சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று
துவங்கியது பிப்ரவரி புரட்சி
துவங்கியது பிப்ரவரி புரட்சி
பிப்ரவரி 23, 1917. ‘புரட்சியின் முதல் நாளாக இது இருக்கும் என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை’ என்று ட்ராட்ஸ்கி எழுதுகிறார். பிரசுரங்கள், கூட்டங்கள், உரைகள் என்று வழமையான நிகழ்ச்சியாக மட்டுமே சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை அனுசரிக்க அந்த ஆண்டு அவர்கள் திட்டமிட்டிருந்தனர். வேலை நிறுத்தங்களோ,
வேறு கிளர்ச்சி நடவடிக்கைகளோ, தீவிரமான போராட்டங்களோ வேண்டாம் என்றும் அப்படிச் செய்வது காவல்துறையுடன் மிகப்பெரிய மோதலுக்கு இட்டுச் சென்றுவிடும் என்றும் அது போன்ற மோதலுக்கு சூழல் கனியவில்லை என்றும் போர் நடந்துகொண்டிருக்கிற நேரத்தில் காவல்துறையின் ஒடுக்குமுறை மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் கருதினர். இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு பெண் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் செய்தியும் சென்று சேர்ந்தது.ரொட்டிக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உட்பட பல்வேறு ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் தொழிலாளர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில் பிப்ரவரி 23, 1917 (மார்ச் 8, 1917) சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை சம்பிரதாயமாக வெறும் கூட்டங்கள் மட்டும் நடத்தி அனுசரிக்க ரஷ்யாவின் பெண் தொழிலாளர்கள் தயாராக இல்லை. வேலை நிறுத்தம் வேண்டாம், சூழல் உகந்ததாக இல்லை என்ற தலைவர்களின் கட்டளைகளை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. வேலை நிறுத்தங்கள் செய்ய தயாரானார்கள். வீதிகளில் இறங்கினார்கள்.
தங்களது சக ஆண் தொழிலாளர்களிடம் பேசினார்கள். வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் இறங்க வேண்டும் என அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். அவர்கள் அழைப்பை மற்ற தொழிலாளர்களும் ஏற்றார்கள். அன்று மட்டும் 90,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். காவல்துறையினருக்கு உதவ படையினர் வரவழைக்கப்பட்டார்கள்.
தொழிலாளர்கள் அல்லாத மற்ற பெண்களும் டூமாவை நோக்கி அணிதிரண்டார்கள். போர் வேண்டாம், எதேச்சதிகாரம் வேண்டாம், ரொட்டி வேண்டும் என்ற முழக்கங்களுடன் செம்பதாகைகள் எங்கும் காணப்பட்டன. பெரிதாக ஒடுக்குமுறை எதுவும் அன்று நடக்கவில்லை. சர்வதேச பெண்கள் தினம் அன்று வெற்றிகரமாக வேலை நிறுத்தங்களுடன் போராட்டங்களுடன் அனுசரிக்கப்பட்டு நிறைவுற்றது.
ஆனால், பிப்ரவரி 23 அன்று நடந்த எழுச்சி மறுநாள் ஓய்ந்து விடவில்லை. அது, முதலில் பெட்ரோகிராட் தொழிலாளர்களின் மாபெரும் எழுச்சியாக, பிறகு 2,40,000 தொழிலாளர்கள் பங்கேற்ற அனைத்து ரஷ்ய தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டமாக, படிப்படியாக வளர்ந்து, பிற மக்கள் பிரிவினரையும் ஈர்த்து, பிறகு ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதப் பேரெழுச்சியாக முன்னேறி ஜார் ஆட்சிக்கு முடிவு கட்டியது.
பிப்ரவரி 24 அன்று காலை வேலைக்கு புறப்பட்டு வந்த தொழிலாளர்கள் ஆலைக்குள் செல்லவில்லை. ஆலைகளுக்கு வெளியில் கூட்டங்கள் நடத்தினார்கள்; டூமாவை நோக்கி பேரணிகளாக புறப்பட்டார்கள். இந்தப் பேரணிகளில், கூட்டங்களில் பெண் தொழிலாளர்கள் பெருமளவில் இருந்தார்கள். பெட்ரோகிராடின் பாதிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். அவர்கள் நடத்திய பேரணிகளில் மாணவர்கள் இணைந்து கொண்டார்கள்.
வேலை நிறுத்தம் செய்த பெண் தொழிலாளர்கள் பலரின் இணையர்கள் படையினராக இருந்தார்கள். பெண் தொழிலாளர்கள் படையினரை சூழ்ந்துகொண்டு அவர்களிடம் பேசி னார்கள். அவர்களுக்கும் சேர்த்துத்தான் தங்கள் போராட்டங்கள் நடப்பதை விளக்கினார்கள். உங்களது துப்பாக்கி எங்களை நோக்கி நீளப் போகிறதா அல்லது ஜார் மன்னனை நோக்கி நீளுமா என்று கேள்வி எழுப்பினார்கள். துப்பாக்கிகளை தூக்கியெறிந்துவிட்டு எங்கள் போராட்டத்தில் இணையுங்கள் என்று அழைப்பு விடுத்தார்கள். கொசாக்குகளும் பெண் தொழிலாளர்களும் ஆங்காங்கே பேசிக் கொண்டிருப்பதை, வாக்குவாதம் செய்துகொண்டிருப்பதை, பெண் தொழிலாளர்களால் கொசாக்குகள் சூழப்பட்டிருப்பதை காண முடிந்தது.
விளைவு, அன்று போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்: ‘கொசாக்குகள் நம்மை சுட மாட்டார்கள்’. பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்த தொழிலாளர்கள் மத்தியில் கொசாக்குகளின் குதிரைகள் சென்றன. ஒரு கொசாக் ஒரு தொழிலாளியைப் பார்த்து கண்ணடிக்கிறார். அந்தத் தொழிலாளி அடுத்த தொழிலாளியைப் பார்த்து, அவர் அடுத்த தொழிலாளியைப் பார்த்து.... கொசாக்குகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதில்லை என்பது தொழிலாளர்களுக்கு தெரிந்துவிட்டது. கொசாக்குகள் தாக்குதல் நடத்தவும் இல்லை. தொழிலாளர்கள் தங்கள் பேரணிகளில் முன்னேறிச் செல்வதைத் தடுப்பதற்காக கொசாக்குகள் இடையில் நிற்க, கொசாக்குகளின் குதிரைகளின் வயிற்றுக்குக் கீழ் புகுந்து சென்றார்கள். தொழிலாளர்கள் அவர்கள் பேரணிகளில் முன்னேறிச் செல்வதை கொசாக்குகள் தடுக்கவும் இல்லை. கொசாக்குகளின் குதிரைகளின் கீழ் புகுந்து, புரட்சியின் வெற்றியை நோக்கி தொழிலாளர்கள் பேரணிகளில் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ட்ராஸ்ட்கி சொல்கிறார்: ‘புரட்சி அதன் பாதைகளை தேர்ந்தெடுக்கவில்லை. ஒரு கொசாக்கின் குதிரையின் வயிற்றின் அடியில் புகுந்து, வெற்றியை நோக்கிய அதன் முதல் அடியை எடுத்து வைத்தது’.
சர்வதேச பெண்கள் தினத்தை போராட்ட நாளாக அனுசரிப்பதில் உறுதியாக இருந்த ரஷ்யாவின் பெண் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும்தான், உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிறுவிய, பெண்களின் சமூக, அரசியல் வாழ்வில் அடிப்படையான மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய, பெண் விடுதலை போராட்டத்தில் இருந்த பிற நாட்டின் பெண்களுக்கும் ஆதர்சமாக இருந்த மாபெரும் ரஷ்யப் புரட்சியின் துவக்க நிகழ்வுகளாக இருந்தன.
இன்று அந்த சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை, அதன் புரட்சிகர அம்சங்களில் இருந்து, அதன் விடுதலை வேட்கை அம்சங்களில் இருந்து வெட்டிப் பிரித்து எடுத்து, பெண்கள் தொடர்பான பிற்போக்கு, பழமைவாத நடைமுறைகளை, கருத்துக்களை, நிலைநிறுத்த பயன்படுத்த கடுமையான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆள்பவர்களாலேயே வரலாறு எழுதப்படுவதால், முதலாளித்துவ தளைகளில் இருந்து உழைக்கும் மக்கள் விடுதலை, சமூக மாற்றம், பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரம் ஆகியவை பற்றிய சர்வதேச பெண்கள் தினத்தின் முக்கியத்துவத்தை மறைத்துவிடும், குறைத்துக் காட்டும் எத்தனிப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது.
முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளும் நடைமுறைகளும் மக்கள் வாழ்வை சூறையாடிதன் மூலம் கடுமையான ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியிருப்பதால், பெருவாரியான மக்களுக்கு முதலாளித்துவத்தின் மீது இருந்த மாயையை அகற்றியிருப்பதால், அந்தச் சூழலைச் சமாளிக்க உலகெங்கும் வலதுசாரி சக்திகள் பலம் பெற்று வருகின்றன. ட்ரம்ப் முதல் மோடி வரை பெண்களை போகப் பொருட்களாக, அடிமைகளாகப் பார்க்கிற கருத்துக்களை முன் வைப்பவர்கள்; அதுபோன்ற கருத்தியலை பரப்புபவர்கள். ஆனால், உலகமயத்தின் லாபத்துக்கு பெண்தொழிலாளர்களின் மலிவான உழைப்பு இன்றியமையாதது என்ற முதலாளித்துவ யதார்த்தத்தை ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாதவர்கள்.
இந்தியாவில் பெண்கள் தங்கள் சமூக வெளியை விரிவுபடுத்திக் கொண்டே செல்லும் அளவுக்கு ஏற்ப அவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்கின்றன. அச்சமற்ற சுதந்திரம் வேண்டும் எனக் கோரி பெண்கள் எழுகிற போராட்டங்களும் அக்கம்பக்கமாக அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன. வயல்களில், ஆலைகளில். அய்டி நிறுவனங்களில் பெண்கள் மிகவும் மோசமாக சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். அந்த நிலைமை களுக்கு எதிரான அவர்கள் சீற்றத்தை திசை திருப்ப, முதலாளித்துவ தளைகளில் அவர்களை மேலும் இறுக்கமாக பிணைக்க, பிற்போக்கு விழுமியங்கள் அவசியமாகின்றன. 21ஆம் நூற்றாண்டு உழைப்பு நிலைமைகளுடன் 19ஆம் நூற்றாண்டு பிற்போக்கு கட்டுப்பாடுகள் இணைக்கப்படுகின்றன. உனது நடை உடை சரியில்லை, அதனால் உன் மீது வன்முறை, நீ அதிகமாகப் பேசினாய், அதனால் உன் மீது வன்முறை, நீ வரம்புகளை மீறினாய் அதனால் உன் மீது வன்முறை, நீ போராடினாய் அதனால் உன் மீது வன்முறை... இந்தியப் பெண்கள் இது போன்ற ஒழுங்குபடுத்துதல்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. சுமங்கலித் திட்டம் இருக்கிறது, ‘கவுரவ’ ஊழியர் என்று பெயர் தரப்பட்டு ‘கவுரவ’ சம்பளம் இருக்கிறது, வேலைக்குப் போனாயா, வீட்டுக்கு வந்தாயா, அதற்கு மேல் உனக்கு எந்தக் குரலும் இருக்கக் கூடாது என்று மிரட்டல் விடுக்கப்படுகிறது. இந்த ஒழுங்குகளுக்கு உட்பட்டு மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை அனுசரிக்கவும் அவர்களுக்கு ‘அனுமதி’ உண்டு.
இன்று குறைவான சம்பளம், கடுமையான, கவுரவமற்ற பணி நிலைமைகள் என்று மிக மோசமான சுரண்டலுக்கு உள்ளாகிற அந்தப் பெண் தொழிலாளர்கள், முதலாளித்துவத்தின் சவக்குழிகளைத் தோண்டும் பாட்டாளி வர்க்கத்தின் பெரும்படைப் பிரிவு. பெண் தொழிலாளர்களின் இந்த புரட்சிகர உள்ளாற்றலை மேலே கொண்டு வந்து, அதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்துவது மட்டுமின்றி, பெண் தொழிலாளர்களுக்கும் உணர்த்துவது இன்றைய அவசர கடமையாக முன்நிற்கிறது.
மார்ச் 8, மகளிர் தினம் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி அதன் புரட்சிகர உள்ளடக்கத்தை, உள்ளாற்றலை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளை முறியடித்து, பெண் தொழிலாளர்களின் மேலான நிலைமைகளுக்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றத்துக்கான அதன் உள்ளடக்கத்தை வலுவாக முன்னிறுத்தும் விதம் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்வோம்.
சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் என்று சொல்லும்போது அது, உழைக்கும் பெண்களுக்கு மட்டுமானதா என்று பிளவுபடுத்தும் கேள்விகள் எழுப்பப்படலாம். அந்த குயுக்திகாரர்களுக்கு உரைக்கும்படி உரக்கச் சொல்வோம். பாட்டாளி வர்க்கத்தின் பெண்களுக்கு விடுதலை வேண்டும். அவர்கள் மத்தியில் உழைக்காதவர்கள் என்று எவரும் இல்லை. கூலி தரப்படும் உழைப்பு, கூலி தரப்படாத உழைப்பு என எப்போதும் ஏதாவது செய்து கொண்டிருக்கும் அந்தப் பெண்கள் மத்தியில் உழைக்காத பெண் என்று யாரும் இல்லை. சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம், பெண்கள் உரிமை, பெண் விடுதலை தொடர்பானது மட்டுமல்ல, அது பாட்டாளி வர்க்க விடுதலை தொடர்பானது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தொடர்பானது ஒட்டுமொத்த சமூக மாற்றம் தொடர்பானது என்று உரக்கச் சொல்வோம்.
சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் வெல்லட்டும். பாட்டாளி வர்க்க விடுதலைக்கான, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கான போராட்டம் முன்னேறிச் செல்லட்டும்.
ரஷ்யாவின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பெண்களின் சமூகப் பங்களிப்பை உயர்த்த மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி அலெக்சாண்ட்ரா சொல்கிறார்.
7000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆலோசனை மய்யங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றில் சரிபாதி கிராமப்புறங்களில் இருந்தன.
1913ல் ஜாரின் ரஷ்யாவில் 19 குழந்தைகள் காப்பகங்கள் இருந்தன. புரட்சிக்குப் பிந்தைய ரஷ்யாவில் 20,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்கள் இருந்தன.
1916ல் கிராமப்புறங்களில் விவசாயத் தொழிலாளர்களாகவும் நகர்ப்புறங்களில் வீட்டு வேலைகள் உள்ளிட்ட சேவகங்களைச் செய்பவர்களாகவும் 23 லட்சம் உழைக்கும் பெண்கள் இருந்தனர். 1946ல் 7.5 லட்சம் பெண் ஆசிரியர்கள், 1 லட்சம் பெண் மருத்துவர்கள், 2.5 லட்சம் பெண் பொறியாளர்கள் இருந்தனர். 33,000 பெண்கள் ஆய்வகங்களிலும் ஆய்வு மய்யங்களிலும் இருந்தனர்.
ரஷ்யாவின் சுப்ரீம் சோவியத்தில் 277 பெண் உறுப்பினர்கள் இருந்தனர். அரசு அதிகாரத்தின் பல்வேறு மட்டங்களில் 2.56 லட்சம் பெண்கள் இருந்தனர்.