களச் செய்திகள்
(மாலெ தீப்பொறி 2017 பிப்ரவரி 16 – 28)
தலைமைச் செயலகம் நோக்கி லட்சம் கையெழுத்துக்களுடன் பேரணி
ஏஅய்சிசிடியுவும், அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் இணைந்து தமிழகம் முழுவதும் உழைக்கும் மக்களை, வறியவர்களை வாட்டி வதைக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசை வலியுறுத்தி நாட்டுப்புற, நகர்ப்புற மக்களிடம் கையெழுத்து இயக்கம் மேற்கொண்டது.
மக்களிடம் சேகரிக்கப்பட்ட லட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துக்களுடன் பிப்ரவரி 6 அன்று தமிழக முதல்வரை சந்திக்க ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார் தலைமையில் தோழர்கள் பேரணியாக சென்றனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அணிதிரண்டிருந்தனர். பேரணி முடிவில் தோழர்கள் எ.எஸ்.குமார், அவிகிதொச மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் வெங்கடேசன், அவிகிதொச மாநிலச் செயலாளர் தோழர் இளங்கோவன், அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா ஆகியோர் உரையாற்றினர். பின்னர் கையெழுத்து பெற்ற படிவங்களுடன் தோழர்கள் எ.எஸ்.குமார், ஜானகிராமன், ஜவகர், இளங்கோவன் ஆகியோர் தமிழக முதல்வரைச் சந்திக்கச் சென்றனர். தமிழக முதல்வர் இல்லாததால் அவரின் தனிப்பிரிவு அதிகாரியிடம் கையெழுத்து படிவங்கள் ஒப்படைக்கப்பட்டன.
கட்சி வகுப்புகள்
பிப்ரவரி 12 அன்று கோவை, செங்குன்றம், திருநெல்வேலி, கும்பகோணம் ஆகிய மய்யங்களில் கட்சி ஊழியர்கள், முன்னணிகள் கலந்துகொண்ட கட்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. கட்சி வரலாறு மற்றும் பணமதிப்பகற்றும் நடவடிக்கை ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட்ட வகுப்புகளில் மாநிலம் முழுவதிலும் இருந்து 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டங்களில் தோழர் ஸ்ரீலதா சுவாமிநாதனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவையில் மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி, கும்பகோணத்தில் மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம், செங்குன்றத்தில் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், திருநெல்வேலியில் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சங்கரபாண்டியன் ஆகியோர் கட்சி வரலாறு மீதும், மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், சந்திரமோகன், வித்யாசாகர், ரமேஷ் ஆகியோர் பணமதிப்பகற்றும் நடவடிக்கை மீதும் வகுப்புகள் நடத்தினர்.
இதுபோன்ற வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் இன்னும் பரவலாக கட்சி உறுப்பினர் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் தோழர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஊராட்சி கூட்டங்களில் விவசாயத் தொழிலாளர் பிரச்சனைகள் மீது தீர்மானங்கள்
ஜனவரி 25 - 31 கிராமசபைக் கூட்டங்களைக் கூட்டி விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு தீர்மானமாக அனுப்புவது என்ற அவிகிதொச பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாக ஜனவரி 30, 31 தேதிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் அலமாதி, சோழவரம், நல்லூர், புதிய எருமைவெட்டிப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் விவசாயத் தொழிலாளர் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. வேலைஉறுதித் திட்டத்தில் ஆண்டு முழுவதும் வேலை, ரூ.500 கூலி, வீடற்ற அனைவருக்கும் வீடு, நகர்ப்புற நில உச்சவரம்பு கொண்டு வருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் மீது தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.