மாருதி
தொழிலாளர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கேட்டது நியாயமா?
எஸ்.குமாரசாமி
கட்சியின்
அரசியல் தலைமைக்குழு கூட்டம் மார்ச் 17 - 18 தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. கூட்டம்
நடக்கும்போதே, மார்ச் 17 அன்று, 13 மாருதி தொழிலாளர்களுக்கு மரண தண்டனை
வழங்குமாறு அரசு தரப்பு வாதாடியது தெரிய வந்தது. மார்ச் 18 அன்று மாலை அவர்களுக்கு ஆயுள் தண்டனை
வழங்கப்பட்டதும் 18 பேருக்கு வேறு
வேறு தண்டனைகள் வழங்கப்பட்டதும் தெரிந்தது. மார்ச் 20 அன்று பிரிக்காலின் இரண்டு தொழிலாளர்கள் ஆயுள்
தண்டனைக்கெதிராக, உச்சநீதிமன்றம்
சென்று நீதிமன்ற நடவடிக்கைகளைக் கவனிப்பதும், மேல்முறையீட்டிற்கு ஏற்பாடு செய்வதும், அவசியமாய் இருந்தது.
இந்தப்
பின்னணியில் ஏற்கனவே திட்டமிட்டபடி 19.03.2017 அன்று மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின்
தற்காலிக செயற்குழு உறுப்பினர்களான தோழர்கள் அமித், குஷி ராம், ராம் நிவாஸ், ஜிதேந்தர், சதிஷ் ஆகியோரை, அவர்கள் தங்கி செயல்படும் குர்கானுக்குச்
சென்று சந்தித்தேன். என்னோடு தோழர்கள் விஸ்மாய் மற்றும் இத்ரிஷ் வந்திருந்தனர்.
மாருதி தோழர்கள் மதிய உணவு தயாரித்து தந்தனர்.
மார்ச் 10 அன்று விடுதலையான ஒரு தொழிலாளி, ஆயுள் தண்டனை பெற்றவர்கள் குடும்பங்களை பார்த்த
பிறகே, தன் ஊருக்குச்
செல்லவிருப்பதாகச் சொன்னார். மாருதி தோழர்களை, மே 1 கோவை பேரணிக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தேன். தோழர்கள் செஷன்ஸ்
வழக்கு 15/2013ல் செஷன்ஸ்
நீதிபதி ராஜிந்தர் பால் கோயல் வழங்கிய 573 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை படிக்கத் தந்தார்கள். நீதிமன்றத்திலும் மக்கள்
மன்றத்திலும் தொடர்ந்து போராடப் போவதாகச் சொன்னார்கள்.
தொழிலாளர்
தரப்பில், உச்சநீதிமன்ற
மூத்த வழக்கறிஞர்கள் ரெபக்கா ஜான், விருந்தா குரோவர்
ஆகியோரும், ஆர்.எஸ்.சீமாவும்,
மிகுந்த அக்கறையுடனும்
திறமையுடனும் வாதாடினார்கள். திணறிப் போன நீதிமன்றம் வேறு வழி இல்லாமல்,
117 பேரை விடுதலை செய்தது.
பொய் வழக்கு, பொய்
சாட்சியங்கள் பற்றி தீர்ப்பின் பத்திகள் 469, 470, 471, 472, 473, 474, 476ல் நீதிபதி குறிப்பிட்டதைத் தீர்ப்பில்
பார்த்தேன்.
148 பேரில் 91 பேர், 19.07.2012 முதல், சுனில் மற்றும் இதரர் வழக்கில் இந்திய
உச்சநீதிமன்றம் 23.02.2015 அன்று பெயில்
தரும் வரை, சட்ட
விரோதமாகக் காவலில் வைக்கப்பட்டார்கள்,
சிறையில் இருந்துள்ளனர்,
வேலை இழந்துள்ளனர்
என்றும் இந்தப் பாவப்பட்டவர்கள் பற்றிய காவல்துறை அதிகாரிகளின் கவனமின்மை பற்றி
அவர்கள் விளக்க வேண்டும் என்றும் எழுதுகிறார் நீதிபதி. இந்த 91 பேர் முதல் தகவல் அறிக்கை இல்லாமலேயே, எவரும் அடையாளம் காட்டாமலே கைது
செய்யப்பட்டுள்ளனர் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 22 பேரை எந்த சாட்சியும் அடையாளம் காட்டவில்லை
என்றும் 4 பேருக்கு
சம்பவத்தில் எந்த பாத்திரமும் இல்லை என்றும் நீதிபதி விடுதலை செய்துள்ளார். 91 பேர் பெயர்ப் பட்டியல் மாருதி நிர்வாகத்தால்
காவல்துறைக்கு தரப்பட்டது. மாருதியின் ஒப்பந்ததாரர்கள் சிலர், அகர வரிசைப்படி இவர்கள் பெயர்களைக்
குறிப்பிட்டனர். இந்த 91 பேர்
ஒப்பந்ததாரர்கள் பார்க்கும்படி அகர வரிசைப்படி நின்றார்களா அல்லது ஒப்பந்ததாரர்கள்
இவர்கள் பெயர்களை அகர வரிசைப்படி நினைவில் நிறுத்தினரா என்பது, வியப்பூட்டும் ஜோடனையைப் புலப்படுத்தும்.
அமர்வு நீதிபதியின் இந்த புலம்பலுடன் அரசும், மூலதனக் கூட்டமும் தப்பிக்க விடக்கூடாது. பொய்
வழக்கு ஜோடித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
மார்ச் 19 அன்று மாலை, மரண தண்டனைக்கு வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர்
ஹுடாவின் பேட்டியை, கட்சி தலைமையகத் தோழர்கள் போட்டுக் காட்டினார்கள்.
மாருதி தொழிலாளர்களின் நடவடிக்கை, தொழில்
வளர்ச்சிக்கு எதிராக, அந்நிய நேரடி
முதலீடு வருகைக்கு எதிராக, மோடியின் மேக்
இன் இந்தியா திட்டத்திற்கு எதிராக இருந்ததால், மரண தண்டனை கோரியதாக அவர் சொல்ல வருகிறார்.
நீதிமன்றமே குறிப்பிட்டபடி, அநியாயமாக சிறை
வைக்கப்பட்ட 117 அப்பாவிகள்
பற்றி ஹுடா என்ன சொல்கிறார் என
பேட்டியாளர் அமன் சேத்தி கேட்டார். உடனே ஹுடா, மார்ச் 16, 2017 அன்று தொழிலாளர்கள் உணவு புறக்கணிப்பு செய்து,
சமூகத்தில் பீதியை
உருவாக்கிவிட்டனர் என்கிறார். அவர், 117 அப்பாவிகள் சிறை வைக்கப்பட்டது பற்றி ஒரு வார்த்தை கூட வருத்தம்
தெரிவிக்காமல், 16.03.2017 அன்று
பல்லாயிரக்கணக்கானோர் மாருதி தொழிலாளிக்கு ஆதரவாக உணவு புறக்கணித்ததை, சமூகத்தை அச்சமுற வைத்த நடவடிக்கை என தயங்காமல்
பேசுகிறார். இந்த சிறப்பு அரசு வழக்கறிஞர், வர்க்க பிளவு பற்றிய மார்க்சிஸ்ட் பகுப்பாய்வு எல்லாம்
அர்த்தமற்றது (நான்சென்ஸ்) எனச் சீறுகிறார்.
117 பேரை எந்த
ஆதாரமும் இல்லாமல் தலைநகருக்குப் பக்கத்தில் இரண்டரை வருடங்களுக்கு மேல் சட்ட விரோதமாக, மாருதிக்காக சிறைவைக்க, 13 பேருக்கு மரண தண்டனை கேட்க, அரசுக்கு துணிச்சல் வந்தது எப்படி? மாருதி காலால்
இடும் கட்டளையை அரசுகள் தலையால் நிறைவேற்றும்.
இந்துத்துவா ஒரு
வாழும் முறை என தவறான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா
வழங்கினார். மாருதி, தன்னையே, ஒரு வாழும் முறை (Way of Life) என்கிறது. என்ன பொருத்தம்! ஒன்று மதவாத
கம்யூனல் வாழும் முறை, மற்றொன்று பெரும்
தொழில்குழும கார்ப்பரேட் வாழும் முறை.
12 விநாடிகளுக்கு
ஒரு கார் என, 15 மாடல்கள்,
150 மாற்றங்களுடன் ஆண்டுக்கு
மாருதி 15 லட்சம் கார்கள்
தயாரிக்கின்றது. 2015 - 2016ல் 14,29,248 கார் தயாரித்த மாருதி, ரூ.56,350.40 கோடி விற்பனை செய்து, ரூ.4,571.40 கோடி லாபம் சம்பாதித்தது. இந்த நிறுவனத்தை
அரசு பகைத்துக் கொள்ளுமா?
புளூம்பெர்க்
ஆய்வுப்படி, 2013 - 2014ல் மாருதியில்
நிரந்தரமற்ற தொழிலாளர்கள் 6,575 பேர்,.
2015 - 2016ல் அவர்கள் எண்ணிக்கை 10,626.
கூலி குறைய, லாபம் பெருக, ஒப்பந்த
தற்காலிக முறை வேண்டும்; அதற்கு தொழிலாளி
விரும்பும் சங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; சங்கம் பக்கம் போகாதே, போராடாதே என தொழிலாளர்களை மிரட்ட, அவர்களுக்கு மரண தண்டனை தரப்பட வேண்டும் எனக்
கோரிக்கை வைக்க வேண்டும்; ஆயுள் தண்டனை
வழங்க வேண்டும். இதுதான் மாருதியில் நடந்தது.
உங்களுக்கு,
ஒரு இரகசியம் தெரியுமா?
பல்லாயிரக்கணக்கான நிரந்தரமற்ற தொழிலாளர்களை ஒட்டச்
சுரண்டிய, பல
பத்தாண்டுகள் தொழிலாளர்களை மிக மோசமாக அடிமைப்படுத்திய பிரிக்கால் நிறுவனம், 2016ல் ரூ.1,126 கோடியே 50 லட்சத்து 96 ஆயிரம் வருவாய் ஈட்டி, ரூ.43
கோடியே 15
லட்சத்து 74 ஆயிரம் லாபம் குவித்த பிரிக்கால் நிறுவனம், தான்
இருப்பதே, ‘சமூகத்திற்கு
சேவை செய்ய’ எனச் சொல்கிறது.