COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, February 3, 2017

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
பொங்கலும் ஜல்லிக்கட்டும் கோவில் திருவிழாவும் 
தலித்துகளுக்கு, சேவை சாதியினருக்கு இல்லை

(மாலெ தீப்பொறி 2017 பிப்ரவரி 01 – 15)

ஜனவரி 21 - 22 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இககமாலெ மாநிலக் குழு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் பற்றிய விவாதத்தின்போது மாநிலக்குழு உறுப்பினரும் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளருமான தோழர் ஆசைத்தம்பி பேசியதில் இருந்து

கால்நடை வளர்ப்பை தொழிலாகக் கொண்ட பகுதிகளில் புதுகோட்டை மாவட்டம் முதல் இடம் பெறும்.

மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் பெயர்களுக்கு காரணங்கள் இருப்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பட்டி என்ற பெயர் கொண்ட கிராமங் களில் ஆடு, மாடுகள் வளர்ப்பும் அதையொட்டிய பிழைப்பும் பிரதானம்
ஆதிக்கப் பிரிவினரான அம்பலங்கள் வாழ்ந்த கிராமங்கள் ஊர் என்று முடியும். உதாரணமாக அண்டனூர், கிள்ளனூர், தெம்மாவூர் ஆகிய கிராமங்கள் அம்பலங்களின் இடங்கள்.
கரம்பக்குடி ஒன்றியத்தில் கள்ளர் பட்டங்கள் கொண்ட ஊர் பெயர்கள் உண்டு. குளந்தி ரான் விடுதி, ராங்கியன் விடுதி, சுக்கிரன் விடுதி என உதாரணங்கள் சொல்லலாம்.
மாவட்டத்தின் நுழைவாயில்களாக இருக்கிற கிராமங்களுக்கு, அன்னவாசல், திருப்பனவாசல், தெத்துவாசல்பட்டி எனப் பெயர்கள் உண்டு.
தொண்டைமான் மன்னர்களுக்கு நெருக்கமான கிராமங்கள், அவர்கள் தங்க, ஓய்வெடுக்க பயன்படுத்திய கிராமங்கள் விடுதி என்ற பெயருடன் வரும். உதாரணம் சங்கம்விடுதி, வெள்ளாள விடுதி.
கந்தர்வகோட்டை தொகுதிக்குள் 216 பட்டிகள் உண்டு. வேளாடிபட்டி, மஞ்சப்பட்டி, உரியப்பட்டி, கன்னுகுடிபட்டி, நடுப்பட்டி, நாயக்கன்பட்டி ஆகியவை சில உதாரணங்கள். இந்த கிராமங்கள் அனைத்திலும் ஆடு, மாடு வளர்ப்பு பிரதான தொழில்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆற்றுப் பாசனத்துக்கு வழியில்லை. ஏரிப்பாசனம்தான். மானாவாரி விவசாயம்தான். எனவே, எல்லா தேவைகளுக்கும் ஆடு, மாடு வளர்ப்பதும் விற்பதும் அதன் மூலம் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதும்தான் இங்கு வாழ்க்கை.
எல்லா சாதிக்காரர்களுக்கும் இதுதான் விதி. எல்லா வீடுகளிலும், தலித் மக்கள் வீடுகள் உட்பட ஆடுகள், மாடுகள் உண்டு.
தலித் மக்கள் வெள்ளாடு வளர்க்கக் கூடாது என்று ஒப்பந்தம் போடும் வழக்கம் இருந்தது. ஏனென்றால், வெள்ளாடு மலிவாகக் கிடைக்கும். மாடு வாங்க காசு கூட தேவை. வெள்ளாடு மூன்று, நான்கு குட்டிகள் போடும். விற்பதும் எளிமையானது. இதனால், அவர்கள் ஆடு வளர்ப்பில் தன்னிறைவு பெற்றுவிட்டால், மற்ற ஏவல் வேலைகளுக்கு வரமாட்டார்கள் என்பதால் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் வேறு காரணங்கள் சொல்லப்படும். வெள்ளாடுகள் நிலத்துக்குள் புகுந்து பயிர் களை நாசமாக்கிவிடும் அதனால் வளர்க்கக் கூடாது என்பார்கள்.
சங்கம்விடுதியிலும் பிற பகுதிகளிலும் இந்த ஒப்பந்தத்தை ஒழித்துக்கட்ட பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
விவசாயிகள் அவர்கள் நிலத்தை, அவர்கள் பயிரை அவர்கள்தான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தலித் மக்களுக்கு ஆடு வளர்ப்பதுதான் பிழைப்பு. விவசாயிகள் 10 குடும்பங்கள் இருப்பார்கள். ஆடு வளர்ப்பவர்கள் 100 குடும்பங்களுக்கும் மேல் இருக்கிறோம். உங்கள் நிலத்துக்குள் புகுந்துவிடுகிறது, உங்கள் விவசாயம் கெட்டு விடுகிறது என்று ஆடு வளர்க்கக் கூடாது என்கிறீர்களே, எங்கள் ஆடுகள் மேய இடமில்லை அதனால் விவசாயம் செய்யாதீர்கள் என்று சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா?
மாடு வளர்க்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்க முடியாது.
இளைய தலைமுறை எழுப்பிய இந்தக் கேள்விகளுக்கு சாதி கடந்த ஆதரவு இருந்தது. இப்போது பல வீடுகளிலும் 40, 50 ஆடுகள் பார்க்க முடியும்.
வறிய மக்கள்தான் ஆடு வளர்க்கிறார்கள். இங்கு நாட்டு மாடுகள் பிரதானம். ஆடு, மாடு வளர்ப்பு வாழ்க்கையாக இருக்கும் இந்த மாவட்டத்தில் பொங்கல் நேரத்தில் 10 இடங்களில் கூட ஜல்லிக்கட்டு நடக்காது. இங்கு பொங்கல் பண்டிகையும் ஜல்லிக்கட்டும் வேறு வேறு. இந்த மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டை பொங்கலுக்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்துத்தான் பங்குனியில் கள்ளர் பிரிவினர் நடத்துவார்கள். எந்த ஊரிலும் ஜல்லிக்கட்டை தலித் மக்கள் நடத்துவதில்லை. கள்ளர் அல்லாத பிரிவினரும் வேறு திருவிழாதான் நடத்துவார்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்துவதில்லை.
கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் ராசப்பட்டியில், சங்கம்விடுதி, தச்சன்குறிச்சி ஆகிய இடங்களில்தான் இப்போது விவாதத்தில் இருக்கும் ஜல்லிக்கட்டு நடக்கும். அப்படி நடக்கும் போது நிச்சயம் ஒரு கொலை, தகராறு, தாக்குதல் என்று இருக்கும். தலித் மக்கள்தான் அதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். எனவே இப்போதும் மாடு திறக்கும் நாள் வரும்போது, விடுமுறையில் ஊருக்குத் திரும்பும் பிள்ளைகளை பெற்றோர் பொங்கல் விடு முறையில் ஊருக்கு வர வேண்டாம் என்பார்கள். தீபாவளிக்கும் வேறு வேறு விடுமுறை நாட்களில் அவர்கள் வருவதுதான் அவர்களுக்கு பாதுகாப்பானது என்ற கருத்து இங்கு தலித் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
ஏனென்றால் ஆர்வத்தில் சென்று பார்க்கும் தலித் இளைஞர்கள் சில நேரங்களில் தவறிப் போய் அங்கு நுழைந்துவிட்டால் தலித் என்று தெரியாத வரை பிரச்சனை இல்லை. தலித் என்று தெரிந்தால் அந்த இளைஞரை கள்ளர்கள் உடனே கூடி அங்கேயே அடித்துப் போட்டு அப்புறப்படுத்திவிடுவார்கள். கள்ளர் காளையை தலித் தீண்டக் கூடாது.
ராசப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடந்ததை ஒட்டி நடந்த தாக்குதல் ஒன்றில் யாதவர் ஒருவர் கொல்லப்பட்டார். அது கொலை வழக்காக மாறியது. அதற்குப் பிறகு அங்கு ஜல்லிக் கட்டு நடப்பதில்லை. பத்தாண்டுகளாகிவிட்டன.
சிலம்பம் மேல்சாதிக்காரர்கள் விளையாட்டு. தலித்துகள் சிலம்பம் கற்றுக்கொள்ள முடியாது.
தலித் என்று தெரியாத வரை அனைவருக்கும் தரப்படும் குவளையில் தேநீர் தரப்படும். தலித் என்று தெளிவாகத் தெரிந்தால் தனிக்குவளைதான்.
நடந்து முடிந்த ஜல்லிக்கட்டில், தலித்துகள், கள்ளர் அல்லாதவர்கள் பெரிய முயற்சி எடுக்கவில்லை. தலித் மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. அனைத்து கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் புறப்பட்டு வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், கரம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி, கந்தர்வ கோட்டையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் எங்கும் புறப்பட்டுச் செல்லவில்லை.
உண்மையில் ஜல்லிக்கட்டு வந்துவிடுமோ என்று அச்சப்படும் நிலை தலித் மக்கள் மத்தியில் உள்ளது. கந்தர்வக்கோட்டையில் ஒரு பெண் மறுபடியும் ஜல்லிக்கட்டு நடத்திடுவாய்ங்களா தம்பி... மூனு நாலு வருசம் பிரச்சனையில்லாம இருந்தது என்றார்.
பொங்கல் விழாவே தலித் மக்களுக்கு மகிழ்ச்சியானதாக இருந்ததில்லை.
அந்த நாளைய ஒடுக்குமுறை நடைமுறைகளால் ஏற்பட்ட கசப்பின் மிச்சசொச்சம் இன்றும் பொங்கல் நாளில் இருப்பதால் மனம் உவந்து கொண்டாட முடிவதில்லை
பிரச்சனை போகி நாளில் இருந்து துவங்கி விடும். அதற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்னரே துவங்கிவிடும்.
ஒவ்வொரு கள்ளர் வீட்டுக்கும் ஒரு தலித் குடி இருப்பார். சில சமயங்களில் ஒரு தலித் இரண்டு அல்லது மூன்று கள்ளர் வீடுகளுக்குக் கூட குடியாக இருப்பார்.
போகிக்கு முன் புதிதாக மண் வெட்டி எடுத்துப் போட்டு அவர்கள் வீடுகளை மொழுகி சுத்தம் செய்ய வேண்டும்.
அன்றே புதிதாக மண்ணெடுத்து புது அடுப்பு செய்ய வேண்டும். வாசல் முழுவதும் மொழுகி சுத்தம் செய்ய வேண்டும்.
பொங்கல் வைக்க சந்தைக்குப் போய் புதிதாக பானை வாங்கி வருவது அந்தக் குடியின் வேலை. பக்கத்து ஊருக்குச் சென்று வாங்க வேண்டும்.
பொங்கல் அன்று புதிதாக விறகு கொண்டு வந்து தர வேண்டும். பலா இலை தைத்து சாப்பிட இலையும் தயார் செய்ய வேண்டும்.
அன்று காலையில் ஒரு பானையில் கொஞ்சம் கரும்பு, வெல்லம், அரிசி, தேங்காய் போட்டு வீட்டுக்கு வெளியில் வைத்து விடுவார்கள். வேலைகள் எல்லாம் முடித்து அவர்கள் பொங்கல் கும்பிட்டு முடித்த பிறகு வெளியே வைத்த அந்தப் பானையை அந்தக் குடி எடுத்துக் கொண்டு போய் மாலையில் குடி தனது வீட்டில் பொங்கல் வைக்க வேண்டும். தலித்துகளுக்கு பொங்கல், சூரியனுக்குப் படைப்பது அல்ல. இரவு நேரப் பொங்கல்தான். இந்தப் பழக்கத்தால், இந்த நடைமுறைகள் கடுமையான தொடர் போராட்டங்கள் மூலம் இப்போது ஒழிக்கப்பட்டுவிட்டன என்றாலும் இன்றும் மாலையில்தான் தலித் மக்கள் பொங்கல் வைக்கின்றனர்.
மறுநாள் மாட்டுப் பொங்கல். துன்பம் மேலும் அதிகரிக்கும் நாள் அது.
தான் குடியாக வேலை செய்யும் வீட்டுக்கு கோழி போட வேண்டும். (பிரச்சனைகள் வரும் போது கோழி போட்டு குடியிருக்க வேண்டுமா என்ற கேள்வி இன்றும் எழுப்பப்படுகிறது).
கன்னு பூவும் ஆவாரம் பூவும் கொண்டு போய் தர வேண்டும்.
மாடுகளை குளிப்பாட்ட வேண்டும். அலங்கரித்து தயார் செய்ய வேண்டும்.
பொங்கலுக்கு மறுநாள் கள்ளர் வீட்டுக்குச் சென்று தலித் சாப்பாடு வாங்க வேண்டும். போகத் தவறினால், ஏன் வரவில்லை அய்யராகி விட்டீர்களோ என்று கேட்பார்கள். அந்த வழக்கத்தை விட்டுவிடாமல் பாதுகாக்கும் முயற்சி ஆதிக்க சாதியினரிடம் உள்ளது.
மூன்றாவது நாள் மாடு திறப்பு நடக்கும். மாடுகளை வீடு வாரியாக திறந்துவிட வேண்டும். எந்த வீட்டு மாடு முதலில் திறந்துவிடப்படும், அடுத்து எந்த மாடு என்று முன்னரே பேசி வைத்திருப்பார்கள். முதல் கரை, இரண்டாவது கரை என்று சொல்வார்கள். அந்த வரிசை தவறினால் அதற்கு தலித்துகள்தான் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
காலையில் ஊரே கூடிவிடும். ஒவ்வொரு வீட்டு மாடாக திறக்கப்படும். மாடு திறக்கும் போது பறையடிப்பார்கள். பறையடிப்பவர்கள் வீடுவீடாகப் போய் மாடு அவிழ்த்து விட வேண்டும். இப்படி திறந்துவிடும் நேரத்தில் வீட்டுக்குள் இருந்து வேட்டியோ, துண்டோ தூக்கியெறிவார்கள். அதுவும் பழைய துண்டோ வேட்டியோதான்.
தலித் மக்கள் தங்கள் மாடுகளை கடைசி யாக திறக்க வேண்டும்.
இதுதான் தமிழர் திருநாள் என்று சொல்லப்படும் பொங்கல் சமயத்தில் தலித் மக்களுக்கு கிடைத்தது. இதுதான் இன்று பேசப்படும் தமிழர் கலாச்சாரம். ஜல்லிக்கட்டு, பொங்கல் விழா என எதிலும் தலித் மக்களுக்கு கவுரவமான இடமில்லை. இழிநிலைதான் இருந்தது.
தலித்துகள் தவிர பிற சேவை சாதிகளும் இந்த நேரத்தில் கள்ளர் வீடுகளுக்கு பல்வேறு சேவைகளை கூலியில்லாமல் செய்து தர வேண்டும். ஆசாரிகள், மரத்தில் புதிய அகப்பை செய்து தர வேண்டும். முடிதிருத்துவோர் ஆதிக்க சாதியினர் வீடுகளுக்குச் சென்று காசில் லாமல் முடி திருத்தும் வேலை செய்ய வேண்டும். சலவை தொழிலாளர்களும் அவர்கள் வீட்டு அழுக்குத் துணிகளை சலவை செய்து தர வேண்டும்.
இந்தப் பிரிவினர் இந்த ஒடுக்குமுறைகளுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இப்போது வேறு ஊர்களுக்குப் போய் விட்டார்கள்.
இவர்கள் தவிர அந்த மாதத்தில் பிடித்த பீடை நீங்க இரவு நேரத்தில் சங்கு ஊதும் வேலை ஒன்று உண்டு. அதைச் செய்பவர்களை தாதர் என்று அழைக்கிறார்கள்.
இதுபோன்ற இழிநடைமுறைகள் பொங்கல் விழாவுடன் நின்றுவிடவில்லை. வெவ்வேறு சாதியினர் தனித்தனியாக திருவிழா நடத்திக் கொள்வது தவிர ஊரே சேர்ந்து நடத்தும் விழாக்களில் இன்ன சாதி இன்ன வேலை செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. முத்தரையர் ஆடு வெட்டுவார். சாமி தூக்குவார். சலவை செய்பவர் சாமிக்கு போர்த்தும் துணியை சலவை செய்து வைப்பார். அத்துடன் நீளமான குச்சியில் துணி சுத்தி எண்ணெய் ஊற்றி பற்ற வைத்து தீவட்டியாக ஊர்வலத்தில் பிடித்து வருவார். அருந்ததியர் கொம்பு ஊதுவார். பறையர் பறையடிப்பார். பள்ளர் துப்புரவு வேலை பார்ப்பார்.
இவ்வளவு செய்தும் சாமி ஊர்வலம் தலித் தெருவுக்குள் வராது.
கோயில் விழாக்களிலும் தலித் மக்கள் அடிமை வேலை செய்யத்தான் அனுமதி உண்டே தவிர, வழிபாட்டுக்கு உரிமை இருப்ப தில்லை. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களிலும் இதுவே நிலைமை.
இதே ஊர்வலத்தில் சாமி ஊர்வலம் வரும்போது கள்ளர் சிலம்பம் சுற்றுவார்.

திருவிழா ஒன்றில் ஊருக்குள் சாமி ஊர்வலம் வராதது தொடர்பாக பிரச்சனை எழுப்பிய தலித் பிரிவினர், நாங்கள் பல பிரிவினர் சேர்ந்து பார்க்கும் பல வேலைகளால்தான் ஊர்வலம் நடக்கிறது, எந்த வேலையும் செய்யாத கள்ளர்கள் எங்களை ஒதுக்கி வைப்பது என்ன நியாயம், உண்மையில் எந்த வேலையும் செய்யாத அவர்களைத்தான் திருவிழாவில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து, தலித் தெருவுக்குள் வராத கோவில் திருவிழா நடத்த விடாமல் தடுத்தனர்.

Search