ஜல்லிக்கட்டு
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது
காவல்துறை
தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டு
போராட்டத்தில், தமிழகம் முழுவதும் அமைதியாகப்
போராடிய இளைஞர்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமான
தாக்குதலைக் தொடுத்தது. இதைக் கண்டித்தும் தலித்,
மீனவ மக்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமாக
தாக்குதல் நடத்திய தமிழக அரசை,
காவல்துறையைக் கண்டித்தும், காவல்துறை அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யக்
கோரியும், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் தற்கொலையைத் தடுத்து நிறுத்தாத அரசுகளைக்
கண்டித்தும் ஜனவரி 25 அன்று முற்போக்கு பெண்கள்
கழகம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சென்னை
மீனவர் குடியிருப்பில் காவல்துறை நடத்திய அத்துமீறல்களைக் கண்டித்து,
காவல்துறை அதிகாரிகள் பதவி விலகக் கோரி,
ஜனவரி 23 அன்று அம்பத்தூரில் நடந்த
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநகரக் குழு உறுப்பினர்
தோழர் மோகன் தலைமை தாங்கினார்.
காவல்துறை காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஜனவரி
23 அன்று கோவையில் இரட்டை ஆயுள் தண்டனை
பெற்று சிறை சென்ற தோழர்கள்
விடுதலையாகி திரும்பியபோது, அவர்களை வரவேற்க சிறைவாயிலுக்குச்
சென்ற பிரிக்கால் தொழிலாளர்கள் தவிர, மற்றவர்கள் அதே
நேரத்தில் பிரிக்கால் பிளான்ட் 1 மற்றும் 3 ஆலை வாயில்களில் நூற்றுக்கணக்கில்
திரண்டு, ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் தொடுத்த
காவல்துறையினரைக் கண்டித்தும், இந்தத் தாக்குதல்களுக்கு ஆணையிட்ட
அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யக்
கோரியும் முழக்கங்கள் எழுப்பினார்கள். அன்று சாந்தி கியர்ஸ்
வாயிலிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கந்தர்வகோட்டையில்
ஜனவரி 23 அன்று இகக(மாலெ)
மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி தலைமையில்
முழக்கம் எழுப்பி ஊர்வலமாக சென்று
ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இகக(மாலெ) மாநிலக் குழு
உறுப்பினர் தோழர் வளத்தான், மாவட்டக்
குழு உறுப்பினர்கள் தோழர்கள் இராஜாங்கம், ஜோதிவேல், விஜயன், அரசம்பட்டி தோழர்
க.நடராஜ், தோழர்
ரெங்கசாமி உட்பட பலரும் கலந்து
கொண்டனர்.