COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, October 18, 2017

கேளாச் செவியர்களின் செவிட்டில் அறைவிட்ட செவிலியர்கள் போராட்டம்

டெங்கு, தமிழ்நாட்டைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. விஜயபாஸ்கருக்கு விழி பிதுங்கியது. எது பற்றியும் கண்டுகொள்ளாமல் இருக்கும் பழனிச்சாமியே, டெங்கு சவால் கடுமையானதாக உள்ளது என்றும், அதனைச் சமாளிக்க பொதுமக்களின், தொண்டு நிறுவனங்களின் உதவி, அரசுக்கு தேவை என்றும் சொல்கிறார்
. சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், தேனாம்பேட்டை மருத்துவ சேவை இயக்ககத்திற்கு வந்தபோது செவிலியர்களும் அவர்களது பிரதிநிதிகளும் அவரைச் சுற்றி நின்று, செவிலியர் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த தங்களுக்கு ரூ.20,000 சம்பளம் என அளிப்பதில் ஏன் தாமதம் எனக் கேள்வி எழுப்பினார்கள். விரைவில் அரசாணை வரும் எனப் பதில் சொல்லி நழுவி ஓடினார் விஜய பாஸ்கர்.
குளோபல் நர்சஸ் அசோசியேசன் தமிழ் நாடு, 25.09.2017 அன்று வேலைநிறுத்த அறிவிப்பு தந்து, 11.10.2017 முதல் காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ், பில்ரோத் மருத்துவமனை, செட்டிநாடு சுகாதார நகரம், எஸ்ஆர்எம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யம் ஆகிய நிறுவனங்களில் வேலை நிறுத்தம் துவங்கியது.
உச்சநீதிமன்றம் 29.01.2016 அன்று ரிட் மனு (சி) எண் 527/2011ல், தனியார் மருத்துவமனை செவிலியர் ஊதியம் தொடர்பாக, 6 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு குழு அமைத்து பரிந்துரைகள் பெறலாம், சட்டம் இயற்றலாம் என வழிகாட்டுதல் தந்தது.
அதன்படி மத்திய அரசு, 24.02.2016 அன்று 9 பேர் கொண்ட குழு அமைத்தது. இந்த குழு 3 பரிந்துரைகள் தந்தது:
1. ஊதியம்
200 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கம்/யூனியன் பிரதேசம், அதே கிரேடில் வேலை பார்க்கும் செவிலியர்க்கு தரும் சம்பளம் தர வேண்டும்.
100 படுக்ககைகளுக்கு மேல் படுக்கைகள் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மாநில அரசு செவிலியர் சம்பளத்தைவிட 10% வரை குறைத்துக் கொள்ளலாம்.
50 முதல் 100  படுக்கைகள் உள்ள தனியார் மருத்துவமனைகளில், மாநில அரசு செவிலியர் சம்பளத்தைவிட 25% வரை சம்பளம் குறைத்துக் கொள்ளலாம்.
50 படுக்கைகளுக்குக் கீழ் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சம்பளம் ரூ.20,000க்குக் குறையக் கூடாது.
2. பணி  நிலைமைகள்
 சம்பந்தப்பட்ட மாநில அரசு/யூனியன் பிரதேசம் செவிலியர்க்கு வழங்குவதுபோல், விடுப்பு, வேலை நேரம், போக்குவரத்து, மருத்துவ வசதி, தங்குமிடம் போன்றவற்றை தனியார் மருத்துவமனை செவிலியர்க்கும் வழங்க வேண்டும்.
3. தனியார் மருத்துவமனை செவிலியர் தொடர்பான இந்த பரிந்துரைகளை நிறைவேற்ற, மாநில/யூனியன் பிரதேச அரசாங்கங்கள் வழிகாட்டுதல்கள் தர சட்டம் இயற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனை செவிலியர்கள் போராட்டத்தை அடுத்து கேரள அரசு, அங்கு செவிலியர்க்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.20,000 என்று தன் கொள்கை முடிவை அறிவித்தது. தமிழ்நாட்டில், குளோபல் நர்சஸ் அசோஷியன், செவிலியர் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த தனியார் மருத்துவமனை செவிலியர்களை மட்டும் அமைப்பாக்கியது. அரசினர் விருந்தினர் மாளிகை, வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. தமிழக அரசு இவர்களது கோரிக்கைகளை பொருட்படுத்தவில்லை. இந்தப் பின்னணியில்தான் வேலை நிறுத்த அறிவிப்பு தரப்பட்டு, வேலை நிறுத்தம் 11.10.2017 அன்று துவங்கியது.
தமிழ்நாட்டில் குறைந்தபட்ச சம்பளம்
தமிழ்நாட்டில் 25.05.2009 அன்று தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களின் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச சம் பளம் நிர்ணயிக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகும், குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படவில்லை. இளநிலை மருத்துவருக்கு குறைந்தபட்ச மாத அடிப்படைச் சம்பளம் ரூ.4,334. ஸ்டாஃப் நர்சுக்கு ரூ.3,152. இவர்களுக்கும் 01.04.2017 முதல் 31.03.2018 வரை மாதாமாதம் பஞ்சப்படி ரூ.4,592 வழங்கப்படும். பழனிச்சாமி அரசாங்கம் ஸ்டாஃப் நர்சுக்குக் குறைந்தபட்ச சம்பளம் ரூ.8,344 (அடிப்படைச் சம்பளம்+ பஞ்சப்படி) கொடுத்தால் போதும் என்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புபடியான, மத்திய அரசு ஒரு மாதம் ரூ.20,000 குறைந்தபட்ச சம்பளம் எனப் பரிந்துரைத்துள்ளது.
காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையில் வேலை நிறுத்தம்
டாஃபே சன்மார் நிறுவனங்களின் பிரதிநிதிகளே காஞ்சி, காமகோடி குழந்தைகள் அறக் கட்டளை மருத்துவமனையை நடத்துகிறார்கள். இங்கு செவிலியர் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த செவிலியர்க்கு மாதச் சம்பளம் ரூ.12,000 ரூ.13,000 என்ற மட்டத்திலேயே உள்ளது. இந்த மருத்துவமனையில் செவிலியர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களையும் கொண்ட ஏஅய்சிசிடியு சங்கம் செயல்படுகிறது. இந்தச் சங்கம் 01.01.2017 முதல் அமைய வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்காக, 15 முறைக்கு மேல் பேசி தீர்வு வராத நிலையில் வேலை நிறுத்த அறிவிப்பு தந்திருந்தது. கோரிக்கை பதாகைகள் எங்கும் இருந்தன. செங்கொடிகள் நிறுவன வாயிலை அலங்கரித் தன. ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. தொழிலாளர் துறை தலையீடும் இருந்தது. ரூ.2500க்கு மேல் சம்பள உயர்வு முடியாது என்று துவக்கத்தில் அடித்துப் பேசிய நிர்வாகம், பின்னர் கணிசமாக முன்னேறி வந்தது. சங்கமும் ஒப்பந்தம் முடிப்பதற்கு தயாராகி வருகிறது. இந்தப் பின்னணியில்தான், பிஎஸ்சி, எம்எஸ்சி படித்த, நம் சங்கத்தில் இணையாத செவிலியர்கள் போராட்டத்தில் இறங்கினர். மருத்துவமனை, முதல் வேலை நிறுத்தத்தைக் கண்டது. ஏறத்தாழ 150 பேர் 11.10.2017 முதல் வேலை நிறுத்தம் செய்தனர்.
இங்கு ஒரு நாளில் 50 முதல் 100 குழந்தைகள் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார்கள். புற நோயாளிகளாக 200 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். 11, 12 தேதிகளிலும் 13 ஆம் தேதி அரை நாளும் நிர்வாகம், உள் நோயாளிகள் நுழைவைத் தவிர்த்தது.
வேலை நிறுத்தம் செய்த செவிலியர்கள் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், சுரண்டும் வர்க்கத்தினர் அல்ல. அதனால் அவர்களுக்கு நெஞ்சில் ஈரம் இருந்தது. சுழற்சி முறையில், தங்களில் சிலருக்கு, அவசர/தீவிர சிகிச்சை பெறும் உள் நோயாளிகளைச் கவனிக்க, வேலை நிறுத்தத்தில் இருந்து விலக்கு தந்தனர். பச்சமுத்து நிர்வாகம், எஸ்ஆர்எம் விடுதியை மூடுவேன் என மிரட்டியது. தள்ளுமுள்ளு செய்தது. காவல்துறை மூலம் மிரட்டியது. ஆனால் காஞ்சி, காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை நிர்வாகம், சங்கம், கூட்டுபேர உரிமை ஆகியவற்றிற்கும் பழக்கப்பட்டிருந்ததால், அடக்குமுறையில் மிரட்டலில் நேரடியாக ஈடுபடவில்லை. ரூ.12000 ரூ.13000 சம்பளம்தானே தருகிறோம் என்ற தார்மீகத் தயக்கமும் இருந்திருக்கலாம்!
வேலை நிறுத்தம் செய்த செவிலியர்கள் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் தரையில் பாய் போட்டு உறங்கினர். மருத்துவ மனை வளாகமே, போராடிய செவிலியர்க்கு குளியல் அறை கழிப்பிடம் தங்குமிடம் என மாறியது. உத்தரபிரதேசத்தில் யோகி ஆட்சியில் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறந்து போனபோது எதிர்ப்புக் குரல் கொடுத்த தொழிலாளர்கள், கூட பணி புரியும் செவிலியர்களுக்கு ஆதரவு தராமலா இருப்பார்கள்?
தோழர் எ.எஸ்.குமாரும், மருத்துவமனை சங்க நிர்வாகிகளும், போராடிய தோழர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர். சங்க முன்னணிகள் கூடவே இருந்து உதவினர். தோழர்.எ.எஸ்.குமார், நிர்வாகத்திடம் போராடுபவர்கள் மீது பழிவாங்குதல் நடவடிக்கை ஏதும் கூடாது, அரசு முடிவெடுத்து குறைந்தபட்ச சம்பளம் அறிவிக்கும் வரை, சங்கம் போடும் ஒப்பந்தப் பயன்களை, போராடும் செவிலியர்க்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். நிர்வாகம், 12.10.2017 அன்றே இந்த கோரிக்கையை ஏற்பதாக நிர்வாகம் தெரிவித்தது. போராட்டக்காரர்களை அழைத்தும் பேசியது. மருத்துவமனைமட்ட ஏஅய்சிசிடியு நிர்வாகிகள், சம்பள பிடித்தம் வேண்டாம் என்ற கோரிக்கைகளையும் வைத்தனர்.
இந்தப் பின்னணியில் தொழிலாளர் இணை ஆணையர் 13.10.2017 அன்று நிர்வாகங்கள் மனம் மகிழும் விதமான தொழிலா ளர்களுக்கு எந்தப் பயனும் தராத ஓர் ஏற்புடைய அறிவுரையை வழங்கினார். வேலை நிறுத்தம் 13.10.2017 மதியமே திரும்பப் பெறப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என அறிவித்து வேலை நிறுத்தம் செய்யக் கூடாது எனத் தடை வழங்கி உள்ளது என 15.10.2017 தேதிய செய்திகள் சொல்கின்றன. வேலை நிறுத்தம் முடிந்த பிறகு, வேலை நிறுத்தத்திற்கு தடை!
போராட்டம் உணர்த்தும் செய்தி என்ன?
வலதுசாரி பேரிருள் பரவிப் படரும் நம் நாட்டில், ஒளிக்கீற்றுகளாக மக்களுடைய போராட்டங்கள் திரும்பத்திரும்ப எழுகின்றன. போராட்டக் களத்திற்கு வந்து இரவு பகலாய்ப் போராடிய செவிலியர்களை, தொழிலாளர் இயக்கம் உளமாறப் பாராட்டி வரவேற்கிறது. குளோபல் நர்சிங் அசோசியேசன் போராட்டத்தில் இருந்து உரிய படிப்பினைகள் பெற வேண்டி உள்ளது. எது எப்படியானாலும், அற்புதமான போராட்டம் நடத்தியவர்களுக்கு போராட்ட வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு அரசு உடனடியாக செவிலியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.20,000 என்ற மத்தியக் குழுவின் பரிந்துரையை ஏற்க வேண்டும். உச்சநீதிமன்றம் அந்தரங்க உரிமையை உயர்த்திப் பிடித்துள்ளது. கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தி காஞ்சன் இலையா புத்தகத்திற்கு தடை வழங்க மறுத்துவிட்டது. தொழிலாளர் மற்றும் மக்கள் போராட்டங்கள்பால் நீதிமன்றங்கள் கூருணர்வுடன் அக்கறையுடன் நடந்து கொள்வது அவசியம்.
எல்லா மன்றங்களும் மக்கள் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை ஆகும்.

Search