காட்டை அழிக்கிற ஜக்கி வாசுதேவும்
நாட்டை அழிக்கிற நரேந்திர மோடியும்
நாட்டை அழிக்கிற நரேந்திர மோடியும்
ஓய்வு எதுவும் இல்லாமல் மக்களுக்காக கழுதைபோல் கடுமையாக உழைப்பதாகவும் தான் இந்திய மக்களின் ‘சேவகன்’ என்றும் உத்தரபிரதேசத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சொன்னார். 2016ன் இரண்டாவது பாதியில் இருந்து 2017 பிப்ரவரி இறுதி வரை தமிழக மக்கள் கடுமையான துன்பங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். மாநில அஇஅதிமுக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளோடு 2016 நவம்பரில் மத்திய அரசின் பணமதிப்பகற்றும் பேரழிவு நடவடிக்கையும் சேர்ந்துகொண்டது. விவசாய நெருக்கடிக்கு
தீர்வு காணவோ, பணமதிப்பகற்றும் நடவடிக்கைகளின் தாக்குதல்களில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்கவோ, கடுமையாக உழைக்கிற, ‘சேவகன்’ மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அய்ந்தே நாட்களில் ஒன்பது விவசாயிகள் உயிரிழந்தபோதுகூட தமிழ்நாடு பக்கம் எட்டிப்பார்க்காதவர், ஜெயலலிதா மரணமுற்ற பின்னணியில் சசிகலாவின் தலையில் கைவைத்து, பன்னீர்செல்வத்தை நெஞ்சோடு அணைத்து ஆறுதல் சொல்ல வந்தவர், அதன் பிறகு ஆதியோகி சிலையை திறந்து வைக்க தமிழ்நாட்டுக்கு வந்தார்.நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் அமலாகும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வெளியான பிப்ரவரி 15 முதல் நெடுவாசல் விவசாயிகள் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளியங்கிரி மலைக்கு மோடி வந்த பிப்ரவரி 24 அன்று கூட அங்கு போராட்டம் நடந்துகொண்டுதான் இருந்தது. டில்லியில் இருந்து 2500 மைல்கள் கடந்து கோவை வரை வந்த ‘சேவகன்’ கோவையில் இருந்து 250 மைல்கள் தொலைவில் இருக்கும் நெடுவாசலுக்குச் சென்று போராட்டத்தில் இருக்கும் விவசாயிகளைச் சந்திக்கவில்லை. அவர்கள் வாக்களித்துத்தான் மோடி பிரதமர் ஆனார். ஜக்கி வாசுதேவ் வாக்களித்ததால் மட்டுமல்ல. மோடி இந்திய சாமான்ய மக்களின் ‘சேவகன்’ அல்ல, கார்ப்பரேட் நிறுவனங்களின் சேவகன் என்பது அவரது கோவை வருகையிலும் நெடுவாசலுக்கு வராமல் போனதிலும் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் கடுமையாக உழைப்பதாகச் சொல்லிக் கொள்பவர், இருக்கிற வேலைகளை விட்டுவிட்டு கார்ப்பரேட் மோசடி சாமியார் நடத்தும் மோசடி நிகழ்ச்சிக்கு வரவேண்டிய அவசியம் என்ன வந்தது? சுற்றுச்சூழலை நாசமாக்கி, காட்டு விலங்குகளின் சாதாரண வாழ்க்கையைக் கூட நாசமாக்கி, நாட்டின் சட்டங்களை மதிக்காமல், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல், குற்றங்களில் ஈடுபடுவதே பணி என்று இருக்கும் மோசடி சாமியார் மீது பிரதமர் மோடிக்கு மட்டும் நம்பிக்கை எப்படி ஏற்படுகிறது? கார்ப்பரேட் கொள்ளையும் காவி கபட நாடகமும் சேர்த்து செய்த கலவைதான் ஜக்கி. மோடியும் இதே கலவைதான். மோடி வெள்ளியங்கிரி மலைக்கு வந்ததற்குப் பின்னால் இருக்கும் காரணம் ஆன்மீகத் தேடலோ, யோகக் கலையோ அல்ல. கார்ப்பரேட் மற்றும் காவி கலவைதான்.
கார்ப்பரேட் மற்றும் காவிக் கலவை தமிழ்நாட்டில் வேகமாக வளர கடுமையாக முயற்சிகள் எடுக்கிறது. துன்பங்களுக்கு எதிராக போராட்ட உணர்வு எழுந்து விடாமல் மழுங்கடிக்கும் வேலைகளை மதம், ஆன்மீகம் என்ற போர்வையில் செய்ய வேண்டியிருக்கிறது. சிவனை வழிபடு வதாலோ, யோகா செய்வதாலோ நிலத்தடி நீரை, விவசாயத்தை, விவசாயிகளை பாதுகாக்க முடியாது. கோவை காவல்துறையை சில நாட்கள் கட்டுக்குள் வைத்து ருசி கண்டு விட்ட காவிக் கூட்டம், தனது காவி வலையை சற்று விரிக்கப் பார்க்கிறது.
அது அவ்வளவு எளிதல்ல, மோடி அவர்களே. பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டக்காரர்களை பயங்கரவாதிகள் என்று சொன்னபோது, நாங்கள் அப்படியே இருந்துவிட்டுப் போகிறோம், நீங்கள் தமிழ்நாட்டுக்குள் உங்கள் அழிவுத் திட்டங்களை கொண்டு வராதீர்கள் என்று பொறுமையாக பதில் சொல்லியிருக்கிறார்கள் தமிழக மக்கள். ஆன்மிகம் என்ற பெயரில் மதரீதியான நிகழ்ச்சியில், மோசடி பேர்வழி ஒருவர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்று தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் மக்கள் உணர்வுகளை மதிக்காமல் கார்ப்பரேட் உணர்வுகளை மட்டுமே மதித்து கலந்துகொண்ட மோடிக்கும் இந்தப் பதில் பொருந்தும்.