COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, October 30, 2017

நவம்பர் புரட்சியின் உத்வேகமூட்டும் மரபு

(2017 நவம்பர், விடுதலை ஏட்டின் தலையங்கம்)

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் ஒரு வித்தியாசமான நிலஅதிர்வை எதிர்கொண்டது. அதற்குமுன் வேறெங்கும் நடந்திராத, ரஷ்யாவில் நடந்த ஓர் எழுச்சி மொத்த உலகத்தையும் உலுக்கியது.
வசதி படைத்தவர்களின், மேட்டுக்குடியினரின் ஒரு சிறிய பிரிவினரிடம் இருந்து, முதல் முறையாக, அரசு அதிகாரத்தை, ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் ஒரு மாட்சிமை கொண்ட திரளிடம் மாற்றிய ஒரு புரட்சி அது. அது ஓர் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்போ, சதியோ அல்ல. அமைப்பாக்கப்பட்ட மக்கள் சக்தியின் அலை, ஓர் எதேச்சதிகார ஆட்சியின் மிச்சசொச்சத்தை துடைத்தெறிந்த நிகழ்வு. ஒடுக்கப்பட்ட மக்களின் திருவிழா; அதிகாரம் பறிக்கப்பட்ட மக்கள், சுதந்திரமான வாழ்வு நோக்கிச் செல்லும் விழிப்புணர்வு. அது, லெனினும் போல்ஷ்விக் புரட்சியாளர்களைக் கொண்ட அவரது கட்சியும் வழிநடத்திய, மகத்தான அக்டோபர் புரட்சி. (நாட்காட்டி மாற்றத்தால் இப்போது நவம்பர் என்று அறியப்படுகிறது).
அதுபோன்ற எந்த ஒரு நிகழ்வையும், அந்த அளவு வீச்சுடன், அதற்கு முன் உலகம் கண்டி றருக்கவில்லை. பழைய (முதலாளித்துவ) அமைப்பொழுங்கை புரட்சிகரமாக தூக்கியெறிந்து மானுட விடுதலையின் புதிய இசைக்கோர்ப்பு நோக்கிய அணிவகுப்பு பற்றிய லட்சியப் பார்வை தந்த, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, அதற்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது என்பது உண்மைதான். மார்க்சின் மிகப்பெரும்படைப்பான மூலதனம் அதற்கு முன்பு அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்புதான் வெளியிடப்பட்டது என்பதும், அது வெளியிடப்பட்டவுடன்தான் பாரீசின் கம்யூனார்டுகள், தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் புரட்சி என்ற கருத்தின் சாத்தியப்பாட்டை தங்கள் செயலில் நிகழ்த்திக் காட்டினார்கள் என்பதும் உண்மையே. ஆயினும் நவம்பர் புரட்சிதான், முதல்முறையாக, அந்த லட்சியப் பார்வையின் முழுமையான உள்ளாற்றலை, தெளிவாகவும் தீர்மானகரமாகவும் மொத்த உலகத்துக்கும் எடுத்துக்காட்டியது. தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒன்று சேர்ந்து நின்ற, சாமான்ய குடிமக்களும் படை வீரர்களும் ஒன்று சேர்ந்து போராடிய, பெண் களும் ஆண்களும் ஒன்று சேர்ந்து அணிவகுத்த, இளையவர்களும் முதியவர்களும் தங்கள் வெற்றியை ஒன்று சேர்ந்து கொண்டாடிய, ஒரு வெகுமக்கள் எழுச்சியின் முதல் வரையறை உலகத்துக்கு கிடைத்தது.
மகத்தான சோசலிச வரலாற்றியலாளர் ஜான் ரீட், என்றும் அழிவில்லாத விதத்தில் சொன்னது போல், உலகைக் குலுக்கிய அந்த பத்து நாட்களில் மட்டும் அது நடந்துவிடவில்லை. சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சியாக பின்னாளில் வளர்ந்தெழுந்த புரட்சிகர ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி உருவாக்கத்துக்கு உதவிய பல பத்தாண்டுகால வர்க்கப் போராட்டம், ஒரு தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டங்களும் பிற போராட்டங்களும், நிறைய படிப்பும் பகுப்பாய்வும், ஆய்வும் சமூக ஆய்வும், கடுமையான அமைப்பு ஒழுங்கும் மகத்தான அரசியல் பார்வையும் முன்முயற்சியும், தோல்வியுற்ற 1905 புரட்சி மற்றும் படிக்கல்லான 1917 பிப்ரவரி புரட்சி உள்ளிட்ட, நிறைய தோல்விகளும் பின்னடைவுகளும், அதற்கு அவசியமாக இருந்தது.
முதலாளித்துவம் அதன் செறிவுநிலையை அடைந்த பிறகுதான், முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகள் வெடித்தெழும் கணமாகத்தான், புரட்சி நடக்கும் என்ற துவக்க கால கம்யூனிஸ்ட் கருத்தில், நவம்பர் புரட்சி மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. மாறாக, நிலப்பிரபுத்துவ பிழைத்திருத்தல்களுக்கு இடையில் சிக்கியிருந்த, ஓர் எதேச்சதிகார ஜாரால் ஆளப்பட்டிருந்த, ஒரு பின்தங்கிய முதலாளித்துவ நாட்டில், புரட்சி நடந்தது. உலக அளவில் இல்லை என்றாலும் ஒரு கண்டத்தின் அளவிலாவது, புரட்சி நடக்கும் என்று அதிகரித்த எதிர்ப்பார்ப்பு இருந்தபோது, ஒரே நாட்டில் புரட்சி, ஏகாதிபத்திய சங்கிலியை அதன் பலவீனமான கண்ணியில் உடைப்பது என்ற நிதானமான யதார்த்தத்தை நிகழ்த்தியது. புரட்சி, உலக அளவிலான விழிப்புணர்வை தூண்டியது; உலகின் எல்லா மூலைகளிலும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் இருபதாவது நூற்றாண்டின் துவக்கத்தில் வலுவான உத்வேகம் தருவதாக அமைந்தது.
உலகெங்கும் சோசலிச கருத்துக்களை பரப்புவதில், கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு உத்வேகம் தருவதில், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையுடன் சேர்ந்து, நவம்பர் புரட்சியும் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது. நவம்பர் புரட்சியை ஒட்டி உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அகிலம், பின்னா ளில் அது சந்தித்த குறைபாடுகள், பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு அப்பால், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உருவாக்க காலத்தில், அதற்கு ஊக்கமளிப்பதில், வலுவூட்டுவதில் வரலாற்று பங்காற்றியது என்பதை சொல்லியாக வேண்டும். பின்தங்கிய நாடான ரஷ்யா,  எந்த முதலாளித்துவ நாட்டிலும் கூட இதுவரை காணாத அளவில் உழைக்கும் மக்களின் அனைத்து பிரிவினரும் எல்லா உரிமைகளும் பெறுகிற ஒரு முன்னேறிய நாடாக மாற்றி யமைக்கப்பட்டதும், லாபப் பசி கொண்ட சந்தை பொருளாதாரத்தின் இடத்தில் மக்கள் சார்பு திட்டமிட்ட பொருளாதாரம் எழுந்ததும் சோசலிசத்தின் செய்தியை எல்லா இடங்களுக்கும் பரவச் செய்தன. உண்மையில், சோவியத் யூனியனின் சர்வதேச அளவிலான தாக்கம், தங்கள் காலனிய, நிலப்பிரபுத்துவ தடைகளை வெற்றிகொண்டு, சுதந்திரமான, வளமையான நாடுகளாக மாற விரும்பிய நாடுகள் அணி திரளும் மய்யமாக சோவியத் யூனியனை மாற்றியது. இருபதாவது நூற்றாண்டின் மிகப் பெரிய பகுதியில், முதலாளித்துவ உலகுக்கு சக்திவாய்ந்த எதிர்நிலை சக்தியாக சோவியத் யூனியன் இருந்தது.
 தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு உத்வேகம் அளிக்கும் சக்தியாக இருந்ததில், ஹிட்லரின் பாசிசப் போருக்கு எதிரான அரணாக இருந்ததில், பாசிச தாக்குதலின் விளைவுகளை தாங்கிக்கொண்டு, மொத்த உலகத்தையும் மிகப் பெரிய அளவில் விடுவிப்ப தாக, மகிழ்ச்சியளிப்பதாக அது வெற்றி பெற்று எழுந்ததில், இறுதியாக, அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்துக்கு எதிரான போட்டி துருவமாக, அது ஆற்றிய பாத்திரத்தை, சோவியத் யூனியன் தேக்கம் அடைந்ததும் தடம்புரண்டதும் பின்னர் வீழ்ச்சியுற்றதும், துடைத்தழித்துவிடாது. சோவியத் யூனியன் மறைந்த பிறகு, சர்வதேச மூலதனத்தின் மிகப்பெரிய நவகாலனிய தாக்குதலை, ஒரு துருவ உலக மேலாதிக்கம் நோக்கிய அய்க்கிய அமெரிக்காவின் வெறித்தனமான முயற்சிகளை, டொனால்ட் ட்ரம்பும் அவரது ஊதுகுழல்களும் பல நாடுகளிலும் உருவாகி இருப்பதை, ஹிட்லர் வகை பாசிசத்துக்கு புத்துயிர்ப்பளிப்பது என்ற அச்சுறுத்தலை, இவையனைத்தும் யதார்த்தமாவதை நாம் சந்திக்கிறோம். மகத்தான ரஷ்யப் புரட்சியின் நூறாவது ஆண்டு நிறைவு தொடர்பான நமது கொண்டாட்டம், உலக வரலாற்றின் ஒரு மய்யமான தருணத்தை உறுதியாகச் சொல்வது என்று மட்டும் நின்றுவிடாமல், தற்போதைய சூழலை எதிர்கொண்டு, நெருக்கடியில் இருக்கிற சர்வதேச மூலதனமும் மிகவும் மோசமான தழும்புகள் விழுந்துள்ள, சிதிலமைந்துவிட்ட முதலாளித்துவ ஜனநாயக வரையறையும் முன்வைக்கிற சவால்களுக்கு ஒரு புரட்சிகர பதில்வினையை வளர்த்தெடுக்க, அதன் பலப்பல படிப்பினைகள், அது அளிக்கிற உத்வேகம் ஆகியவற்றில் இருந்து ஆற்றல் பெற்ற, தீர்மானகரமான உறுதியேற்பதாக அமைய வேண்டும்.
இருபதாவது நூற்றாண்டு உலகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பரிசோதனையான மகத்தான அய்க்கிய சோவியத் குடியரசு, அது வீழ்ச்சியுற்றபோதும், இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசம் பதிலளிக்க வேண்டிய கேள்விகளை விட்டுச் சென்றிருக்கிறது. முதலாளித்துவத்தை, அதன் உள்ளார்ந்த செயல்பாட்டில், சோசலிசம் விஞ்சிச் செல்ல வேண்டும்; முதலாளித்துவ ஜனநாயகத்தை விட சோசலிச ஜனநாயகமே மேலானது என்று எல்லா விதங்களிலும் நிகழ்த்திக் காட்ட வேண்டும்; கம்யூ னிஸ்ட் கட்சியில் அமைப்பாக்கப்பட்ட, சோசலிச சமூகத்தை வழிநடத்துகிற தொழிலாளர் வர்க்கம், ஒட்டுமொத்த வர்க்கத்தின் நீடித்த, அனைத்தும் தழுவிய பிரதிநிதித்துவத்தையும் பங்கேற்பையும் உறுதிசெய்ய வேண்டும்; விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் அறிவின், படைப்பு கலையின் பிற தளங்களில் ஏற்படுகிற முன்னேற்றத்தில் இருந்து விடாப்பிடியாக ஆற்றல் பெற்று, சோசலிச மாதிரியை முன்னகர்த்த வேண்டும். ஆனால் நெருக்கடிகளை வாய்ப்புகளாக மாற்றுவதில், மக்களின் புரட்சிகர முன்னேற்றம், நமது காலத்து ட்ரம்ப்புகள், புடின்கள், மோடிகள், எர்டோகன்களை எதிர்கொள்வதில் இன்றைய கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்டியான, அவர்களுக்கு உந்துதலான கம்யூனிஸ்ட் லட்சியம் என்ற நலன்களிலிருந்து உறுதியாகவும் தீர்மானகரமாகவும் தருணத்தை கைப்பற்றுவதில், நவம்பர் புரட்சியின் பிரம்மாண்டமான புதுமை மற்றும் புரட்சிகர உணர்வுதான் மிகவும் முக்கியமானது.
குறிப்பு: மகத்தான நவம்பர் புரட்சியின் அய்ம்பதாவது ஆண்டில், 1967 நவம்பரில், விடுதலை இதழ் தனது பயணத்தைத் துவக்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க நக்சல்பாரி எழுச்சி, அதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் நடந்தது. அதன் இடிபோன்ற செய்தி, இந்தியாவின் தொலைதூர மூலைமுடுக்கெல்லாம் எதிரொலிக்கத் துவங்கியது. உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்டுகள், சோவியத் யூனியனின் தேக்கத்தின் சிதைவுகளின் துவக்க கால அறிகுறிகளுக்கு எதிராக, குறிப்பாக, சோசலிச மாதிரி, அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான போட்டியில் வல்லரசு மனோபாவத்தில் சிக்குவதற்கு இட்டுச் சென்ற அதன் வெளியுறவு கொள்கை தொடர்பாக, சக்திவாய்ந்த விவாதத்தை துவக்கியிருந்தனர். இந்திய அரசின் கொடூரமான ஒடுக்குமுறையையும் எதிர்கொண்டு, நக்சல்பாரி எழுச்சியின் செய்தியை பரப்பும், நவம்பரின் புரட்சிகர மரபை உயர்த்திப் பிடிக்கும் முயற்சியில், விடுதலை இதழும் அந்த விவாதத்தில் பங்கேற்றது. இன்று நவம்பர் புரட்சி நூறு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறபோது, விடுதலை இதழும் சவாலான அய்ம்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. லெனின் மற்றும் நவம்பரின், சாரு மஜும்தார் மற்றும் நக்சல்பாரியின், எப்போதும் உத்வேகம் தரும் புரட்சிகர மரபுக்கு விடுதலை இதழ் தலைவணங்குகிறது. போராடுவோம். வெற்றி பெறுவோம்.

Search