COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, November 14, 2017

அய்க்கிய அமெரிக்காவின் இந்த நூற்றாண்டு இளைஞர்கள் 
சோசலிசத்தில் புகலிடம் தேடுகிறார்கள்

சமீபத்தில் அய்க்கிய அமெரிக்காவின் விர்ஜினியா பிரதிநிதிகள் அவைத் தேர்தலில் ஜனநாயக சோசலிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்
. 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இந்த நூற்றாண்டின் இளம்தலைமுறையினர் சோசலிசம் நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்.
31 வயதான லீ கார்டெர் கப்பல் தளத்தில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்தவர். ஒரு விபத்தில் ஷாக் அடித்ததில் அவருக்கு ஒரு கையும் நெஞ்சுப் பகுதியும் சேதமடைந்தது. இந்த விபத்துக்குப் பின், அய்க்கிய அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக ‘அழுக்கு’ (டர்ட்டி) என்று அழைக்கப்பட்ட சோசலிச அரசியலில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். விபத்து நஷ்ட ஈடு பெற அவர் அலைக்கழிக்கப்பட்ட சூழல் அவரை பிரதிநிதிகள் சபை வேட்பாளராக போட்டியிட வைத்தது. டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையை கைப்பற்றி ஓராண்டு முடிந்து நடைபெற்ற இந்தத் தேர்தலில் அவர் குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளரைத் தோற்கடித்து பிரதிநிதிகள் சபை மற்றும் நகராட்சிக்குத் தேர்வான 12 சோசலிஸ்ட்களில் ஒருவராக அவைக்கு சென்றார்.
டிரம்பின் வெற்றியால் விரக்தியடைந்த 22 வயதே ஆன ஜேக்குலின் ஸ்மித் ஜனநாயக சோசலிஸ்ட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர்தான் கார்டர் வெற்றி பெறுவதற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டவர். வெள்ளை மாளிகைக்கான போட்டியில் ஹிலாரி கிளிண்டனுக்கு துடிப்பான போட்டியாளராக விளங்கிய பெர்னி சான்டர்சின் ஜனநாயக சோசலிஸ்ட் அமைப்பு நிழலுக்குள் இருந்த சோசலிசத்தை வெளிக்கொணர உதவியது. சாண்டர்சின் பிரச்சாரத்துக்கு முந்தைய ஆண்டுகளில் ஜனநாயக சோசலிஸ்ட் அமைப்பில் 6500 பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டிக்கு பின்பு இந்த எண்ணிக்கை 5 மடங்காக உயர்ந்து 30,000க்கும் மேல் சென்றுவிட்டது.
பெரும்பாலும் இளம்தலைமுறையினர் வருகை இருப்பதால் இந்த அமைப்பின் சராசரி வயது 60லிருந்து 35 ஆக குறைந்துவிட்டதாக அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இந்த நிகழ்வுப்போக்கை பலரும் ‘சோசலிசக் குழந்தைகளின் பெருக்கம்’ (சோசலிஸ்ட் பேபி பூம்) என்று அழைக்கின்றனர்.
சமீப காலமாக ஜனநாயக சோசலிஸ்ட்களுக்கு வளர்ச்சி இருந்தபோதும் அய்க்கிய அமெரிக்க அரசியலில் விளிம்பு நிலையிலேயே அவர்கள் உள்ளனர். இந்த அமைப்பு அரசியல் கட்சியாக இல்லாமல் அரசியல் குழுவாக இருப்பதால், உலகின் மற்ற பகுதிகளிலுள்ள, பிரிட்டனின் ஜெர்மி கோர்பின், கிரீசின் சிரிசா அல்லது ஸ்பெயினின் போடேமாஸ் போன்ற அரசியல் கட்சிகள் அளவுக்கு செல்வாக்கு பெற முடியவில்லை. ஆயினும் பல பத்தாண்டுகளுக்குப் பின் அய்க்கிய அமெரிக்க அரசியலில் சோசலிசம் பற்றிய வலுவான குரலை இப்போது கேட்க முடிகிறது.

Search