COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, February 14, 2017

தமிழ்நாட்டில் உடனடியாக சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்!
ஏற்கனவே பல்வேறு வாழ்வாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிற தமிழக மக்களின் தலையில், அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத, ஆளும் கட்சியான அஇஅதிமுகவில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி, மேலும் நெருக்கடியை, சுமையை ஏற்றுகிறது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண தமிழ்நாட்டில் உடனடியாக சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

பாஜகவின் அரசியல் சதிகளை முறியடிப்போம்
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே தமிழக அரசியலில் நேரும் குழப்பங்களில் ஆதாயம் தேட, அதன் மூலம் தனது இருத்தலை வலுப்படுத்திக் கொள்ள பாஜக கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, பெரும்பான்மை வாக்குகள் பெற்று ஆட்சி அமைத்த முதலமைச்சர் மறைந்துவிட்ட சூழலில், அந்த வெற்றிடம் பாஜகவுக்கு சற்று நம்பிக்கை தர, மத்தியில் ஆட்சியில் இருப்பதை பயன்படுத்தி தமிழ்நாட்டு அரசியலில் தலையிட முனைகிறது. பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா அனைவரும் அப்படி எதுவும் இல்லை என்று எரிகிற சூடத்தை அடிக்காத குறையாய் சத்தியம் செய்கிறார்கள்.
பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தந்த விவரம் அடங்கிய கடிதத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரிய சசிகலாவை, ஆட்சி அமைக்க அழைக்காமல், ஊட்டியில் இருந்து டில்லி செல்ல வேண்டிய அவசியம், அதன் பிறகு அங்கிருந்து மும்பை செல்ல வேண்டிய அவசியம், அதன் பிறகு சென்னை திரும்பிய பிறகும், சசிகலாவின் இரண்டாவது கடிதத்துக்கும் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்த வேண்டிய அவசியம், ஆளுநருக்கு வந்திருப்பதற்குப் பின்னால் பாஜக இல்லை என்று சொன்னால் நம்ப இங்கு யாரும் இல்லை. ஆளுநரைப் பயன்படுத்தி மாற்றுக் கட்சிகளின் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் குழப்பம் ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றும் பாஜகவின் தந்திரத்தை அருணாசலபிரதேசத்திலும் உத்தர்கண்டிலும் நாடு ஏற்கனவே பார்த்துவிட்டது. தமிழ்நாடும் பல முறை, மத்திய அரசின் தலையீட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகள் கலைக்கப்பட்ட வரலாறு கொண்ட மாநிலம்தான். ஆக, எரிகிற வீட்டில் கிடைப்பதைச் சுருட்ட, மோடியின் பாஜக எடுக்கும் முயற்சிகளை தமிழக மக்கள் உறுதியாக எதிர்த்தாக வேண்டும்.
தமிழ்நாட்டில் பாஜக வேர் விட முடியாது, இடம் பிடிக்க முடியாது என்ற கருத்துக்கள், ஒரு வகையில், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருவதை காணத் தவறுகின்றன. பாஜக மத்தியில் தற்போது ஆட்சியைப் பிடித்த பிறகு பல்வேறு மாநிலங்களிலும் தனது செல்வாக்கை, இருத்தலை அதிகரித்துக் கொள்ள கடுமையான முயற்சிகள் மேற்கொள்கிறது. வெற்றியும் பெறுகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு வாயில் நுழையாத பாஜக தலைவர்கள் பெயர்களை எல்லாம், தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் சென்றதில், பாஜகவுக்கு தமிழ்நாட்டில் நுழைய பாதை அமைத்து கொடுத்ததில், அதற்கு ஓர் ஏற்புடைத் தன்மையை உருவாக்கிக் கொடுத்ததில், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் தவிர, தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளுக்கும் பங்குண்டு.
சாண் கிடைத்தால் முழம் எடுத்துக் கொள்ளும் காவி பாசிசம், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, 2016 இறுதி நெருங்கும்போது, கோவையில் சசிகுமார் கொல்லப்பட்ட பின்னணியில் கோவையையும் திருப்பூரையும் சில நாட்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சாதி வெறி தலை விரித்தாடுகிற தமிழ்நாட்டின் தற்போதைய சூழலில் மத வெறியைப் பற்ற வைக்கும் பரிசோதனைகளை பாஜக செய்து பார்க்கிறது. உத்தரபிரதேசத்திலோ, மகாராஷ்டிராவிலோ, குஜராத்திலோ நடப்பதுபோல் இல்லை என்றாலும், தமிழ்நாட்டின் சூழலுக்கு ஏற்ப தனது பாசிச நிகழ்ச்சி நிரலை பரிசோதித்துப் பார்க்கிறது. அதற்குத் தோதாகவே அஇஅதிமுக ஆட்சியும் இது வரை அமைந்தது.
இந்த நிலையில், மத்தியில் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்தும் பாஜகவின் முயற்சிகளை, அரசியல் சதிகளை, தமிழக மக்கள் உறுதியாக எதிர்த்திட வேண்டியுள்ளது.
கொள்ளைக் கூட்டம் தமிழ்நாட்டை கைப்பற்ற அனுமதியோம்
தமிழ்நாட்டில் குளங்கள், குன்றுகள், கண்மாய்கள் எல்லாம் காணாமல் போய்விட்டன என்று சகாயம் தலைமையிலான குழு கண்டுபிடித்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மணல் கொள்ளையர்களை பிடிக்கப் போன அரசு அதிகாரிகள் சிலர், சொல்லி வைத்தாற்போல், லாரி ஏறி செத்துப்போனார்கள். வனங்கள், தாது மணல், ஆற்று நீர், நிலத்தடி நீர் என கண்ணில் தெரியும் வளங்களை எல்லாம் அதிகாரம், அதிகாரிகள், குண்டர்கள் துணையுடன் வாரிச் சுருட்டிய கும்பல்தான் அஇஅதிமுக கும்பல். அந்தக் கும்பல் இன்று இரண்டாகப் பிரிந்து உரிமைப் போராட்டம் நடத்துவதாகக் காட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை, சிறையை, பெங்களூரு சிறையைப் பார்த்து விட்டேன், இனி என்ன இருக்கிறது என்று துணிச்சல் காட்டுகிற சசிகலா தலைமையிலான கொள்ளைக் கூட்டம் தங்கள் கொள்ளையைத் தொடர ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற கடுமையான முயற்சிகள் எடுக்கின்றன. அஇஅதிமுகவில் இன்று எதிரெதிர் முகாம்களாக இருப்பவர்கள் அனைவரும் ஒரே அணியாக இருந்து கடந்த அய்ந்தாண்டுகளாக தமிழ்நாட்டின் வளங்களை, கருவூலத்தை, திட்டம் போட்டு கொள்ளையடித்தவர்களே.
காபந்து முதலமைச்சர் பன்னீர்செல்வம், இந்த எல்லா கொள்ளைகளுக்கும் குற்ற நடவடிக்கைகளும் உடந்தையாக, அவற்றின் மூலம் பயனடைபவராக இருந்தவரே. அஇஅதிமுகவின் கடந்த ஆட்சியிலும் அதற்கு முந்தைய ஆட்சிகளிலும் அஇஅதிமுகவின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருந்து அவற்றை நிறைவேற்றியவரே. இன்று சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி இருப்பதால் அவர் புனிதராகிவிட மாட்டார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, நடந்த அனைத்துக்கும் சசிகலாவுக்கு துணைநின்றவர், ஜெயலலிதா இறந்து இரண்டு மாதங்களிலும் அதிகாரம் நோக்கி சசிகலா எடுத்த முயற்சிகளுக்கு எதிர்ப்பு எதுவும் காட்டாதவர், இன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவம் பற்றி, அவரது மரணம் பற்றி விசாரணை கமிசன் அமைப்பதாகச் சொல்வது அவர் தரப்பு மோசடியே.
அனைத்திற்கும் மேலாக, மோடியின் பண மதிப்பகற்றும் நடவடிக்கையால் நாட்டு மக்கள் துயரத்தில் தள்ளப்பட்டபோது, கோடிக்கணக்கில் பழைய நோட்டுக்களுடனும் புதிய 2000 தாள்களுடனும் பிடிபட்ட சேகர் ரெட்டியுடன் சேர்ந்து தானும் மொட்டையடித்துக் கொண்டு வந்த நிழற்படம், பன்னீர்செல்வம் யார் என்று தமிழக மக்களுக்கு ஏற்கனவே அடையாளம் காட்டியிருக்கிறது.
சசிகலா மீது சாமான்ய மக்களுக்கு, பல்வேறு குட்டி முதலாளித்துவ தப்பெண்ண அடிப்படைகளில் உருவாகியுள்ள எதிர்ப்பை தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதன்றி தமிழக மக்கள் பற்றி அக்கறையற்ற கொள்ளை கும்பலின் தளபதியாக இருந்த பன்னீர்செல்வம் எந்த விதத்திலும் சசிகலாவுக்கு மாற்றாக மாட்டார்.
இந்த கொள்ளை கும்பல்கள் மீது மக்கள் ஏற்கனவே வெறுப்படைந்துள்ளனர்; சீற்றத்தில் உள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டைக் கைப்பற்ற தமிழக மக்கள் ஒருநாளும் அனுமதிக்கக் கூடாது. 
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டு வருவோம்
தமிழ்நாட்டில் விவசாய நெருக்கடி முற்றி விவசாயிகளை சாவை நோக்கி விரட்டுகிறது. 200 பேருக்கும் மேல் உயிரிழந்த பிறகு அறிவிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இது தொடர்பாக அஇஅதிமுக அரசு எந்த விளைவு தரும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. வறட்சி நிவாரணம் என்று ஒப்புக்கு வெளியான அறிவிப்புக்குப் பின்னரும் விவசாயிகளின் சாவுகளும் தற்கொலைகளும் தொடர்கின்றன. விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள். நூறுநாள் வேலைத் திட்ட கூலி பல மாதங்களாக தரப்படாமல் பாக்கி உள்ளது.
தமிழ்நாட்டின் பொது விநியோகம் படிப்படியாக சீர்குலைக்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்புத் திட்டம் தமிழ்நாட்டில் அமலாக்கப்பட்ட பிறகு, அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லாமல், வாய்ப்பு இருக்கும் இடங்களில், வாய்ப்பு உள்ள வழிகளில் மக்களுக்கு தரப்படும் ரேசன் பொருட்களின் அளவு குறைக்கப்படுகிறது. ஆதார் எண் இணைப்பு திணிக்கப்பட்டு பல ரேசன் அட்டைகள் மதிப்பற்றவையாக்கப்படுகின்றன. அவற்றிலும், பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பல பொருட்கள் விநியோகம் வெட்டப்படுகிறது. தமிழ்நாட்டு அரசியலில் பொது விநியோகம் ஆதாரமான இடத்தைப் பிடித்திருப்பதால், இந்த சீர்குலைவு, ஓர் அரசாணை போட்டு, அறிவிக்கப்பட்டு நடத்தப்படாமல், ஏற்கனவே இருக்கும் முறைகேடுகளை அதிகாரபூர்வமாக முறைப்படுத்தி, நடத்தப்பட்டு, தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தில் கை வைக்கிறது.
தமிழகத்தின் இதர பிரிவு சாமான்ய மக்களும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி போராடிக் கொண்டிருக்கும்போது, ஆளும்கட்சியினர் அதிகாரப் போட்டியில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். ஒப்புக்குக் கூட, பெயரளவில் கூட மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதை மறந்தே விட்டார்கள். பன்னீர்செல்வமா, பழனிச்சாமியா என்ற கேள்விதான் முக்கியம் என்று முன்னிறுத்தப்படுகிற இந்த நேரத்தில், மக்கள் வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் என்ற கோணத்திலிருந்து, மக்கள் கோரிக்கைகளை அரசியல் நிகழ்ச்சிநிரலில் முன்னுக்குக் கொண்டு வர வேண்டியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு
சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆட்சிக்கு உரிமை கோரும் அஇஅதிமுகவின் தார்மீக உரிமையை கேள்விக்குள்ளாக்குகிறது. தாமதமாக என்றாலும், ஜெயலலிதா, சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம், சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் அவரை தண்டனையில் இருந்து காப்பாற்றிவிட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் தண்டனை பெற்றிருக்கிறார்கள். ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாக குன்ஹா வழங்கிய தீர்ப்பு சரி என்று சொல்லி, குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று குமாரசாமி சொன்ன தீர்ப்பு தவறு என்று சொல்லி உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் இறுதித் தீர்ப்பு வழங்கிவிட்டது.
அஇஅதிமுக தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் குன்ஹா தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அஇஅதிமுக ஆளும் தகுதியை இழக்கிறது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாக வேண்டும்.
மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஆட்சி, சட்டமன்றத்தில் பெரும்பான்மை, நிலையான ஆட்சி என்று இப்போது பேசுவது நாடாளுமன்ற முடக்குவாத, தொழில்நுட்பவாத வாதங்களாகவே இருக்கும்.
தமிழ்நாட்டையே சூறையாடிய கட்சியின் ஆட்சிக்குத்தான் சசிகலாவும் பன்னீர்செல்வமும் உரிமை கோரினார்கள். இப்போது சசிகலாவுக்கு பதில் அந்த இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி வந்துள்ளார். ஜெயலலிதா சந்தித்த வழக்கில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டுள்ள பின்னணியில், ஜெயலலிதா மற்றும் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி என்ற பெயரால் ஆட்சி அமைக்க எவரும் உரிமை கோர முடியாது.
பிப்ரவரி 14ஆம் தேதிய தீர்ப்பை காரணம் காட்டி, ஆளுநரோ, அவரை இயக்கும் பாஜகவோ, தங்களது இழுத்தடிப்பு நடவடிக்கைகளையும், ஆட்சியையும் அஇஅதிமுகவையும் கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகளையும் நியாயப்படுத்த முடியாது. இப்போதும் பாஜகவினர் நிலையான ஆட்சி என்று பேசி தங்கள் செல்வாக்கை நிலைநாட்ட முயற்சி செய்கின்றனர்.
உடனடியாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
தமிழக அரசியலில் தற்போது எழுந்துள்ள நெருக்கடியை தீர்க்க, அரசியல் சட்ட மரபுகள், விதிகள் எனச் சுருக்கப்பட்ட ஓர் அணுகுமுறையை முன்வைத்து, மேலே சென்றுவிட முடியாது. அஇஅதிமுக கும்பல்கள் தமிழக அரசியலை, சொத்து சேர்க்க யாருக்கு கூடுதல் வாய்ப்பு என்பது தொடர்பானதாக இந்த நெருக்கடியைச் சுருக்கப் பார்க்கின்றன. தமிழக அரசியல் தமிழக சாமான்ய மக்களின், வாக்களித்த மக்களின் வாழ்வாதாரம் தொடர்பானது. அது ஒரு கட்சியின் உட்கட்சி சண்டை தொடர்பானது அல்ல.
தமிழ்நாட்டில் ஊராட்சி முதல் கோட்டை வரை இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இல்லை. தேர்தல் நேரத்தில்தான், அதிகாரம் பிடிக்கும் கடுமையான போட்டியில், ஆளும் வர்க்கக் கட்சிகள் பெயரளவுக்காவது, மக்கள் பிரச்சனைகள் பற்றி பேச நேர்கிறது. அப்போது மட்டுமே மக்கள் எசமானர்களாக கருதப்படுகிறார்கள். அந்த நேரத்தில் மக்கள் பிரச்சனைகள் அரசியல் நிகழ்ச்சிநிரலின் மய்யத்துக்கு வருகின்றன.
தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள் பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டு வரவும், கொள்ளைக் கூட்டத்துக்குள் நடக்கும் போட்டிக்கு முடிவு கட்டவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் ஆட்சி தமிழ்நாட்டில் அமைவது மட்டுமே சரியான அரசியல் தீர்வாக அமையும். அதற்கு தமிழ்நாட்டில் உடனடியாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

Search