COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, November 14, 2017

உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல்
பாதிக்கப்பட்டவர்களை வேட்டையாடலாமா?  
SAY NO TO VICTIM BLAMING VICTIM BASHING

ஹாலிவுட். உலகில் மிகப்பெரிய கனவுத் தொழிற்சாலை. இன்று அங்கு ஙங் பர்ர், என்னையும் கூட என்ற ஓர் இயக்கம் வேர் கொண்டு, உலகம் எங்கும் உள்ள பெண்களை தமக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி பேச வைத்துள்ளது.
முன்னாள் அதிபர்கள், அய்ரோப்பிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகார்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவிலும் பெண்கள், தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை சமூக ஊடகங்களில் எழுதத் துவங்கியுள்ளனர். சமூகம் இன்னமும் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்றுதான் உள்ளது. பாதிக்கப்பட்டவர் மீதே பழி சுமத்துவது தவறு என்பது வளரும் ஜனநாயக முற்போக்கு கருத்தாகவும், பாதிக்கப்பட்டவர்களையே துன்புறுத்துவது விடாப்பிடியாய் நீடிக்கும் வலுவுள்ள பிற்போக்கு மிச்சசொச்சங்களாகவும் உள்ளன.
உயர்நீதிமன்றத்தின் முதன்மை இருக்கை சென்னையில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான வழக்காடிகள், சட்ட மாணவர்கள், வழக்கறிஞர்கள் நாளும் வந்து போகின்றனர். தமிழ்நாட்டின் கடந்தகால முற்போக்கு இயக்கங்கள் விழுமியங்கள் காரணமாக, தலித், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மத்தியிலிருந்து ஏராளமான வழக்கறிஞர்கள் வருகின்றனர். மாநிலம் தாண்டி படிப்பவர்களும் உள்ளனர். இவர்களில் ஏகப்பெரும்பான்மையினர் முதல் தலைமுறை பட்டதாரிகள். முதல் தலைமுறை சட்ட மாணவர்கள், வழக்கறிஞர்கள். இவர்களில் பலருக்கு நுனிநாக்கு ஆங்கிலம் மட்டுமல்ல, ஆங்கிலமே கூட வரவில்லை. மேல்தட்டு நாகரிகம் இவர்களுக்கு அந்நியமானது. இவர்கள் இயல்பானவர்கள். கல்வி கரை சேர்க்கும், அம்பேத்கர் சட்டம் படித்தவர், நாமும் படிப்போம் முன்னேறுவோம் என நினைப்பவர்கள். இவர்களில் சிலர் பகத்சிங், அம்பேத்கர் வழியில் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள்.
நடந்த பாலியல் துன்புறுத்தல், தட்டிக் கேட்டது, பின்னர் பாதிப்புக்குள்ளாவது போன்ற விசயங்களுக்குள் நுழையும் முன்பு, வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றி சில விவரங்கள் தெரிந்துகொள்வோம்.
தோழர் சீதா: இவரது தந்தை திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தலித் சுமை தூக்கும் தொழிலாளி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) உறுப்பினர். தோழர் சீதா பதின்பருவத்தில் இருந்தே மக்கள் போராட்டங்களில் ஈடுபடுபவர். அகில இந்திய மாணவர் கழக களப் போராளி. தெருப் பிரச்சாரகர். தங்கசாலை பாரதி கல்லூரியில் உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம், மாணவர் சங்க தேர்தலில் போட்டியிடும் உரிமை பெற்று மாணவர் தலைவர் ஆனவர். தலித் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மறுக்கப்படுவதற்கு எதிராகவும் அரசாணை எண் 92அய் அமல்படுத்தக் கோரியும் வழக்கு தாக்கல் செய்தவர். இப்போதும் கல்லூரி சென்று படிக்கிறார். போராடுகிறார். சில தினங்கள் உயர்நீதிமன்றத்துக்கும் வந்து செல்கிறார். மக்கள் போராட்டங்களில் நிதி வசூலில் முன் நிற்கிறார்.
தோழர் சங்கர்: கம்யூனிஸ்டாகவும் அம்பேத்கர் பற்றாளராகவும் உள்ள ஜனநாயக வழக்கறிஞர் சங்க முன்னோடி. நீதித்துறை ஜனநாயகத்துக்காக, வெளிப்படைத் தன்மைக்காக காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் கலந்துகொண்டவர். அம்பத்தூர் கல்யாணபுரத்தில் இருந்து வந்துள்ள முதல் தலைமுறை வழக்கறிஞர். இவரது தந்தை தோழர் மோகனை போல் மக்கள் போராளியாக மாற முயற்சி செய்துகொண்டிருப்பவர்.
தோழர் பாரதி: ஜனநாயக வழக்கறிஞர் சங்க அமைப்பாளர். பள்ளிக் காலங்களில் இருந்து போராட்ட வாழ்க்கைக்கு அறிமுகமானவர். தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி காலத்தில், வழக்கறிஞர் போராட்டத்தில் இரண்டு முறை சிறை சென்றவர். சமீபத்திய வழக்கறிஞர் போராட்டத்தில் பார் கவுன்சிலால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டவர். புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர். இகக மாலெயின் தமிழ்நாட்டு தலைமை தோழர்களில் ஒருவர். கோஆப்டெக்ஸ், ஜிம்கானா கிளப், மெட்ராஸ் கிளப், சான்மினா போன்ற தொழிற்சங்கங்களின் தலைவர். தொழிலாளர், வழக்கறிஞர், மக்கள் போராட்டங்கள் தொடர்பாக சிலபல முதல் தகவல் அறிக்கைகளை சந்திப்பவர். வெளிப்படைத் தன்மையும் சமூக நீதியும் மக்கள் சார்பு கூருணர்வும் கொண்ட நீதித் துறைக்காக போராடுபவர்.
25.04.2017 அன்று நடந்த பாலியல் துன்புறுத்தல்
உயர்நீதிமன்றத்தில் பத்தாவது நீதிமன்ற பின் இருக்கையில் இருந்த தோழர் சீதாவிடம் வழக்கறிஞர் திரு.ராகவன், ‘என்னிடம் வந்தால் நகைகள் வாங்கித் தருகிறேன், என் மாளிகையில் அடுக்கி வைத்துள்ள பணத்தைப் பார்க்கவே நிறைய பெண்கள் வருவார்கள். அவர்கள் என்னுடன் வந்து சந்தோசமாக இருந்துள்ளார்கள். நாளை அட்சய திதி என்பதால் நகை வாங்கித் தருகிறேன், உனக்கு என்ன நகை வேண்டும் கேள்’ என்று பேசியிருக்கிறார்.
அதிர்ச்சி அடைந்த தோழர் சீதா, வழக்கறி ஞர் சங்கரிடம் விசயத்தைச் சொல்ல, தோழர் சங்கர் குற்றம் புரிந்த வழக்கறிஞரிடம் அவரது செயல் பற்றி விளக்கம் கேட்டார். திரு.ராகவன், தோழர் சங்கர் தோளில் கை போட்டு ‘வழக்கறிஞர்களுக்குள் இதெல்லாம் சகஜம்தானே அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும்’ என்று சொல்லியுள்ளார். திரு.ராகவன் நியாயம் கேட்டவர்களை ஆபாசமாகத் திட்டி அடிக்க ஆரம்பிக்கவே, அங்கே ஒரு பெரிய வழக்கறிஞர் கூட்டம் திரண்டது. ‘பாதுகாப்புப் பணியில்’ இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை திரு.ராகவனை அழைத்துச் சென்றது.
25.04.2017 அன்று மாலையே, தோழர்கள் பாரதி, சங்கர் மற்றும் சீதா உயர்நீதிமன்ற பதிவாளரைச் சந்தித்து, தோழர் சீதாவுக்கு திரு.ராகவனால் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி புகார் கொடுத்தனர். பதிவாளரும் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்.
ஏற்கனவே, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், உயர்நீதிமன்றத்தில், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பற்றி விசாரிக்க, விசாகா தீர்ப்புப்படி ஒரு குழு அமைக்க கோரி இருந்தது. அவ்வாறு அமைக்கப்பட்ட குழுவின் முன்பு இப்போது 25.04.2017 தேதியிட்ட பாலியல் துன்புறுத்தல் புகார் விசாரணையில் உள்ளது.
நவம்பர் நடப்புகள்
08.11.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றக் குழு பாலியல் துன்புறுத்தல் புகார் மீது விசாரணை நடத்தியபோது, திரு.ராகவன் தரப்பு சமாதானத்துக்கு தயார் என்றும் தோழர் சீதா தயாரா என்றும் கேட்கப்பட்டது. நீதி வெல்ல வேண்டும், குற்றம் புரிந்தால் தண்டனை இருக்கும் என்ற எண்ணம் வர வேண்டும், துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் துணிந்து புகார் சொல்ல முன்வர வேண்டும் என தோழர் சீதா கருதியதால், தான் விசாரணை நடப்பதையே விரும்புவதாகச் சொன்னார்.
09.11.2017 அன்று பார் கவுன்சில், 22.09.2017 தேதிய முதல் தகவல் அறிக்கை நகலுடன், தோழர்கள் பாரதி, சங்கர் ஆகியோர் வழக்கறிஞர் திரு.ராகவனை தாக்கியதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அறிவிக்கை அனுப்பியது. அதன்படி, 27.04.2017 அன்று தோழர்கள் பாரதி, சங்கர், சீதா வழக்கறிஞர் ராகவனை தாக்கியதாக மத்திய தொழில் பாதுகாப்பு படை கமான்டன்ட், 27.04.2017 அன்று தமக்கு புகார் அளித்தார் என, 22.09.2017 அன்று உயர்நீதிமன்ற பதிவாளர், பார் கவுன்சிலுக்கும் காவல்துறைக்கும் புகார் தந்துள்ளார் என்று சொல்லப்பட்டுள்ளது. சிசிடிவி பதிவுகள் ஆதாரம் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 323, 341ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தோழர் சீதாவின் புகார், பாலியல் புகார் மீது உயர்நீதிமன்றக் குழு விசாரணை ஆகியவை பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. பல வட்டாரங்களில் இருந்தும் வந்த முன் ஜாமீன் யோசனையை தோழர் பாரதி ஏற்காததால், 506/2 என்ற பிணை மறுப்பு பிரிவை பிறகு சேர்த்துள்ளார்கள்.
நீதிமன்றம், நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள குழு, நிச்சயமாய் பாலியல் துன்புறுத்தல் குற்றம் சாட்டப்பட்டவர் பக்கம் நிற்காது என நாம் நம்புகிறோம். விரும்புகிறோம்.
பார் கவுன்சிலும் காவல்துறையும் துன்புறுத்தியவரைப் பாதுகாத்து எதிர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா?
பதிவாளர் முன்பு, ராகவன் என்ற வழக்கறிஞரால் சீதா என்ற பெண் உயர்நீதிமன்ற வளாகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார், அவருக்கு ஆதரவாக கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் சங்கர் ராகவனால் தாக்கப்பட்டார் என்ற புகார்கள் உள்ளன. இந்தப் புகாரின் மீது பார் கவுன்சிலும் காவல்துறையும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? பாதிக்கப்பட்டவர்கள் மீது புகார் அளித்த பதிவாளர், ஏன் பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடமும் பார் கவுன்சிலிடமும் வலியுறுத்தவில்லை? சமாதானமாகப் போகாததால், பார் கவுன்சில், காவல் துறை நடவடிக்கைகளா? பாலியல் துன்புறுத்தல் புகார் விசாரணை நிலுவையில் உள்ளபோது, பார் கவுன்சிலும் காவல்துறையும் புகார்தாரர் தரப்பு மீது பாய்வது புகாருக்கு உள்ளானவரை காப்பாற்றுவதாக, இனி எவரும் புகார் செய்யாமல் அடங்கிப் போக வேண்டும் என்று சொல்வதாக அமையாதா? மாதக் கணக்கில் கால தாமதமான நடவடிக்கை என்பது, வேறு உள்நோக்கங்கள் இருப்பதை புலப்படுத்துவதாக ஆகாதா? தோழர் பாரதியை ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அடைமொழியுடன் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது ஏன்? அது, புகாருக்கு உரியவரைக் காப்பாற்றி, மக்கள் உரிமைக்காக, தொழிலாளர் உரிமைக்காக, வழக்கறிஞர் உரிமைக்காக போராடும் தோழர் பாரதி உள்ளிட்ட ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தினரை முடக்கும் முயற்சியாகாதா?
எதிர்ப்பும் விளைவும்
பார் கவுன்சில் மற்றும் காவல்துறையின் பெண்கள் விரோத ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக, வழக்கறிஞர்கள் பொது மக்கள் 13.11.2017 அன்று திரண்டு காவல் துறையிடம் நியாயம் கேட்டனர். காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தல் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் புகார் தரப்பினரை துன்புறுத்த மாட்டோம் என்றும் சொல்லியுள்ளனர்.
பதிவாளரும் பார் கவுன்சிலும் இருபத்தியோராம் நூற்றாண்டுக்குள் வந்து பாலியல் துன்புறுத்தலை தட்டிக் கேட்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும்.

Search