COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, October 30, 2017

தமிழக அரசு சர்க்கரை விலை உயர்வை
உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!

ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதில் பழனிச்சாமி அரசு தெளிவாக இருக்கிறது. 2011ல் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் என்று சொல்லி, பால் விலை, மின்கட்டணம், பேருந்து கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி அதிர்ச்சி தந்தார் ஜெயலலிதா.
சாமான்ய மக்கள் கடுமையான விலைஉயர்வுச் சுமையை ஏற்கனவே சுமந்து கொண்டிருக்கும் நேரம், அந்தச் சுமையை மேலும் கடுமையாக அதிகரிக்கும் சர்க்கரை விலை உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி வந்து சேராமல் கரும்பு கசப்பது போல், இப்போது தமிழக மக்களுக்கு சர்க்கரை கசக்கத் துவங்கிவிட்டது.
மோடி அரசின் மோசடி உணவுப் பாதுகாப்புத் திட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படக் கூடாது என்று மாநிலம் எங்கும் குரல்கள் எழுந்தன. கடுமையான எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாது, ஆட்சியை, சுருட்டிய செல்வத்தைப் பாதுகாக்க, மக்கள் விரோத அஇஅதிமுக ஆட்சியாளர்கள் 2016 நவம்பர் 1 அன்று உணவுப் பறிப்புத் திட்டம் தமிழ்நாட்டுக்குள் நுழைய கதவுகளை அகலத் திறந்தார்கள். உணவுப் பாதுகாப்புத் திட்டம் அமலானாலும், தற்போதைய பொது விநியோக முறையில் எந்த மாற்றமும் இருக்காது, அப்படியே தொடரும், கூடுதல் செலவை தமிழக அரசு ஏற்கும் என்றார்கள். ஆங்காங்கே, நடைமுறையில் முறைகேடுகள், குளறுபடிகள் இருந்தாலும், பொது விநியோக முறை தொடர்ந்தது. உணவுப் பாதுகாப்பு திட்டமும் தமிழ்நாட்டின் பழைய பொது விநியோக முறையும் சேர்ந்திருந்த காலம் முடிந்தது. தமிழக மக்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தியின் கயிறு அறுக்கப்பட்டுவிட்டது.
ரேசன் கடைகளில் விற்கப்படுகிற சர்க்கரை விலையில் நவம்பர் 1 முதல் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்வு என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் இந்த விலை உயர்வுக்கு காரணம் உணவுப் பாதுகாப்புத் திட்ட அமலாக்கம் என்பது தெளிவாகவே சொல்லப்படுகிறது. குஜராத் தேர்தல்களை எதிர்கொள்ள சலுகைகளை தாராளமாக அறிவித்த மோடி அரசு, எந்தப் பக்கம் திரும்பினாலும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்துகிற தமிழக மக்கள் மீது கத்தி பாய்ச்சுகிறது. ஒரு கிலோ சர்க்கரை ரூ.18.50 என 10,820 மெட்ரிக் டன் சர்க்கரை வழங்கிவந்த மோடி அரசு, 01.06.2017 முதல் 18.64 லட்சம் பரம ஏழை அட்டைகளுக்கு மட்டும் 1,864 மெட்ரிக் டன் சர்க்கரை என வெட்டிவிட்டது.
பொது விநியோகத்தில் 2013ல் 37,163 மெட்ரிக் டன் சர்க்கரை தந்து கொண்டிருந்த தமிழக அரசு 2016 - 2017ல் 33,636 மெட்ரிக் டன்தான் தருகிறது என்று அரசாணை சொல்கிறது. சர்க்கரை விநியோகத்தை தமிழக அரசே ஏற்கனவே பெருமளவு வெட்டிவிட்டது. இன்று மோடி அரசு 33,636 மெட்ரிக் டன் சர்க்கரை தேவைப்படும் ஒரு மாநிலத்துக்கு, 10,820 மெட்ரிக் டன் பெற்றுக்கொண்டிருந்த ஒரு மாநிலத்துக்கு 1,864 மெட்ரிக் டன் சர்க்கரைதான் தர முடியும் எனச் சொல்கிறது. இது உணவுப் பாதுகாப்புத் திட்டமல்ல, உணவுப் பறிப்புத் திட்டம், அனைவரையும் உள்ளடக்கும் நடவடிக்கை அல்ல, பெரும்பான்மையை வெளியேற்றும் நடவடிக்கை, குறி வைத்த பொது விநியோகம் அல்ல, சுருக்கப்படுகிற பொது விநியோகம், உணவுப் பாதுகாப்புத் திட்டமே பொது விநியோகத்தை ஒழித்துக்கட்டும் திட்டம் என்று நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன.
இந்த நேரத்தில் சோனியா காந்தியின் உடல் நலம் விசாரிக்கச் சென்றுவிட்டார் தமிழிசை சவுந்தரராஜன். தமிழிசை மருத்துவர். சாதாரணமான ஆரோக்கியத்துடன் வாழ எந்தவித உணவு உண்ண வேண்டும் என்று அவருக்குத் தெரியும். உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு மாதமொன்றுக்கு 1 கிலோ சர்க்கரை தரப்படுகிறது. இந்த அளவு, ஒரு குடும்பத்துக்கு என்ன வகையிலான உடல் ஆற்றலைத் தரும் என்று அவருக்குத் தெரியும். அத்தியாவசிய உணவுப் பொருள் ஒன்று மக்கள் கைகளுக்கு எட்டாத உயரத்துக்குப் போவது பற்றி வாய் திறக்காமல் இருக்கிறார். தீவிரமாக அகழ்வாராய்ச்சி செய்து ஜோசப் என்ற பெயரை கண்டுபிடித்து ஆதாரங்களையும் முன்வைத்த நிபுணர் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் என யாரும் சத்தம் காட்டாமல் இருக்கிறார்கள். பரம ஏழைகள் அட்டைகளுக்கு விலையை உயர்த்தவில்லை என அதிகபட்சம் அவர்களால் சொல்ல முடியும். ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு 1 கிலோ சர்க்கரை போதுமா என்ற கேள்வி மட்டும் அவர்கள் காதுகளில் ஏறவே ஏறாது. 1.8 கோடி ரேசன் அட்டைகள் இருக்கிற ஒரு மாநிலத்தில் 18 லட்சம் அட்டைகளுக்கு மட்டும் மானியம் என்பதற்கு, 90% அட்டைகள், அதாவது 90% குடும்பங்கள் மான்யத்தில் இருந்து வெளியேற்றப்படும் துரோகத்துக்கு அவர்களிடம் பதில் இருக்காது. மிகச் சமீபத்தில்தான், பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் ஆதார் இல்லாததால் ரேசன் பொருட்கள் கிடைக்காமல் வறிய மக்கள் பட்டினிக்கு பலியாவதை உறுதி செய்தவர்களுக்கு, தங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் இருக்கும் ஒரு மாநிலத்தின் மக்களை துன்புறுத்துவது மகிழ்ச்சி தருகிறது. ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம், ஆதார் என ஏற்கனவே நாட்டு மக்களை துன்பத்தில் தள்ளியுள்ள மோடி அரசு, தமிழக மக்களுக்கு அளித்துள்ள சிறப்புப் பரிசுதான் இந்த சர்க்கரை விலை உயர்வு.
மோடி அரசு தமிழகத்துக்குத் தர வேண்டிய மானியத்தையும் சர்க்கரை அளவையும் வெட்டியதால், நிலவுகிற பொது விநியோக முறை தொடர ரூ.1,300 கோடி கூடுதல் தேவை என்றும் சர்க்கரை விலையை உயர்த்தினால் கூட ரூ.836.29 கோடி தமிழக அரசுக்கு கூடுதல் செலவு என்று அரசாணை சொல்கிறது. தமிழக அரசுக்கு இது ஒரு பணமா?
அஇஅதிமுக  அரசு, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தியதையடுத்து, பொது விநியோகத்தை சீர்குலைப்பதில் தமிழக அரசு அதிகாரபூர்வமாக எடுத்துள்ள இரண்டாவது நடவடிக்கை இது. இதை அனுமதித்துவிட்டால், பாஜகவின் சதியின்படி, பொது விநியோகத்தை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை பழனிச்சாமி அரசு முடுக்கி விட இடம் தந்ததாகிவிடும். ஏற்கனவே திட்ட அமலாகத்தில் உள்ள குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளால் பொதுவிநியோகப் பயன்கள் மக்களை முழுவதுமாக சென்றடைவதில் பல சிக்கல்கள் உள்ளன.
திட்டங்களும் சட்டங்களும் மக்களை பாதுகாக்கத்தானே தவிர அவர்கள் மீது போர் தொடுக்க அல்ல. அவர்களை சாகடிக்க அல்ல. பழனிச்சாமி அரசு, ரேசன் சர்க்கரை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பொது விநியோகத்தை ஒழித்துக்கட்டும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்கு ஒப்புதல் தந்ததை திரும்பப் பெறவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில உரிமைகளைப் பறிக்கும் மோடி அரசின் முயற்சிகளின் வெளிப்பாடாகவும் பொது விநியோக சர்க்கரை விலை உயர்வு உள்ளது. எனவே இதை அனுமதிப்பது பல்வேறு விதங்களிலும் தமிழக மக்கள் நலன்களுக்கு எதிரானதாக இருக்கும். காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. மழை காரணமாக சந்தையில் வரத்து குறைவு, எனவே இரண்டு மாதங்களுக்கு அப்படித்தான் இருக்கும் எனச் சொல்லி முடித்துவிட்டார்கள். அப்படியானால் இரண்டு மாதங்களுக்கு தமிழ்நாட் டின் உழைக்கும் மக்கள் அனைவருக்கும், அதற்கேற்ப கூலி உயர வழிவகுக்குமா பழனிச்சாமி அரசு? இருக்கிற கொடுமைகளுடன் சேர்ந்து கொண்டுள்ள ரேசன் சர்க்கரை விலை உயர்வு அடுத்து வரவிருக்கும் தாக்குதல்களுக்கு முன் தகவல் தருகிறது. தமிழக மக்கள் இதை அனுமதிக்கவே கூடாது.
டெங்கு, இன்னும் பெயர் வைக்கப்படாத வகை காய்ச்சல்கள், கந்துவட்டி என தமிழக மக்கள் பல்வேறு விதங்களில் வாட்டி வதைக்கப்படுகிறார்கள். ஜெயலலிதா, குறைந்தபட்சம் தமிழக மக்களை வஞ்சிக்கும் உரிமை தனக்கே என்றார். அதையும் நேரடியாக மோடி அரசிடம் தந்து விட்டார் பழனிச்சாமி.பொது விநியோகம் சீர்குலைவுக்கு உள்ளாக்கப்படுவதை தமிழக மக்கள் அனுமதிப்பதில்லை. இந்த விசயத்தில் அவர்களது கூருணர்வு மிகவும் கூர்மையானது. இன்று சர்க்கரை அவர்களுக்கு எட்டாத உயரத்துக்குச் செல்லுமானால், நாளை, பாஜகவோ, பழனிச்சாமியோ, யாருக்கும் தமிழ்நாட்டில் நிற்க இடமின்றிப் போய்விடும்.

(மாலெ தீப்பொறி தொகுதி 16 இதழ் 7 2017 நவம்பர் 01 – 15)

Search