COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, February 14, 2017

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரைக் கைது செய்! ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கமும் புரட்சிகர இளைஞர் கழகமும் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம்
மெரினாவிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராடியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய கொடிய தாக்குதலைக் கண்டித்து ஜனவரி 31 அன்று சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கமும் புரட்சிகர இளைஞர் கழகமும் இணைந்து சட்டமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின.
அன்று காலையே காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். வழக்கறிஞர்கள் கருப்பு கோட் அணிந்து கொண்டு காவல்துறை அடக்குமுறையைக் கண்டித்து ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்தும் இளைஞர்களுடன் அணிவகுத்தும் சட்டமன்றம் நோக்கி முழக்கமிட்டுச் சென்றனர். காவல்துறை தடுப்பரண்களைத் தாண்டிச் செல்ல முற்பட்டபோது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். தோழர் பாரதி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கர், கார்க்கிவேலன், அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
புரட்சிகர இளைஞர் கழகத்தின் கண்டன நிகழ்ச்சிகள்
திருவள்ளூர் மாவட்டம் காரனோடையில் ஜனவரி 31 அன்று புரட்சிகர இளைஞர் கழகச் செயலாளர் தோழர் ராஜேஷ் தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி, அஇவிகிதொச மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா, ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் திருநாவுக்கரசு கண்டன உரையாற்றினர். சேலத்திலும் குமரியிலும் புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க மாநில அமைப்புக் கூட்டம்
தமிழகத்தில் வழக்கறிஞர்களின் உரிமைக்காகவும் பல்வேறு மக்களின் ஜனநாயக கோரிக்கைகளுக்காகவும் குரல் கொடுத்து போராட்டக் களத்தில் நிற்கிற ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில அளவிலான கூட்டம் பிப்ரவரி 5 அன்று சென்னையில் நடத்தப்பட்டது. மறைந்த தோழர் சிறிலதா சுவாமிநாதனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருச்சி, தஞ்சை, கோவையிலிருந்து வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பாரதி கூட்டத்தை ஒருங்கிணைத்தார். இன்றைய தமிழக சூழலில் மாநில அளவில் வழக்கறிஞர்களுக்கான அமைப்பு துவங்கப்படுவதன் அவசியம், அமைப்பின் நோக்கம், சட்டதிட்டங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
மாநில மாநாடு நடத்துவதை நோக்கி செல்ல சென்னை தோழர்கள் பாரதி, அதியமான், சுரேஷ், சங்கர், திருவள்ளூர் தோழர்கள் கார்க்கி வேலன், பாலாஜி, திருநெல்வேலி தோழர் ரமேஷ், திருச்சி தோழர் தேசிகன், கோவை தோழர் லூயிஸ் ஆகிய 9 பேர் கொண்ட மாநில அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. இன்னும் விரிவாக திட்டமிட மார்ச் 5 அன்று அமைப்புக் குழு கூட்டம் சென்னையில் நடைபெறும்.

Search