கடலில் கொட்டிய கச்சா எண்ணையும்
வாழ்வாதாரம் இழந்த மீனவர்களும்
வாழ்வாதாரம் இழந்த மீனவர்களும்
வித்யாசாகர்
ஏற்கனவே பல்வேறு வாழ்வாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிற தமிழக மக்களுக்கு, குறிப்பாக மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில், சனவரி 28 அன்று அதிகாலை இரண்டு கப்பல்கள் மோதியதால், சாலை போடும் தாருக்கு சற்று முந்தைய நிலையிலுள்ள பியூல் ஆயில் என்ற கச்சா எண்ணை கடலில் கொட்டியது.
வெளிநாட்டுப் பதிவு பெற்ற மேப்பிள் என்ற கப்பல், எண்ணூர் துறைமுகத்திற்குள் வந்து கொண்டிருந்த டான் காஞ்சிபுரம் என்ற எண்ணை ஏற்றி வந்த கப்பலின் பக்கவாட்டில் தன் தலையால் முட்டியதால் விபத்து ஏற்பட்டது. இது முழுமையாக எண்ணூர் துறைமுக நிர்வாக சீர்கேட்டினாலும், தனிமனித தவறுகளாலும் ஏற்பட்ட விபத்து. (ஜோ டி.குருஸ், தி இந்து).
டான் காஞ்சிபுரம் கப்பலின் எண்ணை டேங்க் விபத்தில் உடைந்ததில் சிறிதளவு கச்சா எண்ணை மட்டுமே கடலில் கொட்டியது. அதனால் சுற்றுப்புற சூழலுக்கு எந்தவித பாதிப்புமில்லை என அறிவிக்கப்பட்டது. இது துறைமுக அதிகாரிகள் கூறிய முழுப்பொய்.
விபத்து நடந்த மறுநாள், ஜனவரி 29 அன்று எண்ணூர், காசிமேடு தொடங்கி கடற்கரையோரம் கறுப்பு கச்சா எண்ணெய் மிதந்து வந்து கொண்டிருந்தது.
கடலோடி மீனவர்களின் வலைகள், கட்டுமரம், நாட்டுப்படகு போன்றவை கச்சா எண்ணெய்யால் பெரும் சேதம் அடைந்தன. ஆமைகளும் மீன்களும் செத்துக் கரை ஒதுங்கின.
அப்போது கூட உண்மையை முழுமையாக வெளியிடாத துறைமுக அதிகாரிகள் கடலில் 2 டன் எண்ணெய்தான் கலந்துள்ளது, அதை சுலபமாக அகற்றிவிடலாம் என்றனர். இதற்கு ஒரு படி மேலே போய் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒரு டன் எண்ணெய்தான் கடலில் கொட்டியிருக்கிறது. அதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கும், மீனவர்களுக்கும், மீன் வாங்கி சாப்பிடுபவர்களுக்கும் எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்று வாய் கூசாமல் பொய்யுரைத்தார்.
உண்மையைச் சொல்லி, பிரச்சனையின் ஆழத்தை அறிவித்து, இந்தச் சிக்கலில் கவனம் செலுத்தி உடனுக்குடன் நடவடிக்கை மூலம் எண்ணெய்க் கசிவு பரவாமல் இருக்க துரித நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
ஆனால், கடலோர காவல்படை அதிகாரி கிட்டத்தட்ட 35 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் எண்ணெய் படிமம் பரவியிருக்கிறது என்று அறிவித்ததற்குப் பின்புதான் இது ஒரு சிறிய விபத்தல்ல ஒரு பேரழிவு எனத் தெரிந்தது.
வடசென்னை மட்டுமின்றி, தெற்கே மாமல்லபுரம், கடலூர் வரையிலும் வடக்கே பழவேற்காடு வரையிலும் கடல் மாசுபட்டிருக்கிறது. இந்தப் பேரழிவால் பல கடல் வாழ் உயிரினங்கள் பெரும்பாதிப்பைச் சந்திக்கும் என ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
இது கடலோடி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. விபத்து நடந்த 12 நாட்களில் எண்ணெய்க் கசிவு முழுவதையும் அகற்றிவிட்டோம் என்று அரசாங்கம் அறிவித்தது. இதன் பிறகு மீனவ மக்களின் நிலையில் ஏதும் மாற்றம் இருக்கிறதா, எண்ணெய்க் கசிவு பாதிப்பு முற்றி லும் நீங்கிவிட்டதா என்று தெரிந்துகொள்ளவும் எண்ணெய் கொட்டியதற்குப் பிறகு, பகுதியின் மீனவர் வாழ்வில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி தெரிந்துகொள்ளவும் அகில இந்திய மக்கள் மேடையின் மாநில பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர் வித்யாசாகர், இககமாலெ மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஜவகர், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் பழனி ஆகியோர் ஜனவரி 21 அன்று எண்ணூர், எர்ணாவூர், பாரதி நகர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று மீனவ மக்களைச் சந்தித்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் தோழர்கள் உரையாடியபோது மீனவர்கள் சொன்ன விசயங் கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
காசிவிஸ்வநாதர் கோயில்குப்பம் (பாரதி நகர், எர்ணாவூர்) பகுதிக்கு நாங்கள் சென்ற போது சுமார் 25 பேர் வரை எண்ணெய்க் கசிவுகளை பிளாஸ்டிக் வாளிகள் மூலம் அகற்றிக் கொண்டிருந்தனர். மிகவும் சோர்வுற்ற நிலையில் மீனவர்கள் தங்கள் வலைகளை சரி செய்து கொண்டிருந்தனர். முருகன், ஜெயவேல் என்ற இரண்டு மீனவர்கள் பொதுவாக அப்பகுதியில் மீனவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் பற்றி சொன்னார்கள்.
எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த மீனவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எவையும் வழங்கப்படவில்லை. எண்ணெய் கொட்டியிருப்பதால் அந்தப் பகுதி கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில், மீனவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவை அகற்றுவதும் அவர்களுக்கு உடல்நல பாதிப்பை உருவாக்கக் கூடும்.
இந்தப் பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றன. கடற்கரையோரம் வைக்கப்பட்டிருந்த வலைகள் முழுவதும் எண்ணெய்க் கசிவால் நாசமாகிவிட்டன. கட்டுமரங்கள் முழுவதுமாக எண்ணெய்க் கசிவால் சேதமடைந்துவிட்டன. கடல் நீரில் எண்ணெய் படர்ந்திருப்பதால் நாட்டுப் படகைக் கூட கடலில் தள்ளுவது மிகவும் சிரமமாக உள்ளது. எண்ணெய் படர்ந்திருப்பதால் படகைத் தள்ளும்போதே வழுக்கி பலர் காயமடைந்துள்ளனர்.
எப்படியோ போய் மீன் பிடித்து வந்தாலும் அவற்றை வாங்குவோர் இல்லை. மிகக் குறைந்த விலைக்கே விற்க வேண்டியுள்ளது. முதலில் 15 நாட்களுக்கு மீன் பிடிக்கவே செல்ல முடியவில்லை. நாலைந்து பேர் சேர்ந்து நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்றால் குறைந்தது ரூ.4000 வரை (ஒருவருக்கு ரூ.500லிருந்து ரூ.800 வரை) வருமானம் கிடைக்கும்.
ஆனால் இப்போது மீன் வாங்க மக்கள் அஞ்சுகின்றனர். மீன் விலை சரிந்து விட்டது. இது வஞ்சிரம், காணாங்கெளுத்தி வகை மீன்கள் அதிகம் கிடைக்கக் கூடிய காலம். ஆனால் எண்ணெய் கொட்டியதற்கு முன் கிலோ ரூ.800 முதல் ரூ.900 வரை விற்ற வஞ்சிரம் மீன்களை இப்போது, ரூ.300, ரூ400க்குக் கூட விற்க முடியவில்லை. காணாங்கெளுத்தி மீன் விலையை கிலோ ரூ.200லிருந்து ரூ.100 ஆகக் குறைத்துத்தான் விற்க வேண்டியுள்ளது. டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் நன்றாக மீன் கிடைக்கக் கூடிய மாதங்கள். ஆனால் இந்த நேரத்தில் ஏற்பட்ட விபத்தால் மீனவர்களுக்கு பெருத்த நஷ்டம்.
கட்டுமர மீனவர் வாழ்வாதாரம் முழுவதையும் இழந்து விட்டனர். கட்டுமரத்தில் ஒரு குறுகிய தூரம் வரைதான் கடலில் செல்ல முடியும். எண்ணெய்க் கசிவு காரணமாக அந்த மாசு கலந்த நீரின் நாற்றத்தால் மீன்கள் ஆழ் கடலுக்குள் சென்று விட்டன. எனவே கட்டுமரத்தில் மீன் பிடிக்க இயலாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
மீனவர் ஒவ்வொருவரும் சுமார் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை வலைக்காக முதலீடு செய்துள்ளனர். கட்டுமரம் கட்ட ரூ.12,000 வரை தேவை. இந்த கட்டுமரங்கள் பெரும்பாலும் சேதமடைந்துவிட்டன. இந்த நிலையில் மற்ற மீனவர்களோடு நாட்டுப் படகில் சென்று பங்கிற்கு மீன் பிடிக்க வேண்டியுள்ளது. விபத்து நடந்து 15 நாட்களுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் எண்ணெய்க் கழிவு அள்ளும் பணியில் கூலி வேலை செய்திருக்கின்றனர். வலைக்காகவும், கட்டுமரங்களுக்க்ôகவும் வாங்கிய கடனைத் திருப்பித் தரமுடியாமல் சிக்கலில் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
சின்னக்குப்பம் மீனவர்களுக்கும் இதே நிலைதான். மீன் வரத்தின்றி, விலை கிடைக்காமல், கடன் தொல்லையுடன் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர். இந்தக் குப்பத்தில் மீன் வியாபாரம் செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தால் பாதிக்கப்பட்டிருப்பது மீனவச் சமூக ஆண்கள் மட்டும் அல்ல. பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது பெண்கள்தான். பெண்களின் நிலை கண்டறிய எண்ணூர் அருகே உள்ள தானங்குப்பம் மீன் அங்காடிக்குச் சென்றிருந்தோம். 35 பெண்களால் நடத்தப்படும் 35 கடைகளைக் கொண்ட இந்த மீன் அங்காடியில் வெறும் இரண்டு கடையில் மட்டும்தான் மிகக் குறைந்த அளவில் மீன் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
மக்கள் மீன் வாங்க தயக்கம் காட்டுவதால் கடந்த 25 நாட்களாக மீன் கடைகளில் வெறும் ஈ மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது. மீன் கொள்முதல் செய்ய கந்து வட்டிக்குக் கடன் வாங்கும் இப்பெண்கள் கடனை அடைக்க முடியாத நெருக்கடியில் தள்ளப்பட்டிருக்கின்றனர். நிவாரணம் கோரி இப்பெண்கள் மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரைச் சந்தித்து இருக்கின்றனர். ஆனால் எந்த நிவாரணமும் வந்து சேர்ந்தபாடில்லை.
எண்ணைக் கசிவை முற்றிலுமாக அகற்றி விட்டோம் என்று அறிவித்து 10 நாட்கள் ஆன பிறகும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்ச னைகளில் எந்த மாற்றமும் இல்லை.
விபத்து ஏற்பட்டவுடன் அதன் பாதிப்புகளைக் குறைக்க முயற்சிப்பதற்கு மாறாக, மத்திய அரசாங்கத்தின் பெயரை காப்பாற்றிக் கொள்ள, அதிகாரிகளின் தவறுகளை மறைக்க மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல் துறைமுக அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் வரை அனைவரும் முயற்சி செய்தனர்.
ஜல்லிக் கட்டு போராட்டத்தின் போது மீனவர் குடியிருப்புகளையும் மீனவர்களையும் சூறையாடியதில், ஒடுக்கியதில் காட்டிய முனைப்பை மீனவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளில் காட்டவில்லை. மீனவ சமூகத்தை தமிழக அரசு முழுமையாக வஞ்சிக்கிறது. 2 டன் எண்ணெய்தான் கடலில் கொட்டியது என்று அரசு சொல்வதற்கு மாறாக, கடலோர காவல்படை அளித்த தகவலின்படி சுமார் 187 டன் எண்ணெய்க் கழிவு அகற்றப்பட்டுள்ளது.
எண்ணெய்க் கழிவு மட்டுமல்லாமல் தமிழகத்தின் கடலோடி மாவட்டங்கள் அனைத்திலும் அணுமின் நிலையம், இரசாயனத் தொழிற்சாலைகள் போன்றவை தொடர்ந்து கடல்வாழ் உயிரினங்களை அழித்துக் கொண்டிருக்கின்றன. சுற்றுப்புறச் சூழலை கெடுப்பதோடு கடல் சார் மீனவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கின்றன.
தங்கள் வலைகளையும் கட்டுமரங்களையும் இழந்து, வருமானத்தையும் இழந்து, கடன் சுமையால் வாடும் மீனவர்களுக்கு தலா குடும்பத்திற்கு ரூ.5000 நஷ்டஈடு கொடுப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். மீனவர்கள் இழப்பீட்டை இந்தத் தொகையால் கொஞ்சம் கூட சரி செய்ய முடியாது. மீனவர்களின் இழப்புகளை முறையாக ஆய்வு செய்து அதற்கேற்றாற்போல் நஷ்டஈடு வழங்க வேண்டும். அரசு, மீனவ மக்களுக்கும் சென்னை மக்களுக்கும், எண்ணெய்க் கசிவால் ஏற்பட்ட, ஏற்படப் போகும் அபாயங்கள் பற்றி நேர்மையாக, வெளிப்படையாக உண்மைகளை தெரிவிக்க வேண்டும்.
ஜனவரி இறுதியில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்ததற்காக சென்னையின் மீனவ மக்கள் காவல்துறையினரால் சூறையாடப்பட்டனர். அவர்களது வாழ்வாதாரம் திட்டமிட்டு சிதைக்கப்பட்டது. ரூ.75 லட்சத்தில் புதிய மீன் அங்காடி வரும் என்பதற்கு மேல் அவர்களது வாழ்வாதார இழப்புக்கு தமிழக அரசு எந்த நிவாரணமும் தரவில்லை. ஒடுக்குமுறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிப்ரவரி இறுதியில் சென்னை கடற்கரையின் மறுபுறத்தில் கார்ப்பரேட் கப்பல்கள் எண்ணெய்க் கொட்டியதால் மீனவ மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்துக் கொண்டிருக்கும்போது, ஆளும்கட்சியினர் அதிகாரச் சண்டையில் கவனம் செலுத்திக் கொண் டிருந்தார்கள். ஒடுக்குமுறை, குற்றமய அலட்சியம் என்ற ‘அம்மா ஆட்சி’ தொடர்வதை சென்னை மீனவ மக்களின் வாழ்க்கை தெளிவாகக் காட்டுகிறது.