண்டும்; அதுதான் இன்றையப் பிரதான விஷயம். பூர்ஷ்வாக்களும் அதிகார வர்க்கத்தினரும், ‘சோசலிஸ்ட்’ மந்திரிகளும் பழைய முறைப்படியே ஆட்சி நடத்த முயற்சித்து வருகிறார்கள்; ஆனால் அவர்களால் ஆட்சி நடத்த முடியவில்லை. ஏழு மாதங்கள் ஆன பிறகும் விவசாய நாட்டிலே விவசாயிகளின் எழுச்சி ஏற்பட்டு வருவதுதான் அவர்கள் கண்ட பலன்!! இப்படிப்பட்ட நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் பிரதான விஷயம் ஆகும். ஒடுக்கப்பட்ட மக்களிடையே, உழைப்பாளி மக்களிடையே தங்கள் பலத்தில் நம்பிக்கை உண்டாகும்படி செய்வதும், ரொட்டி, எல்லா வகை உணவுப் பண்டங்கள், பால், துணிமணிகள், குடியிருப்பு வீடுகள் முதலியவற்றை, ஏழைகளின் நலன்களைக் கருதி, மிகக் கட்டுதிட்டமும் ஒழுங்கும் வாய்ந்த சரியான முறையில் வினியோகிப்பதற்குரிய வேலையை அவர்கள் தாங்களே எடுத்து நடத்த முடியும். எடுத்து நடத்த வேண்டும் என்பதை அவர்களுக்கு நடைமுறையில் மெய்ப்பித்துக் காட்டுவதும்தான் பிரதான விஷயம். இவற்றைச் செய்தாலொழிய ருஷ்யாவை நிலைகுலைவில் இருந்தும் அழிவினின்றும் காப்பாற்ற முடியாது. அரசாங்க நிர்வாகத்தைப் பாட்டாளிகளிடமும் அரைப் பாட்டாளிகளிடமும் ஒப்படைப்பதை மனச்சாட்சி பூர்வமாக, தைரியமாக எங்கும் தொடங்குவது மக்களிடையே சரித்திரத்தில இதற்கு முன் கண்டிராத புரட்சிப் பேரூக்கத்தைக் கிளப்பி, துன்பங்களை எதிர்த்துப் போராடுவதற்குரிய மக்கள் சக்திகளைப் பெருவாரியாகப் பெருக்கித் தரும். இம்மக்கள் முதலாளிகளுக்காகவோ, நிலப்பிரபுக்களுக்காகவோ, அதிகார வர்க்கத்தினருக்காகவோ இன்றி, தடிக் கம்புக்குப் பயப்படுவதால் இன்றி, தங்களுக்காகவே வேலை செய்யத் தொடங்கி விடுவார்கள். அதனால் பழைய, குறுகிய கருத்துடைய அதிகார வர்க்கச் சக்திகளுக்கு அசாத்தியமானவை என்று தோன்றிய பற்பல காரியங்கள், கோடிக்கணக்கான பொது மக்களுக்குச் சாத்தியமானவை ஆகிவிடும்.
நவம்பர் 7 புரட்சிக்கு முன், போல்ஷ்விக்குகள் அரசாள முடியாது என்று எழுந்த கருத்துக்களை எதிர்கொள்ள லெனின் எழுதிய ‘போல்ஷ்விக்குகள் நீடித்து அரசாள முடியுமா?’ என்ற பிரசுரத்தில் இருந்து.
(இந்த துண்டுப் பிரசுரம் 1917 செப்டம்பர் இறுதியில் எழுதத் துவங்கப்பட்டு அக்டோபர் 1 அன்று எழுதி முடிக்கப்பட்டது. நவம்பர் 22, 1917 அன்று இந்தக் கட்டுரைக்கு லெனின் முன்னுரை எழுதுகிறார். பிறகு 1918ல் வெளியிடப்படுகிறது. ‘வேலையில் இறங்குங்கள். அனைவரும் வேலையில் இறங்குங்கள். அகில உலக சோசலிஸ்ட் புரட்சி எனும் லட்சியம் வெற்றி பெற்றுத் தீர வேண்டும், அது வெற்றி பெற்றே தீரும்’ என்ற அறைகூவலுடன் லெனின் முன்னுரையை நிறைவு செய்கிறார்).

Search