டிரம்ப்
பதவியேற்ற நாள் முதலாய்
எதிர்ப்பு...
எங்கும் எதிர்ப்பு...
எஸ்.குமாரசாமி
டொனால்ட்
டிரம்ப் 20.01.2017 அன்று அய்க்கிய அமெரிக்காவின்
45ஆவது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். அந்த நாளிலேயே ‘அய்க்கிய
அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம்’ (LET US MAKE AMERICA GREAT AGAIN) என்ற
அவரது தேர்தல் முழக்கம்,
‘அய்க்கிய
அமெரிக்காவை மீண்டும் வெறுக்கச் செய்வோம்’ (LET US MAKE AMERICA HATE AGAIN) என்றுதான்
உண்மையில் பொருள்படும் என்று சொல்லி, டிரம்ப்
எதிர்ப்பாளர்கள் அய்க்கிய அமெரிக்காவிலும் உலகத்தின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு
தெரிவித்தார்கள்.
டொனால்ட்
டிரம்ப்புக்கு எதிராக, அவர் பதவியேற்ற
வாஷிங்டனிலேயே 5 லட்சம் பேர் பேரணியில்
திரண்டார் கள். வாஷிங்டன் பேரணியில்
சென்றோர் டிரம்ப் வேண்டாம், கூ
க்ளக்ஸ் கான் (ஆப்பிரிக்க அமெரிக்கர்களை
வேட்டையாடும் வெள்ளை நிறவெறி, இனவெறி
அமைப்பு) வேண்டாம், பாசிச அய்க்கிய அமெரிக்கா
வேண்டாம் என முழக்கம் எழுப்பினார்கள்.
அதே நாள், அய்க்கிய அமெரிக்காவின்
நியுயார்க், லாஸ் ஏஞ்சலிஸ், சிகாகோ,
டென்வர் நகரங்க ளிலும் எதிர்ப்புப்
பேரணிகள் நடந்தன. அமெரிக்க கண்டத்தின்
மறு பகுதியில் மெக்சிகோ, லிமா போன்ற நகரங்களில்,
அய்ரோப்பாவில் ஸ்டாக்ஹோம் முதல் புகாரெஸ்ட் வரையில்,
ஆசியாவில் கொல்கத்தா முதல் பேங்காக் வரையில்,
ஆப்பிரிக்காவில், லண்டன், பாரிஸ், ரோம்
நகரங்களில், ஆஸ்திரேலியாவில், நியூசிலாந்தில் நடந்த 673 பேரணிகளில் 48 லட்சம் பேர் கலந்து
கொண்டு டிரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. அமைப்பாளர்களின். காவல்துறையினரின் மதிப்பீடுகளை அணிதிரட்டல் தாண்டியது.
குடியேறுபவர்கள்,
நாடற்றோராக மாற்றப்படுபவர்கள், மதச் சிறுபான்மையினர், மாற்று
பாலினத்தவர், பூர்வகுடியினர், கருப்பு, பழுப்பு நிறத்தவர், மாற்றுத்
திறனாளிகள், பாலியல் வன்முறைத் தாக்குதலில்
தப்பிப் பிழைத்தவர்கள், பெண்கள் என மக்கள்
பிரிவினரின் கணிசமான பகுதியினரை, டிரம்ப்,
சிறுமைப்படுத்தினார்; ஆபத்தானவர்களாகக் காட்டினார்; அச்சுறுத்தினார். அவர்களுக்காக, அவர்களும், அவர்களைத் தாண்டியவர்களும், நாங்கள் காயப்பட்டுள்ளோம், நாங்கள்
அச்சுறுத்தப்பட்டுள்ளோம், தேர்தல் கால பேச்சுக்கள்படி
டிரம்ப் ஆட்சி இருந்தால் எங்களது
மேலும் வலுவான எதிர்ப்பை டிரம்ப்
சந்திக்க வேண்டி இருக்கும் என
அவர் பதவி ஏற்ற நாளிலேயே
செய்தி சொன்னார்கள்.
டிரம்ப்
பதவியேற்ற நாளில் என்ன சொன்னார்?
‘இந்த நாளிலிருந்து அய்க்கிய அமெரிக்காவை ஒரு லட்சியப் பார்வை
ஆளும், அது அமெரிக்கா முதலில்
என்று சொல்லும்’. ‘எல்லா அந்நிய நாட்டு
தலைநகரங்களிலும், புதிய உத்தரவு ஒலிக்கட்டும்.
இனி, வர்த்தகம், குடியேற்றம், அயல் விவகாரக் கொள்கை
என அனைத்துமே, அய்க்கிய அமெரிக்காவே முதலில் என்ற அடிப்படையில்
அமையும்’.
‘பேச்சு,
பேச்சு, பேச்சு, செயலே இல்லை
என ஆண்டவர்கள் நாட்டைக் கெடுத்து விட்டார்கள். நாம் வெறுமனே, ஒரு
நிர்வாகத்திடமிருந்து மற்றொரு நிர்வாகத்துக்கு, ஒரு
கட்சியிடமிருந்து மற்றொரு கட்சிக்கு அதிகாரத்தை
மாற்றவில்லை. தலைநகர் வாஷிங்டனில் இருந்து
எடுத்து, மக்களாகிய உங்களிடம் அதிகாரத்தைக் கொடுக்கிறோம்’.
‘பல பத்தாண்டுகளாக அமெரிக்க தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி, நாம் அந்நியத் தொழிலை
ஏற்படுத்தினோம். நமது நாட்டின் எல்லைகளைக்
காக்கத் தவறி பிற நாடுகளின்
எல்லைகளைக் காத்தோம். இந்த நாளிலிருந்து அமெரிக்காதான்
முதலில் இருக்கும். இரண்டு எளிய விதிகளைப்
பின்பற்றுவோம். அமெரிக்கப் பொருட்களை வாங்குவோம். அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துவோம். இனி வர்த்தகம், வரிகள்,
குடியேற்றம், அயல் விவாகரங்கள் என
எந்த விஷயத்திலும் ஒவ்வொரு முடிவும், அய்க்கிய
அமெரிக்க தொழிலாளர்களின், குடும்பங்களின் நலன்கள் காக்கவே எடுக்கப்படும்’.
‘அய்க்கிய
அமெரிக்காவின் தொழில்களைக் காப்பது (புரொடெக்சனிசம்), வளமைக்கும் வலிமைக்கும் இட்டுச் செல்லும். நாம்
நமது வேலைகளைத் திரும்பக் கொண்டு வருவோம். நாம்
நமது எல்லைகளைத் திரும்பக் கொண்டு வருவோம். நாம்
நமது செல்வங்களைத் திரும்பக் கொண்டு வருவோம்’.
‘நாம்,
நமது பழைய கூட்டணிகளை மறுஉறுதி
செய்வோம். புதிய கூட்டணிகளை அமைப்போம்.
தீவிரவாத இசுலாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக நாகரிக உலகை
ஒன்றுபடுத்துவோம். தீவிரவாத இசுலாமிய பயங்கரவாதத்தை இந்த பூமியின் முகத்திலிருந்து
அப்புறப்படுத்துவோம்’.
டிரம்ப்
உரை சொல்வதை ஆராய்ந்தால்
- அவரால், ஆபத்தானவர்களாகச் சித்தரிக்கப்பட்ட, சிறுமைப்படுத்தப்பட்ட, அச்சுறுத்தப்பட்டவர்களுக்கு, ஒப்புக்குக் கூட ஓர் ஆறுதல் வார்த்தை கூட டிரம்ப் சொல்லவில்லை. குறிப்பாக, லத்தின் அமெரிக்க வம்சாவழியினர், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், இசுலாமியர், பெண்கள், குடியேறிகள், மாற்றுத் திறனாளிகள், மாற்றுப் பாலினத்தவர் தொடர்பாக, தமது தேர்தல் கால பேச்சுக்களில் இருந்த வன்மம் தணியும், விஷம் விழுங்கப்படும் என டிரம்ப் ஏதும் சொல்லவில்லை. தாம் நிறவெறி, இன வெறி, ஆண் ஆதிக்க கருத்துக்களிலிருந்து சிறிதும் பின்வாங்கப் போவதில்லை என வெள்ளை இனத்தவர்க்குத் தம் செய்தியை மறு உறுதி செய்துள்ளார்.
- அநாகரிகமானது இசுலாம், பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் இசுலாம், இன்று உலகத்திற்குப் பெரும் துன்பம் தருகிற இசுலாமிய பயங்கரவாதத்துக்கு எதிரான, புஷ் காலத்தில் துவங்கப்பட்ட, அந்த சர்வதேசப் போரை, நான் தொடர்வேன் என்கிறார். யூத - கிறிஸ்துவ மத அடிப்படைவாதிகள் மற்றும் இந்துத்துவா சக்திகள் காதுகளில் இன்பத் தேன் பாயும் வகையில், தமது இந்தப் போர், இசுலாமிய பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டும் வரை தொடரும் என்கிறார்.
- உலகின் ஒரு பகுதி அய்க்கிய அமெ ரிக்கா, உலகிற்காக அய்க்கிய அமெரிக்கா என்ற மாயைகளை, பொய்மைக் கற்பிதங்களைப் போட்டு உடைத்துள்ளார். அவர், ‘அய்க்கிய அமெரிக்கா ஆளணும், மற்றவர்கள் அதை ஏற்று வாழணும்’ என்று தெளிவாகச் சொல்லி உள்ளார்.
- உலகைச் சூறையாடியது அய்க்கிய அமெரிக்கா. டிரம்ப், நமது செல்வங்களைத் திரும்பக் கொண்டு வருவோம் எனக் கூசாமல் பொய் சொல்கிறார். உலகையே ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்குவது அய்க்கிய அமெரிக்கா. டிரம்ப், எல்லைகளை மீட்போம் எனப் பொய் உரைக்கிறார்.
- வேலைகளைத் திரும்பக் கொண்டு வருவோம், அய்க்கிய அமெரிக்க தொழிலாளர்களின் குடும்பங்களின் நலன்களைக் காப்போம் என்று அவர் சொல்லும்போது, அவரைப் போன்றவர்கள், அந்த மக்களுக்கு எதிரான ஒரு வாழ்வுரிமை, ஜனநாயக உரிமைப் பறிப்புப் போர் இருக்கிறது எனச் சொல்வதாகப் புரிந்து கொள்வதுதான் நல்லது என, உலகெங்குமான முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக வரலாறு நமக்குச் சொல்லித் தந்துள்ளது.
டிரம்ப்பின்
சில உடனடி நடவடிக்கைகள்
2050ஆம்
ஆண்டு வாக்கில், சீனப் பொருளாதாரம் அய்க்கிய
அமெரிக்காவின் பொருளாதாரத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு பெரிதாகி
விடும் என்றும், சீனாவின் செல்வாக்கு பொருளாதாரத் துறை தாண்டி எல்லா
துறைகளிலும் இருக்கும் என்றும் இரண்டு வருடங்களுக்கு
முன்பு, எக்கனாமிஸ்ட் பத்திரிகை எழுதியது. டிரம்ப், இது வரையில் ரஷ்யாவோடு
மோதல், ரஷ்யா மீது பொருளாதாரத்
தடைகள், ரஷ்யாவை நேட்டோ படைகள்
கொண்டு சுற்றி வளைப்பது என்ற
அயல் விவகாரத்துறை அழுத்தத்தை சீனாவுக்கு எதிராகத் திருப்பப் பார்க்கிறார். சீனாவைச் சீண்டுகிறார். உலகமே ஒரே சீனா
கொள்கையைப் பின்பற்றுகிறது. சீனாவைத் துண்டாடி உருவாக்கப்பட்ட தாய்வானை தனி நாடாக ஏற்பதில்லை.
டிரம்ப், முதல் முறையாக இரு
சீனாக்கள் இருப்பதாகச் சொல்வதுபோல், தாய்வான் ஆட்சித் தலைவரோடு வலுவில்
தொலைபேசி உரையாடல் நடத்தினார். அய்நா உட்பட உலக
நாடுகள் தீர்மானம் போட்டு, இஸ்ரேல் பாலஸ்தீனத்தை
மேலும் மேலும் அபகரிக்கிறது, இஸ்ரேல்
பாலஸ்தீனத்தில் புதிய குடியேற்றங்களை நிறுத்த
வேண்டும், இஸ்ரேல் பாலஸ்தீனம் என்ற
இரு அரசுகள் இருக்க வேண்டும்
எனச் சொல்லும்போது, டிரம்ப், இஸ்ரேல் தலைநகரம் டெல்
அவிவ் நகரத்திலிருந்து ஜெருசலேம் நகருக்கு மாறலாம் என்கிறார். ஜெருசலேம்
பாலஸ்தீன் மக்கள் அதிகம் வாழும்
பகுதி. பாலஸ்தீன அரபு மக்களுக்கு, இசுலாமியர்களுக்குப்
புனித பூமி. டிரம்ப் அங்கே
இஸ்ரேல் தலைநகரை மாற்றலாம் எனச்
சொல்லும்போது, இரு அரசுகள், இஸ்ரேல்
தனி அரசு, பாலஸ்தீன் தனி
அரசு என்பது இனி கிடையாது,
தனி பாலஸ்தீனம் பற்றிய பேச்சு இனி
இல்லை என மிரட்டுகிறார்.
தமது இசுலாமிய பயங்கரவாத எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டிலிருந்து, அய்க்கிய அமெரிக்காவுக்குள்
புகலிடம் தேடி வருபவர் எவரையும்
120 நாட்களுக்கு அனுமதிக்க முடியாது என்று டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு
விவகாரங்கள் என்று வரும்போது, ஒபாமா
கேர் என அழைக்கப்படும், கட்டுப்படியாகும்
மருத்துவ சேவை திட்டத் தின்
மீது கை வைத்துள்ளார். அது
நீக்கப்பட்டு புது திட்டம் வரும்வரை,
எவருக்கும் செலவை அதிகரிக்கக் கூடாது
என்று உத்தரவிட்டுள்ளார். இரண்டாவது உத்தரவில், அரசு ஆளெடுக்கத் தடை
போட்டுள்ளார். இந்த உத்தரவில் கையெழுத்திடும்போதே,
இருமுறை தலையை நிமிர்த்தி, இந்த
உத்தரவு இராணுவத்திற்குப் பொருந்தாது எனத் தெரிவித்தார். அதாவது
பாதுகாப்பும் கவுரவமும் உள்ள புதிய அரசு
வேலைகள் கிடையாது. ஆனால் ஆண்டிற்கு 100 பில்லியன்
டாலர் பாதுகாப்புக்கு எனச் செலவழிக்கப்பட்டு, கொழுக்க
வைக்கப்பட்டுள்ள இராணுவ - தொழில் -அதிகாரவர்க்க - அரசியல்வாதி
அச்சு மேலும் செழிக்க, அங்கே
புதிய வேலைகள் வந்தால், அதில்
டிரம்புக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது.
கருத்தடை
பற்றி பெண்களுக்குத் தகவல் தரும் ஏழை
நாடுகளில் இயங்கும் சர்வதேச அறக்கட்டளைகளுக்கு இனி
அய்க்கிய அமெரிக்க அரசு நிதி வழங்கக்
கூடாது. இதுவும் டிரம்பின் பெண்கள்
எதிர்ப்பு, பெண் உடல் மீது
பெண்களுக்கு பாத்தியதை இல்லை என்ற பழமைவாத
ஆணாதிக்க கருத்தோடு தொடர்பு உடையதுதான்.
இத்தகைய
பின்னணியில்தான், அவர் பதவியேற்ற நாள்
அன்று நடந்த கருத்துக் கணிப்பில்,
டிரம்ப் அதிபராகத் தகுதியில்லாதவர் என 48% பேரும் தகுதியானவர்
என 38% பேரும் தெரிவித்துள்ளனர். (டிரம்ப்
எதிர்ப்புக்கு, அய்க்கிய அமெரிக்க அரசியல் நிறுவனங்களும் (எஸ்டாப்ளிஷ்மென்ட்)
ஊடகங்களும் உதவுகின்றன என்பது நமக்கு நிச்சயமாய்க்
கவனத்தில் உள்ளது).
உலகமயமே
உலகமயத்தை எதிர்க்குமா? தளபதியே போரிலிருந்து ஒதுங்குவாரா?
நிதிமூலதன
ஏகபோக ஏகாதிபத்திய உலகத்தின் தலைவன் அய்க்கிய அமெரிக்கா.
அது உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற நவதாராளவாதக் கொள்கையை
வழி நடத்துகிறது. ஏகாதிபத்தியம் என்றாலே நிச்சயம் போர்
என்றாகும். அய்க்கிய அமெரிக்காவின் புதிய தலைவர் டொனால்ட்
டிரம்ப். அய்க்கிய அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அய்க்கிய அமெரிக்கர்களுக்கே வேலை கொடுங்கள், வர்த்தகத்
தடைச் சுவர்களை எழுப்புவோம் எனப் பேசும்போது, டிரம்ப்
உலகமயத்தை எதிர்ப்பதாக ஆகாதா? மேலை உலகம்
நெடுக, அய்க்கிய அமெரிக்கா தாண்டி அய்ரோப்பா வரை,
2017 தேசபக்தர்களின் ஆண்டு என, எழுந்து
வரும் பல வலதுசாரி தலைவர்கள்
சொல்கிறார்கள். உலகமயம், அய்ரோப்பியமயம் தாண்டி, தத்தம் நாடு
என உள்நோக்கித் திரும்புவதாகத் துவங்கிய சுற்று, பிரெக்சிட்டில், அதாவது
பிரிட்டன் அய்ரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதிலிருந்து துவங்கிவிட்டது, ஓயாமல் முன் செல்கிறது
என்கிறார்கள்.
டிரம்ப்
உலகமயத்துக்கு எதிராகச் செயல்பட முடியுமா? டிரம்ப்
போர் வேண்டாம் என்று சொல்ல முடியுமா?
அய்க்கிய அமெரிக்கா, அது அதுவாக இருக்கும்
வரை, ஏகாதிபத்திய உலகமயத்திலிருந்து, போரிலிருந்து விலகிப் போகாது. ஒபாமாவின்
குடும்ப மத போதகர், ஆப்பிரிக்க
அமெரிக்க வம்சாவழியினர் ரெவரன்ட் ஜெரிமையா ரைட், ஒவ்வொரு குடியரசுத்
தலைவரும் சொல்வது போல், காட்
பிளஸ் அமெரிக்கா - கடவுள் அய்க்கிய அமெரிக்காவை
ஆசீர்வதிக்கட்டும் என்று சொல்வதற்குப் பதிலாக,
மானுடத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கடவுள்
அய்க்கிய அமெரிக்காவை என்றென்றும் நரகத்தில் இருக்குமாறு சபிக்கட்டும் (எர்க் ஈஹம்ய் அம்ங்ழ்ண்ஸ்ரீஹ)
என்றுதான் சொல்ல முடியும் என்றார்.
டிரம்ப்பின் இஸ்ரேல், சீனா மற்றும் இசுலாமிய
பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கைகள் உலகத்தை
போருக்கே இழுத்துச் செல்லும்.
இடதுசாரி
சிந்தனையாளர் நோம் சோம்ஸ்கி, இரண்டாம்
உலகப் போருக்குப் பின் நாஜிக்களை, பாசிஸ்ட்களை
விசாரிக்க, தண்டிக்க நடந்த நியூரம்பர்க் விசாரணை
போல் ஒன்று பின்னர் நடந்தால்,
அடுத்தடுத்த அய்க்கிய அமெரிக்க அதிபர்கள் எல்லாம், மனித குலத்திற்கு எதிரான
போர்க் குற்றவாளிகளாக மரண தண்டனை பெறத்
தகுதியுடையவர்களாகவே இருப்பார்கள் என்றார். அந்தப் பட்டியலில் இடம்
பெறும் அவப்புகழிலிருந்து டிரம்ப் நிச்சயம் தப்பிக்க
மாட்டார்.
டிரம்ப்பின்
‘தோற்ற அளவிலான உலகமய எதிர்ப்பை’
நாம் அப்படியே ஏற்றுக் கொண்டால், அது
அரசியல் வெகுளித்தனம் அல்லது பித்துக்குளித்தனமாக மட்டுமே
இருக்கும். முதலாளித்துவம் பிறக்கும் போதே தனது பதாகையில்
‘சுதந்திரச் சந்தை’ என்ற வாசகத்துடன்
பிறந்தது. ஆனால், கடல்வாழ் ஜீவராசிகள்
அனைத்திற்கும் ஒன்றை மற்றொன்று விழுங்கும்
சுதந்திரம் உண்டு என்று சொன்னாலும்,
நடை முறையில், பெரிய மீன்தான் சிறிய
மீன்களை விழுங்க முடியும்.
அய்க்கிய
அமெரிக்காவும் அய்ரோப்பிய நாடுகளும் தங்களது நாடுகளில் விவசாயத்துக்கு
பிரம்மாண்டமாக மான்யங்கள் வழங்கிக் கொண்டே, இந்தியா போன்ற
நாடுகளை மான்யங்களை ஒழிக்குமாறு நிர்ப்பந்தித்தனர். தங்கள் நாடுகள் பாதிக்கப்படாமல்
இருக்க, இறக்குமதிக்கு எதிராக காப்பு வரிச்சுவர்கள்
எழுப்பிக் கொண்டே, கீழை நாடுகளை,
காப்பு வரிச்சுவர்களை இடிக்கச் சொன்னார்கள். உலகமயம், மூலதனம் மற்றும் கூலி
உழைப்பின் தடையற்ற நடமாட்டத்தை உறுதி
செய்யும். தண்ணீர் பள்ளம் நோக்கிப்
பாய்வது போல், மூலதனம் லாபம்
நோக்கிப் பாயும். எந்தத் துறைகளில்,
எந்த நாடுகளில் கூடுதல் லாபம் கிடைக்கும்
என மூலதனம் பார்க்கும். இயற்கை
கனிம வளக் கொள்ளை சாத்தியமான
நாடுகளுக்கு மூலதனம் செல்வதை, குறை
கூலியில் கூடுதல் திறன் உழைப்பு
சக்தியைப் பெற வாய்ப்புள்ள நாடுகளுக்கு
மூலதனம் செல்வதை டிரம்ப் தடுக்க
முடியாது. டிரம்ப் இதுபற்றிச் சவடால்
அடிப்பது மட்டுமே சாத்தியம்.
நாணயத்தின்
மறு பக்கம் கூலி உழைப்பு. அய்க்கிய
அமெரிக்காவில் அகதிகள் நுழைய 120 நாட்களுக்கு
ட்ரம்ப் தடை விதித்துள்ளார். இரான்,
இராக், லிபியா, சிரியா, சோமாலியா,
பூடான், ஏமன் என்ற பெரும்பான்மை
மக்கள் இசுலாமியராய் உள்ள நாடுகளிலிருந்து எவரும்
90 நாட்களுக்கு அய்க்கிய அமெரிக்காவுக்குள் நுழையக் கூடாது என
உத்தரவிட்டுள்ளார். மோடி பங்களாதேஷிலிருந்து இசுலாமியர்
இந்தியா வந்தால் அவர்கள் சட்டவிரோத
தேசவிரோத குடியேறிகள் என்றும், இந்துக்கள் வந்தால் அவர்கள் துன்புறுத்தலால்
வந்த, பாதுகாக்கப்பட வேண்டிய அகதிகள் என்றும்
சொல்கிறார். டிரம்ப்பும் இந்த ஏழு இசுலாமிய
நாடுகளின் மதச் சிறுபான்மையினர்க்கு (கிறித்துவர்களுக்கு) விதிவிலக்கு
பற்றிப் பேசுகிறார்.
இந்த 7
நாடுகளைச் சேர்ந்த எந்த ஒருவராலும்,
கடந்த பல பத்தாண்டுகளில் ஓர்
அய்க்கிய அமெரிக்கர் கூட, தம் சொந்த
நாட்டில் கொல்லப்படவில்லை. சவுதி அரேபியா, கத்தார்,
அய்க்கிய அரபு குடியரசு, துபாய்
போன்ற அய்க்கிய அமெரிக்க நண்பர்கள்தான் பயங்கரவாதிகளை வழங்கினர்; ஊட்டி வளர்த்தனர். வேறு
வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களால் அமைந்த
அய்க்கிய அமெரிக்கா, இன்று, இந்த அநீதியான
தடையை விதித்துள்ளது. இந்தத் தடைக்கு எதிராக
போரட்டங்கள் நடக்கின்றன. நீதிமன்றங்கள் தடை தந்துள்ளன. அய்க்கிய
அமெரிக்காவின் கூட்டாளிகளான, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி,
பிரான்ஸ், நார்வே உள்ளிட்ட நாடுகள்,
இந்த முடிவை விமர்சனம் செய்துள்ளன.
கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள், டிவிட்டர் என்ற அனைத்து நிறுவனங்களும்
தங்களது ஆளெடுக்கும் உரிமை பறி போவதாகச்
சொல்கிறார்கள்.
அய்க்கிய
அமெரிக்காவில் உழைப்புச் சந்தையில் 14.5 கோடி பேர் உள்ளனர்.
சந்தையில் ஒவ்வொரு மாதமும் 15 லட்சம்
பேர் வேலை இழக்கிறார்கள். பிறகு
ஏதாவது, அதைவிடக் குறைந்த சம்பள வேலைக்குச்
செல்கிறார்கள். இந்தப் பின்னணியில், டிரம்ப்பின்
அழைப்பை ஏற்று இண்டியானாவின் கேரியர்
தொழிற்சாலையில் 800 வேலைகளும் மிஷிகனின் ஃபோர்ட் தொழிற்சாலையில் 700 வேலைகளும்
போட்டுத் தருவதாக டிரம்ப்பிடம் சொல்லி
உள்ளனர். டிரம்ப்புக்கும் அவரது நாட்டு முதலாளிகளுக்கும்
இடையிலான முரண்பாடு அடுத்தடுத்து எப்படி கையாளப்படுகிறது எனக்
காண வேண்டியுள்ளது.
8 ஆண்டுகள்
பதவியில் இருந்த ஒபாமா, வெள்ளை
மாளிகையை விட்டு வெளியேறும் முன்
ஓர் உரையில் அய்க்கிய அமெரிக்காவுக்கு
ஒரு புதிய சமூக ஒப்பந்தம்
வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
‘நமது எல்லா குழந்தைகளுக்கும் அவர்களுக்குத்
தேவைப்படும் கல்வியை உத்தரவாதம் செய்ய,
மேலான ஊதியத்துக்காக சங்கம் வைக்கும் அதிகாரத்தை
தொழிலாளர்களுக்கு வழங்க, இன்று நாம்
வாழும் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் வகையில் சமூகப் பாதுகாப்பு
வலையை மேலானதாக்க, புதிய பொருளாதா ரத்தால்
அதிக ஆதாயம் அடையும் கார்ப்பரேட்
நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள்
அவர்களது வெற்றியை சாத்தியமாக்கிய நாட்டுக்கு அவர்கள் பங்கைச் செலுத்தாமல்
தவிர்ப்பதை தடுக்கும் வகையில் வரிச் சட்டங்களைத்
திருத்த, ஒரு புதிய சமூக
ஒப்பந்தம் வேண்டும்’.
ஒபாமா போன்றவர்கள், இது போன்ற பணிகளைச்
செய்யத் தவறியதால்தான், உலக முதலாளித்துவ நெருக்கடியால்தான்,
தேசியம் பேசும் டிரம்ப் போன்ற
வலதுசாரி ‘தேச பக்தர்கள்’ உலகம்
முழுவதும் அதிகாரத்திற்கு வந்துள்ளனர். அவர்களுக்கான அடுத்த சுற்று நெருக்கடி
காத்திருக்கிறது.