விவசாயத்தை, நீர்வளத்தை, நிலவளத்தை
அழித்து விடும் ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம்
அழித்து விடும் ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம்
பழ.ஆசைத்தம்பி
விவசாயத்தையும் நீர்வளத்தையும் அழித்து விடும் ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் விவசாயிகளும் அவர்களுக்கு ஆதரவாக மாணவர், இளைஞர் உட்பட்ட பிற பிரிவினரும் தீவிரமான
போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தமிழ்நாட்டில் இருக்கிறார். மண்பரிசோதனைக்கு தேவையான பொருட்கள் கொண்ட முடிப்பு ஒன்றை மத்திய அறிவியல் ஆய்வகம் உருவாக்கியுள்ளது. அதை அறிமுகப்படுத்தி பேசிய அவர் அது விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்கிறார். உங்கள் ஆய்வுக்கும் எங்கள் வாழ்வுக்கும் சற்றும் தொடர்பில்லாமல் இருக்கிறது என்று நெடுவாசல் விவசாயிகள் போராடிக் கொண்டிருப்பது பற்றி கேட்டபோது தனிப்பட்ட கருத்து சொல்ல முடியாது என்று சொல்கிறார். மத்திய அமைச்சர் அரசின் கருத்தைச் சொல்ல வேண்டியதுதானே. நாங்கள் விவசாயத்தை அழிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம், அதிலும் தமிழ்நாட்டு மக்களை எங்களுக்கு பிடிக்கவே இல்லை, எங்களை ஏற்றுக்கொள்ளாத தமிழக மக்கள் மீது நாங்கள் வாய்ப்பு கிடைக்கும் விதத்தில் எல்லாம் தாக்குதல் தொடுப்போம் என்ற மத்திய அரசின் கருத்தைச் சொல்ல அவர் தயாராக இல்லை.ஏற்கனவே கடுமையான விவசாய நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழக விவசாயிகளிடம் இருந்து ஓரளவு விவசாயம் நடக்கும் நெடுவாசலையும் பறித்துவிட திட்டம் இருக்கும் போது, அந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு மண் பரிசோதனை நடத்த ஆய்வு செய்யும் மத்திய அரசின் மூளை பரிசோதனை முதலில் தேவைப்படுகிறது. அந்த திட்டத்தை ஹர்ஷ் வர்தன் நெடுவாசலில் மக்கள் குவிந்திருக்கும் இடத்தில் வந்து துவக்கியிருக்கலாமே. அதற்கு மன்னார்குடி போய்விட்டார். விவசாயத்தை அழிக்க ஒப்புதல் தந்துவிட்டு மண் பரிசோதனைக்கு வந்துவிட்டாயா என்று விவசாயிகள் கேள்விக்கு அவரிடம் பதில் இருந்திருக்காது.
பொன்.ராதாகிருஷ்ணன் அரசியல்வாதிகள் கருத்து சொல்லக் கூடாது என்கிறார். மக்கள் சொல்கிறார்கள். விவசாயிகள் சொல்கிறார்கள். எங்களுக்கு விவசாயம் வேண்டும், நிலம் வேண்டும், நீர் வேண்டும், எண்ணெயை குடிக்க முடியாது, நெல்லும் வாழையும் கடலையும் பலாவும் வேண்டும், இவற்றை விளைவிக்க நீரும் நிலமும் வேண்டும் என்கிறார்கள். பொன். ராதாகிருஷ்ணன் போன்ற சங் பரிவார் தலைவர்கள் யோகா செய்து பசியை, தாகத்தை கடக்கும் மந்திரம் கற்றிருக்கலாம். உழைப்பு இல்லாததால் உணவும் அவர்களுக்குத் தேவையில்லை. நாள்தோறும் கடுமையான உழைத்துப் பிழைக்கும் சாமான்ய மக்கள் மூன்று வேளையும் நல்ல உணவாவது உண்ண வேண்டும். எண்ணெய் கிடைக்கும் என்பதால் தமிழ்நாட்டை பாலைவனமாக்க முடியாது. மத்திய அரசு மக்களுக்கு எதிராக எதுவும் செய்யாது என்று சொல்கிறார் எச்.ராஜா. மோடி ஆட்சியின் மூன்று ஆண்டுகள் முடியப் போகிறது. இது வரை எந்த மக்கள் சார்பு நல்ல நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. மாறாக, மக்கள் விரோத நடவடிக்கைகள் மட்டுமே மக்கள் பார்த்துள்ளனர். நவம்பர் 8 பேரழிவு விளைவில் இருந்து நாடு இன்னும் விடுபடவில்லை.
திட்டத்தை எதிர்ப்பவர்களின் பின்னணியை ஆராய வேண்டும், போராட்டக்காரர்கள் மத்தியில் பயங்கரவாத சக்திகள் இருக்கின்றன என்று வழக்கமான சங் பரிவார் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். பாஜகவின் திட்டங்களை எதிர்க்கும் அனைவரும் பயங்கரவாதிகள் என்றால் நாட்டு மக்கள் அனைவரும், நெடுவாசல் விவசாயிகள் அனைவரும், விவசாயத்தை அழிக்கும் திட்டம் வேண்டாம் என்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மாணவர்களும் இளைஞர்களும் இன்று பயங்கரவாதிகள்தான். ஆனால், மற்றவர்களை படுகொலை செய்பவர்கள்தான் பயங்கரவாதிகள் என்றால், பாஜககாரர்களை விட ஆபத்தான பயங்கரவாதிகள் நாட்டில் இல்லை. பாஜக தலைவர் இல.கணேசன் மிகவும் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு வானத்திலா குழாய் போட முடியும், நிலத்தில்தானே போட முடியும் என்கிறார்.
மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தனும் பொன்.ராதாகிருஷ்ணனும் இல.கணேசனும் பேசுவதைக் கேட்கும் சாமான்யர்களுக்கு இவர்கள் அறிவுடன்தான் பேசுகிறார்களா என்று கேள்வி எழக் கூடும்; மக்கள் நலன் காக்க நாளும் போராடும் சக்திகள், இவர்களது பேச்சுக்களுக்குப் பின் இருக்கும் மத்திய அரசின் விடாப்பிடியான கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கேள்விக்குள்ளாக்கி வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் பழனிச்சாமி மோடியுடன் பேசுவேன், மக்கள் விரோதத் திட்டங்களை வர விட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையை ஏவுகிறார். பட்டினிப் போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பட்டினிப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது என்று திருச்சி காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர். பட்டினிப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களை ஏமாற்றுகிற, ஒடுக்குமுறை ஏவுகிற ஜெயலலிதாவின் வழியை பழனிச்சாமி பிறழாமல் பின்பற்றுகிறார்.
தமிழ்நாடு வறட்சி மாவட்டம் என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஏற்கனவே நீர் வளம் அனைத்தையும் அஇஅதிமுக, திமுக ஆட்சிகள் நாசமாக்கிவிட்டன. புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாட்டின் வறட்சியான மாவட்டங்களில் ஒன்று. அந்த மாவட்டத்தின் இயல்புக்கு நெடு வாசல் ஒரு விதிவிலக்கு. இங்கு நிலத்தடி நீர்ப் பாசனம் கொண்டு விவசாயம் நடக்கிறது. ஒட்டுமொத்த புதுக்கோட்டை மாவட்டத்திலும் காண முடியாத பசுமை இங்கு காணப்படுகிறது. பகுதி முழுவதும் விவசாயம் நடக்கிறது. மக்கள், விவசாயிகள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் மண்ணெண்ணெய் இருக்கிறதா என்று பார்ப்பதாகச் சொல்லி வந்த ஓன்ஜிசி நிறுவனம், பகுதியில் பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டி, அவற்றில் ஆறு குழாய்களை மூடி பாதுகாப்பாக வைத்திருக்கிறது. ஒவ்வொரு குழாயும் 4 ஏக்கர் பரப்பளவு நிலத்தின் நடுவில் உள்ளது. இந்த நிலத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிலத்துக்குச் சொந்தக்காரருக்கு தரப்படுகிறது. இதற்கு மேல் வேறு எந்தத் தகவலும் நிலச் சொந்தக்காரருக்கு தெரியவில்லை.
பிப்ரவரி 15 அன்று வெளியான மத்திய மோடி அரசின் அறிவிப்புக்குப் பிறகுதான் குழாய்களின் பேராபத்து விவசாயிகளுக்குத் தெரிகிறது. இந்த ஆறு குழாய்களில் கனியான் கொல்லையில் உள்ள குழாயில் கசிவு இருந்த போது கூட பகுதி விவசாயிகள் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. இன்று ஒட்டு மொத்த விவசாயத்தையும் நிலத்தையும் நீர் வளத்தையும் ஒழித்துக் கட்டும் திட்டம் ஒன்றுடன் மோடி அரசு தமிழக விவசாயிகள் வாழ்வை சூறையாடப் பார்க்கிறது. தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாமல் இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் செத்துப்போனார்கள். அந்த அடிப்படை பிரச்சனை பற்றி இன்று வரை எதுவும் பேசாத, எந்த பொருளுள்ள நடவடிக்கையும் எடுக்காத மத்திய மோடி அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றுகிறது என்று தமிழக பாஜக தலைவர்கள் சொல்வதை நம்ப இங்கு விவரமற்றவர்கள் யாரும் இல்லை.
நெடுவாசல், கோட்டைக்காடு, கனியான்கொல்லை, வானக்கன்காடு, புள்ளான்விடுதி, நல்லாண்டார்கொல்லை, நல்லான்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இதுபோன்ற குழாய்கள் போடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் வந்து எண்ணெய் எடுத்து, லாபம் சம்பாதிக்கப் போகிறது. ஏற்கனவே செத்துக்கொண்டிருக்கும் விவசாயிகள் மேலும் சாகப் போகிறார்கள்.
மக்களை சாகடிக்கும் இதுபோன்ற திட்டங்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் என்று பெயர் சொல்கிறார்கள். தமிழக மக்கள் மத்தியில் திட்டத்துக்கு எழுந்து வரும் எதிர்ப்பைப் பார்த்து தமிழக பாஜகவினர் பின்வாங்குகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில்தான் திட்டம் கொண்டுவரப்பட்டது, நாங்கள் அமலாக்குகிறோம் அவ்வளவுதான் என்கிறார்கள். காங்கிரஸ் கொண்டு வந்த நூறு நாள் வேலைத் திட்டத்தை அமலாக்குவதில் அக்கறை காட்டாததுபோல், இந்தத் திட்டத்தையும் பாஜக அரசு கைவிட்டிருக்கலாமே. காங்கிரசை எதிர்த்துத்தானே ஆட்சிக்கு வந்தார்கள். பிறகு ஏன் அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை அமல்படுத்த கன்னியாகுமரியில் இருப்பவர்கள் முதல் டில்லியில் இருப்பவர்கள் வரை துடியாய் துடிக்கிறார்கள்?
புதுச்சேரி காங்கிரஸ் அரசு காரைக்காலில் திட்டத்தை அமலாக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டது. தமிழக ஆட்சியாளர்கள் பித்தம் தீர வழி தேடுகிறார்கள். திட்டத்துக்கு மின் விநியோகம் தரப்பட மாட்டாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்கிறார். போராட்டக்காரர்களை முதலமைச்சருடன் பேச வைக்கிறேன் என்று சொல்லி அதையும் தள்ளிப்போட்டுள்ளார். மோடியுடன் பேச வேண்டும் என்று முதலமைச்சர் சொல்கிறார். திட்டத்துக்கு மின்விநியோகம் இல்லை என்று சொல்லும்போது, புதுச்சேரி அரசு சொல்வது போல் திட்டத்தையே அமல்படுத்த முடியாது என்று, அதை நீட்டிக்க முடியாதா?
மக்களை ஏமாற்றும் பேச்சுக்கள் இனியும் எடுபடாது. தமிழக மக்கள் நல்ல வழி ஒன்று கண்டுபிடித்துவிட்டார்கள். நாங்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடியதுபோல் போராடுவோம் என்கிறார்கள். திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் ஓயாது என்கிறார்கள். பாஜக தமிழக மக்கள் முன் மண்டியிடப் போகிறது.
பிப்ரவரி 24 அன்று நெடுவாசலில் நடந்த போராட்டத்தில் இககமாலெ மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி, மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் விஜயன், பெரியக்கோட்டை ஊராட்சித் தலைவர் தோழர் கோவிந்தசாமி, ஹு ண்டாய் முன்னாள் தொழிலாளர் தோழர் சாக்ரடீஸ் ஆகியோர் கலந்துகொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், நத்தமாடிப்பட்டி சிப்காட் திட்டம் ஆகியவை உடனடியாக ரத்து செய்யப் பட வேண்டும் என்றும் கல்லாக்கோட்டை சாராய ஆலை மூடப்பட வேண்டும் என்றும் பிடாம்பட்டியில் கோவில் பெயரால் அரசு குளம், மரங்கள் சூறையாடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. பிப்ரவரி 26 அன்று கீரனூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பிப்ரவரி 26 அன்று இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினர் தோழர் தேசிகன், ஏஅய்சிசிடியு மாநிலக் குழு உறுப்பினர் தோழர் பாரதி ஆகியோர் நெடுவாசலுக்குச் சென்று போராட்டத்தில் இருந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.