இந்தியாவில்
தஞ்சம் புகுந்த ரோஹிங்கியாக்கள் வெளியேற்றப்படக்
கூடாது
சிறு வயதிலேயே (16 வயது நிறையும் முன்)
சட்டவிரோதமாக அய்க்கிய அமெரிக்காவில் குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற்
றுவதை தடுக்க ஒபாமா அதிபராக
இருந்த போது டிபர்ட் ஆக்ஷன்
பார் சில்ரன் அரைவல் (டாகா)
என்ற ஒரு திட்டம் கொண்டு
வரப்பட்டது.
அந்தத் திட்டத்துக்கு இப்போது
ட்ரம்ப் முடிவு கட்டுகிறார்.அப்படி
சட்ட விரோதமாக வந்தவர்கள் கட்டம் கட்டமாக வெளியேற்றப்படுவார்கள்
என்கிறார்.
இதற்கெதிராக
அய்க்கிய அமெரிக்காவின் 15 மாநிலங்களும் கொலம்பியா மாகாணமும் நியுயார்க்கில் வழக்கு தொடுத்துள்ளன. ட்ரம்ப்
கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு பிரிவு
அய்க்கிய அமெரிக்க மக்கள் இதற்கு எதிர்ப்பு
தெரிவிக்கின்றனர்.
ஆப்பிள்,
கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் தலைவர்களும்
எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களால் நமக்கு எந்தப் பிரச்சனையும்
இல்லை, நமது நாட்டுக்காக உழைத்திருக்கிறார்கள்
என்கிறார்கள்.
ட்ரம்ப்பின்
முடிவு அமலாகத் துவங்கினால் 8 லட்சம்
பேர் வெளியேற்றப்படலாம். இவர்களில்
7,000 பேர் இந்திய அமெரிக்கர்கள்.சவுத்
ஏசியன் அமெரிக்கன்ஸ் லீடிங் டுகெதர் என்ற
அமைப்பு 20,000 பேர் இந்தியர்கள் என்கிறது.
அய்க்கிய
அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள்
தலை மேல் கத்தி தொங்குகிறது.
அய்க்கிய அமெரிக்காவில் இருப்பவர்களே, இது அநியாயம் என்று
சொல்லும் போது, நாமும் அப்படித்தான்
சொல்வோம். மோடியும் அப்படித்தான் சொல்வார்.
இந்த நியாயம் நமது நாட்டில்
தஞ்சமடைந்தவர்களுக்கும் பொருந்தும்.ஆனால் நம் நாட்டில்
மோடி, ட்ரம்ப் பேசுவதுபோல், பிடிவாதமாகப்
பேசுகிறார்.
அய்க்கிய
அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட இருக்கும்
ஆபத்தை எதிர்கொள்பவர்கள் தங்கள் சொந்த நாட்டில்
இருந்து விரட்டப்பட்டு அங்கு அகதிகளாகச் சென்றவர்கள்
அல்ல. தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பினால்
உயிர் பிழைக்க முடியாது என்ற
நிலை அவர்களுக்கு இல்லை. இந்த நிலைமைகளிலும்
அவர்கள் வெளியேற்றப்படக் கூடாது என்கிறோம்.
ஆனால் நமது நாட்டில் உயிருக்கு
அஞ்சி ஓடி வந்து தஞ்சம்
புகுந்தவர்களை, தங்கள் நாட்டுக்கு திரும்பினால்
கொல்லப்படும் ஆபத்து இருக்கிறது அதனால்
எங்களை வெளியேற்றும் எண்ணத்தை கைவிடுங்கள் என்று கெஞ்சுபவர்களை வெளியேறியே
தீர வேண்டும் என்று மோடி அரசாங்கம்
சொல்கிறது.
அவர்கள்
சொந்த நாட்டு மக்களையே கூறுபோட்டு
கொலை செய்பவர்கள். அந்நிய நாட்டு அகதிகளுக்கா
இரங்குவார்கள்? மாநில அரசாங்கங்கள் தங்கள்
மாநிலங்களில் சட்ட விரோதமாக குடியேறியிருப்பவர்களை
அடையாளம் கண்டு வெளியேற்ற வேண்டும்
என்று மோடி அரசு ஆணை
அனுப்பியுள்ளது.
அநியாயமான
நாடு கடத்தும் அறிவிப்புக்கு எதிராக அய்க்கிய அமெரிக்காவில்
குரல்கள் எழுந்தது போலவே இந்தியாவிலும் குரல்கள்
எழுகின்றன.
இன்று இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படும் ஆபத்தை
எதிர்கொள்பவர்கள் மியான் மரில் இருந்து
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வந்த ரோஹிங்கியா
இசுலாமியர்கள்.
ரோஹிங்கியாக்கள்
இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்
என்று உத்தரவிட்டு விட்டு மியான்மருக்குச் சென்றிருந்த
மோடி, தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்றார்.
அவர் சொன்னது கவுரி லங்கேஷ்
போன்றவர்களை சுட்டுக் கொல்லும் தீவிரவாதிகளை அல்ல. மியான்மரின் ராகின்
மாகாணத்தில் குடியுரிமைக்காக குரல் எழுப்புகிற போராளிகளை.
மனித உரிமைக்கு குரல் கொடுத்தார் என்று
நோபல் பரிசு பெற்ற ஆங்
சு கியும் மோடி இப்படிச்
சொன்னபோது உடன் இருந்தார். துரதிர்ஷ்வசமாக
இன்று மோடிக்கும் ஆங் சு கிக்கும்
பிரச்சனை பொதுவானதாக இருக்கிறது. இசுலாமியர்கள்.
ரோஹிங்கியாக்கள்
மியான்மரின் ராகின் மாகாணத்தில் பல
நூற்றாண்டுகளாக குடியிருப்பவர்கள். அவர்கள் பங்களாதேஷில் இருந்து
வந்தவர்கள். மியான்மரின் பூர்வகுடிகள் அல்ல என்று மியான்மர்
அரசாங்கம் சொல்கிறது. 1948 அரசியல்சாசனமும், 1982 குடியுரிமைச் சட்டமும் ரோஹிங்கியாக்களை குடியுரிமையில் இருந்து விலக்கி வைக்கின்றன.
கல்வி, வேலை வாய்ப்பு அனைத்திலும்
1 கோடி பேருக்கும் மேல் உள்ள ரோஹிங்கியாக்களுக்கு
மியான்மர் குடி மக்களுக்கான உரிமைகள்
தரப்படுவதில்லை. இவர்கள் பங்களாதேஷில் இருந்து
ஊடுருவியவர்கள் என்று மியான்மர் புத்த
பெரும்பான்மை கருதுகிறது. அமைதிக்கு பெயர்போன புத்தர் மதத்தை பின்பற்றுபவர்கள்தான்
ரோஹிங்கியாக்கள் மீது நடக்கும் கடுமையான
இன வெறி, மதவெறி தாக்குதல்களுக்கு,
கொடுமைகளுக்கு அடிப்படையில் மிகவும் முக்கியமான காரண
மாக இருக்கிறார்கள். (தமிழர்களை கொன்று குவித்த சிங்கள
பேரினவாதமும் புத்த மதத்தை அடிப்படையாகக்
கொண்டதுதான்).
மியான்மரின்
பல ஆண்டு கால ராணுவ
ஆட்சிக்குப் பிறகு ஜனநாயக முறைப்படி
நடந்த தேர்தலில் ஆங் சூ கியின்
கட்சி ஆட்சி அமைத்தபோது தங்களுக்கு
விடியல் வருமென ரோஹிங்கியா இசுலாமியர்கள்
எதிர்ப்பார்த்தனர். அவர்கள் நம்பிக்கை பொய்த்தது.
அமைதி நோபல் பரிசு பெற்ற
ஆங் சூ கியின் அணுகுமுறையும்
ரோஹிங்கியாக்களுக்கு எதிராகவே இருந்தது. இன்று மிகப்பெரிய மனித
உரிமை நெருக்கடி, மானுட நெருக்கடி ஏற்பட்டுள்ள
நேரத்திலும் அப்படியேதான் தொடர்கிறது. ரோஹிங்கியாக்களுக்கென மியான்மர் அரசு அமைத்துள்ள முகாம்களில்
எந்த மானுடத் தன்மையும் இல்லாத
வாழ்நிலைமைகளே உள்ளன. அங்கும் அவர்கள்
ராணுவத்தாலும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அய்நா முன்னாள் பொதுச்
செயலாளர் கோபி அன்னான் தலைமையில்
சூ கியே அமைத்த ஆலோசனை
ஆணையமும் ரோஹிங்கியாக்கள் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாவதை உறுதிப்படுத்தி உடனடி நடவடிக்கைகளையும் பரிந்துரைத்துள்ளது.
மியான்மர் அரசாங்கம் இன்னும் ஆணைய பரிந்துரைகள்படி
நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
ஒரு புறம், புத்த பெரும்பான்மைவாதத்
தாக்குதல்கள் ரோஹிங்கியாக்களை விரட்டும் போது, ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு
என்ற பெயரில் உருவான ஆரக்கன்
ரோஹிங்கியா சால்வேசன் ஆர்மி என்ற இசுலாமியர்
விடுதலை குழு தீவிரவாத நடவடிக்கைகளில்
இறங்குகின்றது, அவற்றை ஒடுக்குவது என்ற
பெயரில் ராகின் பகுதியில் மியான்மர்
ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கைகள் ரோஹிங்கியாக்கள் வாழ்வை சூறையாடியது.
2017 ஆகஸ்ட்
25க்குப் பிறகு ராகினில் போராளிகளை
கட்டுப்படுத்துவது என்ற பெயரில் சாதாரண
ரோஹிங்கியாக்கள் மீது மியான்மர் ராணுவம்
நடத்தும் தாக்குதல்களால் விரட்டப்பட்டு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் மியான்மரை விட்டு வெளியேறுகின்றனர். செப்டம்பர்
8 அன்று கூட ராகின் பகுதியின்
கிராமம் ஒன்றில் ரோஹிங்கியாக்கள் வீடுகள்
தீக்கிரையாயின.
இந்தக்
கொடுமைகளில் இருந்து தப்பிக்க படகுகள்
மூலம் நாட்டை விட்டு வெளியேறுகிற
ரோஹிங்கியாக்கள் பலர் படகு கவிழ்ந்து
கடலிலேயே செத்தும் போகின்றனர். மியான்மரில் இருப்பது இதை விட கொடுமையானது
என்பதாக அவர்கள் வாழ்வு அமைந்துவிட்டது.
மியான்மர்
ராணுவத்திடம் இருந்து தப்பி பங்களாதேஷ÷க்குச்
செல்லும் ரோஹிங்கியாக்களை சமீபத்தில்தான் உருவான, பாதுகாப்பற்ற ஒரு
தீவில் குடியேற்றப் போவதாக பங்களாதேஷ் அரசாங்கம்
சொல்கிறது. ஏற்கனவே குடியேறியவர்களை பராமரிப்பதே
சிரமமாக இருக் கும்போது, மேலும்
ரோஹிங்கியாக்கள் பங்களாதேஷ÷க்கு வருவதை அனுமதிக்க
முடியாது என்கிறது. ஏற்கனவே, வன்முறைக்கு பயந்து தப்பி பங்களாதேஷ÷க்குச்
சென்ற பெண்களும் குழந்தைகளும் அதிக எண்ணிக்கையில் இருந்த
ஒரு படகு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இந்தப்
பின்னணியில்தான், மியான்மருக்கு திருப்பி அனுப்பப்பட்டால் நிச்சயம் கொல்லப்படுவார்கள் என்று நன்கு அறியப்படுகிற
பின்னணியில்தான் மோடி அரசு இந்தியாவில்
குடியேறியிருக்கிற ரோஹிங்கியா இசுலாமியர்களை நாடு கடத்த வேண்டும்
என்கிறது.
இந்துத்துவ
வெறி தலைக்கேறியுள்ள மோடி அரசு, ரோஹிங்கியாக்கள்
தேசியப் பாதுகாப்புக்கு உள்ளாற்றல்மிக்க அச்சுறுத்தல்கள், பயங்கரவாத அமைப்புகளால் பணிக்கமர்த்தப்பட எளிதில் வாய்ப்புள்ளவர்கள், நமது
ஆதாரங்களுக்கு சுமை என்று தனது
வழக்கமான காரணங்களை முன்வைக்கிறது. அதற்கான உத்தரவையும் வெளியிட்டுள்ளது.
ரோஹிங்கியாக்கள்,
எங்களை இங்கேயே கொன்று விடுங்கள்
திருப்பி அனுப்பாதீர்கள் என்கிறார்கள். இந்தியாவில் 40,000 பேர் இருக்கக் கூடும்
என்று மதிப்பிடப்படுகிறது. இவர்களில் 16,000 பேர் அய்நாவில் பதிவு
செய்து அகதிகள் அட்டை வைத்துள்ளவர்கள்.
2012ல் புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் தப்பிப்
பிழைத்து வந்தவர்கள். அய்தராபாதில் 3800 பேர், ஜம்முவில் 7000 பேர்
உள்ளனர். அய்நாவின் அகதிகள் அட்டை வைத்திருந்தாலும்
அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்தான் என்று மோடி அரசு
அடாவடியாகப் பேசுகிறது.
இந்திய
குடியுரிமைச் சட்டம் 1955க்கு திருத்தங்கள் கொண்டு
வந்து, அண்டை நாடுகளில் இருந்து
இந்தியாவுக்கு வரும் இந்துக்கள், ஜெயின்கள்,
புத்த மதத்தினர், கிறித்துவர்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை உண்டு
என்கிறது. இவர்களுக்கு குடியுரிமையே தரும் அளவுக்கு சட்டத்தை
திருத்துகிற மோடி அரசு இனவெறி,
மதவெறி தாக்குதலுக்கு ஆளாகி தப்பிப் பிழைத்து
வந்த இசுலாமியரை விரட்ட வேண்டும் என்கிறது.
ரோஹிங்கியாக்கள்,
மியான்மரில் ஜப்பான் ஆக்கிரமிப்பு இருந்தபோது
அதற்கெதிராக பிரிட்டிஷ் படையால் அனுப்பப்பட்டவர்கள். அதாவது
ஒரு வகையில் அவர்கள் இந்தியர்கள்
என்று சுற்றி வளைத்துச் சொல்லும்
வாய்ப்பும் உள்ளது.
தங்கள்
நாட்டில் இனரீதியான தாக்குதல்களுக்கு ஆளாவதால் அதில் இருந்து தப்பித்து
பிற நாடுகளில் குடியேறுபவர்களை திருப்பி அனுப்பக் கூடாது என்பது சர்வதேச
சட்டம். இந்தியா
உள்ளிட்ட எல்லா நாடுகளையும் அது
கட்டுப்படுத்தும்.
இந்திய
அரசியல்சாசனமும் இந்தியாவில் இருக்கும் ஒருவர், அவர் இந்திய
குடியுரிமை பெற்றவரோ, இல்லையோ, அவரது உயிர் வாழும்
உரிமையை உறுதிப்படுத்துகிறது.
இந்த இரண்டு அம்சங்களை அடிப்படையாகக்
கொண்டு, ரோஹிங்கியாக்கள் இரண்டு பேர் தங்களை
நாடு கடத்தக் கூடாது என்று
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். செப்டம்பர்
11 அன்று வழக்கு மறுவிசாரணை செய்யப்படும்
வரை, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை
மத்திய அரசு எடுக்காது என்று
உறுதியளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டதற்கு
அப்படி எதுவும் சொல்ல முடியாதென
அரசு வழக்கறிஞர் சொல்கிறார். இந்த வழக்கில் தன்னையும்
இணைத்துக் கொள்ள வேண்டும் என்று
உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள
ஆர்எஸ்எஸ் தலைவர் கோவிந்தாச்சார்யா, ரோஹிங்கியாக்கள்
வெளியேற்றப்படவில்லை என்றால் நாடு இன்னொரு
பிரிவினைக்கு உள்ளாகும் என்று பதறுகிறார். 40,000 பேரால்,
அதுவும் அஞ்சி நடுங்கி இங்கு
வாழ்பவர்களால் பிரிவினை வந்துவிடுமா? அல்லது இதைப் பயன்படுத்தி
இந்துத்துவ வெறியர்கள் நாட்டை துண்டாடுவார்களா?
ஈராக்,
ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளில்
அய்க்கிய அமெரிக்க ராணுவ தலையீடுககளால், இஸ்ரேல்
பாலஸ்தீனத்தில் நடத்திய தாக்குதல்களால், அங்கிருந்து
அகதிகளாக வெளியேறிய இசுலாமியர்கள், பாகிஸ்தான், துருக்கி, ஜோர்டான், லெபனான், ஈரான் ஆகிய இசுலாமிய
நாடுகளில்தான் பெருமளவில் தஞ்மடைந்துள்ளனர். ரோஹிங்கியாக்களும் பங்களாதேஷில்தான் பெரும்எண்ணிக்கையில் தஞ்மடைந்துள்ளனர். ஜனநாயகப் பெருமை பேசும் பணக்கார
நாடுகளை விட ஏழை நாடுகள்தான்
உலகில் பாதிக்கும் மேற்பட்ட அகதிகளுக்கு இது வரை தஞ்சம்
தந்துள்ளன.
இசுலாமியர்பால்
துவேஷம் காட்டும் அரசுகள், அகதிகளை பெருமளவில் பராமரிக்கும்
நாடுகள் இசுலாமிய நாடுகள் என்பதை காணத்
தவறுகின்றன. எத்தியோப்பாவில் கூட ஏழரை லட்சம்
அகதிகளை அந்த நாடு பராமரிக்கிறது
எனும்போது, வளர்ச்சி அடைந்துவிட்டது என்று மோடியும் அவரது
அமைச்சர்களும் சொல்லும் இந்தியாவில் ஒரு 40,000 பேரை தங்க வைத்து
பராமரிப்பதை அனுமதித்து, உறுதி செய்ய முடியாதா?
130 கோடி பேர் இருக்கிற நாட்டில்
இன்னும் 40,000 பேருக்கா இடமில்லை? கிட்டத்தட்ட நாடற்றவர்களாக இருக்கும் அவர்களை, இங்கிருந்தால் உயிருடன் இருப்பாய், அதனால், உனது நாட்டுக்குப்
போய் உயிர் விடு என்கிறது
மோடி அரசு. பாலி பிரகடனத்தில்
ரோஹிங்கியாக்களின் மனித உரிமை பாதுகாப்பது,
அவர்களுக்கு நிவாரணம் சென்று சேர்வதை உறுதி
செய்வது என்ற சாதாரண விசயங்களுக்குக்
கூட மோடி ஒப்புதல் தராதது
எந்த விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. அவர்களை மனிதாபமான அடிப்படையில்
அணுகுவதற்கு பதிலாக, இசுலாமியர்கள் என்ற
அடிப்படையில் அணுகுவதே இன்றைய இந்தியாவில் முக்கியமான
பிரச்சனை.
இங்கு தேவை அரசியல் தயார்நிலையே.
அரசுகள், சட்டங்கள், விதிகள் எல்லாம் மனித
வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக.மனிதர்களை பாதுகாக்க முடியாது என்றால் அவை திருத்தப்பட
வேண்டும். மோடி அரசும் பாஜகவும்
இந்த நாட்டு இசுலாமியர்களையே பாகிஸ்தானுக்கு
விரட்டிவிட நாள் பார்ப்பவர்கள். ஆனால்,
நாடு அவர்களுடையது அல்ல. இது இந்திய
மக்களுடையது.துன்பத்தில் வருபவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தஞ்சம் தரும் வரலாறு
கொண்டது. அந்த வரலாற்றை மீட்டெடுத்து
தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியாக்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டிய கடமை இந்திய
மக்களின் பெயரால் ஆட்சி நடத்தும்
இந்திய ஆட்சியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. கடமையைச் செய்ய மறுப்பார்கள் என்றால்,
செய்ய வைக்க வேண்டிய கடமை
ஜனநாயகம் விரும்பும் இந்திய மக்கள் முன்னால்
உள்ளது. ரோஹிங்கியாக்கள் வெளியேற்றப்படக் கூடாது என இப்போது
எழுந்துள்ள குரல்கள் மேலும் வலுப்பட வேண்டியுள்ளது.
அத்துடன், ரோஹிங்கியாக்களை குடிமக்களாக அங்கீகரிக்கும் விதம் மியான்மர் தனது
குடியுரிமை சட்டத்தை திருத்தியமைக்க வேண்டும், ரோஹிங்கியாக்கள் மனிதப் படுகொலைக்கு உள்ளாக்கப்படுவதை
மியான்மர் அரசாங்கம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்
என்றும் குரல் எழுப்ப வேண்டியுள்ளது.