COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, November 14, 2017

தமிழக அரசு அறிவிக்கிற திட்டங்கள் அமலாக்கம் பற்றி
வெள்ளையறிக்கை வேண்டும்!

குன்றுகள் காணாமல் போயின என்று சகாயம் ஆய்வு செய்தபோது தெரிய வந்ததுபோல், தமிழ்நாடு மொத்தமாக காணாமல் போனால், அல்லது தனுஷ்கோடி கடலில் மூழ்கியது போல் தமிழ்நாடே மழை வெள்ளத்தில் மூழ்கிப் போனால், வறட்சியால் கருகிப் போய்விட்டால்.... எந்தத் தமிழ்நாட்டை ஆள பாஜகவும் மற்றவர்களும் துடியாய் துடிக்கிறார்கள்?

அக்டோபர் 30 முதல் பருவமழை பெய்யத் துவங்கியது. அக்டோபர் 31 அன்றே, சென்னை ஓட்டேரியில் தேங்கி நின்ற இடுப்பளவு நீரில் தடுமாறி விழுந்து மீண்டும் எழுந்து கொள்ள முடியாமல், சாலையில் தேங்கிய நீரில் மூழ்கி மூதாட்டி ஒருவர் இறந்து போனார். குளத்தில், ஏரியில், ஆற்றில், கடலில் நீரில் மூழ்கி இறந்து போவதை அறிந்திருக்கும் நமக்கு சாலையில் தேங்கிய நீரில் மூழ்கி, அதுவும் ஒரே நாள் மழையில் தேங்கிய நீரில் மூழ்கி ஓர் உயிரிழப்பு என்பது பெரும் அதிர்ச்சி தந்தது. அடுத்த நாளே, கொடுங்கையூரில் இரண்டு குழந்தைகள் சாலையில் தேங்கிய நீரில் பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கி இறந்து போனார்கள். சாலையில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி மூதாட்டி இறந்தது வெறும் செய்தியாக மட்டும் கடக்கப்பட்டபோது சிறுமிகள் இறந்த பிறகுதான் பழனிச்சாமி அரசுக்கு சற்று அசைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தமிழ்நாட்டின் அமைச்சர்கள் தொலைக்காட்சிகளில் வந்தார்கள். பொய் சொன்னார்கள். உளறினார்கள். தெர்மாகோல் ராஜ÷ முன்னாள் முதலமைச்சர் மதுசூதனன் என்று கூட ஏதோ சொன்னார். உயரதிகாரிகள் அவர்கள் பின்னால் அடக்க ஒடுக்கமாய் நின்றார்கள். ஸ்டாலின் போய் தேங்கிய நீருக்குள் நின்றதால், பழனிச்சாமியும் சிறிது நேரம் அப்படி நிற்க நேர்ந்தது. எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டன என்றார். அவர் நீருக்குள் நின்றதை தொலைக்காட்சிகளில் போட்டுக் காட்டி எல்லாம் நலம் என்றார்.
ஆனால் எல்லாம் நலமாக இல்லை. நவம்பர் 1 அன்றே 6 பேர் மழை வெள்ளத்தால் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. ஒரே வார மழையில் அரசு கணக்குபடியே மூன்றே நாட்கள் மழையில் 12 பேர் இறந்துவிட்டனர். சென்னை புறநகர்ப் பகுதி மக்கள் குடிநீர், குழந்தைகளுக்கு பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் திண்டாடினார்கள். கடந்த ஆண்டை விட கூடுதலாக இந்த ஆண்டு நீர் சேகரிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிச்சாமி சொல்கிறார். அவர் சென்னை புறநகர்ப் பகுதிகளில் அகற்றப்படாமல் தேங்கியிருக்கிற தண்ணீரைச் சொல்கிறார் என்று நாம் புரிந்து கொள்வதில் தவறு இருக்காது. மழை நின்றும் வீடுகளுக்குள் புகுந்த நீர் வடியவில்லை. டெங்கு, மர்மக்காய்ச்சல் என மக்கள் ஏற்கனவே அச்சத்தில் இருக்கும்போது சுகாதார சீர்கேடு இதோ வருகிறேன் வருகிறேன் என்று மிரட்டிக் கொண்டு நின்றது. சிலர் அதனாலும் உயிரிழந்தார்கள்.
2015, நூறாண்டு காணாத மழை, அதனால் பாதிப்புகள் என்று ஜெயலலிதா சொன்னார். 2017ல் வரலாறு காணாத மழை இல்லை. இந்த பருவ காலத்துக்கு பெய்ய வேண்டிய மழை முழுமையாகப் பெய்யவில்லை. சென்னைக்கு நீர் தரும் நீர்நிலைகள் நிரம்பவில்லை. ஆனாலும் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் தவிர்க்கப்படவில்லை. நாகையில் மட்டும் 1 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பயிர்கள் மழைநீரில் மூழ்கிப்போயின. வானத்தில் விழுந்த ஓட்டை மட்டும், இந்த அழிவுகளுக்கு காரணம் இல்லை. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் விழுந்துள்ள பெரிய ஓட்டைகளால் இந்த உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நிகழ்ந்தன.
2015 மழையில் 470 பேர் உயிரிழந்தார்கள் என்றும் 3.83 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசமாயின என்றும் மத்திய அரசிடம் ரூ.26,000 கோடிக்கு நிவாரண உதவி கேட்டிருப்பதாகவும் ஜெயலலிதா சொன்னார். அங்கிருந்து கேட்டது கிடைக்கவில்லை. ஏதோ சொற்பம் வந்தது. அந்த சொற்பம் உரியவர்களுக்கு உரிய விதத்தில் சேர்ந்ததா என்ற கேள்வியை 2017ல் ஒரே வாரம் பெய்த மழை எழுப்பியுள்ளது.
அக்கம்பக்கமாக வேறுவிதமான சோதனை ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. மூன்றாவது நாளாக சோதனை, 200 இடங்களில் சோதனை, மாநிலங்கள் கடந்து சோதனை என்று பேசுகிறார்கள். தலைமைச் செயலாளர் அலுவலகத்தி லேயே நடந்த சோதனை என்னாயிற்று என்று நமக்குத் தெரியும். இந்தச் சோதனைகள் பற்றி மாற்றி யோசிக்கும் வாய்ப்பு நமக்கு மிகக் குறைவு. பல்லாயிரம் கோடிக்கு மேல் மதிப்புள்ள ஆவணங்கள் இந்தச் சோதனையில் கிடைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. தினகரனின் பண்ணை வீட்டில் ரகசிய அறைகளில் ஏராளமான ஆவணங்கள் இருந்ததாகவும் அவற்றின் விவரங்களை தர வருமான வரி சோதனை அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும் கூட செய்திகள் வந்தன. மக்கள் மழைவெள்ள பாதிப்பில் தவிப்பதற்கும் இந்த பல்லாயிரம் கோடிக்கும் தொடர்பு உள்ளது என்று சொல்வதிலும் தவறு இருக்காது. இன்னும் பலப்பல ஆயிரம்ஆயிரம் கோடிகளுக்கும் நமக்கு தெளிவு தர வேண்டிய கடமை இதே வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உள்ளது.
தமிழக அரசு தந்துள்ள சில அண்மை கால விவரங்கள் சில உண்மைகளைச் சொல்கின்றன. 2017 - 2018 நிதிநிலை அறிக்கை, 2017 மார்ச் 16 அன்று முன்வைக்கப்பட்டது. எட்டு மாதங்கள் கடந்துள்ளன. அறிக்கை பின்வரும் விதம் நிதி ஒதுக்கீடுகள் பற்றி சொல்கிறது: 2016 டிசம்பரில் வந்த வர்தா புயல் பாதிப்புகளை சரி செய்ய, மறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ.585 கோடி வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து முறையில் நீர்நிலைகளை சீரமைக்க ரூ.300 கோடியில் நீர்நிலைகளில் வளர்ந்துள்ள செடிகள் புதர்க் காடுகளை அகற்றுதல், அணைகள் பராமரித்தல், மதகுகள், ஏரிகள், கால்வாய்களில் உள்ள இதர கட்டமைப்புகளை சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். அரிச்சந்திரா நதி, அடப்பாறு, பாண்டவையாறு, வெள்ளையாறு, வளவனாறு, உப்பனாறு ஆகிய நதிகளில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2016 - 2017ல் ரூ.71 கோடி செலவிடப்பட்டது; 2017 - 2018ல் ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்வள, நிலவளத் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ.814 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2012 - 2013 முதல் 107 அணைகளில் ரூ.745.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது வரை ரூ.195.30 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.354 கோடி செலவிடப்படும். 2011 முதல் நபார்ட் வங்கி உதவியுடன் ரூ.935.21 கோடி மதிப்பில் பாசன ஏரிகள், அணைக்கட்டுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன, புனரமைக்கப்பட்டுள்ளன. 177 பணிகள் இந்த வகையில் நடந்துள்ளன. இந்த ஆண்டு ரூ.279 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக நீர் வள ஆதாரங்கள் துறைக்கு ரூ.4,791 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் திட்டங்கள் என்ற பெயரில் மட்டும் ரூ.6889.07 கோடி செலவு செய்யப்படுகிறது. இதில் சென்னையுடன் இணைக்கப்பட்டப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்க ரூ.599.66 கோடி செலவிடப்படுகிறது. தூய்மை தமிழகம் திட்டத்துக்கு ரூ.980 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. யாருக்கு, என்ன குடிநீர், என்ன வாய்க்கால், எந்த மதகு, எந்த அணை, எந்த ஏரி, என்ன தூய்மை?
பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.352 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் குழந்தைகள் தலையில் இடிந்து விழுந்துவிடும் அபாயம் இருப்பதால்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுவிடுகிறது.
நமக்கு தலையைச் சுற்றுகிறது. பலப்பல ஆயிரம் கோடிகள் பணம் எட்டு மாதங்களாக செலவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டும், வறட்சி ஒரு சுற்றும், மழை மற்றொரு சுற்றும் பல உயிர்களை கொண்டு போய்விட்டன. இன்னும் பலர் வரிசை கட்டி நிற்கின்றனர். இந்தப் பலப்பல ஆயிரம் கோடிகளில், இது போன்ற இன்னும் பலப்பல ஆயிரம் கோடிகளில் ஒரு பகுதிதான் இப்போது கிடைத்துள்ள பல்லாயிரம் கோடி சொத்து ஆவணங்கள் என்று தெரிகிறது, மீதம் எங்கே என்று நாம் கேட்டால் நம் மீது பொய் வழக்கு போடுவார்கள். காவல்துறையை ஏவுவார்கள். தான் காந்தியின் மகன் அல்ல என்று சொல்லி தினகரன் ஒப்புதல் வாக்குமூலமும் அளித்துள்ளார்.
2011ல் இருந்து சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.1500 கோடியும் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.2250 கோடியும் ஒதுக்கப்பட்டது. 2014 - 2015ல் இந்தத் திட்டங்களில் முறையே ரூ.500 கோடி மற்றும் ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் திட்டங்களின் கீழ் சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்கல், கழிவு நீர் வடிகால் மற்றும் சுகாதாரப் பணிகள், மழை நீர் வடிகால், திடக்கழிவு மேலாளுமை, பேருந்து நிலையங்கள் மேம்பாடு, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்படும் என சொல்லப்பட்டது.
2011ல் இருந்து 2014க்குள் கழிப்பிடங்கள் கட்ட, புதுப்பிக்க ரூ.244.45 கோடி செலவிடப்பட்டது, 2013 - 2014ல் பாதாள சாக்கடை திட்டத்துக்கு 11 பணிகளுக்கு ரூ.327.78 கோடி செலவிடப்பட்டது, 2014 - 2015ல் 33 பணிகள் ரூ.3268.70 கோடி செலவில் முன்னெடுக்கப்பட் டன, 2014 - 2015ல், அப்போதிருந்த நீர் தேக்கங்களின் கொள்ளளவை உயர்த்த ரூ.1,851 கோடி மதிப்பீட்டில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றெல்லாம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2014 - 2015 அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு குடம் நீருக்கு பெண்கள் அல்லாடும் காட்சிகள் முடிவேயில்லாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சாக்கடை நீர் தேங்கி நிற்கும் சாலைகள்தான் தமிழ்நாடெங்கும் நிறைந்திருக்கின்றன. திறந்தவெளிக் கழிப்பிடங்களை நம்பித்தான் ஏகப்பெரும்பான்மை தமிழக மக்கள் இருக்கின்றனர். இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகு, எங்கே போயின இந்த ஆயிரம் ஆயிரம் கோடிகள்? அதற்குப் பிறகும் இந்த நிதியாண்டு வரை இதே வகைகளில் நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர்கள் அறிக்கை வாசிக்கிறார்கள். இன்னும் ஆயிரம் ஆயிரம் கோடிகள், தமிழக மக்களுக்குச் சொந்தமான இந்தப் பணம், பாதாள அறைகள் முதல் அயல் நாட்டு வங்கிகள் வரை பாய்ந்தும் பறந்தும் விடுகின்றன. இந்த நிதி இப்படி பாய்ந்தும் பறந்தும் விடுவதால் தமிழக மக்கள் செத்துப்போகிறார்கள். இந்தப் பட்டியல் மிக மிக நீளமானது.
தமிழ்நாட்டை சூறையாடிவிட்ட  ஆட்சியாளர்கள் சொல்வதெல்லாம் பொய், செய்வதெல்லாம் ஊழல். இது போன்ற பணிகள் அமலாக்கம் எந்த நிலையில் உள்ளது என்பதை ஆய்வு செய்ய சென்னையின் சில குடியிருப்பு சங்கங்கள் முயற்சி செய்தபோது, ஒப்பந்ததாரர்கள் விவரங்கள் அரசு இணையப் பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு மேற்கொள்கிற எல்லா திட்டங்களும் எந்த அளவில் அமலாக்கப்பட்டன என்பது பற்றிய வெள்ளை அறிக்கையை பழனிச்சாமி அரசு வெளியிட வேண்டும். பழனிச்சாமி அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுவதை நிர்ப்பந்திக்கும் போராட்டங்கள் வலுப்பெற வேண்டும். ஆட்சியாளர்களின் தவறுகளுக்காக தமிழக மக்கள் உயிரிழப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

Search