உரிமை பேரணியின் செய்தி
உரிமைகளுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்!
இகக மாலெ பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் எழுதிய கட்டுரையில் இருந்து
இககமாலெயின் பீகார் மாநிலக் கமிட்டி ஒரு மாத காலமாக நடத்திய உரிமைகளுக்கான இயக்கம் பிப்ரவரி 19 அன்று பாட்னாவில் நடந்த பேரணியில் நிறைவுற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் வறிய மக்களின்
கல்வி, வேலை வாய்ப்பு, நிலம் என்ற மூன்று முக்கியமான கோரிக்கைகளை இந்த இயக்கம் முன்னிறுத்தியது. கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் மோடி அரசால் மக்கள் மீது திணிக்கப்பட்ட பணமதிப்பகற்றும் பேரழிவுக்கு எதிராகவும் நிதிஷ் குமார் தலைமையிலான, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - அய்க்கிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகளின் மகா கூட்டணி ஆட்சிக்கு 2015 நவம்பரில் மக்கள் அளித்த வாக்குகளுக்கு துரோகம் இழைக்கப்படுவதற்கு எதிராகவும் மக்கள் மத்தியில் இருந்த சீற்றத்தின் குரலாக இயக்கம் அமைந்தது. முக்கியமான அரசியல் கூட்டங்கள் நடத்தும் இடமான காந்தி மைதானத்தை அரசு நிகழ்ச்சிகளுக்காக நிதிஷ் குமார் அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டுவிட்ட நிலையில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள விலங்குகள் மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இககமாலெ பேரணியை நடத்த வேண்டியிருந்தது. இதனால் பேரணியில் கலந்துகொள்ள வந்திருந்தவர்கள் நகரத்துக்குள் இருக்கும் ரயில் நிலையத்தில் இருந்து பேரணி நடந்த இடத்துக்கு வர வெகுதூரம் நடக்க நேரிட்டது. இதுபோன்ற பிரச்சனைகளைக் கடந்து நடந்த பேரணி சமீபத்தில் பீகாரில் நடந்த பேரணிகளில் மிகப்பெரிய பேரணியாக அமைந்தது.மாநிலத்தில் போராடும் எதிர்க்கட்சியாக இகக மாலெ இருக்கிறது என்பதை பிரதிபலிக்கும் விதமாக பேரணியில் பரந்த அளவிலான வெகுமக்கள் பங்கேற்பை காண முடிந்தது. பீகார் சமூகத்திலும் அரசியலிலும் நடந்து வரும் புதிய மாற்றத்தையும் இந்த பங்கேற்பு பிரதிபலித்தது. நிலப்பிரபுத்துவ - குற்ற கும்பல் வன்முறை சம்பவம் ஒவ்வொன்றிலும் இகக மாலெ மட்டும்தான் நீதிக்காக போராடி வருகிறது. நீதிக்கான வேட்கை பேரணியில் சக்திவாய்ந்த விதத்தில் எதிரொலித்தது. இககமாலெயின் தோழர்கள் மகேஷ் ராம், ராம்பிரவேஷ் ராம், கரோ பாஸ்வான் மற்றும் இககமாவின் ராஜாராம் பாஸ்வான், அனிதா தேவி ஆகிய 5 தலித் கம்யூனிஸ்டுகள் சமீபத்தில் பேகுசராயில் வெவ்வேறு சம்பவங்களில் படுகொலை செய்யப்பட்டனர். 2016, டிசம்பர் 25 அன்று சஹர்சாவின் புரிக் கிராமத்தில் சனோ ராம், வகீல் ராம் என்ற இரண்டு தலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஜனவரி 1 அன்று அராரியாவின் ரஹாரியா கிராமத்தில் இககமாலெ செயல்வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஹாஜிபூரின் அம்பேத்கர் விடுதியில் திகா குமாரி படுகொலை செய்யப்பட்டது மாநிலத்தையே உலுக்கியது. படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள், கிராமத்து மக்கள் பெரும் எண்ணிக்கையில் பேரணியில் கலந்துகொண்டு நீதி கேட்டு குரல் எழுப்பினர்.
பீகாருக்குள்ளும் அதற்கப்பாலும் நீதிக்காகவும் ஜனநாயகத்துக்காவும் நடந்து கொண்டிருக்கும் பல்வேறு போராட்டங்களுடனான துடிப்பான ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வையும் குறிப்பதாக பேரணி அமைந்தது. 2016 ஜனவரியில் நிறுவனரீதியாக படுகொலை செய்யப்பட்ட ரோஹித் வேமுலாவின் வீரமிக்க தாயான ராதிகா வேமுலா பேரணிக்கு நேரில் வர முடியவில்லை. எபிவிபி குண்டர்களால் தாக்கப்பட்ட பிறகு காணாமல் போன ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர் நஜீப் அகமதின் தாயார் பாத்திமா நபீஸ் தனது மகனை மீட்கக் கோரி நிகழ்த்திய உரை பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு உணர்வூட்டுவதாக இருந்தது. தனது மகளுக்கு நீதி கேட்கும் திகாவின் தாயார் குசுமி தேவியின் போராட்டத்துக்கும் பேரணி ஆதரவு தெரிவித்தது. 2013ல் பாட்னாவில் மோடியின் பேரணி நடந்தபோது பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பால் துன்புறுத்தலுக்கு உள்ளான ஆசிரியர் அப்தாப் ஆலம், அந்த இரண்டு தாய்களின் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார். பீகாரில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடும் இன்சாப் மன்ச் உருவாக அப்தாப் ஆலம் காரணமாக இருந்தார்.
பணமதிப்பகற்றும் நடவடிக்கை தொடுத்துள்ள கடுமையான தாக்குதலால் ஏற்பட்ட வேதனையின், சீற்றத்தின் கூட்டுக் குரலாக பேரணி அமைந்தது. அய்ம்பது நாட்கள் வேதனைக்குப் பிறகு நல்லது நடக்கும் என்று பிரதமர் சொன்னார்; ஆனால் நூறு நாட்கள் கடந்த பிறகும் அந்த வேதனைகள் குறையவில்லை. வேலை இழந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள பீகாரின் இடம் பெயரும் தொழிலாளர்கள், விதைப்பு காலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தினக்கூலிகள், சாலையோர வியாபாரிகள், மளிகைக் கடைக்காரர்கள் வருமானத்தை வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு பணமதிப்பகற்றும் நடவடிக்கை ஒரு பொருளாதார பேரழிவாகவே இருக்கிறது. இந்த பொருளாதார பேரழிவுடன் சேர்ந்து, பீகார் மக்கள் இரட்டை அரசியல் துரோகத்துக்கு ஆளாகியுள்ளனர். கருப்புப் பணத்தை ஒழிப்பது, நல்ல நாட்களை கொண்டு வருவது என்ற வாக்குறுதிகளில் மத்திய மோடி அரசாங்கம் துரோகம் இழைத்துள்ளது என்றால், பீகாரின் நலன்களைப் பாதுகாப்பதாகச் சொல்லி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்த நிதிஷ் குமார், பணமதிப்பகற்றும் பிரச்சனையில் பாஜகவை ஆதரித்து மக்களை முதுகில் குத்தியுள்ளார்.
நிதிஷ் அரசாங்கத்தின் துரோகம் பணமதிப்பகற்றும் நடவடிக்கையோடு நின்றுவிடவில்லை. நல்லாட்சி, நீதியுடனான வளர்ச்சி என்ற நிதிஷ் குமாரின் முழக்கங்கள், மதுவிலக்கு தொடர்பான சுயதம்பட்டப் பிரச்சாரமாக சுருங்கிப் போயுள்ளது. தனது முதல் இரண்டு ஆட்சி காலத்தில் மது அருந்துவதை ஊக்குவித்து, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது மது விற்பனை அரசுக்கு வருமானம் என்று நியாயப்படுத்திய நிதிஷ் இப்போது மதுவிலக்கு நாயகனாக தன்னைக் காட்டிக் கொள்கிறார். மக்களை மதுவுக்கு அடிமையாக்கியதற்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக, மது அருந்துபவர்களைத் தண்டிக்க கொடூரமான சட்டம் கொண்டு வந்துள்ளார். பீகார் சிறைகள் மது ஒழிப்பு நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளால் நிரம்பி வழிகின்றன. வறிய மக்களை துன்புறுத்த மது விலக்கு காவல்துறையினருக்கு ஒரு சாக்காக பயன்படுகிறது. மறுபுறம் சாராய மாஃபியாக்கள் அரசு ஆதரவுடன் வீடுகளுக்கே மதுபானங்களை கொண்டு சென்று விநியோகிக்கும் இணைஅமைப்பு ஒன்றை நடத்துகின்றனர்.
பணமதிப்பகற்றும் நடவடிக்கையில் தனக்கு கிடைத்த ஆதரவை திருப்பித் தர, மது விலக்கு மோடிக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. பீகாரில் நிதிஷ் - மோடியின் கூட்டு நடனம் ஒன்றை காண முடிகிறது. இந்த இரண்டு தலைவர்களிடமும் இறுமாப்பும் ஜனநாயகப் போராட்டங் களை, மக்கள் குறைகளை இழிபடுத்தும் பார்வையும் காண முடிகிறது. மதவெறி குற்றங்கள், சங் பரிவாரின் காலித்தனம் ஆகியவை பற்றி மோடி மவுனம் காப்பது போலவே, பீகார் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் நாளும் எதிர்கொள்ளும் சமூக ஒடுக்குமுறை மற்றும் வன்முறை பற்றி நிதிஷ் குமாரும் மவுனம் காக்கிறார்.
பாஜகவும் பீகார் ஊடக உலகின் ஒரு பிரிவினரும் பீகாரின் காட்டு ஆட்சி திரும்பி விட்டது என்று சொல்லும்போது, ராஷ்ட்ரிய ஜனதா தள அரசாங்கத்தின் கடைசி கட்டத்தில் காணப்பட்டதுபோல் கடத்தல் போன்ற பொருளாதாரக் குற்றங்கள் என்ற இடத்தில் சமூக ஒடுக்குமுறை, நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க வன்முறை, தீவிரமான காவல்துறை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மதவெறி வன்முறையும் கல்வியிலும் ஆளெடுப்பிலும் ஊழலும் திட்டமிட்ட விதத்தில் நடக்கின்றன.
சமூக நீதி பற்றி உதட்டளவில் பேசும், சமூக மாற்றம் பற்றிய போட்டி முன்மாதிரிகளை முன்னிறுத்தும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் அய்க்கிய ஜனதா தளமும் நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு மகிழ்ச்சியூட்டுவதில் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பறிப்பதில் ஒன்றையொன்று விஞ்சுகின்றன. லாலு ஆட்சியில் ரன்வீர் சேனா கிராமப்புற வறிய மக்களை கொன்று குவித்தது. நிதிஷ் குமார் ஆட்சியில் ரன்வீர் சேனாவுக்கு இருந்த அரசியல் ஆதரவு பற்றி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆணையம் கலைக்கப்பட்டது. கொலைகாரர்கள் ஒட்டுமொத்தமாக விடுதலை செய்யப்பட்டார்கள். ராம் விலாஸ் பாஸ்வான், ஜிதன்ராம் மாஜி போன்ற பீகாரின் தலித் தலைவர்கள் தலித்துகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. நிலப்பிரபுத்துவ குற்றகும்பல் சக்திகள், குறிப்பாக, நிலம், மணல், சாராய மாஃபியாக்கள், ஒப்பந்தக்காரர்கள் வறிய மக்களை அவர்கள் இடத்தில் இருந்து வெளியேற்றி அவர்கள் இடத்தை ஆக்கிரமிக்கும் துணிச்சல் பெற்றுள்ளார்கள். மறுபுறம், சமவேலைக்கு சம ஊதியம் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் அரசாங்கம் இளைஞர்களை மிகக் குறைவான சம்பளத்தில் வேலைக்கு அமர்த்துகிறது.
சமூக நீதியும் அது தொடர்பான அரசின் பொறுப்பும் திட்டமிட்ட விதத்தில் காலில் போட்டு மிதிக்கப்படும் இந்தச் சூழலில், உரிமை பேரணி சக்திவாய்ந்த எதிர்க்கட்சி குரலை எழுப்பியது மட்டுமின்றி, மிகவும் முக்கியமாக, சமூக நீதி மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றின் உயர்ந்த தளத்திலான புதிய அரசியல் பற்றிய பார்வையை முன்வைத்துள்ளது. உத்தரவாதமான கல்வி, வேலை வாய்ப்பு, நில உரிமைகள் ஆகியவற்றை கருவாகக் கொண்ட சமூக மற்றும் சட்டரீதியான நீதிக்கான போராட்டம், நீண்ட காலமாக ஒடுக்குமுறைக்கு ஆளான அனைவருக்கும் ஜனநாயகம், வளர்ச்சி, கவுரவம் என்ற வேட்கைக்கு புதிய உந்துதல் தரும். உத்வேகமூட்டும் உரிமைப் பேரணியின் வெல்லற்கரிய உணர்வும் செய்தியும் கவுரவமான வாழ்க்கைக்கான எல்லா அடிப்படை உரிமைகளையும் கோரும் சக்திவாய்ந்த மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும். பீகார் சட்டமன்றத்தின் மூன்றாவது சக்தி என்ற விதத்தில், சட்டமன்றத்துக்குள் மக்களின் குரலாக தனது பாத்திரத்தை வலுப்படுத்திக் கொள்வதோடு, வளர்ந்து வருகிற சமூக மாற்றத்திலும் கொந்தளிப்பான அரசியல் சூழலிலும் துணிச்சலுடன் தலையிட்டு ஓர் அரசியல் மாற்றை கட்டியெழுப்புவது இகக மாலெயின் கடமையாகும்.