தோழர் ஸ்ரீலதா சுவாமிநாதன் (29.04.1944 - 05.02.2017): உத்வேகம் தரும் ஒரு புரட்சிகர பயணம்
இககமாலெயின் மூத்த தலைவர் தோழர் ஸ்ரீலதா சுவாமிநாதன் உதய்பூரில் (ராஜஸ்தான்) பிப்ரவரி 5 அன்று காலமானார். அவருக்கு வயது 74. உடல்நலக் குறைவால் ஜனவரி 28 அன்று உதய்பூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர், மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார்.
தோழர் ஸ்ரீலதா சென்னையில் 1944, ஏப்ரல் 29 அன்று பிறந்தார். கல்லூரி படிப்பு முடித்த பிறகு டில்லியில் தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்தார். பிறகு நாடகங்கள் தொடர்பான தமது ஆர்வத்தை ஒட்டி லண்டன் சென்றார். 1972ல் டில்லிக்கு திரும்பியபோது, அவரது வாழ்க்கையில் ஒரு தீர்மானகரமான மாற்றம் ஏற்பட்டது. இககமாலெயில் இணைந்த அவர், டில்லியின் மெஹராலி பிராந்தியத்தில் தொழிலாளர்களை அமைப்பாக்கத் துவங்கினார். டில்லியில் ஓட்டல் தொழிலாளர் மத்தியிலும் பணியாற்றினார். நெருக்கடி நிலையின் போது 10 மாதங்களுக்கு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு சென்னைக்கு அனுப்பப்பட்டார். மீண்டும் தொழிற்சங்க வேலைகள் மூலம் துறைமுக தொழிலாளர் மத்தியில் பணியாற்றும் வாய்ப்பாக அது அவருக்கு அமைந்தது. 1977ல் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்த பிறகு, டில்லிக்கு திரும்பினார். பிறகு 1978ல் பழங்குடி மக்கள், பெண்கள், மற்றும் கிராமப்புற கொத்தடிமைத் தொழிலாளர்கள், வாழும் இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மத்தியிலும் சுரங்கத் துறையிலும் வேறு பல தொழில்களிலும் தொழிற்சங்கங்களிலும் பணியாற்ற ராஜஸ்தான் சென்றார். மேட்டுக்குடி பின்னணியும் வளர்ப்பும் கொண்ட ஒரு பெண் கிராமப்புற ராஜஸ்தானை தனது மார்க்சிய நடவடிக்கைகளுக்கு தளமாகக் கொண்டது துணிச்சலான முடிவு; அது அவரது புரட்சிகர ஆர்வத்தையும் அரசியல் துணிச்சலையும் பிரதிபலித்தது. நிலப்பிரபுத்துவ - ஆணாதிக்க சக்திகளும் மதவெறி மாஃபியா கூட்டும் ஆழமாக விரவியுள்ள ராஜஸ்தானில் அவற்றுக்கு எதிராக, புரட்சிகர இடதுசாரி இயக்கத்துக்கு வலுவூட்ட, அதை பரவச் செய்ய, முற்போக்கு கருத்துக்களையும் விழுமியங்களையும் பாதுகாக்க தனது இறுதி மூச்சு வரை பணியாற்றினார்.
1970ல் இககமாலெ பின்னடைவைச் சந்தித்தபோது, தோழர் ஸ்ரீலதா சில காலம் கனு சன்யாலுடன் இணைந்து பணியாற்றினார். ஆனால் பீகாரில் இமமு எழுந்தபோது, இது அவரது கவனத்தை ஈர்த்தது; 1990ல் டில்லியில் நடந்த உற்சாகமிக்க இமமு பேரணிக்குப் பிறகு தோழர் ஸ்ரீலதா தனது கணவரான தோழர் மகேந்திர சவுத்ரி மற்றும் நூற்றுக்கணக்கான தோழர்களுடன் இகக மாலெயில் இணைந்தார். 1990களின் நடுப்பகுதியில் முற்போக்கு பெண்கள் கழக தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997 அக்டோபரில் வாரணாசியில் நடந்த காங்கிரசில் கட்சியின் மத்திய கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 ஏப்ரலில் ராஞ்சியில் நடந்த காங்கிரசில், உடல்நலக் குறைவால் மத்திய கமிட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஏஅய்சிசிடியு துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.
தோழர் ஸ்ரீலதா ஒரு பன்முகத்தன்மை கொண்ட செயல்வீரர். படைப்பாற்றல் மிக்கவர். எல்லையற்ற ஆர்வம் கொண்டவர். உறுதியான அரசியல் விருப்பம் கொண்டவர். அவரது இயல்பான தாக்குப்பிடிக்கும் தன்மையுடனும் நகைச்சுவை உணர்வுடனும் வாழ்வில் அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொண்டவர்.
உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் 2016 அக்டோபரில் பாட்னாவில் நடந்த முற்போக்கு பெண்கள் கழக மாநாட்டில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. பிரதிநிதிகளுக்காக ஒரு பாடலை எழுதிப் பாடி அதை மாநாட்டுக்கு அனுப்பி வைத்தார். பல்வேறு அரங்கங்களிலும் அக்கறையும் செயல்பாடும் கொண்டவராக இருந்ததால், தோழர் ஸ்ரீலதா இககமாலெவுக்கும் பல்வேறு பிற முற்போக்கு ஜனநாயக கருத்துக்களின், நடவடிக்கைகளின் நீரோட்டங்களுக்கும் இடையில் பாலமாக செயல்பட்டார். முற்போக்கு லட்சியத்துக்கான மக்களின் எல்லா போராட்டங்கள் மீதும் பெரும் மதிப்பு கொண்டிருந்தார். பீகாரிலும் ஜார்க்கண்டிலும் இககமாலெ தலைமையில் நடக்கும் போராட்டங்கள்பால் நம்பிக்கை கொண்டிருந்தார். மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் பல்வேறு அரங்கங்களிலும் பணியாற்றும் தனது சகதோழர்கள் மீது பரிவும் கொண்டிருந்தார்.
கவுரவத்துக்காக, ஜனநாயகத்துக்காக, சமூக விடுதலைக்காக ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல தோழர் ஸ்ரீலதாவின் சிறப்பான மரபு நமக்கு தொடர்ந்து உத்வேகம் தரும். தோழர் ஸ்ரீலதா சுவாமிநாதனுக்கு செவ்வணக்கம்.
தோழர் சிறிலதா சுவாமிநாதனுக்கு அஞ்சலிக் கூட்டங்கள்
இகக(மாலெ)யின் முன்னாள் மத்தியக் கமிட்டி உறுப்பினரும், ஏஅய்சிசிடியுவின் முன்னாள் அகில இந்தியத் துணைத் தலைவரும், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தேசிய தலைவராகவும் செயல்பட்ட தோழர் சிறிலதா சுவாமிநாதன் மறைவுக்கு பிப்ரவரி 5 அன்றே அம்பத்தூரில் நடைபெற்றுக் கொண்டிருந்த டிரில் ஜிக் புஷ் கம்பெனி பொதுக் குழு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர் தோழர் பாரதி, கட்சி முன்னணிகள் தோழர் ஹீரா பஸ்வான், தோழர் புகழ்வேந்தன், தோழர் லட்சுமி, தோழர் கோபால், தோழர் மோகன் ஆகியோருடன் டிரில் ஜிக் புஷ் கம்பெனி தொழிலாளர்களும் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.