COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, February 14, 2017

பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் துவங்கிய பத்தாம் ஆண்டில்
எம்.குருசாமி
பிப்ரவரி 24, 2007 அன்று கோவையில் ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு கூடியது. அப்போது தோழர் குமாரசாமி, கோவையிலும் தமிழ்நாட்டிலும் பெரிய தொழிலாளர்  போராட்டங்கள் வெடிக்கும், அவற்றை வழி நடத்தும் கடமை ஏஅய்சிசிடியுவிற்கு இருக்கும் எனச் சொன்னதாக, பிறகு கேள்விப்பட்டேன்.

பிப்ரவரி 25, 2007 அன்று கோவை பிரஸ் காலனியில், தோழர் எஸ்.கே. பிரிக்கால் தொழிலாளர்களைச் சந்தித்தார். அடிமைத்தனத்திற்கு எதிராக, அநியாயங்களுக்கு எதிராக அஞ்சாமல் போராட அழைப்பு விடுத்தார்.
சென்னை சென்று, தோழர் எஸ்.கே.வை தலைமை தாங்க வருமாறு அழைத்தபோது, அவர் கேட்டார்: ‘ஏஅய்சிசிடியு சங்கம் தீவிரவாத சங்கம், ஏற்க மாட்டோம் என, நிர்வாகம் விடாப்பிடியாய் நிற்கும்; பழிவாங்கும்; சுலபத்தில் பிரச்சனை தீராது; நீங்கள் உங்கள் நிறுவன யூனிட்கள் புனே, குர்கான், உத்தர்கண்ட் போன்ற இடங்களில் இருப்பதாகச் சொன்னீர்கள்; உத்தர்கண்டுக்கு உங்களை மாற்றினால், எதிர்த்து வேலை நிறுத்தம் செய்வீர்களா’. மார்ச் துவக்கதில் முன்னணிகள் 6 பேர் உத்ராகண்ட் மாற்றப்பட்டோம். மார்ச் 3 முதல் பிளான்ட் 3லும் மார்ச் 5 முதல் இரண்டு பிளாண்ட்களிலும் வேலை நிறுத்தம் துவங்கியது. ஆயிரம் பேருக்கு மேலான துணை யூனிட் தொழிலாளர்களும் சேர்ந்து கொண்டனர்.
பெரியநாயக்கன்பாளையம், தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டக் களமாக மாறியது.
புனே, குர்கான், உத்ராஞ்சல், இந்தோனேஷியா எனப் பரவி இருந்த ஆட்டோ உதிரி பாகத் தயாரிப்பு முன்னணி நிறுவனமான பிரிக்கால், மாவோயிஸ்ட் சங்கத்தை ஏற்க மாட்டோம், வெளியாருக்கு இடமில்லை, வேண்டுமானால் கோவையை விட்டே வெளியேறுவோம் என மிரட்டினார்கள். அடக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள், புரட்சிகர தொழிற் சங்க தலைமை கிடைத்ததால், எங்கள் சங்கத்தை அங்கீகரிக்காமல் ஓயமாட்டோம், என்ன விளைவு வந்தாலும் தயார் எனப் பொங்கி எழுந்தனர்.
கோவை ஊட்டி நெடுஞ்சாலை, 17 மணி நேரம், பகலும் இரவும் பல்லாயிரம் ஆண்களால் பெண்களால் மறிக்கப்பட்டது. ‘10 பி இல்லன்னா பத்தாது’ என்ற எழுச்சிப் பேரணிகள், அரங்கக் கூட்டம், மே தின சவால் கூட்டங்கள், சென்னை, ஈரோடு, கோவையில் நடந்தன.
அரசு தொழிலாளர் கோரிக்கையை ஏற்றது. நிர்வாகம், தன் முரட்டுத்தனத்தை விடவில்லை. வேலை நீக்கம், சம்பள வெட்டு, ஊதிய உயர்வு முடக்கம், பதவி இறக்கம், சர்வீஸ் வெட்டு, பகுதிக் கதவடைப்பு, ஊக்க ஊதியப் பிடித்தம் என, தன் ஆயுதக் கிடங்கில் இருந்த எல்லா ஆயுதங்களையும் ஏவியது. ஒன்றுபட்ட தொழிலாளர் போராட்டம், மக்கள் ஆதரவு, திறன் வாய்ந்த தொழிற்சங்க செயல்தந்திரங்கள் என்ற கேடயங்கள், இந்தத் தாக்குதல்களிலிருந்து சங்கத்தையும் போராட்டத்தையும் காப்பாற்றின. மக்கள் ஆதரவுடன் 100 நாட்களுக்கு மேல் 2000 போராட்டக்காரர்களுக்கு தினமும் உணவு வழங்கப்பட்டது. போராட்டத்தின் போக்கில் ஆண் தொழிலாளர்கள் கருப்பு, வெள்ளை சீருடையும் பெண் தொழிலாளர்கள் சீருடையும் தாமே உருவாக்கிக் கொண்டனர்.
மக்கள், தொழிலாளர்கள் பக்கம் நின்றனர். வர்க்க உணர்வுடன் வர்க்கப் போராட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் மத்தியில், புரட்சிகர பாட்டாளி வர்க்க அரசியலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)ம் எடுத்துச் செல்லப்பட்டன. சங்கம், தொழிற்சாலை என்ற எல்லைகள் தாண்டி, தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். தொழிலாளர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று விவசாயத் தொழிலாளர் சங்க உறுப்பினர் சேர்ப்பில், அவர்கள் மத்தியில் புரட்சிகர அரசியலை பிரச்சாரம் செய்யும் பணிகளில், ஈடுபட்டனர். ஏஅய்சிசிடியு இகக(மாலெ) மாநில அகில இந்திய மாநாடுகளுக்கு, இதர நடவடிக்கைகளுக்கு முன்னணிப் பங்காற்றினர். திருமாங்கல்ய திட்டத்திற்கு எதிரான, நிலையாணைகள் சட்டத் திருத்தம் கோரும், தொழிற் சங்க அங்கீகார சட்டம் கோரும், குறைந்தபட்ச சம்பளம் கோரும் கையெழுத்து இயக்கங்களில், பிரச்சாரப் பயணங்களில் பெரும் பங்காற்றினர். அமைப்புச்சாரா தொழிலாளர்களை அமைப்பாக்குவதில், குடியிருப்பு பகுதி மக்கள் மத்தியில் வேலை செய்வதில் முயற்சிகளைத் துவக்கினர்.
பகத்சிங்கின் நூறாவது பிறந்த தினத்தை ஒட்டி தொழிற்சாலைக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் பகத்சிங் பேட்ஜ் அணிந்து வேலைக்குச் சென்றனர். பாலகங்காதர திலகர் சுதந்திரம் எனது பிறப்புரிமை எனச் சொன்னதற்காக, வெள்ளையர்களால் நாடு கடத்தப்பட்டார்; ஆறு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார். இதனை எதிர்த்து மும்பை பாட்டாளி வர்க்கம் 6 நாட்கள் வேலை நிறுத்தம் செய்து பிரிட்டிஷாரின் படைகளோடு நேருக்கு நேர் மோதியது. தடையரண்கள் அமைத்து போராடியது. தோழர் லெனின், இந்நிகழ்வை இந்திய தொழிலாளி வர்க்கம் அரசியல் முதிர்ச்சி அடைந்துள்ளதன் வெளிப்பாடு என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்தப் போராட்டத்தின் நூறாவது ஆண்டை பிரிக்கால் தொழிலாளர்கள் மலுமிச்சம்பட்டியில் காட்டுக்குள்ளே திருவிழா எனக் கொண்டாடினார்கள்.
வெள்ளையனே வெளியேறு நாள் வந்த போது, 2008ல் தோழர் திபங்கர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் உறுதியேற்று அந்த ஆண்டு பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெற வைத்தனர். ஆகஸ்ட் 19, 20, 21, 22, 23 ஆகிய தினங்களில் போராட்ட இடிமுழக்கம் பெரியநாயக்கன்பாளையத்தில் நாலாப் பக்கங்களிலும் எதிரொலித்தது. அடங்க மறுத்து ஆர்த்தெழுந்த தொழிலாளர்களின் செங்கொடி 2007ல், 2008ல், 2009ல் தொடர்ந்து வானுயரப் பறந்தது.
2009ல் ரெகுலர் உற்பத்தியில் நிரந்தரமற்றவர்களை ஈடுபடுத்துவதை தடுத்து நிறுத்தக் கோரி, பிடித்தம் செய்யப்பட்ட சம்பள உயர்வுகளை வழங்கக் கோரி, காலவரையற்ற பட்டினிப் போராட்டம், 14 நாட்கள் நடந்தது. போராட்டம் சட்டமன்றக் கதவுகளைத் தட்டியது. வெவ்வெறு கட்சிகளும் கேள்வி கேட்க, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு வந்தது. தொழிலாளர் கோரிக்கை திரும்பவும் வென்றது. எந்தப் போராட்டத்திலும் இதற்கு முன் நடந்திராத வகையில் பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தில் அரசாங்கம் இரண்டு முறை தொழிற்தகராறு சட்டம் 1947ன் 10 பி பிரிவின் கீழ் ஆணைகள் போட்டது. பொது நலன் கருதி நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு உத்தரவிட்டது. அந்த சட்டத்தின் 10(1) பிரிவின் கீழ் வழக்குகளை விசாரணைக்காக தொழிலாளர் நீதிமன்றத்துக்கு அனுப்பியது. 10(3) பிரிவின் கீழ் பகுதி கதவடைப்பு தொடர்வதற்கு தடை விதித்தது.
நிர்வாகம், உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வம் இரு நீதிபதிகள் அமர்வம் உச்சநீதிமன்றம் என, தன் பணபலம் கொண்டு, வழக்குகளை இழுத்தடித்தது. நாங்களும் விடாமல் போராடி எல்லா மட்டங்களிலும் அவர்கள் முயற்சிகளை தோற்கடித்தோம். சுதந்திரப் போராட்டத்தின் போது தேசபக்தர்கள், அந்தமானுக்கு, மாண்டலேக்கு நாடு கடத்தப்பட்டார்கள். பிரிக்கால் போராட்ட முன்னோடிகள் மலுமிச்சம்பட்டி மற்றும் குனியமுத்தூர் ஆகிய இடங்களில் தனிச் சிறையில் வைக்கப்பட்டனர். அவர்கள் ஓரடி நாம் ஒரு பதிலடி, திரும்பவும் அவர்கள் ஓரடி நாம் ஒரு பதிலடி என போராட்டம் நீண்டுகொண்டே போனது.
2009ல் செப்டம்பர் 21 அன்று பிரிக்கால் மனிதவளத்துறை துணை மேலாளர் திரு.ராய் ஜார்ஜ் மர்மமான  முறையில் மரணமடைந்தார். ஆம்புலன்ஸ் பதிவேட்டில் அவருக்கு விபத்து நடந்ததாகத்தான் முதலில் பதிவானது. அவரது குடும்பத்தாரின் இழப்பு பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவரது துரதிர்ஷ்டவசமான அகால மரணத்தை, கோவை முதலாளிகளும் காவல்துறையும் சங்கத்தை ஒழித்துக்கட்டும் கடைசி பேராயுதம் எனப் பயன்படுத்தினார்கள். தோழர்கள் குமாரசாமி, தாமோதரன் உள்ளிட்ட, நான்கு பெண்கள் உள்ளிட்ட, போராட்டத்தின் தொழிலாளர் தலைவர்கள் குருசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஜானகிராமன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 27 பேர் மீது, 42 தொழிலாளர்கள் 19.09.2009 அன்று வேலை நீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்து, 20ஆம் தேதி சங்க அலுவலகத்தில் சதி செய்து, 21ஆம் தேதி கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தி, 22ஆம் தேதி திரு.ராய் ஜார்ஜ் இறக்கக் காரணமாக இருந்ததாக வழக்கு தொடுத்தது.
தேடல் வேட்டை நடந்தது. மணிகண்டன் என்ற ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். பலர் சிறை செய்யப்பட்டனர். எல்லா பழைய வழக்குகளும் தூசு தட்டப்பட்டு முன்னெடுக்கப்பட்டன. காவல்துறை உயர்அதிகாரிகள் மத்திய அமைச்சர்கள் நேரடியாக, தீவிரவாத ஆபத்தை ஒழித்துக்கட்டாமல் ஓயமாட்டோம் என்றார்கள்.
இந்த முறையும் சூழ்ச்சியாளர்கள் பின்னிய சதிவலைதான் அறுந்து விழுந்தது. முதலில் தோழர் குமாரசாமி முன் ஜாமீன் பெற, அடுத்தடுத்து தோழர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். 2009ஆம் ஆண்டின் இறுதியிலேயே நிர்வாகம் புதிய சம்பள உயர்வை மட்டும் தரத் துவங்கியது.
10.10.2010ல் போராட்டத்தைக் கொண்டாடுவோம், கொண்டாட்டமாய்ப் போராடுவோம் என்ற முழக்கத்துடன், பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட பிரிக்கால் தொழிலாளர் குடும்பத் திருவிழாவை, தொழிலாளர்கள் நடத்தினர். 2010 நெடுக தொழிலாளர்கள் தாக்குப் பிடித்தார்கள். அவர்களது சோர்வையெல்லாம் போக்கி, அடுத்தடுத்த கட்டங்களுக்கு அடுத்தடுத்த போராட்ட வடிவங்களுக்கு சங்கத்தால் எடுத்துச் செல்ல முடிகிறது என்று உணர்ந்த நிர்வாகம், வேறுவழியின்றி 2011ல் சங்கத்தை அங்கீகரித்தது. மூலதனம், கூலியுழைப்பின் போராட்டத்தின் முன்பு அந்த நேரத்தில் பணிந்தது.
அதற்கு பிறகு சங்கம் இரண்டு ஒப்பந்தங்கள் போட்டது. பிப்ரவரி, 2007ல் நான் உத்தர்கண்ட் மாற்றப்பட்டபோது ரூ.7000க்கும் குறைவாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். இப்போது என்னை ஒத்த தொழிலாளர்கள், பிப்ரவரி 2017ல் ரூ.23,000 சம்பளம் வாங்குகிறார்கள். ஏஅய்சிசிடியு சங்கம் இல்லையென்றால் தொழிலாளர்கள் ரூ.15,000 என்பதற்கு அக்கம்பக்கமாகவே சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பார்கள். சம்பள உயர்வு என்பதோடு கூட, உரிமைப் போராளிகளாக இருந்ததால், பேச்சுவார்த்தைகள்படிதான் உற்பத்தி என்பதிலும், இன்று வரை தொழிலாளர்களால் உறுதியோடு நிற்க முடிகிறது. பிரிக்கால் தொழிலாளர்கள், தலை நிமிர்ந்து தொழிற்சாலைக்குள் தன்மானத்தோடு, சுயமரியாதையோடு பணியாற்றுகிறோம் என்று சொல்ல முடிகிறது. லட்ச லட்சமாய் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும், அவை தன்மானத்தின் சுயமரியாதையின் கால் தூசுக்கு சமமாகாது. இந்தப் போராட்டத்தில் 230க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நிரந்தரம் பெற்றனர். 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அவர்கள் கடந்த காலத்தில் பெற்றிருக்க முடியாத நஷ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றனர்.
நிர்வாகம் பெரிய தாக்குதல் தொடுக்கக் காத்திருந்தது. 27 தோழர்களுக்கு எதிராக 2011ல் செஷன்ஸ் வழக்கு 75/2011, நடக்க ஆரம்பித்தது. நிர்வாகத்திற்காக சக்திவேல் என்ற அதிகாரி, அரசு தரப்பினரானார். ஜெயச்சந்திரன் என்ற வழக்கறிஞர் கொண்டு வழக்கு நடத்தினார்கள்.
அரசு, சிறப்பு பப்ளிக் பிராசிக்யூட்டர் நியமனம் செய்தது. நிர்வாக அதிகாரி சக்திவேல் கூசாமல் பல பொய்கள் சொன்னார். வேறு வேறு சாட்சிகள், சொல்லிக் கொடுத்தபடி பொய் சாட்சி சொன்னார்கள். வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, மிகுந்த மனக்கவலையால் தோழர் சம்பத்குமாரின் மனைவி மஞ்சுளா தேவி தற்கொலை செய்து கொண்டார்.
செஷன்ஸ் நீதி மன்றம் சாட்சியங்களுக்கு புறம்பாக தோழர்கள் மணிவண்ணன், ராமமூர்த்தி, ராஜேந்திரன், சிவக்குமார், வேல் முருகன், சம்பத்குமார், சரவணக்குமார், குணபாலன் ஆகிய எட்டு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை 03.12.2015 அன்று வழங்கியது. சதி என்ற குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்தது. 19.09.2009 வேலை நீக்க உத்தரவு கிடைத்து, அதனால் கோபமடைந்து சதி நடந்தது என்பதை, நீதிமன்றம் நிராகரித்தது. வழக்குச் சங்கிலியின் மூன்று கண்ணிகளில் இரண்டு கண்ணிகள் அறுந்து விழுந்ததாக செஷன்ஸ் நீதி மன்றம் ஒப்புக்கொண்ட பிறகும், விட்டேனா பார் என 8 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இதே நீதிபதி, தொழிலாளர்களின் வேலை நீக்க வழக்கை, வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த காலத்தில் தொழிலாளர் தரப்பு ஆஜராகவில்லை என்று காரணம் சொல்லி, வழக்குகளை தள்ளுபடி செய்ததும் நடந்தது. தோழர் குமாரசாமியின் மீது வழக்கிருப்பதால் அவர் குற்றவியல் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆஜராகக் கூடாது என நியாயம் பேசுவார்கள். ஆனால், இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி, வேலை நீக்க வழக்கில் தான் நடத்த மாட்டேன் என ஒதுங்கிக் கொள்ளாமல் தானே நடத்தி, வழக்கறிஞர் வேலை நிறுத்தக் காலத்தில் தள்ளுபடி செய்வார். மூலதனத்திற்கு ஒரு நியாயம், கூலியுழைப்புக்கு ஒரு நியாயம் என்று இதனை நாம் சொன்னால், உடனே நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்லிவிடுவார்களோ எனக் கவலைப்பட வேண்டியுள்ளது.
இந்த காலகட்டத்தில், கெட்ட வார்த்தை சொல்லி திட்டியதாக 25 தொழிலாளர்கள் மீது 6 வழக்குகள் நடந்தனன. இதில் நான்கு பேர் பெண்கள். 6 வழக்குகளும் தள்ளுபடியாயின. அத்துமீறி நுழைந்ததாக போடப்பட்ட 5 வழக்குகளில் 30 பேர் இழுத்தடிக்கப்பட்டனர். 5 வழக்குகளும் முடித்துக் கொள்ளப்பட்டன. 14 பேர் மீதான அவதூறு வழக்கு திரும்பப் பெறப்பட்டது. 5 பேர் மீதான கொலை முயற்சி வழக்கு விடுதலையில் முடிந்தது. 10 பேர் மீதான சாலை மறியல் வழக்கு விடுதலையில் முடிந்தது. உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தை யொட்டி 46 ஆண்கள் 17 பெண்கள் மீது குற்றவியல் வழக்கு போடப்பட்டது. 63 பேரும் விடுதலையாயினர். 6 பேர் மீது சுமத்தப்பட்டுள்ள ஒரு கொலை முயற்சி வழக்கில் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. சாலை மறியல் வழக்கு 15 பேருக்கு எதிராக நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளில் 40 நாட்கள், 5 நாட்கள், 15 நாட்கள், 8 நாட்கள், 40 நாட்கள், 40 நாட்கள், 60 நாட்கள் என தோழர்கள் சிறையில் இருந்துள்ளனர். 8 பெண் தோழர்கள் சிறை வாசத்தை அனுபவித்துள்ளனர். கொலை மற்றும் சதி வழக்கில் ஏகப்பெரும்பான்மையினர் 90 முதல் 120 நாட்கள் வரை சிறையில் இருந்தனர்.
இந்த வழக்குகள் எவையும் தொழிலாளர் மன உறுதியை உடைக்கவில்லை. இந்த வழக்குகளுக்காக தொழிலாளர்கள் ரூ.10  லட்சத்திற்கும் மேல் செலவழித்திருக்கிறார்கள். இந்த பத்தாண்டுகளில் பல பத்து லட்சங்களை திரட்டினார்கள். சில பல லட்சங்களை வேறு வேறு போராட்டங்களுக்கு இயக்கத்திற்கு நன்கொடையாக தந்தார்கள். இதே கால கட்டத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை ஒருமைப்பாடு நிதி தலா ரூ.5000 தந்தனர். டிசம்பர் 3 அன்று இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பின்னணியில் டிசம்பர் 5 அன்று ஆட்சியாளர்கள் அலட்சியத்தால் இயற்கையின் செயல்களால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் இதர மாவட்ட மக்களுக்கு ரூ.5 லட்சம் நன்கொடை தந்தனர். தங்களைப் போன்ற மாருதி தொழிலாளர்கள் இயக்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து ரூ.20 லட்சம் வரை நன்கொடை கிடைப்பதற்கான இயக்கப்போக்கை கருத்தரங்கம் நடத்தி நன்கொடை தந்து பிரிக்கால் தொழிலாளர்களே துவக்கி வைத்தனர்.
8 தொழிலாளர்கள் சிறைக்கு சென்ற பிறகு அவர்களது குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ.10,000 ஒருமைப்பாடு நிதி தரப்பட்டது. சில அவசரச் செலவுகள் பார்த்துக் கொள்ளப்பட்டது. சிறையில் இருப்பவர்களுக்கு இதுவரையில் ரூ.4 லட்சத்திற்கும் மேல் செலவழிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரம், வழக்கு செலவு, ஒருமைப்பாடு நிதி என ரூ.27 லட்சம் செலவாகியுள்ளது. நாடெங்கும் ஒருமைப்பாடு இயக்கம் நடத்தப்பட்டுள்ளது. Free Pricol 8,  பிரிக்கால் 8 பேரை விடுதலை செய்க என்ற ஸ்டிக்கர்க ளும் பிரசுரங்களும் தமிழகமெங்கும் வெளி யிடப்பட்டன. இந்தியில் தெலுங்கில் வங்க மொழியில் ஆங்கிலத்தில் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. நானும் தோழர் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் பெங்களூருவில் நடந்த ஒருமைப்பாடு கருத்தரங்கத்தில் கலந்து கொண்டோம்.  Free Pricol 8  பிரசுரத்தை இககமா மாநிலச் செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன் வெளியிட்டார். இககவின் தோழர் பெரியசாமி பெற்றுக் கொண்டார். அனைத்து மய்யத் தொழிற்சங்கங்களும் அகில இந்திய மக்கள் மேடையும் கண்டனம் முழங்கினார்கள். இடதுசாரி கட்சிகள் தோழர் குசேலர் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஹுண்டாய், எல்எம்டபுள்யு, கேஎஸ்பி பம்ப்ஸ், கோஆப்டெக்ஸ், நுகர்பொருள் வாணிப கழகம், எம்ஆர்எஃப், முருகப்பா குரூப், லேலண்ட், அய்டிசி மற்றும் ஏஅய்சிசிடியு தலைமையிலான பல்வேறு சங்கத்தினர் ஒருமைப்பாட்டு நிதி வழங்கினர். Free Pricol க 8  பதாகைகளில் ஆயிரமாயிரமாய் கையெழுத்திட்டனர்.
இந்தப் பின்னணியில் இரட்டை ஆயுள் தண்டனைக்கு எதிரான குற்றவியல் மேல் முறையீடு கிரிமினல் அப்பீல் 83, 84, 85/2016 மற்றும் 19 பேர் விடுதலைக்கு எதிரான கிரிமினல் அப்பீல் 95/2016 சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் நாகமுத்து மற்றும் ஆதிநாதன் அமர்வம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு 09.12.2017 மற்றும் 12 - 15 தேதிகளில் விசாரிக்கப்பட்டது. 9ஆம் தேதி தோழர் குமாரசாமி அய்தராபாத் சென்றிருந்தார். நம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அசோக்குமார், நமது வழக்கறிஞர்கள் ரமேஷ், பாரதி, சுரேஷ், அதியமான், சங்கர் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
முதல் நாளே நீதிபதிகள் வழக்கில் சார்ஜ் ஷீட் சரியாக போடப்படவில்லை என்று சொல்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புலன் விசாரணை அதிகாரி மற்றும் ஸ்பெஷல் பப்ளிக் பிராசிக்யூட்டரை வரச் சொல்லியிருந்தார்கள். 12ஆம் தேதி சென்னையில் புயல் வீசியது. நீதிமன்றத்திலும் புயல் வீசியது. நானும் தோழர்கள் பாலசுப்பிரமணியம். ஜானகிராமன். கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தோம். 
புயலால் காவல் கண்காணிப்பாளர் விமானம் தரையிறங்க முடியவில்லை. கீழமை நீதிமன்ற பிராசிக்யூட்டர் மற்றும் புலன் விசாரணை அதிகாரி வந்திருந்தனர். நீதிபதிகள், நிர்வாகத்துக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு.இளங்கோ, பப்ளிக் பிராசிக்யூட்டர் ஆகியோரிடம், சார்ஜ் ஷீட்டில் உள்ள எட்டு சார்ஜ்களைப் படித்துக் காட்டச் சொல்லி, அவை சரியாக சொல்லப்பட்டுள்ளனவா எனக் கேட்டனர்.
1 முதல் 9 எதிரிகள் ஒரு சதியிலும் 10 முதல் 27 எதிரிகள் வேறு ஒரு சதியிலும் ஈடுபட்டது போல் தெரிகிறதே எனவும், குற்றமய அத்துமீறல் தவிர மற்ற கொலை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களும் சரியாக எழுதப்படவில்லையே எனவும் கேட்டனர். அந்த வழக்கறிஞர்கள், சங்கடத்துடன் நீதிபதிகள் சொல்வது சரிதான் என ஒப்புக்கொண்டனர். அப்படியானால் மொத்த வழக்கையும் திரும்ப கீழமை நீதிமன்றத்துக்கு அனுப்பி சரியாக சார்ஜ்ஷீட் வரைந்து நடத்த அனுப்ப வேண்டும் என்றார்கள்.
பிறகு, நம் வழக்கறிஞரிடம், விடுதலை பெற்றவர்கள், தண்டனை பெற்றவர்கள் என்ற 27 பேரின் வழக்கையும் கீழ் நீதிமன்றத்திற்கு அனுப்பலாமா அல்லது, சார்ஜ்ஷீட் தவறாக வரையப்பட்டாலும் பரவாயில்லை, சாட்சியம் அடிப்படையில் வாதாடுகிறோம் என நம் தரப்பில் எழுத்து மூல பதிவு தர முடியுமா எனக் கேட்டனர். இந்த நேரத்தில், நிர்வாகத் தரப்பினர், குமாரசாமி தன் விடுதலையைக் காப்பாற்றிக் கொள்கிறாரா அல்லது தண்டனை பெற்றவர்களுக்கு மேலான ஒரு வாய்ப்பு உருவாக்கப் போகிறாரா எனப் பார்ப்போம் என பார் அசோசியேஷனில் பேசிக் கொண்டதாக பரபரப்பாகச் சொல்லப்பட்டது.
தோழர் எஸ்கே உள்ளிட்ட விடுதலையான 19 பேரும், தண்டிக்கப்பட்ட 8 பேருக்கு மேலான வாய்ப்பு தர வழக்கு கீழமை நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு விசாரிக்கப்படட்டும் எனத் தெரிவித்தனர். நமது முடிவு நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள் விசாரித்ததற்கு, அரசு, செஷன்ஸ் வழக்கு 75/2011ல் விடுதலை வழங்கி உள்ள பகுதிக்கு எதிராக மேல் முறையீடு செய்யவில்லை என்றும், இது மேல் முறையீடு செய்ய தகுதியான வழக்கல்ல என்று அரசாணை போட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட 8 பேரும், சதி குற்றச்சாட்டில் செஷன்ஸ் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகத் தரப்பு அதற்கெதிராக மேல்முறையீடு செய்துள்ளதா என விசாரித்தனர். நிர்வாகத் தரப்பு இல்லை எனப் பதில் சொன்னார்கள். தண்டனை வழங்கப்பட்ட 8 பேர் சதி வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளதால், இனி கீழமை நீதிமன்றத்திற்கு திரும்பவும் வழக்கை நடத்த அனுப்ப முடியாது என நீதிபதிகள் சொல்லி விட்டார்கள்.
அடுத்த நாள் கண்காணிப்பாளரும் வந்து விட்டார். அரசுத் தரப்பு வழக்கறிஞரும் புலன் விசாரணை அதிகாரியும், சார்ஜ்ஷீட் வரைவதில் இருந்து, சாட்சியங்கள் நிறுத்துவது வரை பொறுப்பற்ற முறையில் நடந்துள்ளதாக நீதிபதிகள் சொன்னார்கள். அரசு தரப்பு வழக்கு நிற் காது என்பதற்கான காரணங்களை வரிசையாய்ப் பட்டியல் இட்டார்கள். கூடவே நம் தரப்பு வழக்கறிஞர்களைக் கடுமையாக விமர்சித்தனர். இறுதியில் 15.12.2016 அன்று, தீர்ப்பு பிறகு வழங்கப்படும் எனச் சொல்லி, வழக்கு விசாரணையை முடித்தனர். 19.01.2017 மதியம் 2.15 மணி அளவில், 6 பேரை விடுதலை செய்து தோழர்கள் மணிவண்ணன் மற்றும் ராமமூர்த்திக்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினர்.
இந்த வழக்கை ஒவ்வொரு கட்டத்திலும் கவனித்துக் கொண்டிருப்பதாலும், தோழர் எஸ்கே உடன் தயாரிப்புக்கள் செய்ததாலும், பல வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதிலிருந்தும், 2 பேர் தண்டனைக்கெதிராக, உச்சநீதிமன்றம் சென்று வெற்றி பெற முடியும் என எனக்குத் தோன்றுகிறது.
அதற்கான காரணங்கள்
  • 19.01.2017 அன்று வழங்கிய தீர்ப்பில், சார்ஜ்ஷீட் சரியாக வரையப்படவில்லை, இரண்டு சதிகள் இருந்ததாக சார்ஜ் ஷீட்டில் இருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அப்படி இருக்க, எப்படி தண்டனை எனக் கேள்வி எழுகிறது. இது நமக்குச் சாதகமானது.
  • குருசாமி என்கிற என் பெயர், புகாரிலும் முதல் தகவல் அறிக்கையிலும் வேறுவேறு இடங்களில் தவறாகச் செருகப்பட்டுள்ளது, புகாரின் செராக்ஸ் நகல்போல் முதல் தகவல் அறிக்கை இருக்க வேண்டும். பிளாண்ட் 3 தொழிற்சங்க ஊழியர்  என்பதால் என் பெயர் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் சொல்லி உள்ளனர். குணபாலன் பெயரும் புகாரில் முதல் தகவல் அறிக்கையில் இல்லாமல் பிறகு சேர்க்கப்பட்டுள்ளது என்றும், அவர் அப்போது அங்கு இல்லை என்ற அவர் சாட்சியத்தை நிராகரிக்கக் காரணம் ஏதும்  இல்லை என்றும் சொல்லி உள்ளார்கள். குருசாமி, குணபாலன் என்ற இருவர் தொடர்பாக, அரசு தரப்பு முதல் சாட்சியை, நீதிமன்றம் நம்ப மறுத்துள்ளது.
  • முதல் தகவல் அறிக்கை, அது தயாரானதாகச் சொல்லப்படும் 21.09.2009 மாலை 6.30க்குத் தயாராகவில்லை எனவும், அது ஜோடிக்கப்பட்டதெனவும், நீதிமன்றம் சொல்கிறது.
  • புலன் விசாரணை அதிகாரி சம்பவ நேரம் 11.40க்கு சம்பவ இடம் அருகில் இருந்துள்ளார், வெளியில் போலீஸ் பந்தோபஸ்து உள்ளது, காவல் நிலையம் 10 நிமிட தூரத்தில் உள்ளது, ஏராளமானவர்கள் பணியாற்றும் இடத்தில் கலவரம் நடந்துள்ளது எனும்போது, முதல் தகவல் அறிக்கை தாமதமாகத் தாக்கல் செய்யப்பட ஏற்கத்தக்க காரணங்கள் இல்லை என்றும், முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் ஆக 21ணீ மணி நேரம் தாமதமானதற்கும் ஏற்கத்தக்க காரணம் இல்லை என்றும், முதல் தகவல் முன்னதாகவே வந்து, அது மறைக்கப்பட்டுள்ளதாக தான் கருதுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • முஅரசு தரப்பில் 1 முதல் 6 வரை கண்ணுற்ற காயமுற்ற சாட்சிகள் என்றும் அவர்களில், 2, 3, 4, 5, 6 சாட்சியங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தான் ஏற்கவில்லை எனத் தெரிவித்த நீதிமன்றம், முதல் சாட்சியை முழுமையாக ஏற்கவில்லை என்றும், ஒரு பகுதி மட்டுமே ஏற்பதாகவும் சொல்லி உள்ளது.
  • இறந்தவர் தலையில் இரண்டு காயங்கள்  மட்டுமே இருந்ததால், மணிவண்ணன்,  ராமமூர்த்தி என்ற முதல் இரண்டு பேர் மட்டும் குற்றம் செய்ததாகவும், மீதமுள்ள ராஜேந்திரன், வேல்முருகன், சரவணக்குமார், குணபாலன், சம்பத்குமார், சிவக்குமார் ஆகியோரை விடுதலை செய்வதாகவும் தீர்ப்பில் சொல்லப் பட்டுள்ளது.
7 பேருக்கு எதிரான முதல் சாட்சியின் சாட்சியத்தை நிராகரித்த நீதிமன்றம், 2 பேர் மீது மட்டுமான அவரது சாட்சியத்தை ஏற்றது, ஏற்புடையதல்ல. சதி ஏதும் இல்லை என்றான பிறகு, சதிப்படி, தலைவர்கள் சொன்னபடி அடிப்பதாகச் சொல்லிக் கொண்டே மணிவண்ணன், ராமமூர்த்தி தாக்கினார்கள் என்ற முதல் சாட்சியின் சாட்சியம், நிராகரிக்கப்பட்டிருக்கப்பட வேண்டும். சம்பவ நேர இடம் தொடர்பான சிசிடிவி பதிவு இருக்கிறது என அரசு சாட்சிகள், அரசின் நிலை திட்டவட்டமாக இருந்தபோது, எதிரிகள் நடமாட்டம் பதிவு ஆகியிருப்பதாகச் சொன்ன பிறகு, அப்படி எந்த சிசிடிவி பதிவும் இல்லாததால், மணிவண்ணன் ராமமூர்த்தியையும் நீதிமன்றம் விடுதலை செய்திருக்க வேண்டும். நிச்சயமாய், நாம், மக்கள் மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும், மணிவண்ணன், ராமமூர்த்திக்கு நீதி கேட்போம்.
பிரிக்கால் தொழிற்சங்கத்தின் பொதுப் பேரவை 19.02.2017 அன்று கூடுகிறது. அன்று உச்சநீதிமன்ற வழக்குக்கு நிதி திரட்ட, நீதி கேட்டு இயக்கம் நடத்த முடிவு செய்வோம். 27 பேர் மீது, சதி செய்து கொலை செய்ததாக முதலாளித்துவ அரசு குற்றம் சுமத்தியது. அதில் 25 பேர் விடுதலையாகிவிட்டனர். பாட்டாளி வர்க்கம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. மீதம் உள்ள 2 பேர் விஷயத்திலும் சட்டபூர்வமாக கவனத்துடன் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. மாருதி தொழிலாளர்கள் 147 பேர் மீதான கொலை வழக்கிலும் தீர்ப்பு விரைவில் வர உள்ளது.
இது போன்ற ஒரு பின்னணியில், பிரிக்கால் நிர்வாகம் திரும்பவும் தொழிலாளர்களை வம்புக்கு இழுத்துள்ளது; சிறுபான்மை சங்கத்தோடு பேசுவேன் என்று அறிவித்துள்ளது; இது சங்க அங்கீகாரத்தைக் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாக்குகிறது.
பிரிக்கால் தொழிலாளர்கள், 80க்கும் மேற் பட்டவர்கள் வேலை நீக்க வழக்குகள், சம்பள பாக்கி வழக்கு, இருவர் ஆயுள் தண்டனைக்கு எதிரான மேல் முறையீடு என்ற பணிகளோடு, சங்க அங்கீகாரத்தைத் தக்கவைப்பதிலும், அடுத்த ஒப்பந்தம் போடுவதிலும், முன் உதாரணமாகச் செயல்பட வேண்டி உள்ளது. புரட்சிகர கட்சியின்,  புரட்சிகர தொழிற்சங்கத்தின் தலைமையில், தடைகளை எல்லாம் தகர்த்து பிரிக்கால் தொழிலாளர்கள் வெல்வார்கள்; சமூக மாற்றத்துக்கான போரில் முன்னணிப் பங்காற்றுவார்கள் என்ற நம்பிக்கை, எனக்குள்ளது.

Search