சுய உதவிக் குழுக்களில் கடன் வாங்கிய பெண்களிடம் நுண்கடன் நிறுவனங்கள் கட்டாய வசூல் செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் அமைதிப் பேச்சுவார்த்தையில் தற்காலிகத் தீர்வு
நாகை மாவட்டத்தில் சுய உதவிக் குழு பெண்கள் நுண்கடன் நிறுவனங்களில் பெற்ற கடன்களை அந்த நிறுவனங்கள் கட்டாயமாக வசூலிப்பதால் அந்தப் பெண்களும் அவர்கள் குடும்பங்களும் சந்திக்கும் பிரச்சனைகளை அறிந்த அவிகிதொச தோழர்கள் அவர்களை போராட்டத்தில் அணிதிரட்டினர்.
மோடியின் பணமதிப்பகற்றும் நடவடிக்கையால் ஏற்பட்ட வேலையின்மை, கிராமப்புற வறியவர்களை கடுமையான நெருக்கடியில் தள்ளியுள்ள சூழலில் நுண்கடன் நிறுவனங்களின் கட்டாய வசூல் அவர்களை மேலும் துன்பத்தில் தள்ளியது. இந்த நிலைக்கு எதிராக, கடனை கட்டாயமாக வசூல் செய்யக் கூடாது என்று வலியுறுத்தியும் கடனை தமிழக அரசு ஏற்க வேண்டும், அல்லது தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று கோரியும் அது வரை ஓராண்டு காலத்துக்கு கடனைத் திருப்பிச் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியும் பிப்ரவரி 3 அன்று அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சீர்காழியில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டு பேசிய கிராமப்புற வறிய பெண்கள், நுண்கடன் நிறுவனங்களின் கட்டாய கடன் வசூலால் தாங்கள் சந்திக்கும் துன்பங்களை விவரித்தனர். கடுமையான வறட்சி நிலவுகிறபோது, வேலையும் கூலியும் இல்லாத நிலையில் கடனைத் திருப்பிச் செலுத்த மேலும் கடனில் தள்ளப்படுவதையும் மீள முடியாத துயரில் அவர்கள் வாழ்க்கை சிக்கிக் கொள்வதையும் எடுத்துரைத்தனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன், வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவின் அடிப்படையில் வட்டாட்சியருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் கடனை கட்டாயப்படுத்தி வசூல் செய்யக் கூடாது, கடன் திருப்பித் தராதவர்களை தகாத வார்த்தைகளில் பேசக் கூடாது, கடன் திருப்பிச் செலுத்தாதவர்களை, செலுத்தியவர்களுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது, கடன் வசூல் செய்ய வருபவர்களுக்கு இது போன்ற விசயங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனம் அறிவுரை வழங்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் நுண்கடன் நிறுவனங்களுக்கு கடிதம் தரப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோவன் தலைமை வகித்தார். இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கண்ணையன், புரட்சிகர இளைஞர் கழகத்தின் தோழர் ராஜசங்கர், அவிகிதொச தோழர்கள் அமிர்தலிங்கம், ஹரிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இகக(மாலெ) புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி நிறைவுரையாற்றினார். பேச்சுவார்த்தையில் தோழர்கள் ஆசைத்தம்பி மற்றும் இளங்கோவன் கலந்துகொண்டனர்.