COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, November 14, 2017

இளம்தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு முடிவு கட்ட 
இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று அறைகூவல் விடுத்த
புரட்சிகர இளைஞர் கழக காஞ்சிபுரம் மாவட்ட இரண்டாவது மாநாடு

புரட்சிகர இளைஞர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட இரண்டாவது மாநாடு நவம்பர் 12 அன்று திருபெரும்புதூரில் நடத்தப்பட்டது.
இளம்தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு முடிவு கட்ட இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று அறைகூவல் விடுத்த மாநாட்டில் திருபெரும்புதூர் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் உள்ள உள்நாட்டு பன்னாட்டு ஆலைகளின் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர். 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் பெரும்பான்மையோர் 21 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள், இந்தப் பகுதியின் உள்நாட்டு பன்னாட்டு ஆலைகளில் பயிற்சியாளர்களாக, ஒப்பந்தத் தொழி லாளர்களாக வேலை பார்ப்பவர்கள். ரெனோ நிசான், ஹ÷ண்டாய், டென்னகோ, சிஅண்டுஎஃப், ஏசியன் பெயின்ட்ஸ், ஜீபான்ட், விப்ரோ, போர்டு, நிப்பான், கோனே எலிவேட்டர்ஸ், ஆக்சல் இந்தியா, சான்மினா, ஹைலெக்ஸ், சவுந்தர்யா டெகரேட்டர்ஸ், டைமன்ட் என்ஜினியரிங், மியாங்கோ, ஆம்சன், பிரன்ட்ஸ் என்ஜினியரிங் உள்ளிட்ட 23 ஆலைகளைச் சேர்ந்தவர்கள். தங்களது உழைப்பு உள்நாட்டு பன்னாட்டு நிறுவனங்களால் திருடப்படுவதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு கொண்டவர்கள். புரட்சிகர இளைஞர் கழகத்தின் உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தின்போது தொடர்புக்கு வந்தவர்கள். பயிற்சியாளர்கள் மட்டும் மாநாட்டுக்கு ரூ.4,500 நிதியளித்துள்ளனர். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் மண்ணிவாக்கம், கீரப்பாக்கம், வண்டலூர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களும் ஜிம்கானா கிளப் மற்றும் உயிரியல் பூங்கா தொழிலாளர் தோழர்களும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
‘நான் ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் நன்றாகப் படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்று எனது தந்தை கனவு கண்டார். பல சிரமங்களுக்கு இடையில் என்னை படிக்க வைத்தார். நானும் படித்து முடித்து பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் கனவில் வந்தேன். கிடைத்த வேலை, சம்பளம், பிற வேலை நிலைமைகளுக்கும் எங்கள் கனவுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை இங்கு இப்படித்தான் உள்ளது’. மாநாட்டில் பேசிய ஒரு தொழிலாளி இப்படிச் சொன்னது, மோடி, பழனிச்சாமி அரசுகள் இளைஞர்களுக்கு இழைக்கிற துரோகத்தைக் காட்டுவதுடன், முதலாளித்துவத்தின் கோர முகத்தையும் அம்பலப்படுத்தியது.
பாலியல் துன்புறுத்தல் புகார் எழுப்பிய சட்டக் கல்லூரி மாணவர் தோழர் சீதாவுக்கு துணை நின்றதற்காக புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி, ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர் சங்கர் ஆகியோர் மீது பொய் வழக்கு போடப்பட்டிருப்பதை மாநாடு கண்டித்தது. பயிற்சியாளர் நலன் காக்கும் நிலையாணைகள் திருத்தச் சட்டத்துக்கு விதிகள் இயற்றாமல் காலம் கடத்தும் பழனிச்சாமி அரசுக்கு கண்டனம் தெரிவித்த மாநாடு, அந்த விதிகள் உடனடியாக இயற்றப்படாவிட்டால் சிறைநிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்தது. புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் தலைவர் தோழர் ராஜகுரு, மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் தனவேல், அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா, ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் இரணியப்பன் ஆகியோர் உரையாற்றினர். 8 மணி நேர வேலை நாள், 40 மணி நேர வேலை வாரம் பற்றிய தீப்பொறி கட்டுரையை இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி விளக்கினார். புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி  நிறைவுரையாற்றினார்.

Search