COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, October 30, 2017

எட்டு மணி நேர வேலை நாள்
நாற்பது மணி நேர வேலை வாரம்
கவுரவமான, பாதுகாப்பான, நிரந்தரமான
மாதம் ரூ.21,000க்குக் குறையாத ஊதியத்துடனான
பல லட்சக்கணக்கான வேலைகள் வேண்டும்
எழுக தமிழ்நாட்டு பாட்டாளி வர்க்கம்!

எஸ்.குமாரசாமி

உழைப்பால்தான் மனிதர்கள் உருவானார்கள்

கடவுள்களும் மதங்களும் மனிதர்களைப் படைக்கவில்லை,
மனிதர்களே, கடவுள்களையும் மதங்களையும் படைத்தார்கள் என்று மார்க்சியம் சொல்கிறது. கோடிகளோடு கோடிகளை கொட்டிக் குவித்தாலும், புதிதாய்/கூடுதலாய் ஒரு ரூபாய் மதிப்பு கூட உருவாகாது. மனித உழைப்பு செலுத்தப்பட்டால் மட்டுமே, புதிய/கூடுதல் மதிப்பு இந்த உலகத்தில் உருவாகும் என்றும் மார்க்சியம் சொல்கிறது. பரவலாக அறியப்படும் இந்த இரண்டு விசயங்கள் தாண்டி, மிகவும் சுவையான, ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கருத்தையும், ‘மனிதக் குரங்கில் இருந்து மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்’ என்ற சிறு பிரசுரத்தில் எங்கல்ஸ் சொல்லியுள்ளார். அவர் கூற்றுப்படி, மனிதக் கை உழைப்பு உறுப்பு மட்டுமல்ல, அது உழைப்பின் விளைபொருளும் ஆகும். பல்லாயிரம் ஆண்டுகள் உழைப்பாலும் உழைப்புக் கருவிகளின் செயல்பாட்டாலும், மனிதக் குரங்கில் இருந்து மனிதர்கள் உருவானார்கள். உழைப்பால்தான் மனித வாழ்க்கையில் மொழியும் உருவானது. மனித சமூகத்திற்கு, அதன் தோற்றத்துக்கு, வளர்ச்சிக்கு, உழைப்பு அடிப்படையானதாகும்.
காலம்தோறும் உழைப்பு
புராதன பொதுவுடைமை காலங்களில், மனித உழைப்பு அதன் குழந்தைப் பருவத்தில் இருந்தது. உழைப்பு கருவிகளோடு, உழைப்பு பண்பட்டது. மேம்பட்டது. உற்பத்திக் கருவிகள் முன்னேற்றத்துடன் பொருளுற்பத்தி பெருகியது. அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம், முதலாளித்துவ சமூகம் என்ற வரலாற்றுக் கட்டங்கள் நெடுக தனிச் சொத்து நிலவியது. அடிமைகளின், பண்ணையடிமைக ளின், நவீன பாட்டாளிகளான கூலி அடிமைகளின் உழைப்பால்தான் பொருளுற்பத்தியும் செல்வம் உருவாயின.
பேராசிரியர் கார்லோ பிசாட்டி தந்துள்ள விவரங்கள்படி, ரோமானிய அடிமைக்கு ஒரு நாளில் 6 மணி நேர வேலை இருந்ததாம். வருடத்தின் மூன்றில் ஒரு பகுதி நேரம் திருவிழாக்களில் கழிந்ததாம். மத்தியகால அய்ரோப்பிய தொழிலாளிக்கும் ஒரு நாளில் 6 மணி நேர வேலையே இருந்ததாம். ஆண்டின் 150 நாட்கள் மதப் பண்டிகைகளில் கழிந்தன வாம். அடிமை எசமானர்களும் பண்ணை எசமானர்களும் உழைக்காமலேயே கொழுத்து அதிகாரம் செய்தார்கள்.
கூலியுழைப்பைத் திருடும் மூலதனம்
மடிந்த உழைப்பும் கடந்த காலமும்
உயிருள்ள உழைப்பின் மீதும் நிகழ்காலத்தின் மீதும் 
செல்வாக்கு செலுத்தும் கூலி முறை
மனிதர்களின் உழைக்கும் ஆற்றலே, உழைப்பு சக்தியாகும். மற்ற பண்டங்களைப் போல் அல்லாமல், உழைப்பு சக்தி என்ற பண்டம், மனித ரத்தத்தாலும் சதையாலும் ஆனது.
கூலித் தொழிலாளி, தாம் உயிர் வாழ்வதற்காகவே உழைப்பில் ஈடுபடுகிறார். அவர் வெட்டி எடுக்கிற தங்கத்தை, அவர் நெய்கிற பட்டை, அவர் கட்டியெழுப்பும் மாளிகையை அவர் பெற முடியாது. உழைப்பின் உற்பத்தி பொருள் மீது உழைப்பாளிக்கு பாத்தியதை கிடையாது. அவர் தமக்காக கூலியை மட்டுமே உற்பத்தி செய்துகொள்கிறார். இந்தக் கூலி, அவர் பிழைத்திருந்து திரும்ப உற்பத்தியில் ஈடுபடுவதற்கும், உற்பத்தியில் ஈடுபட சந்ததியினரை உருவாக்குவதற்கும் ஆனது.
உற்பத்தியில் ஈடுபடும்போது, தமது உழைப்பு சக்தியை செலுத்தி தொழிலாளர்கள் புதிய மதிப்பை உருவாக்குகிறார்கள். ஆனால், அதை விட குறைவான மதிப்பே அவர்களுக்குக் கூலியாகத் தரப்படுகிறது. இங்கேதான், மூலதனம் உழைப்புத் திருட்டில் ஈடுபடுகிறது. (ஒரு பொருளை உற்பத்தி செய்வதில் மூலப் பொருட்கள் ரூ.60, மின்சாரம் ரூ.5, எந்திரத் தேய்மானம் ரூ.5 என வைத்துக்கொண்டால், கூலித் தொழிலாளி கை வைக்கும் முன் உள்ள மதிப்பு ரூ.60 + ரூ.5 + ரூ.5 = ரூ.70 என்றாகும். தொழிலாளி உழைத்து இறுதிப் பொருளை உற்பத்தி செய்கிறார். இப்போது உற்பத்தி பொருளின் மதிப்பு ரூ.80 ஆகிறது. அதாவது, உழைப்பு செலுத்தப்பட்ட பிறகு, உருவான புதிய மதிப்பு, ரூ.10 ஆகும்.இதில், தொழிலாளிக்கு கூலி ரூ.3 தரப்பட்டால் உழைப்புத் திருட்டு அல்லது உபரி மதிப்பு அல்லது லாபம் ரூ.7 ஆகும்).உழைப்பு உருவாக்கும் புதிய மதிப்பில், கூலி உயர லாபம் குறையும், கூலி குறைய லாபம் உயரும்.
வேலை நாளில் உழைப்பு சக்தி கூலி பெறுவதற்காக வேலையில் ஈடுபட்ட நேரம், அவசிய உழைப்பு நேரம் ஆகும். லாபம் உருவாக்க உழைப்பில் ஈடுபட்ட நேரம், உபரி உழைப்பு நேரமாகும்.
உபரி மதிப்புக் குவிதலே மூலதனத் திரட்சியாகிறது. அந்த வகையில் மடிந்த உழைப்பே மூலதனமாகிறது. ஆகவே, மடிந்த உழைப்பும் கடந்த காலமும் உயிருள்ள உழைப்பின் மீதும் நிகழ்காலத்தின் மீதும் செல்வாக்கு செலுத்துகின்றன.
உழைப்பு சக்தியை மூலதனத்துக்கு விற்பதன் மூலம் மட்டுமே, தொழிலாளி முதலாளித்துவ சமூகத்தில் உயிர் வாழ முடியும். தனது உழைப்பு சக்தியை முதலாளித்துவ வர்க்கத்தாரில் எவர் ஒருவருக்கும் விற்கும் சுதந்திரம் கூலித் தொழிலாளிக்கு உண்டு; அதே நேரம், அவரது உழைப்பு சக்தி விலை போகாத போது, செத்து மடியும் சுதந்திரமும் அவருக்கு உண்டு.
உபரி மதிப்பு, முழுமுற்றூடான (அப்சல்யூட்) உபரி மதிப்பு, ஒப்பீட்டுரீதியான (ரிலேடிவ்) உபரி மதிப்பு என இரண்டு விதங் களில் உருவாகிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதன் மூலம் உருவாவது முழுமுற்றூடான உபரி மதிப்பாகும்.தொழில்நுட்ப மாற்றம், அறிவியல்பூர்வ நிர்வாகம் போன்றவற்றின் மூலம் உழைப்பின் தீவிரத்தை அதிகப்படுத்தி பெறுவது ஒப்பீட்டுரீதியான உபரி மதிப்பாகும்.
வேலை நாளுக்கு நிரந்தர வரம்புகள் கிடையாது. உழைப்பவரின் உடல் வலிமை இடம் கொடுக்கிற வரை வேலை நாளை நீட்டித்து கூடுதல் லாபம் பெறவே முதலாளித்துவம் முயற்சிக்கும். அதற்கு கூடுதல் ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் கொண்ட சில தலைமுறையினர் வேண்டுமா, அல்லது உடல்நலம் குன்றிய அற்ப ஆயுள் கொண்ட பல தலைமுறையினர் வேண்டுமா என்ற கேள்வி ஒரு பொருட்டே அல்ல.
பதினேழாம் நூற்றாண்டிலும் பதினெட்டாம் நூற்றாண்டின் 1766 வரையிலும், நவீன முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்தில் எங்கும் 10 மணி நேர வேலையே இருந் தது. ஆனால், கூடுதல் லாபம் வேண்டும் என்ற வெறி தலைக்கேற மூலதனம் வெறியாட்டம் போட வேலை நேரம் 12, 14, 18 மணி நேரமானது. 1765ல் ஓர் அப்பட்டமான முதலாளித்துவ பிரதிநிதி, ‘தொழிலாளி பற்றிய ஒரு கட்டுரை’ என்ற தலைப்பில் தொழிலாளர் வர்க்கத்தின் மீது நஞ்சை உமிழ்ந்தார். அவர் பயங்கர விடுதிகளாக வேலை விடுதிகளை நிறுவ வேண்டும் என்றும் ஒரு நாளில் 12 மணி நேர வேலை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எளிதில் உணர்ச்சிவசப்படாத முதலாளித்துவ அறிஞரான மால்த்தசே, 12, 14, 18 மணி நேர வேலை நாள் என்பது, நாட்டின் வாழ்க்கையை அதன் ஆதாரத்திலேயே தாக்கி அழிப்பதாக அமையும் என்றார்.(இந்த மால்த்தஸ்தான் மக்கள் தொகை கட்டுப்பாட்டுக் கொள்கையின் மூலவராவார்).
ரூ.10,000 மதிப்புள்ள ஓர் எந்திரம், 10 ஆண்டுகளில் தேய்கிறது என்றால் அதன் தேய்மானம் ஆண்டுக்கு ரூ.1,000 ஆகும்; 5 ஆண்டுகளில் தேயும் என்றால், அதன் ஆண்டுத் தேய்மானம் ரூ.2,000 ஆகும். எந்திரத்தின் தேய்மானம் அதன் உபயோகத்துக்கு நேர் ஈடாக இருப்பதில்லை. ஆனால் உயிருள்ள மனிதர்கள் தோற்றத்தில் புலப்படுவதைக் காட்டிலும் மோசமாக தேய்ந்து சிதைவுறுகிறார்கள்.
எவ்வளவு குறைவாக கூலி தர முடியுமோ அவ்வளவு குறைவாக கூலி தருவது, எவ்வளவு அதிகமாக வேலை நேரத்தை மாற்ற முடியுமோ அவ்வளவு அதிகமாக மாற்றுவது என்ற இரண்டு விசயங்களோடு அதிகபட்ச லாப விகிதம் தொடர்புடையதாகும்.
குறை கூலி - கடும் உழைப்பு என்பவையே முதலாளித்துவம் பெரிதும் விரும்பும் விசயங்கள் ஆகும்.
நேரத்தின் மீதான கட்டுப்பாட்டை உழைக்கும் மக்களிடம் இருந்து பறித்து அவர்களை விடாமல் பொதி சுமக்கும் மிருகங்களுக்கு இணையான வாழ்க்கையை நோக்கி மூலதனம் தள்ளுகிறது.
உழைப்பில் இருந்து விடுதலை வேண்டும் ஓய்வு வேண்டும்
அந்நியமாகாத பொருளுள்ள உழைப்பு வேண்டும் - இரு பார்வைகள்
1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டது. 1888ல் எட்வர்ட் பெல்லாமி ‘பின்னோக்கிக் காண்பது’ (கர்ர்ந்ண்ய்ஞ் ஆங்ட்ண்ய்க்) என்ற ஒரு நாவலை எழுதினார். 1890ல் வில்லியம் மோரிஸ் ‘எந்த இடத்தில் இருந்தும் இல்லாத குறிப்புகள்’ (சர்ற்ங்ள் ஊழ்ர்ம் சர்ஜ்ட்ங்ழ்ங்) என்ற நாவலை எழுதினார். பெல்லாமியின் நாவலில் ஜுலியன் வெஸ்ட் என்பவர் 2000மாம் ஆண்டு அய்க்கிய அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் விழித்துக் கொள்வார். அங்கு, ஒருவிதமான பொதுவுடைமை நிலவும். அங்கு 21 வயதானவுடன் அனைவரும் உழைப்பாளர் பட்டாளத்தில் சேர்ந்து முதல் மூன்று ஆண்டுகள் சாதாரண பொது உழைப்பிலும் அதன் பின்பு, திறனுள்ள உழைப்பிலும் ஈடுபட வேண்டும். 45 வயதுக்குப் பிறகு எவரும் உழைப்பில் ஈடுபட வேண்டாம். ஓய்வு.ஓய்வு.ஓய்வு.உழைப்பில் இருந்து விடுதலை. இங்கு உழைப்பு மகிழ்ச்சி தரும் விசயமாக அல்லாமல், வலி தரும் விசயமாகவே காணப்படுகிறது.
மாரிசின் நோட்ஸ் பிரம் நோவேரில் 1950 களில் ஒரு புரட்சி நடந்து முடிந்துவிடுகிறது. 170 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன் நகரில் வில்லியம் கெஸ்ட் என்ற கதாபாத்திரம் விழித்துக் கொள்கிறார். இந்தக் கதையில் என்ன வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்ற முடிவு செய்யும் இடத்தில் பிலிப்பா என்ற பெண் கல் தச்சரே இருக்கிறார். அவருக்கு உணவு அளிக்கும் வேலை ஓர் ஆணுக்குத் தரப்பட்டுள்ளது. பெண்ணதிகாரம் பற்றிய மாற்றுப் பார்வையோடு இயற்கையோடு இயைந்து வாழ வேண்டிய சூழலியல் பற்றியும் 1890லேயே இந்த நாவல் உணர்த்தியது. மனிதர்களுக்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் நிலக்கரி பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட வேண்டும் என வாதாடியது. உழைப்பிடம் இருந்து அதன் விளைபொருள் அந்நியமாகாமல் இருக்கிற நிலை வேண்டும், உழைப்பு விரும்பத்தக்கதாக, பொருளுள்ளதாக இருக்க வேண்டும் என இந்த நாவல் வாதாடியது.
இருபதாம் நூற்றாண்டில் சோசலிசத்தோடு போட்டியிட்ட முதலாளித்துவத்தின் சார்பாக, உலகம் இருபத்தியோராம் நூற்றாண்டில் நுழைந்ததும் 15 மணி நேர வேலை வாரம் வந்துவிடும் என்றார் மேனார்ட் கீன்ஸ். ஹெர்மன் கானோ 13 வாரங்கள் விடுமுறையுடன் 4 நாட்கள் வேலை வாரம் வரும் என்றார். தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் எங்கும் நிறைந்த வளமை, வேலையை எளிதாக்கி வேலை நேரத்தை குறைக்கும் என்ற கனவு கூவி விற்கப்பட்டது.
எதிர்த் திசையில் நிகழ்ந்த பாதகமான மாற்றங்கள்
கூலியை கட்டுக்குள் வைக்க முதலாளித்துவம் வேலையின்மையை விரும்பி உருவாக்குகிறது. தன்னோடு போட்டியிடும் பாட்டாளி வர்க்கத்தின் கால்களில் மூலதனம் வேலை வாய்ப்பின்மை என்ற இரும்புக் குண்டை பிணைத்துள்ளது. வேலைவாய்ப்பின்மை - தொழில் துறை சேமப்பட்டாளம் - உபரி மக்கள் தொகை - மூலதனத் திரட்சிக்கு நெம்புகோலாக, முன்நிபந்தனையாக அமைந்துள்ளது. மக்கள் தொகையின் ஒரு பகுதி, திறன் இழக்கிறார்கள். தொழில்கள் இடம் மாறுகின்றன. தேக்கம் வேலையைப் பறிக்கிறது. இது ஒரு வகை. பெண்கள், சிறுவீத பண்ட உற்பத்தி, விவசாயம் மற்றும் சேவைத் துறையில் உள்ளோர் பலர், வேலை வாய்ப்புக்கு உள்ளேம் வெளியேயுமாக இருக்கிறார்கள். இது ஒரு வகை. நோயுற்றோர், உடல் உறுப்புக்கள் இழந் தோர் என்பது மற்றொரு வகை. படித்தும் திறன் இருந்தும் வேலை தரப்படாதோரும் குறைகூலி வேலை வாய்ப்பு தரப்படுவோரும் உலகெங்கும் பல கோடிகளில் உள்ளனர். உற்பத்திசார் மக்கள் தொகையைக் காட்டிலும் உபரி மக்கள் தொகையே பெரிதும் கூடுதலா னதாகும். வேலைவாய்ப்பில்லாதவர்களின் கைகள் கொண்ட காடு, மேலும் மேலும் அடர்த்தியாகிறது. அந்தக் கைகளோ, மேலும் மேலும் மெலிந்து போகின்றன.
1810 அய்க்கிய அமெரிக்க பொருளாதாரத்தோடு ஒப்பிட்டால், அதில் 90% மதிப்புடையதாக இந்திய விவசாயம் இருந்தது. 1910ல் இது 30%, 2010ல் 2% என ஆனது. இந்திய விவசாயத்தின் ஆழமான நெருக்கடி மக்களை விவசாயத்தை விட்டு வெளியே தள்ளுகிறது. ஆனால், அவர்கள் வெளியேறுகிற அளவுக்கு, நகரங்களில் போதுமான நல்ல வேலைவாய்ப்புக்கள் இல்லை. இதனால், 8 மணி நேர வேலை எங்கும் ஒழித்துக் கட்டப்பட்டு வருகிறது. 10 மணி நேர, 12 மணி நேர வேலைக்குத்தான் சம்பளம் என்பது உள்வயமான, இயல்பான விசயமாக மாற்றப்பட்டு வருகிறது. வேலை என்றால், நிரந்தரமற்ற, பயிற்சி, தற்காலிக, தொகுப்பூதிய, ஒப்பந்த வேலை என்பது எழுதப்படாத விதியாகி வருகிறது.
நமது கோரிக்கைகளும் இத்தாலிய நாட்டின் ஓர் அனுபவமும்
மூலதனம் திரும்பத் திரும்பத் தாக்குகிறது. அனைத்தும் தழுவிய விதத்தில் அரசியல் அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அரசின் துணையோடு தாக்குகிறது. கூலியுழைப்பு தொழிற்சங்க, தொழிற்சாலை எல்லைகளுக்குள் இனியும் முடங்கியோ, சுருங்கியோ நிற்பது ஆபத்தானதாகும். பாட்டாளி வர்க்கம் துணிச்சலோடு வேலை நேர குறைப்பு, வேலை நாள் குறைப்பு, ரூ.21,000க்குக் குறையாத ஊதியம் தரும் பல லட்சம் நிரந்தர வேலை வாய்ப்புக்கள் வேண்டும் என்ற தாக்குதல் மிக்க கோரிக்கைகளை வலுவாக எழுப்பி அவற்றை அரசியல் தளத்துக்கு உயர்த்த வேண்டும். பிரம்மாண்டமான ஊதிய, செல்வ ஏற்றத்தாழ்வுகள் இருக்கிற தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் ரூ.21,000 ஊதியம் வேண்டும் என்று கேட்பதும் பொருளுள்ள கவுரவமான நிரந்தரமான பல லட்சக்கணக்கான வேலைகள் வேண்டும் என்று கேட்பதும் ஒரு ஜனநாயக குடியரசில், உயிர் வாழும் உரிமையை வலியுறுத்துவதுதானே!
இத்தாலியின் இடதுசாரி இயக்கத் தலைவர் பெர்டிநோட்டியிடம் ஒரு பெண் 35 மணி நேர வேலை வாரம் என்ற கோரிக்கை நிறைவேறினால் அதை தாம் எப்படி பயன்படுத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். பெர்டிநோட்டி ஒரு பதில் தந்தார். ‘வாரத்தில் 35 மணி நேர வேலை என்ற கோரிக்கை வெறுமனே, தொழிற்சங்க கோணத்தில் இருந்து மட்டும் எழுப்பப்படும் ஒன்றல்ல; அது, வேலை நேரத்துக்கும் வாழ்க்கை நேரத்துக்குமான உறவோடும் அந்த வகையில் ஒரு நாகரிகத்தோடும் (சிவிலைசேசன்) தொடர்புடையதாகும். சமூகம் அமைந்துள்ள முறை, அதன் உற்பத்தி, அதில் குவியும் செல்வம் ஆகியவற்றுக்கு வேலை நேரத் திருட்டே அடிப்படையாக இருப்பதாக மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். சுரண்டல் எதிர்ப்புப் போராட்டமும் அந்நியமாதல் எதிர்ப்புப் போராட்டமும் இணைந்தே செல்ல வேண்டும். உயிருள்ள உழைப்பிடம் இருந்து, அதன் விளைபொருள் அந்நியமாக்கப்படுகிறது. அதன் வாழ்க்கை நேரம் மீதான அதன் பாத்தியதை பறிக்கப்படுகிறது. 35 மணி நேர வேலை வாரம், வாழ்க்கை மேம்பாடோடு தொடர்புடையது. உழைக்கும் மக்கள் சமூகத்தின் கூட்டு, வேலை நேரம் மற்றும் வாழ்க்கை நேரம் மீது, தனது தன்னாட்சியை கொண்டு வருவது, சமூக மாற்ற நிகழ்வாகும்.
வேலை நேர, வேலை வார குறைப்பு கோரிக்கை ஒரே நேரத்தில் சம்பள உயர்வு கோரிக்கையாகவும், சமூக அக்கறையுடன் கூடுதல் வேலை வாய்ப்புக்களை உருவாக்குகிற கோரிக்கையாகவும் அமைந்துள்ளது.
சுதந்திரமான உழைப்பு
மூளை உழைப்பு, உடல் உழைப்பு வேறுபாடு, நகர, கிராம வேறுபாடு, எந்திரத்தின் தொங்கு சதையாக மனிதனை மாற்றும் முதலாளித்துவ வேலைப் பிரிவினை இல்லாத ஒரு சமூகம், உழைப்பு சுதந்திரமாக இருப்பதற்கு முன்நிபந்தனையாக இருக்கும். வர்க்கங்கள் இல்லாத, அரசு இல்லாத, உற்பத்தி ஆற்றல் அருவியென பெருகி ஓடும் அந்த சமூகத்தில் மனிதர்கள் தேவைக்கேற்ப பெறுவார்கள். அந்த மக்கள் சமூகத்துக்கு, சுயமாக, சமூகத்தின் எளிமையான அடிப்படையான விதிகளை அனுசரிப்பது ஒரு பழக்கமாகிவிடும். அங்கு, உழைப்பு பொருளுள்ளதாக மகிழத் தக்கதாக படைப்பாற்றல் மிக்கதாக அமையும்.

Search