மாருதி
தொழிலாளர்கள் மீது
கல்லூரி ஆசிரியர்
கே.என்.சாய்பாபா மீது
பாய்ந்தன கொடும்
தண்டனைகள்
மார்ச் 7 அன்று டெல்லி பல்கலைக் கழக ஆசிரியர்
கே.என்.சாய்பாபாவுக்கு மகாராஷ்டிராவின் கட்சிரோலி அமர்வு நீதிமன்றம் சட்ட விரோத
நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 120-பி படி ஆயுள் தண்டனை வழங்கியது.
கே.என்.சாய்பாபா சக்கர நாற்காலியில் நகர்பவர். அவர் உடல் இயக்கத்தில் 90% முடங்கியுள்ளது.
தடைசெய்யப்பட்ட
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட்டில்
ஊக்கமாகச் செயல்பட்டவர், அந்த தடை செய்யப்பட்ட அமைப்பின் பிரசுரங்களை,
இலக்கியங்களை
வைத்திருந்தார், அதன் கூட்டங்களில்
நடவடிக்கைகளில் பிரச்சாரத்தில் பங்கேற்றார் என்பவையே அவர் மீது சுமத்தப்பட்ட,
நிரூபிக்கப்பட்டதாகச்
சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள்.
இந்திய
உச்சநீதிமன்றம், நீதிபதிகள்
மார்க் கண்டேய கட்ஜ÷, கியான் சுதா
மிஸ்ரா மூலம் அருப் புயான் வழக்கில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பில் ஒருவர் உறுப்பினராக இருப்பதே குற்றம்
இல்லை எனத் தீர்ப் பளித்துள்ளது. பிரசுரங்கள் இலக்கியங்கள் வைத்திருந்தது, பிரச்சாரம் செய்தது, பகிரங்கமான கூட்டங்களில் கலந்து கொண்டது எப்படி
அரசுக்கெதிரான போர் தொடுத்ததாக ஆகும்? கே.என்.சாய்பாபா அவரளவில் எவருக்கும் ஒரு கீறல் விழக் காரணமாக இருந்ததாகக் கூட
அரசு தரப்பு சொல்லவில்லை. 90% உடல் இயக்கம்
இல்லாதவர், இரகசிய பயங்கரவாத
நடவடிக்கைகளில் ஈடுபடுவது எப்படி சாத்தியம் என அரசு தரப்பு விளக்கவில்லை.
சாய்பாபா
வீட்டில் சட்டவிரோத ஆவணங்கள் குறுந்தகடுகள் கைப்பற்றப்பட்டதற்கு ஜகத் போலே என்பவர்
சாட்சியாக விசாரிக்கப்பட்டார். சோதனை நடந்தபோது, இவரும் சாய்பாபாவும் சாய்பாபா வீட்டிற்கு
வெளியில் நின்று கொண்டிருந்ததாக, இவர் சொல்கிறார்.
கல்லூரி ஆசிரியர்களும் வழக்கறிஞர்களும் சோதனையின்போது, தாங்கள் இருப்பதாக முன்வந்தும் அவர்கள்
அனுமதிக்கப்படவில்லை என நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
சாட்சி ஜகத் போலே
தமக்கு எந்த மொழி யிலும் எழுதப் படிக்கத் தெரியாது என்றும், ஆங்கிலத்தில் கையெழுத்து போட மட்டுமே தெரியும்
என்றும் சொல்கிறார். இவரது சாட்சியத்தையும், அதன் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்களையும்
நிராகரித்திருக்க வேண்டிய நீதிமன்றம், கைப்பற்றுதல் மகஜரில் இவர் கையொப்பம் இருப்பதால், இவர் சாட்சியத்தை ஏற்பதாகச் சொல்லி உள்ளது!
மொத்த கைப்பற்றுதலும், ஏறத்தாழ 2 டஜன் போலீசார் முன் வீடியோ பதிவு
செய்யப்பட்டது என வழக்காடிய அரசு தரப்பு, அந்த வீடியோ பதிவுகளைத் தாக்கல் செய்யவில்லை. இப்படியாக வழக்கு நெடுக
ஓட்டைகள்.
சாய்பாபா
அறிவுசார் பயங்கரவாதத்தில் ஈடுபட்டார் எனச் சொன்ன நீதிமன்றம், மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தால் தொழில்மயமாக்கமும்
வளர்ச்சியும் முடங்கிப் போனதால், அவர் 90% உடல் இயக்கம் இல்லாதவர் என்றபோதும், ஆயுள் தண்டனை வழங்குவதாகச் சொன்னது. கூடுதல்
தண்டனை வழங்க வேண்டி உள்ளது என்றபோதும், சட்டப்படி அதற்கு இடமில்லாததால் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளதாக தெரிவித்தது.
சட்டப்படியும்
சாட்சியங்கள் அடிப்படையிலும் அல்லாது, காவி கார்ப்பரேட் ராஜ்ஜியத்தின் அரசியல் தீர்ப்பாகவே சாய்பாபாவின் ஆயுள்
தண்டனை அமைந்துள்ளது.
முதலாளிகள்
எண்ணப்படி, மார்ச் 10 அன்று, மற்றுமொரு கார்ப்பரேட் ஆதரவு தீர்ப்பு வந்தது.
மாருதியில் 148 தொழிலாளர்கள்
வழக்கில், 117 பேரை விடுதலை
செய்வதாகவும் 31 பேர் குற்றவாளிகள் என நிரூபணமாகி உள்ளதாகவும்
குர்கான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
2012ல் மாருதி
மனேசரில் தொழிலாளர்கள் சங்கம் வைத்தார்கள். நிர்வாகம் சங்கப் பதிவுக்கே தடை
போட்டது. அரசு அதிகாரிகளும் காவல்துறையும் நிர்வாகம் பக்கம் நின்றார்கள்.
தொழிற்சாலையில்
நிரந்தரத் தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் சேர்ந்து வேலை நிறுத்தம்
செய்தனர். நிர்வாகம் பவுன்சர்கள் என்ற ரவுடிகளைத் தொழிற்சாலைக்குள் கொண்டு வந்தது.
ரவுடிகள் தாக்கத் துவங்கியதாகத் தொழிலாளர்கள் சொன்னார்கள். அரசும் காவல்துறையும்
நிர்வாகத்தோடு சேர்ந்து கொண்டு, 208 தொழிலாளர்கள்,
98 மேலாளர்களைத்
தாக்கியதாகவும் அவினாஷ் குமார் தேவ் என்ற மனிதவளத்துறை அதிகாரி கால்கள் உடைக்கப்பட்டு,
தீயால் கொல்லப்பட்டார்
என்றும் வழக்கு ஜோடித்தார்கள்.
1560 நிரந்தரத்
தொழிலாளர்களில் 560 பேரும்,
2000 ஒப்பந்தத் தொழிலாளர்கள்
மொத்தமாகவும் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். 148 பேர் மீது குற்றச்சாட்டுக்கள் கடைசியில்
பதிவாகி வழக்கு நடந்தது. இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குவார்கள்
என்று சொல்லி பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. வழக்கு
முடியும் வரை 11 பேருக்கு ஜாமீன்
கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றம் வரை வழக்கு நடந்த பிறகுதான் மற்றவர்களுக்கு ஜாமீன்
கிடைத்தது.
அமர்வு
நீதிமன்றத்தில் தொழிலாளர்களுக்காக விருந்தா குரோவர், ரெபெக்கா ஜான் என்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்
வழக்காடினர். நிர்வாகம் வழக்குக்காக கோடி கோடியாகச் செலவழித்தது. தீர்ப்பு
வழங்கப்பட்ட நாளில், நீதிமன்றத்தைச்
சுற்றிலும் மாருதி ஆலை இருந்த தொழில் மண்டலத்திலும் காவல்துறையினர்
குவிக்கப்பட்டனர். 117 தொழிலாளர்கள்
விடுதலை செய்யப்பட்டனர். பெரும்எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வன்முறையில்
ஈடுபட்டார்கள் என்று சொல்லவே 148 பேர் மேல்
வழக்கு போடப்பட்டது. 117 பேர் மீது தவறாக
வழக்கு ஜோடிக்கப்பட்டது தெரிகிறது. அவர்கள் சிறை வைக்கப்பட்டதால், தங்கள் வாழ்க்கையில் இழந்த 4ணீ
வருடங்களை நீதிமன்றமோ, அரசோ, நிர்வாகமோ திரும்பத் தருவார்களா?
மீதமுள்ள 31 பேரில் 13 சங்க நிர்வாகிகள் மீது கொலைக் குற்றம்
நிரூபணமானதாகத் தீர்ப்பு சொல்கிறது. தண்டனை என்ன என 17.03.2017 அன்று தெரியும். மூலதன விசிவாசிகள் சிலர்,
மரண தண்டனை வேண்டும்
என்று வெறிக் கூச்சல் எழுப்புகிறார்கள். ராம்மெஹர் சந்திப் தில்லான், ராம் நிவாஸ், சரப்ஜித் சிங், பவான் குமார், சோஹன் குமார், அஜ்மெர் சிங், சுரேஷ்குமார், அமர்ஜித், தன்ராஜ் பாம்பி, பிரதீப் குஜ்ஜார், யோகேஷ், ஜியாலால் -உங் கள் 13 பேருக்காகவும் மற்ற 18 பேருக்காகவும் நிச்சயமாய், இந்திய பாட்டாளி வர்க்கம் குரல் கொடுக்கும்.
இந்தத்
தீர்ப்பும் சாட்சியங்கள் அடிப்படையில் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அவினாஷ்குமார் தேவ், தீப்புகையில்
மூச்சுத் திணறி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை சொல்கிறது. தீ வைத்தது யார் என
எந்த சாட்சியும் சொல்லவில்லை. தீயில் எல்லாம் கருகியது என ஜோடித்த அரசுத் தரப்பு
தீப்பெட்டியும் பட்டைகளும் குச்சிகளும் மட்டுமே எரியாமல் இருந்தது எப்படி எனச்
சொல்லவே இல்லை! கம்பு, கட்டை, ராடு ஆகியவை தாக்குதல் ஆயுதங்கள் என வழக்கில்
சொன்னவர்கள், சாட்சி
விசாரிக்கும்போது டோர் பிரேமிலிருந்து தாக்குதல் நடத்தியதாகச் சொல்லி உள்ளார்கள்.
சந்தேகத்தின் பலன், தவறாக, அநீதியான முறையில், அரசு (நிர்வாக) தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு
முழுமையாக 17.03.2017 வெளிவந்த பிறகு,
தீர்ப்பில் உள்ள மற்ற
ஓட்டைகள் தவறுகள் நிச்சயம் நமக்குத் தெரியும். ஒன்று மட்டும் நிச்சயம். 13 நிர்வாகிகளுக்குத் தண்டனை என்பது, தொழிற்சங்க இயக்கத்தை, முன்னோடிகளை மிரட்டவும் முடக்கிப் போடவும்
வழங்கப்பட்ட தண்டனை. மூலதனமும் அதன் விசுவாசிகளும், தனிச் சொத்தின் பாதுகாவலர்களும், நமக்கு, தொழிலாளர்களுக்கு நல்ல பாடம் என்று
நினைக்கிறார்கள். நாடெங்குமுள்ள தொழிலாளர்கள் இந்தத் தீர்ப்புக்கு எதிராகக்
கிளர்ந்தெழுந்து, குளவிக்
கூட்டுக்குள் கைவைத்துவிட்டோம் என ஆட்சியாளர்களுக்கு உணர்த்துவார்கள்.
மூலதனம் தயாராகவே
உள்ளது. தண்டித் துள்ளது. பாடம் புகட்டிவிட்டதாக இறுமாப்பில் உள்ளது. கூலி உழைப்பு,
தொழிலாளர் வர்க்கம்
நாடெங்கும் நல்ல பதிலடி தர வேண்டும்.
ஏஅய்சிசிடியு
ஏற்கனவே கோவையில் மாருதி தொழிலாளருக்கு ஆதரவாக அனைத்து சங்க கருத்தரங்கம்
நடத்தியது. நிதி திரட்டி மனேசர் சென்று வழங்கியது. அதற்குப் பின்னர் தோழர் குசேலன்
சங்கம் சிஅய்டியு போன்றோரும் நிதி வழங்கினர்.
மாருதி
தொழிலாளர்களுக்கு தண்டனை வழங்கப்படக் கூடாது என சில லட்சம் தொழிலாளர்கள் தலைநகர்
தொழில் மண்டலத்தில் மார்ச 16 அன்று உணவு
புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது, ஏஅய்சிசிடியு, கோவையில்
பிரிக்கால் சாந்தி கியர்ஸ் ஆலைகளில் உணவு புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் மூலம் ஒருமைப்பாடு தெரிவித்தது.
சென்னையில் அம்பத்தூர் உழவர் சந்தையில் மாநிலச் செயலாளர் தோழர் பழனிவேல் தலைமையில்
உண்ணாவிரதம் நடத்தியது. திண்டுக்கல்லில் சுவரொட்டி வெளியிடப்பட்டது.
மாருதி
தொழிலாளர்களுக்கு நீதி கோரும் இந்த இயக்கத்தில் ஏஅய்சிசிடியு அனைத்து சங்கங்களின்
ஒத்துழைப்பையும் நாடுகிறது. சென்னை மற்றும் தமிழ்நாடு நெடுக நாம் மாருதி
தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு போராட வேண்டும்.
மார்ச் 23 திருபெரும்புதூரில் பகத்சிங் நினைவு நாளில்
நடக்க உள்ள உறுதிமொழி ஏற்புக் கூட்டத்தில், மாருதி, பிரிக்கால் தொழிலாளர் விடுதலை கோரிக்கை
எழுப்பப்படும். மே 1 கோவை பேரணி,
மாருதி, பிரிக்கால் தொழிலாளர்கள் விடுதலைக்காகக் குரல்
கொடுக்கும்.
தோழர் எஸ்.குமாரசாமி பிரிக்கால் தொழிலாளர் வழக்கில்
மேல் முறையீட்டுக்காகவும், கட்சி அரசியல் தலைமைக்குழு கூட்டத்திற்காகவும் மார்ச்
16 முதல்
20 வரை
டெல்லி செல்கிறார். அப்போது மாருதி தொழிலாளர்களைச் சந்திக்க முயற்சிப்பார். கோவை
மே தினப் பேரணியில் கலந்துகொள்ள மாருதி தொழிலாளர்கள் அழைக்கப்படுவார்கள்.