25 தொழிலாளர்களுக்கு
ஒரு வேளை உணவு செலவை
ஒரு முறை வெட்டி லாபம்
சேர்க்கும் ஹுண்டாய் நிறுவனம்
அந்த
25 பேருக்கு 19 முதல் 20 வயது.மெக்கானிகல் இன்ஜினியரிங்
பட்டயப் படிப்பு முடித்தவர்கள். திருபெரும்புதூர் ஹுண்டாயில் அரசு பயிற்சி யாளர்களாக
(கவர்ன்மென்ட் அப்ரண்டிஸ்) வேலைக்குச் சேர்ந்தார்கள்.
பயிற்சி காலம் ஓராண்டு.
மாத உதவித் தொகை ரூ.12,000
தரப்பட்டது. விடுப்பு எடுக்காமல் வந்தால் கூடுதலாக மாதம்
ரூ.1,200 கிடைக்கும். பயிற்சியாளர் என்றாலும் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுவது
உலகமய விதிக்கு உட்பட்டவர்கள்.
செப்டம்பர்
25 அன்று அவர்களுக்கு ஓராண்டு காலம் பயிற்சி
முடிந்தது. மறுநாள் பயிற்சிக்கால சான்றிதழ்
அவர்களுக்கு தரப்பட வேண்டும். இது
போல் பயிற்சி எடுப்பவர்கள் வயிற்றைக்
கட்டி வாயைக் கட்டி குடும்பத்துக்கு
பணம் அனுப்புவதால் ஆலை உணவு விடுதியில்
உணவு தேவைகளை முடித்துக் கொள்ள
முயற்சி செய்வார்கள். பயிற்சி முடித்தவர்கள் சான்றிதழ்
பெறும் நாளில் ஆலைக்கு காலை
8 மணிக்கு வழக்கம் போல், ஆலை
பேருந்தில் வந்து (சில பத்து
ரூபாய்களை மிச்சம் செய்ய) காலை
உணவை ஆலை உணவு விடுதியில்
முடித்துவிட்டு சான்றிதழ் பெற்றுக் கொண்டு மதிய உணவையும்
அங்கேயே முடித்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
இந்த
25 பேரும் செப்டம்பர் 26 அன்று அதே வழக்கத்தில்
காலை 8 மணிக்கு ஆலைக்கு வந்துவிட்டனர்.
மனித வள மேம்பாட்டு அதிகாரிகள்
அவர்களுக்கு சான்றிதழ் தருவதற்காக அலுவலகத்தில் காத்திருக்கச் சொன்னார்கள். மதிய உணவு நேரம்
நெருங்கியது. தொழிலாளர்கள் மதிய உணவுக்குச் சென்றுவிட்டு
வருவதாகச் சொன்னபோது, சான்றிதழைப் பெற்றுக் கொண்டு செல்லலாம் என்று
சொன்ன மனிதவள துறை அதிகாரிகள்
அவர்கள் காத்திருக்கும் போதே மதிய உணவுக்குச்
சென்றார்கள். மதிய உணவு முடித்துவிட்டு
திரும்பி தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய சான்றிதழைத்
தந்தார்கள். அங்குள்ள நடைமுறைகள்படி தொழிலாளர்களின் அடையாள அட்டைகளை வாங்கிக்
கொண்டார்கள்.
அடையாள
அட்டைகள் இல்லாததால் தொழிலா ளர்கள் உணவு
விடுதிக்குச் செல்ல முடியாது என்பதால்
மனிதவளத் துறை அதிகாரிகளிடம் மதிய
உணவுக்குச் செல்வது எப்படி என்று
கேட்டபோது, இல்லை நீங்கள் வெளியே
சென்று சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று மனிதவள மேம்பாட்டுத்
துறை அதிகாரிகள் சொல்லியிருக்கின்றனர்.
ஓராண்டு
காலம் பயிற்சியாளர் என்ற பெயரில் நேரடி
உற்பத்தியில் ஈடுபட்டு ஹுண்டாயின் லாபத்தைப் பெருக்கிய தொழிலாளர்களுக்கு ஒரு வேளை உணவு
தரும் செலவைக் கூட வெட்டி
லாபம் சேர்க்கிற ஹுண்டாய் நிறுவனம், தனக்கு
சமூகப் பொறுப்பு இருப்பதாகச் சொல்லி சுற்றுவட்டார கிராம
மக்களை பதினெட்டு ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறது.