அடக்குமுறைக்கு
எதிராகக் கண்டனம் முழங்குவோம்!
மெரீனாவை
மீட்டெடுப்போம்! மக்களுக்காகப் போராடுவோம்!
(மாலெ தீப்பொறி 2017 பிப்ரவரி 01 – 15)
இறுதியில்
காவல்துறை என்ன செய்தது?
பொங்கலை
ஒட்டி, ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் கோரி
மெரீனா, கோவை, மதுரை, அலங்காநல்லூர்
என பல பகுதிகளில் சில
லட்சம் பேர் திரண்டனர். ஜல்லிக்கட்டு
நடத்துவதற்கான அவசர சட்டம் வேண்டும்
என்ற பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை மோடி ஏற்றுக் கொண்டார்.
மோடி தமிழர் கலாச்சாரம் மற்றும்
பண்பாடு மீது தமக்கு மிகுந்த
மரியாதை இருப்பதாக தெரிவித்தார். ஜல்லிக்கட்டு வழக்கில் பத்து நாட்கள் தீர்ப்பு
வழங்க வேண்டாம் என்ற முன்னுதாரணம் இல்லாத
கோரிக்கையை, மத்திய அரசின் கோரிக்கையை
உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. எந்த உச்சநீதிமன்றத் தடையால்
ஜல்லிக் கட்டு நடக்காமல் இருந்ததோ,
அதே உச்சநீதிமன்றம் அவசரச் சட்டம் வரட்டும்,
ஜல்லிக்கட்டு நடந்து முடியட்டும், அது
வரை தீர்ப்பு வழங்க மாட்டோம் எனப்
பச்சைக் கொடி காட்டியது. இந்தப்
பொங்கலை ஒட்டி, வாடிவாசலைத் திறந்திட
மாநில, மத்திய அரசுகள் மட்டுமின்றி,
உச்சநீதிமன்றமும் இணக்கமாகவே செயல்பட்டதாகத் தோன்றுகிறது.
ஜனவரி
22 அன்று மாலை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான
அவசரச் சட்ட நகல் தயாரானது.
விவரம் ஊடகங்களில் அலசப்பட்டது. ஜனவரி 23 அன்று மாநிலமெங்கும் அரசு
ஒடுக்குமுறை தலைவிரித்தாடியது. அந்த ஜனவரி 23 மாலையே
அவசரச் சட்டம் நிறைவேறியது.
போராட்டக்காரர்கள்
திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டார்கள், தீவிர இடதுசாரி நக்சல்
அமைப்புகள், தீவிரவாத தமிழ்த் தேசிய அமைப்புகள்,
இசுலாமிய மதவாத அமைப்புகள் என்ற
தேச விரோத, சமூக விரோத
சக்திகள் போராட்டத்தைக் கைப்பற்றி குடியரசு தின கொண்டாட்டங்களை சீர்குலைக்க
இருந்தனர், தாக்குதல்களுக்கு தயாராக இருந்தனர் என
காவ துறை குற்றம் சுமத்தியது.
ஒசாமா பின் லேடன், பிரபாகரன்
என படம் காட்டியது. சென்னை
தவிர மற்ற இடங்களில் குடியரசு
தின கொண்டாட்டங்களை சீர்குலைத்திடும் வாய்ப்பு எங்கிருந்து வந்தது? போராட்டம் நெடுக,
காந்தி, கலாம் படங்கள் விரவியிருந்ததும்,
வந்தே மாதரம் தேசிய கீதம்
பாடப்பட்டதும் ஊடகங்களால் திரும்பத்திரும்ப முன்வைக்கப்பட்டதை காவல்துறை காணாமலே விட்டிருக்குமா? மோடியும்
பன்னீர்செல்வமும், காந்தி, கலாம் படம்
பிடித்தவர்களை, வந்தே மாதரம், தேசிய
கீதம் பாடியவர்களை, சமூக விரோதிகள், தேச
விரோதிகள் பட்டியலில் சேர்த்து விட்டார்களா?
ஜனவரி
23 அன்று, காவல்துறை, இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் அனைவரையும் விரட்டி விரட்டித் தாக்கியது.
புரட்டி எடுத்து அடித்தது. ரூதர்புரம்,
மீனாம்பாள்புரம் தலித் குடியிருப்புகளில் நடுக்குப்பம்
போன்ற மீனவர் குடியிருப்புகளில் ஆட்டோவுக்கு,
குடிசைக்கு காவல்துறையினரே தீ வைப்பது போன்ற
காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.
வாகனங்கள், சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. மக்கள் மூர்க்கமாகத் தாக்கப்பட்டார்
கள். சாதிப் பெயர் சொல்லி
இழிவுபடுத்தப்பட்டார்கள். உங்களுக்கு எல்லாம் எதற்கு ஜல்லிக்கட்டு
என்று கேட்டுத் தாக்கியதாகவும் புகார் வந்துள்ளது. கோவையின்
வ.உ.சி
மைதானத்தில், அலங்காநல்லூரில் நடந்த கொடூரத் தாக்குதல்களை
ஊடகங்கள் மூலம் பார்த்த தமிழ்நாட்டு
மக்கள் அதிர்ந்து போனார்கள்.
மோதல் படுகொலை செய்யும் காவல்துறை,
மதவாத, சாதிய வன்மம் கொண்ட
காவல்துறை, போராடுபவர்களை துவைத்து எடுக்கும் காவல்துறை என மக்கள் மனங்களில்
காலாகாலமாய் பதிந்திருக்கும் சித்திரம், மெரீனாவில் கோவையில் மதுரையில் அலங்காநல்லூரில் தமிழ்நாடு எங்கிலும் ஜனவரி 23க்குப் பிறகு
திரும்பவும் முன்னுக்கு வந்தது. காவல்துறை உங்கள்
நண்பன், காக்கிக் சட்டைக்குள் தமிழர்கள், தமிழர் பாரம்பரியம் காக்க
தோள் கொடுத்து இணைந்து போராடும் காவல்துறை
என புனையப்பட்ட கதைகள் எல்லாம், ஜனவரி
23 அன்று நடந்தேறிய காவல்துறை அராஜகத்தால், சிதறி நொறுங்கின.
நடந்தது
தைப்புரட்சி - மெரீனா புரட்சி வீசியது
தமிழ்வசந்தம்
பணிந்தன
மத்திய மாநில அரசுகள்
இப்படி
திட்டவட்டமாகச் சொல்ல முடியுமா?
லட்சக்கணக்கானவர்கள்
திரண்டனர். தாமாகவே திரண்டனர். தமிழராயப்
போராடினர். கோரிக்கையை வென்றனர். அஇஅதிமுக, பாஜக அரசுகள் பணிந்தன.
நடந்தது தைப் புரட்சி. நடந்தது
மெரீனா புரட்சி. வீசியது தமிழ் வசந்தம்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத
தமிழ் என்று சங்கே முழங்கு,
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே
என்ற பாரதிதாசன் கனல் வரிகளுக்கு, 2017ன்
ஜனவரி போராட்டமே சான்று. இப்படி ஒரு
கருத்து முன்வைக்கப்படுகிறது.
இதற்கு
நேரெதிராக நடந்தது மொத்தமும் சதி,
நாடகம், அரசு, ஆர்எஸ்எஸ், சாதியாதிக்க
சக்திகள், காவல்துறை சேர்ந்து கூட்டம் திரட்டினார்கள். இப்படியும்
கூட ஓரஞ்சாரமாய் சில கருத்துக்கள் உள்ளன.
முதல் கருத்தை முன்வைப்பவர்கள், போராட்டம்
ஜல்லிக்கட்டுக்காக துவங்கினாலும், போகப்போக புறக்கணிக்கப்படும் தமிழ்நாட்டு உரிமைகள், மோடி அரசு எதிர்ப்பு,
பன்னாட்டு நிறுவன எதிர்ப்பு, பண்பாட்டு
பாதுகாப்பு என விரிந்ததாகவும், ஓர்
இளைஞர் பட்டாளம் அரசியல் விழிப்புணர்வு பெற்றதாகவும்
சொல்கிறார்கள்.
சிலர்,
அவரவர் நிலைகளில் இருந்து எல்லாம் நன்றாகத்தான்
நடந்தது, கடைசி நேரத்தில் காவல்துறை
கடுமையாக நடந்திருக்கக் கூடாது என்றும் போராடியவர்கள்
போராட்டத்தை நீட்டிக்காமல் முடித்திருக்க வேண்டும் என்றும் கூட சொன்னார்கள்.
மெதுவாக,
இப்போது அரசியல் கட்சிகள், அவரவர்
அரசியலை பேசத் துவங்கிவிட்டார்கள். பொன்.ராதாகிருஷ்ணனும் அஇஅதிமுகவுக்கு நெருக்கமான புள்ளி என தன்னைச்
சொல்லிக் கொள்ளும் நடராசனும், போராட்டம் வெற்றி அடைந்தது பொறுக்காமல்
திமுகவினர் கலவரம் செய்ததாகச் சொல்கிறார்கள்.
பன்னீர்செல்வம், நியாயமான அறப் போராட்டம் நடந்தது,
மாநில அரசு எடுத்த முயற்சிக்கு
மத்திய அரசு ஒத்துழைப்பு தந்தது,
கோரிக்கை நிறைவேறியது, எல்லாம் நன்றாக முடிந்தும்
தீய சக்திகள் நுழைந்துவிட்டனர், இனி எச்சரிக்கையாக இருப்போம்
என்றார். தம்பிதுரை தன் பங்குக்கு, ஜெயலலிதா
பல முறை வலியுறுத்தியபடி ஜல்லிக்கட்டு
நடத்த மத்திய அரசு அவசரச்
சட்டம் போட்டிருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது
என்றார்.
மு.க.ஸ்டாலின், செயலற்ற
மாநில அரசை மாணவர் போராட்டம்
செயல்பட வைத்தது, அலட்சியம் காட்டிய மத்திய அரசை,
அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் தர வைத்தது என்றார்.
அவரது ஜனவரி 26 அறிக்கை, 1. போராட்டம் பற்றிய பார்வை, 2. அது
பற்றிய கவலை, 3. கடந்தகால சாதியம் கடந்து வருங்காலத்தில்
சமத்துவ ஜல்லிக்கட்டு நடத்துவதன் அவசியம் ஆகிய பகுதிகளை
கொண்டிருந்தது. ‘நடந்த போராட்டத்தில் சாதி
அரசியலுக்கு சமாதி கட்டப்பட்டது, மத
வேறுபாடு மாண்டது, நான் தமிழன்டா, தமிழச்சிடா
என்ற தமிழினப் பற்று ஒன்று மட்டுமே
மேலோங்கி இருந்தது’. ‘திடீரென வெடிக்கும் எரிமலைபோல்
வெடித்துக் கிளம்பும் இந்த உணர்வுகள் பின்னர்
அடங்கிவிடுகின்றன. அடுப்பில் கொதிக்கும் உலையை அடக்கத் தண்ணீர்
தெளிப்பது போல், சில தீர்வுகள்
இந்த உணர்வை அமைதிப்படுத்துகின்றன’. ‘கடந்த காலங்களில்
ஜல்லிக்கட்டு நடந்த பல ஊர்களில்
சில கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளன.
என் சாதிக்காரன் காளையை வேறு சாதிக்காரனான
நீ அடக்குவதா என்பது போன்று சில
இடங்களில் சாதிச் சண்டைகள், அதனை
ஒட்டி பல வன்முறை நிகழ்வுகள்
நடைபெற்றதை எவரும் மறுக்க முடியாது.
இனி, சாதி வேற்றுமை மறந்து
எல்லோரும் ஒன்றுகூடி தமிழினத்தின் பாரம்பரிய விளையாட்டில் பங்கேற்று, சமத்துவ ஜல்லிக்கட்டாக நடத்திட
வேண்டும்’. தொல்.திருமாவளவன், ‘தமிழர்
பண்பாட்டின் பெயரால் போராட்டம்! ஆனாலும்
சாதியின் பெயரால் ஒடுக்குமுறை!’ என
காவல்துறை ஒடுக்குமுறை பற்றி சொல்லியுள்ளார்.
லட்சக்கணக்கானவர்கள்
பங்குபெற்ற ஒரு போராட்டத்தை, அரசு
சதி, ஆர்எஸ்எஸ் சதி, சாதி ஆதிக்க
சக்திகளின் சதி என்று சொல்லிக்
கடந்து விட முடியாது. அது
தவறு. இப்போதைய மாநில அரசுக்கோ, ஆர்எஸ்எஸ்சுக்கோ,
சாதி ஆதிக்க சக்திகளுக்கோ, அத்தகைய
செல்வாக்கு நிச்சயம் இல்லை. அது மட்டுமின்றி,
கலந்துகொண்ட ஏகப்பெரும்பான்மையினர், மாநில அரசைக் காப்பாற்றவோ,
இந்துத்துவா லட்சியங்களுக்காகவோ, சாதிய உணர்விலோ கலந்து
கொண்டார்கள் என, விவரம் அறிந்த
எவரும் சொல்ல மாட்டார்கள். ஆக,
இது, ஒரு பரிசீலனையைக் கோரும்
வாதம் என்று கூடக் கருத
முடியாது என, தள்ளுபடி செய்யப்பட
வேண்டும்.
மறுபக்கம்,
அரசும் காவல்துறையும் மக்கள் கூடுவதை, திரள்வதைத்
தடுக்கவில்லை, உதவினார்கள் என்பதையும், கவனிக்காமல் இருந்துவிட முடியாது. சமீபத்தில்தான் ரூ.1,000, ரூ.500 செல்லாது எனப் போராடியவர்கள் மண்டையை
உடைத்தது காவல்துறை; சேலத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறேன் என ஓர் இளைஞர்
சாவுக்குக் காரணம் ஆனது காவல்துறை.
எதிர்த்தவர்கள் மூர்க்கமாய்த் தாக்கப்பட்டனர். சிறை செய்யப்பட்டனர். அதே
காவல்துறை, திடீரெனத் தன் அணுகுமுறையை அரசுகள்
அனுமதியின்றி மாற்றிக் கொள்ளாது என்பது, அரசியல் அரிச்சுவடி
தெரிந்தவர்களுக்கும் புரியும்.
அதே போல், இந்தப் போராட்டத்தைத்
துவக்கத்தில் ஒருங்கிணைத்தவர்கள், ஆர்எஸ்எஸ் ஆதரவு மற்றும் ஆதிக்க
சாதியினரின் சில சக்திகள்தான் என்பதும்,
சுலபமாகச் சரி பார்த்துக் கொள்ளக்
கூடிய விவரங்களே. தென்கொரிய ஹுண்டாய், வடஇந்திய தலைமையகங்கள் கொண்ட தகவல் தொழில்நுட்ப
நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில்
வர்த்தக நிறுவனங்கள், (அரசு சொன்னபடி) தங்கள்
ஊழியர்களுக்கு விடுப்பு அளித்தன; போராட்டத்திற்குச் செல்ல உதவின. கல்விக்
கொள்ளையர்கள் பலரும் தங்கள்
மாணவர்கள், போராட்டம் நடக்கும் இடம் செல்ல உதவினர்.
சமீபத்தில் எந்த அரசியல் சமூக நிறுவனமோ
சக்தியோ, இந்தப்
போராட்டத்திற்கு எதிராக இல்லை. மாணவர்களுக்கு
அரசியல் கூடவே கூடாது, ஆகவே
ஆகாது என்றவர்கள் எல்லாம், மாணவர்கள் பங்களிப்பைச் சிலாகித்தனர். அடங்க மறுக்க, அத்துமீற,
எந்த அவசியமும் அவர்களுக்கு எழவில்லை. இந்தப் போராட்டத்தில் மேல்
கீழாக பிளவுண்டுள்ள சமூகத்தை, தலைகீழாகப் புரட்டிப் போடும் எந்த கோரிக்கையும்
முன்வந்ததாகத் தெரியவில்லை. இந்தப் பின்னணியில், மிகப்
பெரிய எண்ணிக்கையில் இளைஞர்கள் அணி திரண்டிருந்தாலும், அந்த
ஒன்றுகூடுதலை, புரட்சி, தமிழ் வசந்தம் என்றெல்லாம்
சொல்வது பொருத்தமானதா என யோசிக்க வேண்டும்.
எந்தச்
சூழலில், எந்தப் பின்னணியில் இந்தக்
கோரிக்கை முன்வந்தது எனக் காணாமலே, இந்தப்
போராட்டம் பற்றிய விசயங்களைப் பேசுவது,
ஓர் அக்கறைமிக்க சமூகப் பொறுப்பு கொண்ட
அணுகுமுறை ஆகாது. ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி,
தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமைகள் பாழாய்ப் போய்க் கொண்டிருந்தன. ரூ.1000,
ரூ.500 நோட்டு செல்லாது என்ற
அறிவிப்பு, கிராமப்புற நகர்ப்புற ஏழைகளின் வருமானத்தை வாழ்வைப் பறித்து வந்தது. முற்றி
வந்த விவசாய நெருக்கடி, விளை
நிலங்களை கொலைக் களமாக்கி வந்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் வந்த, பன்னீர்செல்வம்
- சசிகலா தலைமை மக்கள் மத்தியில்
வெகுவாக அந்நியப்பட்டுக் கிடந்தது. இந்த பிரச்சனைகள் எல்லாம்
பின்னே போய் ஜல்லிக்கட்டு பிரச்சனை
மட்டுமே அந்த சில நாட்களின்
முன்னே நின்றது என்பது அனைவரும்
அறிந்ததே.
பெண்களுக்கு
எந்த பங்கும் இல்லாத ஜல்லிக்கட்டை,
தமிழ்நாட்டின் 5ல் 4 பங்கு பகுதிகளோடு
தொடர்பு இல்லாத ஜல்லிக்கட்டை, சாதி
ஆதிக்கத்திலிருந்து பிரிக்க முடியாத ஜல்லிக்கட்டை,
தமிழர் பாரம்பரியம் என்று சொல்வது, தமிழர்
கலாச்சாரம் என்று சொல்வது நிச்சயம்
பொருத்தமற்றது.
1950களில்
ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் சொன்ன விஷயம் நினைவுக்கு
வருகிறது. ‘இப்போதுள்ள நிலைமைகளின் கீழ், இறுதி ஆராய்ச்சியில்,
தனியார் முதலாளிகளே, பத்திரிகை, வானொலி, கல்வி போன்ற
தகவலுக்கான முதன்மையான ஆதாரங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்துகின்றனர். ஆகவே குடிமக்களில் எவரும்,
பொருத்தமான சரியான முடிவுகள் எடுப்பதோ,
தமது அரசியல் உரிமைகளைப் புத்திசாலித்தனமாகப்
பயன்படுத்து வதோ மிகவும் கடினம்;
பல நேரங்களில் அப்படிச் செய்யவே முடியாது’. தமிழ்நாட்டு
மக்களின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாகியிருந்த, மத்திய மாநில ஆட்சியாளர்கள்
தப்பிக்க, முதலாளித்துவ ஊடகங்கள், தமிழ்நாட்டின் முதன்மை விஷயம் ஜல்லிக்கட்டு
என மாற்றின. தினமலர், தினமணி, புதிய தலைமுறை,
மற்றமற்ற ஊடக வியாபாரிகள், தமிழர்
பாரம்பரியம் தமிழர் கலாச்சாரம் காக்கும்
போராளிகளாக அவதாரம் எடுத்தனர். காசுக்கு
காசும் பார்த்தனர்.
பெரியாரை
செருப்பால் அடிப்பேன் என்ற பொருள்படப் பேசிய
பாஜகவின் எச்.ராஜா, அவரது
மாட்டை முதலில் ஆட்டத்தில் இறக்கினார்.
அவசரச் சட்டம் கொண்டுவந்த பன்னீர்செல்வம்,
அதற்கு ‘ஆலோசனை தந்த’ சசிகலா,
அதற்கு உதவிய மோடி, உச்சநீதிமன்றம்
ஆகிய அனைவருமே, தமிழர் பாரம்பரியம் மீட்க
உதவியவர்கள் என்றால், யார்தான் தமிழரின் பகைவர்கள்?
மறைந்த
ஜெயலலிதா, (இங்குள்ள தமிழர்கள், அவர் பின்னால் ஒன்றாதல்
கண்டே) எங்கள் பகைவர் எங்கோ
மறைந்தார், கண்ணுக்கெட்டிய வரை எதிரிகளே தெரியவில்லை
என, 2014 நாடாளுமன்ற தேர்தல் சமயம் கொக்கரித்தார்.
காங்கிரஸ் ஆண்டபோது, அவர் மத்திய அரசு
எதிர்ப்பு தமிழ் உரிமைப் போராளியாகத்
தம்மைத் திறன்மிக்க வகையில் நிறுவிக் கொண்டார்.
அவர் காவிரித் தாயானார். அவர் ஈழத்தின் நண்பர்
ஆனார். தமிழினம், தமிழ் தேசியம் பேசிய
எவரும் எடுபடவில்லை அல்லது அவர் பின்னே
ஓடினார்கள் என்பது சமீப கால
வரலாறு.
ஜனவரி
2017ல் திரண்டவர்களுக்கு, வேறு வேறு கோபங்கள்,
வேறுவேறு எதிர்பார்ப்புக்கள் நிச்சயமாய் இருந்தன. இருக்கின்றன. அவர்கள் தமிழ்நாட்டின் பன்மைத்துவத்தைப்
பிரதிபலிக்கிறார்கள். தமிழ்நாட்டு உரிமைகள் மீறப்படுகின்றன, அரசுகள் மக்களுக்கு அநீதி
இழைக்கின்றன, நம் நிகழ்காலம் சரி
இல்லை, நம் எதிர்காலம் நன்றாக
அமைய வாய்ப்பில்லை என்ற கவலை உடைய
தமிழ்நாட்டு மக்கள்தான் இளைஞர்கள்தான் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
தனித்தனி
தீவுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிற இளைஞர்கள், மெய்நிகர் உலகத்தில் உலவிக் கொண்டு மெய்
உலக விசயங்களை மாற்றுவதில் இருந்து தள்ளி நிற்க
வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள், வீட்டை விட்டு, கல்வி
பயிலும் இடத்தை விட்டு, வீதிக்கு
வருவது, தெரியாத பலருடன் ஒன்று
கூடுவது, புதிய அரசியல் சாத்தியப்பாடுகளுக்கான
கதவுகளைத் திறக்கிறது. அவர்கள் ஒன்று கூடிய
இடங்களில், ஒற்றை அரசியலோ, கருத்தியலோ,
ஒற்றை அமைப்போ, நிச்சயம் இருந்திருக்கவில்லை. அவர்கள் போராட்டத்தில் கலந்து
கொள்ளவோ, அல்லது போராட்டத்தைக் காணவோ
கூட வந்திருக்கலாம். அங்கு பேசப்பட்ட பல
விசயங்களையும் துண்டுதுண்டாகவாவது கேட்டுள்ளார்கள். கடைசியாக ஜனவரி 23 அன்று தங்களிடம் இருந்து
மெரீனாவும் கோவை வ.உ.சி மைதானமும் பறிக்கப்பட்
டதைக் கண்டுள்ளார்கள். விளையாடும் பிள்ளைகளை முகத்தில் புன்சிரிப்புடன் கவனிக்கும் பெற்றோர்கள் போல் அந்த நேரம்
அவர்களுக்கு காவல்துறையினர் தோன்றியிருக்கக் கூடும். மென்மையாகக் குட்டியை
வாயில் கவ்வி இங்கிருந்து அங்கு
எடுத்து வைக்கும் பூனையாக அவர்களுக்கு காவல்துறை
தோன்றியிருக்கக் கூடும். ஜனவரி 23 அன்று
காவல் பூனைகள், தங்களை எலிகளாக குரூரமாக
கடித்து குதறியதை கண்டுணர்ந்தார்கள். புத்தகங்கள், உரைகள், ஊடகங்கள் கற்றுத்தராததை
களங்களின் நேரடி அனுபவங்கள் கற்றுத்
தந்தன.
இந்த மாணவ, இளைஞர்களிடம் நீ
ஜல்லிக்கட்டுக்கு மட்டும்தான் வந்தாய், நீ ஏன் மற்ற
மற்ற தொழிலாளர், விவசாயி பிரச்சனைகளில், ஜனநாயகப்
பிரச்சனைகளில் வரவில்லை என்று கேட்பது சரியல்ல.
எதிர்மறை விளைவுகளே தரும். வெளியே வரப்
புறப்பட்ட அவர்களோடு, தமிழ்நாட்டின் ஏழை, எளிய, நடுத்தர
உழைக்கும் மக்களின் பகைவர்கள் யார் என உணர
வைக்க உறவாடி, உரையாடி, அவர்களை
நீடித்த போராட்டங்களுக்கு, போராட்ட வாழ்க்கைக்கு அழைத்து
வர புரட்சிகர அமைப்புகள்தான் பக்குவப்பட வேண்டியுள்ளது. தங்களை மாற்றியமைத்துக் கொள்ள
வேண்டியுள்ளது.
மெரீனாவை
மீட்டெடுப்போம் மக்களுக்காகப் போராடுவோம்
மெரீனா,
தமுக்கம் மைதானம், வ.உ.சி
மைதானம் போன்றவற்றில் அரசும் காவல்துறையும் அனுமதிக்கும்போது,
அனுமதிக்கும் வரை மட்டுமே, நாம்
கூடலாமாம். நாம், அரசு எதிர்ப்பு
நோக்கி பயணப்படக் கூட ஒரு வாய்ப்பு
உள்ளது என்ற அறிகுறி தெரியும்
போது, மெரீனாவும் தமுக்கம் மைதானமும் வ.உ.சி
மைதானமும் நமக்கில்லை என்றார்கள். நம்மை தாக்கினார்கள். நம்
மீது வழக்கு போட்டு நம்மை
சிறையில் அடைத்தார்கள். நம்மைத் தாக்கியவர்களை உற்சாகப்படுத்த
நட்டஈடு என்ற பெயரில் வெகுமதி
தந்தார்கள். நாம், இந்த அணுகுமுறையை
எதிர்த்தாக வேண்டும். மெரீனாவும் இதர கூடும் இடங்களும்
மக்களுடையவை. மக்களுக்கானவை. காக்கிச் சட்டைகளும் சூறையாடும் அரசுகளும் நாங்கள் கூடும் இடங்களை
எங்களிடம் இருந்து பறித்தெடுக்க அனுமதிக்க
மாட்டோம் என உரத்த குரலில்
சொல்வோம். சுதந்திரமும் ஜனநாயகமும் நமது பிறப்புரிமைகள். ஜார்ஜும் அமல்ராஜும் நமக்கு போட்ட பிச்சைகள்
அல்ல. உலகெங்கும் மக்கள் வால் ஸ்ட்ரீட்டை,
தாஹீர் சதுக்கத்தை, லண்டன் ட்ராஃபால்கர் சதுக்கத்தை,
இரவில் நீண்ட பாரீசை கைப்பற்றினார்கள்.
பெண்கள், தாங்கள் திரண்டு வந்து
பொது இடங்கள், எங்கள் போராட்டக் களங்கள்
என்றார்கள். நாமும் சொல்வோம்: எங்களுக்குத்
தேவைப்படும்போது, நாங்கள் தயாராகி, மெரீனாவையும்
தமுக்கம் மைதானத்தையும் வ.உ.சி
மைதானத்தையும் எடுத்துக் கொள்வோம். அப்போது, எவர் தடுத்தாலும் தடைகள்
மீறப்படும். கலகக் கொடிகள் போராட்டங்களில்
உயரும்.
நமக்கு
ஓர் எச்சரிக்கை தேவை. உலகெங்கும் ட்ரம்ப்,
எர்டோகன், மோடி போன்ற வலதுசாரி
பிற்போக்காளர்கள், ‘நாம் எதிர் அவர்கள்’
என, ஒரு பக்கம் மக்களை
ஒன்று சேர்க்கவும், மறுபக்கம் மக்களை எதிரெதிராய் பிரித்து
நிறுத்தவும் செய்கிறார்கள். சிலருக்கு எதிராகப் பலரை, மொழி, இனம்,
நிறம், தேசம், தேச பக்தி
என நிறுத்துகிறார்கள்.
தமிழ்நாட்டு
மக்களின் மொழி உரிமை, நீர்
உரிமை, வரிகள் செல்வங்கள் பங்கீட்டு
உரிமை ஆகியவை மறுக்கப்படுகின்றன என்பது
உண்மைதான். திணிப்புகள், மறுப்புகள், சிறுமை செய்தல் ஆகியவற்றுக்கு
எதிராக கவனம் வேண்டும் என்பதும்
சரியான விசயமே. அதே நேரம்,
அரசியலில், பொருளாதாரத்தில், அரசுப் பணிகளில், தனியார்
துறை உயர் பணிகளில், கல்வியில்,
முதலாளித்துவ பொருளாதார/மானுட வளர்ச்சி குறியீடுகளில்,
நகர்மயமாதலில் தமிழ்நாடு இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் ஒன்று
என்பதும், காண வேண்டிய ஒரு
விசயமாகும்.
முதலாளித்துவச்
சமூகத்தில், 1. உழைப்புச் சக்தியை விற்பவர்கள் (தொழிலாளர்கள்),
2. உழைப்புச் சக்தியை வாங்குபவர்கள் (முதலாளிகள்),
3. உழைப்புச் சக்தியை விற்பவர்கள், வாங்குபவர்கள்
(தொழிலாளர்கள், முதலாளிகள்) இடையிலான மூன்று போட்டிகள் எப்போதும்
இருக்கும். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலான போட்டியைத் தடுக்க, தணிக்க, முதலாளிகளுக்கு
இடையிலான சண்டையில், நம்மை அவர்களோடு சேரச்
சொல்வார்கள். போட்டியில் போட்டியாளர் வென்றால், உங்கள் சம்பளம் குறையும்,
உங்கள் வேலை போகும், அதனால்,
என்னோடு சண்டை போடாமல், என்னோடு
சேர்ந்து நின்று, என் போட்டியாளரோடு
சண்டை போடு என அவரவர்
முதலாளிகள் அழைப்பார் கள். கூலியில் நீக்குப்போக்காய்
நடந்து கொண்டு, கூடுதல் உற்பத்தி
கொடு எனக் கேட்பார்கள். அது
மட்டுமா? பலவகைப்பட்ட தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியை, வேலை இருப்பவர்களுக்கும் வேலை
இல்லாதவர்களுக்கும் இடையிலான போட்டியை தீவிரப்படுத்தி, அதனை நெம்புகோலாக்கி, மூலதனத்தை
திரட்டிக் கொள்வார்கள்.
இந்துக்கள்
- இசுலாமியர், சாதி இந்து - தலித்,
ஒரு மாநிலத்தவர் - மற்றோர், தமிழர்கள் - தமிழரல்லாதோர் என்ற பல போட்டிகளைத்
தூண்டிவிட்டு, இங்குள்ள பால், சாதி, வர்க்கப்
பகைமைகளை முன்னே வர விடாமல்
தடுப்பார்கள். தணிப்பார்கள். திசை திருப்புவார்கள்.
அரசு ஒரு பலாத்கார ஒடுக்குமுறை
கருவி என்பதை புரிந்துகொள்வது சற்று
எளிது. ஆனால், அரசு, வர்க்கங்களுக்கு
அப்பால் சமூகத்துக்கு வெளியே, அயலாராக, சமூகத்துக்கும்
மேலானதாக, நிற்பதாக ஏமாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம்தான். எல்லா
சமூக இயக்கங்களையும் அவற்றின் மேல்தோற்றம் தாண்டி, அவற்றைப் பற்றி
ஆட்சியாளர்கள் முதலாளித்துவ ஊடகங்கள் முன்வைக்கிற சித்திரங்கள் தாண்டி, கவனத்துடன் பரிசீலனை
செய்ய வேண்டியுள்ளது. ஒரு பக்கம் ஆதிக்கங்களுக்கு
எதிராக உறுதியாக நின்று கொண்டு, மறுபக்கம்
உழைப்பாளி மக்களை வர்க்கமாக இணைக்க
வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டு
மாணவர்களை, இளைஞர்களை கல்விக்காக, வேலை வாய்ப்புக்காக மட்டு
மல்லாமல், மதவெறிக்கு எதிராக, சாதியாதிக்கத்துக்கு எதிராக,
ஊழலுக்கு எதிராக, உழைப்புச் சுரண்டலுக்கு
எதிராக, வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக, கார்ப்பரேட்
ராஜ்ஜியத்துக்கு எதிராக, ஏகாதிபத்திய தலையீடுகளுக்கு
எதிராக, ஆணாதிக்கத்துக்கு எதிராக வீதிக்கு வரவழைத்து
ஒன்றுதிரட்டி போராட வைக்க வேண்டியுள்ளது.
ஜனநாயகம் காக்க, மக்கள் நலன்
காக்க, சாதி, பால், மத
பேதங்கள் தாண்டி, மாணவர்களும் இளைஞர்களும்
திரள்வது நிச்சயம்.
அப்போது
நிச்சயம் மெரீனா மீட்கப்படும்.