ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்து அகில இந்திய மக்கள் மேடை ஆர்ப்பாட்டம்
(மாலெ தீப்பொறி 2017 பிப்ரவரி 16 – 28)
ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராடினர். அந்தப் போராட்டத்தில் ஜனவரி 23 அன்று திட்டமிட்டு வன்முறை ஏவப்பட்டு, காவல்துறை அத்துமீறிச் செயல்பட்டு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது.
போராடிய மாணவர்கள், இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. விரட்டப்பட்டு அடிபட்டவர்களுக்கு ஆதரவளித்த மீனவ மக்களின் வீடுகளும் குடியிருப்புகளும் சந்தையும் தீக்கிரையாக்கப்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு முதலில் திட்டமிட்டு ஆதரவு அளித்த அரசும் காவல்துறையும் பின்னர் திட்டமிட்டு சமூக விரோதிகளைக் கொண்டும் போலீசாரே சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டும் கலவரத்தை உருவாக்கி, தடிஅடி, கண்ணீர்புகை குண்டுகள் வீசியுள்ளனர். சென்னை, கோவை, மதுரை, அலங்காநல்லூர் என பல பகுதிகளிலும் காவல் துறையால் பொதுமக்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்கள். போராட்டத்தை பிரச்சனையின்றி முடித்திருக்க வாய்ப்பிருந்தும் இனி மக்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து இதுபோல் போராட வந்து விடக் கூடாது என்கிற எண்ணத்தில் திட்டமிட்டு ஒடுக்குமுறை ஏவப்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசுகளும் காவல்துறையுமே போராட்டக்காரர்கள் மீது நடந்த இந்தத் தாக்குதல்களுக்குக் காரணம். இதன் மீது உண்மையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அதற்குக் காரணமானவர்கள் மீது, காவல்துறை உயர்அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரியும் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படக் கோரியும் அகில இந்திய மக்கள் மேடை மாநிலம் தழுவிய அளவில் 31.01.2017 அன்று போராட்டங்கள் நடத்தியது.
சென்னையில் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் மோகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மக்கள் மேடையின் தேசிய பிரச்சாரக் குழு உறுப்பினரும் தமிழக ஒருங்கிணைப்பாளருமான தோழர் வித்யாசாகர், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் பழனிவேல், புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் கண்ணன், ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர் சங்கர், அகில இந்திய மாணவர் கழக சென்னை மாநகர பொறுப்பாளர் தோழர் கோகுல், அம்பத்தூர் பகுதி பொறுப்பாளர் தோழர் கரண் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார், புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி ஆகியோரும் பங்கு கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அகில இந்திய மக்கள் மேடையின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ் தலைமை தாங்கினார். இககமாலெ மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன், ஆதி தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் கதிரவன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் அப்துல் ஜப்பார், எஸ்டிபிஅய் கட்சி மாவட்டத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி ஆகியோர் உரையாற்றினர். சிபிஅய்(எம்எல்) கணேசன், சுந்தர்ராஜ், கருப்பசாமி, ஆதிதமிழர் கட்சி காலேஸ், தமஜகவின் தாமஸ், தமிழ்சங்கம் பிரபா கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கோவையில் பிப்ரவரி 2 அன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இகக(மாலெ) மாநகரக் குழு உறுப்பினர் தோழர் வேல்முருகன் தலைமை வகித்தார். ஆதித் தமிழர் கட்சியின் தோழர் வெண்மணி, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் சுந்தரமூர்த்தி, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் வழக்கறிஞர் தோழர் ச.பாலமுருகன், இகக(மாலெ) மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் பெரோஸ் பாபு, சாந்தி கியர்ஸ் ஆலையின் தொழிற்சங்க முன்னோடி தோழர் பாலமுருகன், அகில இந்திய மக்கள் மேடையின் தேசிய பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.