COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, October 30, 2017

அக்டோபர் புரட்சியின் நான்காவது ஆண்டு நிறைவு

வி.அய்.லெனின்

(பிராவ்தா எண் 234ல் 1921 அக்டோபர் 18 அன்று வெளியிடப்பட்டது)

அக்டோபர் 25ன் (நவம்பர் 7) நான்காவது ஆண்டு நிறைவு நெருங்குகிறது.
ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முக்கியத்துவத்தை நாம் மேலும் தெளிவாகப் பார்க்கும்போது,
ஒட்டுமொத்தமாக நமது பணியின் நடைமுறை அனுபவம் பற்றி மேலும் ஆழமாக பரிசீலனை செய்யும்போது, அந்த மகத்தான நாள் நம்மிடம் இருந்து மேலும் மேலும் தொலைவுக்கு பின்செல்கிறது.
இந்த முக்கியத்துவமும் அனுபவமும் மிகவும் சுருக்கமாக, உண்மையில் மிகவும் முழுமையற்ற விதத்தில், அவசரமான வரையறையாக, பின்வரும்விதம் தொகுக்கப்படுகிறது.
ரஷ்யாவில் நடந்த புரட்சியின் நேரடி மற்றும் உடனடி நோக்கமாக முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி இருந்தது; மத்தியகால எச்சங்களை அழித்து அவற்றை முழுமையாக துடைத்தெறிய வேண்டியிருந்தது; அந்த காட்டுமிராண்டித்தனத்தை, வெட்கக்கேட்டை ரஷ்யாவில் இருந்து அகற்ற வேண்டியிருந்தது; நமது நாட்டின் கலாச்சாரத்துக்கும் முன்னேற்றத்துக்கும் இருக்கிற, அந்த மிகப் பெரிய தடையை அகற்ற வேண்டியிருந்தது.
மகத்தான உறுதியுடனும் மிகவும் விரைவாகவும் துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும், வெகுமக்களுக்கு அது ஏற்படுத்தியுள்ள விளைவுகள் என்ற பொருளில், நூற்று இருபத்து அய்ந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த மகத்தான பிரஞ்சு புரட்சியை விட மேலும் பரவலாகவும் ஆழமாகவும் இந்த சுத்தப்படுத்து தலை செய்ததற்கு நாம் பெருமிதமடைவது நியாயமானதே.
அராஜகவாதிகளும் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் (அதாவது சர்வதேச வகைமாதிரியின் ரஷ்ய மாதிரிகளான மென்ஷ்விக்குகளும் சமூகப் புரட்சியாளர்களும்) முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கும் சோசலிச (அதாவது பாட்டாளி வர்க்க) புரட்சிக்கும் இடையிலான உறவு பற்றி நம்பகத் தன்மையற்ற விதத்தில் அபத்தமாக பேசினார்கள்; இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விசயத்தில் மார்க்சியம் பற்றிய நமது புரிதல், முந்தைய புரட்சிகளின் அனுபவம் பற்றிய நமது மதிப்பீடு மிகவும் சரி என்று கடந்த நான்கு ஆண்டுகள் தெளிவாக மெய்ப்பிக்கின்றன. இதற்கு முன் யாரும் செய்யாத விதத்தில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நாம் நிறைவேற்றி முடித்திருக்கிறோம். சோசலிசப் புரட்சி நோக்கி, உணர்வுபூர்வமாக, உறுதியாக, தடுமாற்றமின்றி, அது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் இருந்து ஒரு சீனச் சுவற்றால் பிரிக்கப்படவில்லை என்பதை அறிந்து, (இறுதி ஆராய்ச்சியில்) அந்தப் போராட்டம் மட்டுமே நாம் எந்த அளவுக்கு முன்னேறிச் சென்றுள்ளோம் என்பதை தீர்மானிக்கும் என்பதையும், இந்த மிகப்பெரிய உன்னதமான கடமையின் எந்தப் பகுதியை நாம் நிறைவேற்றுகிறோம் என்பதையும், நமது வெற்றிகளை ஒன்று திரட்டிக் கொள்வதில் எந்த அளவுக்கு நாம் வெற்றி பெறுவோம் என்பதையும் அறிந்து, முன்னேறிக் கொண்டிருக்கிறோம். காலம் பதில் சொல்லும்.ஆனால் சமூகத்தின் சோசலிச மாற்றம் நோக்கி பிரம்மாண்டமாக - இந்த சீர்குலைக்கப்பட்ட, சோர்வுற்றுவிட்ட, பின்தங்கிய நாட்டைப் பொறுத்தவரை மிகவும் பிரம்மாண்டமாக - ஏற்கனவே நிகழ்த்தப்பட்டுவிட்டது என்பதை நாம் பார்க்கிறோம்.
இருக்கட்டும். நமது புரட்சியின் முதலாளித்துவ ஜனநாயக உள்ளடக்கம் பற்றி நாம் சொல்ல வேண்டியதை சொல்லி முடிக்கலாம். அதன் பொருள் என்ன என்பதை மார்க்சிஸ்டுகள் புரிந்துகொண்டாக வேண்டும். இதை விளக்க பளிச்சென தெரிகிற சில உதாரணங்களை நாம் எடுத்துக்கொள்வோம்.
புரட்சியின் முதலாளித்துவ ஜனநாயக உள்ளடக்கம் என்றால், மத்தியகால நிலைமைகளை, பண்ணையடிமைத்தனத்தை, நிலப்பிரபுத்துவத்தை, நாட்டின் சமூக உறவுகளில் (கட்டமைப்புகள், நிறுவனங்கள்) இருந்து முற்றிலுமாக அழித்து விடுவது என்று பொருள்.
1917 வரை ரஷ்யாவில் பண்ணையடிமைத்தனத்தின் முதன்மையான வெளிப்பாடுகளாக, பிழைத்திருத்தல்களாக, மிச்ச சொச்சங்களாக இருந்தவை எவை? நிலஆதினங்கள், நில உடைமை, நிலகுத்தகை முறை, பெண்கள் நிலை, மதம், தேச ஒடுக்குமுறை ஆகியவற்றின் கட்டமைப்பான முடியாட்சி. இந்த தீயக் குவிப்புகளில் ஒன்றை எடுத்துக்கொள்வோம். நூற்று இருபத்து அய்ந்து ஆண்டுகள், இருநூறு ஆண்டுகள், இருநூற்று அய்ம்பது ஆண்டுகள், இன்னும் அதற்கும் முன்பு (இங்கிலாந்தில் 1649ல்) தங்களது முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை நடத்தி முடித்த, இன்னும் முன்னேறிய அரசுகளால் கூட அழிக்காமல் விடப்பட்டன. இந்த தீயக் குவிப்புகளில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள், நாம் அவற்றை முழுமையாக அழித்திருக்கிறோம். பத்து வாரங்களில், 1917 நவம்பர் 7 முதல் 1918 ஜனவரி 5க்குள், அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டபோது, இந்த விசயத்தில் முதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் தாராளவாதிகளும் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் (மென்ஷ்விக்குகளும் சமூகப் புரட்சியாளர்களும்) அவர்கள் ஆட்சியில் இருந்த எட்டு மாதங்களில் நிறைவேற்றியதை விட, ஆயிரம் மடங்குக்கும் மேல் நாம் நிறைவேற்றிவிட்டோம்.
அந்த கோழைகள், வெற்றுப் பைகள், வீண்தற்புகழ்ச்சியுடன் தம்மைத் தாமே விரும்புபவர்கள், தங்களது மரக்கத்திகளை சுழற்றினார்கள்; ஆனால் முடியாட்சியைக் கூட அவர்கள் வீழ்த்தவில்லை. இதற்கு முன் வேறு எவரும் செய்திராத அளவு, முடியாட்சி அழுக்கு அனைத்தையும் நாம் சுத்தப்படுத்தியிருக்கிறோம். நில ஆதின கட்டமைப்பு என்ற அந்த பண்டைய கட்டிடத்தின் ஒரு கல்லைக் கூட, ஒரு செங்கல்லைக் கூட நாம் விட்டு வைக்கவில்லை. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர் மனி போன்ற மிகவும் முன்னேறிய நாடுகள் கூட அந்த அமைப்பின் மிச்சசொச்சங்களை இன்று வரை முழுவதுமாக ஒழிக்கவில்லை. மிகவும் ஆழமாக உள்ள நில ஆதின கட்டமைப்பின் வேரையே, நிலஉடைமை முறையின் நிலப்பிரபுத்துவம், பண்ணையடிமைத்தனம் ஆகியவற்றின் மிச்சசொச்சங்களை இறுதி வரை நாம் பிடுங்கி எறிந்தோம். மகத்தான அக்டோபர் புரட்சியால் புகுத்தப்பட்ட விவசாய சீர்திருத்தங்களின் விளைவுகள் நீண்ட காலப் பொருளில் என்னவாக இருக்கும் என்று ஒருவர் (இது போன்ற வாதங்களில் இறங்க வெளிநாடுகளில் நிறைய எழுத்தர்கள், கேடட்டுகள், மென்ஷ்விக்குகள், சமூகப் புரட்சியாளர்கள் இருக்கிறார்கள்) வாதிடலாம். அதுபோன்ற சர்ச்சைகளில் இறங்கி நேரத்தை வீணாக்கும் விருப்பம் இப்போது நமக்கு இல்லை. ஏனெனில் இந்த சர்ச்சைகளுக்கும் இது போன்ற இன்னும் பலப்பல சர்ச்சைகளுக்கும் போராட்டத்தின் மூலம் தீர்வு காண முடிவு செய்கிறோம். ஆனால், குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் பண்ணையடிமைத்தன பழக்க வழக்கங்களின் பாதுகாவலர்களான நிலஉடைமையாளர்களுடன் எட்டு மாதங்கள் சமரசம் செய்துகொண்டார்கள் என்ற உண்மையை மறுக்க முடியாது. நாமோ சில வாரங்களிலேயே நிலஉடைமையாளர்களையும் அவர்களது பழக்கவழக்கங்கள் அனைத்தையும் ரஷ்ய மண்ணில் இருந்து முழுவதுமாக விரட்டியடித்தோம்.
மதம், பெண்களுக்கு உரிமை மறுப்பு, ரஷ்யர் அல்லாத தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை, ஏற்றத்தாழ்வு என ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்வோம். இவையனைத்தும் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் பிரச்சனைகள். நயமற்ற குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் அவற்றைப் பற்றி எட்டு மாதங்கள் பேசினார்கள். உலகில் மிகவும் முன்னேறிய ஒரு நாட்டில் கூட, முதலாளித்துவ ஜனநாயக வழியில் இந்தப் பிரச்சனைகளுக்கு முழுவதுமாக தீர்வு காணப்படவில்லை. நமது நாட்டில் அக்டோபர் புரட்சியின் சட்டத்தால் இவற்றுக்கு நாம் முழுமையாக கணக்கு தீர்த்துவிட்டோம். நாம் மதத்துக்கு எதிராக போராடி இருக்கிறோம். இப்போதும் உண்மையாக போராடிக் கொண்டிருக்கிறோம். ரஷ்யர்கள் அல்லாத தேசிய இனங்கள் அனைத்துக்கும் அவர்களது சொந்த குடியரசு அல்லது சுயாட்சி பிராந்தியங்கள் தந்திருக்கிறோம். உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பேராசைமிக்க முதலாளித்துவத்தாரால், மந்தமான, அச்சமுற்றிருக்கிற குட்டி முதலாளித்துவத்தாரால் புதுப்பிக்கப்படுகிற, நிலப்பிரபுத்துவத்தின் மத்தியகால தன்மைகளின் அருவருப்பூட்டும், பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது அல்லது பாலின பாகுபாடு என்ற கீழ்த்தரமான, அற்பமான, அவலமான அம்சங்கள் ரஷ்யாவில் இனியும் இல்லை.
இவையனைத்துமே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் உள்ளடக்கமாகும். நூற்று அய்ம்பது இருநூற்று அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு, அந்தப் புரட்சியின் (அல்லது புரட்சிகளின் - அந்த பொதுவான மாதிரியின் ஒவ்வொரு தேசிய வகையையும் கணக்கில் கொண்டால்) முற்போக்கு தலைவர்கள், மத்திய கால முன்னுரிமைகள், பாலின பாகுபாடு, ஒரு மதத்துக்கும் மற்றொரு மதத்துக்கும் (மதரீதியான கருத்துக்கள் அல்லது பொதுவாக தேவாலயம்) மாறுபடுகிற அரசு முன்னுரிமைகள் மற்றும் தேசியஇன ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை ஒழித்துவிடுவதாக உறுதியளித்தனர்; ஆனால் அந்த உறுதிகளை அவர்கள் காப்பாற்றவில்லை. அவர்களால் காப்பாற்ற முடியவில்லை; ஏனென்றால், தனியுடைமையின் புனிதமான உரிமை மீது அவர்களுக்கு இருந்த மதிப்பு அவர்களைத் தடுத்தது. மூன்று விதமான சாபக்கேட்டுக்கு உள்ளாகியுள்ள இந்த மத்திய கால முன்னுரிமை பற்றிய, தனியுடைமையின் புனிதமான உரிமை பற்றிய இந்த சாபக் கேடான மதிப்பு, நமது பாட்டாளி வர்க்கப் புரட்சியை பீடிக்கவில்லை.
ஆனால் ரஷ்ய மக்களுக்காக, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் சாதனைகளை திடப்படுத்திக் கொள்ள நாம் மேலும் முன்செல்ல வேண்டியிருந்தது. நாம் மேலும் முன்சென்றோம். அந்தப் போக்கில், நமது பிரதான, உண்மையான, பாட்டாளிவர்க்க புரட்சிகர, சோசலிச நடவடிக்கைகளின் உடன்விளை பொருளாக, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு கண்டோம். புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் உடன் விளைபொருட்களே சீர்திருத்தங்கள் என்று நாம் எப்போதும் சொல்லி வருகிறோம். பாட்டாளி வர்க்க, அதாவது, சோசலிச புரட்சியின் உடன்விளைபொருட்களே முதலாளித்துவ ஜனநாயக சீர்திருத்தங்கள் என்று நாம் சொன்னோம்; அதை நமது செயல்பாடுகள் மூலம் மெய்பித்தோம். தற்செயலாக, காவுட்ஸ்கிகள், ஹில்பெர்டிங்குகள், மார்டோவ்கள், செர்னோவ்கள், ஹில்குவிட்டுகள், லாங்கெட்டுகள், மெக்டொனால்டுகள், டுராட்டிகள், இரண்டரை அகில மார்க்சியத்தின் பிற கதாநாயகர்கள், முதலாளித்துவ ஜனநாயக மற்றும் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சிகளுக்கு இடையிலான இந்த உறவை புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. முதலாவது இரண்டாவதாக வளர்ந்தெழுகிறது. இரண்டாவது, அதன் போக்கில் முதலாவதின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது. இரண்டாவது முதலாவது செய்த பணிகளை உறுதிப்படுத்துகிறது. போராட்டம், போராட்டம் மட்டுமே, இரண்டாவது முதலாவதை விஞ்சி எப்படி வளர்கிறது என்பதை தீர்மானிக்கிறது.
ஒரு புரட்சி எப்படி மற்றொரு புரட்சியாக வளர்ந்தெழும் என்பதன் மிகவும் தெளிவான நிரூபணம் அல்லது வெளிப்பாடுதான் சோவியத் கட்டமைப்பு. சோவியத் கட்டமைப்பு தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அதிகபட்ச ஜனநாயகத்தை உருவாக்குகிறது. அதேநேரம், முதலாளித்துவ ஜனநாயகத்தில் இருந்து ஒரு தகர்வை, ஒரு புதிய  சகாப்தம் உருவாக்கும் வகையிலான ஜனநாயகம், அதாவது, பாட்டாளி வர்க்க ஜனநாயகம் அல்லது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உருவாகி எழுவதை குறிக்கிறது.
சோவியத் கட்டமைப்பை கட்டியெழுப்பும் நமது பணியில் நாம் சந்தித்த பின்னடைவுகளுக்காக, நமது தவறுகளுக்காக, அழுகிப் போன முதலாளித்துவத்தின் நாய்களும் பன்றிகளும், அவர்களுக்குப் பின் ஓடுகிற குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளும், நமது தலைகள் மேல் சாபங்களை, வசவுகளை, ஏளனப் பேச்சுக்களை கொட்டித் தீர்க்கட்டும். நாம் பல தவறுகள் செய்தோம், செய்து கொண்டிருக்கிறோம், பல பின்னடைவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை, ஒரு கணம் கூட நாம் மறக்கவில்லை. இதற்கு முன் இல்லாத வகை அரசு மாளிகையாக, உலக வரலாற்றில் புதிதாக எழுந்துள்ள ஒரு விசயத்தில் பின்னடைவுகளையும் தவறுகளையும் எப்படி தவிர்க்க முடியும்! நமது பின்னடைவுகளையும் தவறுகளையும் சரி செய்து, கச்சிதமடைவதற்கு இன்னும் வெகுதொலைவில் உள்ள சோவியத் கோட்பாடுகளை நடைமுறையில் பொருத்துவதை மேம்படுத்துவதற்கு நாம் அயராது பணியாற்றுவோம். ஆனால், ஒரு சோவியத் அரசை கட்டியெழுப்பி, அதன் மூலம் உலக வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்துக்கு, எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் ஒடுக்கப்பட்டுள்ள ஒரு வர்க்கத்தின்,  ஆனால் எல்லா இடங்களிலும் ஒரு புதிய வாழ்வை நோக்கி முன்னேறி அணி வகுக்கும் ஒரு வர்க்கத்தின், முதலாளித்துவத்தை வெற்றி கொள்வதை நோக்கிச் செல்லும் ஒரு வர்க்கத்தின், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் ஒரு வர்க்கத்தின், முதலாளித்துவத்தின், ஏகாதிபத்திய போர்களின் நுகத்தடியில் இருந்து மானுடத்தை விடுதலை செய்வதை நோக்கிச் செல்லும் ஒரு வர்க்கத்தின், ஒரு புதிய வர்க்கத்தின் ஆட்சியின் யுகத்துக்கு கட்டியம் கூறும் அந்த பேறு நமக்கு கிடைத்துள்ளது என்பதில் பெருமிதம் கொள்ள நமக்கு உரிமையிருக்கிறது. நாம் பெருமிதம் கொள்கிறோம்.
ஏகாதிபத்திய போர்கள் தொடர்பான பிரச்சனை, தவிர்க்கவியலாமல் புதிய ஏகாதிபத்திய போர்களுக்கு இட்டுச் செல்லும் கொள்கையான, பலவீனமான, பின்தங்கிய, சிறிய தேசிய இனங்கள், ஒரு சில முன்னேறிய சக்திகளால், தேசிய இன ஒடுக்குமுறை, கொள்ளை, வழிப்பறி, கழுத்தை நெறிப்பது ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படுவதை, அதிதீவிரமாக தீவிரப்படுத்துவதற்கு தவிர்க்கவியலாமல் இட்டுச் செல்லும் ஒரு கொள்கையான, இன்று ஒட்டுமொத்த உலகத்தையும் மேலாதிக்கம் செய்யும் நிதி மூலதனம் தொடர்பான சர்வதேச கொள்கை தொடர்பான பிரச்சனை, 1914ல் இருந்து உலகின் எல்லா நாடுகளிலும் எல்லா கொள்கைகளின் மய்ய புள்ளியாக உள்ளது. கோடானுகோடி மக்களுக்கு இது வாழ்வா, சாவா பிரச்சனை. இது, முதலாளித்துவத்தார் தயாராகி வருகிற, நமது கண் முன்னரே முதலாளித்துவத்தில் இருந்து உருவாகிவருகிற, அடுத்த ஏகாதிபத்திய போரில் 2 கோடி மக்கள் (1914 - 1918 போரிலும் இன்னும் நடந்து கொண்டிருக்கிற துணையான சிறிய போர்களிலும் கொல்லப்பட்டவர்கள் 1 கோடி பேர் என்பதுடன் ஒப்பிட்டால்) கொல்லப்படுவார்களா என்பது தொடர்பான பிரச்சனை. முதலாளித்துவம் தொடர்ந்து நீடிக்குமானால், தவிர்க்க முடியாமல் நடக்கும் எதிர்கால போரில் 6 கோடி பேர் (1914 - 1918ல் உடலுறுப்புகளை இழந்தவர்கள் 3 கோடி பேர் என்பதுடன் ஒப்பிட்டால்) உடலுறுப்புகள் இழப்பார்களா என்பது தொடர்பான பிரச்சனை. இந்தப் பிரச்சனையிலும் நமது அக்டோபர் புரட்சி உலக வரலாற்றில் ஒரு புதிய சகாப்பதத்தின் துவக்கத்தை குறிக்கிறது. முதலாளித்துவத்தின் ஏவலாளிகளும் அதற்கு தலையாட்டுபவர்களும் - சமூகப் புரட்சியாளர்களும் மென்ஷ்விக்குகளும் உலகெங்கும் உள்ள குட்டி முதலாளித்துவத்தாரும் சோசலிஸ்டுகள் என்று அழைக்கப்படுபவர்களும் ஜனநாயகவாதிகளும் ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்றுங்கள் என்ற நமது முழக்கத்தை ஏளனமாக பேசினார்கள். ஆனால் அந்த முழக்கம்தான் உண்மை என்று மெய்ப்பிக்கப்பட்டது. அந்த ஒரே உண்மை உவப்பற்றதாக, அப்பட்டமானதாக, நிர்வாணமானதாக, கொடூரமானதாக இருந்திருக்கலாம்; ஆயினும், சுத்திகரிக்கப்பட்ட தேசவெறிக் கூச்சல்கள், சமாதானப்படுத்தும் பொய்கள் ஆகியவற்றின் முன், அதுதான் உண்மை. அந்தப் பொய்கள் தகர்க்கப்பட்டுவிட்டன. பிரெஸ்ட் ஒப்பந்த அமைதி அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது. பிரெஸ்ட் அமைதியை விட மோசமான ஓர் அமைதியின் - வெர் செய்ல்ஸ் அமைதி ஒப்பந்தம் - முக்கியத்துவமும் விளைவுகளும் நாட்கள் நகர நகர இரக்கமற்ற விதத்தில் அம்பலப்படுத்தப்படுகின்றன. சமீபத்திய போருக்கான, எதிர்வருகிற எதிர்கால போருக்கான காரணங்கள் பற்றி சிந்திக்கிற கோடிக்கணக்கான மக்கள், ஏகாதிபத்திய போரில் இருந்து தப்பிப்பது சாத்தியமற்றது என்ற கொடூரமான, தவிர்க்க முடியாத உண்மையை தெளிவாக புரிந்துகொள்கிறார்கள். ஏகாதிபத்திய அமைதி தவிர்க்க முடியாமல் ஏகாதிபத்திய போருக்கு இட்டுச் செல்லும் என்பதை (பழைய எழுத்து முறை இன்னும் நடைமுறையில் இருக்குமானால், மிர் என்ற சொல்லை நான் இரண்டு விதங்களில், இரண்டு பொருட்கள் படும்படி எழுதியிருப்பேன்) (பழைய எழுத்து முறையில் மிர் என்ற இரண்டு வெவ்வேறு எழுத்து வடிவங்கள் கொண்ட சொல்லுக்கு அமைதி, உலகம் என்ற இரண்டு பொருள் உண்டு), அந்த நரகத்தில் இருந்து தப்புவது சாத்தியமற்றது என்பதை, ஒரு போல்ஷ்விக் போராட்டம் மற்றும் ஒரு போல்ஷ்விக் புரட்சியால் மட்டுமே அது சாத்தியம் என்பதை தெளிவாக புரிந்துகொள்கிறார்கள்.
முதலாளித்துவத்தாரும் சமாதானவாதிகளும், படைத் தளபதிகளும் குட்டி முதலாளித்துவத்தாரும், மூலதனத்தின் சொந்தக்காரர்களும் அற்பவாதிகளும் பக்திமிகு கிறித்துவர்களும் இரண்டாவது மற்றும் இரண்டரை அகிலத்தாரும் அந்தப் புரட்சிக்கு எதிரான தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தட்டும். வசவுகள், அவதூறுகள், பொய்கள் ஆகியவற்றின் எந்த வெள்ளமும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் முதல்முறையாக, அடிமை சொந்தக்காரர்களுக்கு இடையிலான போருக்கு, அடிமை சொந்தக்காரர்கள் தாங்கள் கொள்ளையடித்ததை பங்கு போடுவதற்காக அவர்களுக்கு இடையில் நடத்தும் இந்தப் போரை, எல்லா நாடுகளிலும் உள்ள அடிமைகள் எல்லா நாடுகளிலும் உள்ள அடிமை சொந்தக்காரர்களுக்கு எதிராக நடத்தும் போராக மாற்றட்டும் என்ற தங்கள் வெளிப்படையான முழக்கத்தின் மூலம் பதில் சொல்கிறார்கள் என்ற வரலாற்று உண்மையை மறைக்க அவர்களுக்கு உதவாது.
நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் முதல் முறையாக, அந்த முழக்கம் ஒரு தெளிவற்ற, வேறு வழியற்ற காத்திருப்பாக இருந்ததில் இருந்து, ஒரு தெளிவான, தீர்மானகரமான அரசியல் திட்டமாக, பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் பல கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்திய திறன்மிக்க போராட்டமாக மாறியிருக்கிறது; பாட்டாளி வர்க்கத்தின் முதல் வெற்றியாக, போரை ஒழிக்கும் போராட்டத்தின் முதல் வெற்றியாக, பல்வேறு நாடுகளின் ஒன்றுபட்ட முதலாளித்துவத்தாருக்கு எதிரான எல்லா நாடுகளின் தொழிலாளர்கள் ஒன்றுபடும் போராட்டத்தின் முதல் வெற்றியாக, மூலதனத்தின் அடிமைகள், கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்களை பணயம் வைத்து அமைதியையும் போரையும் உருவாக்கும் முதலாளித்துவத்தாருக்கு எதிரான போரில், முதல் வெற்றியாக மாறியிருக்கிறது.
இது முதல் வெற்றி. ஆனால் இறுதி வெற்றி அல்ல. தாங்க முடியாத துன்பங்கள், துயரங்கள் அனுபவித்து, கடுமையான பின்னடைவுகள், தவறுகள் ஆகியவற்றுடன் நாம் கடந்து வந்த, இது வரை காணாத துன்பங்கள் அனுபவித்து, அக்டோபர் புரட்சி பெற்ற வெற்றி இது. ஒரே ஒரு (நாட்டின்) பின்தங்கிய மக்கள், எப்படி, பின்னடைவுகளோ, தவறுகளோ செய்யாமல், உலகின் மிகவும் சக்திவாய்ந்த, மிகவும் வளர்ச்சி பெற்ற நாடுகளின் ஏகாதிபத்திய போரை,  முறியடிக்க முடியும்! நமது தவறுகளை ஒப்புக்கொள்ள நாம் அஞ்சவில்லை; அவற்றை எப்படி சரி செய்வது என்பதை கற்றுக் கொள்வதற்காக அவற்றை விருப்புவெறுப்பின்றி பரிசீலனை செய்வோம். ஆனால், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் முதல் முறையாக, அடிமை சொந்தக்காரர்களுக்கு இடையிலான போருக்கு, அடிமை சொந்தக்காரர்கள் அனைவருக்கும் எதிரான அடிமைகளின் புரட்சி மூலம் நடத்தும் போர் மூலம் பதில் சொல்வோம் என்ற வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்பட்டுவிட்டது - பல்வேறு துன்பங்களுக்கு இடையிலும் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற உண்மையை மாற்ற முடியாது.
நாம் ஒரு துவக்கத்தை நிகழ்த்திவிட்டோம்.எப்போது, எந்த தேதியில் எந்த நேரத்தில், எந்த நாட்டின் பாட்டாளி வர்க்கம் இந்த இயக்கப்போக்கை பூர்த்தி செய்வார்கள் என்பது முக்கியமல்ல. அந்தப் பனிப்பாறை உடைக்கப்பட்டுவிட்டது என்பதுதான் முக்கியமானது; அந்தச் சாலை திறக்கப்பட்டுவிட்டது; அந்த வழி காட்டப்பட்டுவிட்டது.
கனவான்களே, எல்லா நாடுகளிலும் உள்ள மூலதனச் சொந்தக்காரர்களே,  அமெரிக்காவுக்கு எதிராக ஜப்பான் தந்தை நாட்டை பாதுகாப்பது, ஜப்பானியர்களுக்கு எதிராக அமெரிக்கர்களை பாதுகாப்பது, பிரிட்டிஷாருக்கு எதிராக பிரஞ்சுகாரர்களை பாதுகாப்பது.. இப்படி, எங்கள் தந்தை நாட்டை பாதுகாப்பதாக நீங்கள் நடத்தும் உங்கள் போலிப் பாசாங்கை, நிறுத்துங்கள். கனவான்களே, இரண்டாவது மற்றும் இரண்டரை அகிலத்தின் வீரர்களே, உலகெங்கும் உள்ள சமாதானவாத குட்டி முதலாளித்துவத்தாரே, அற்பவாதிகளே, புதிய பாஸ்லே அறிக்கைகளை (11912ல் வெளியிடப்பட்ட பாஸ்லே அறிக்கை மாதிரியில்) பிரகடனம் செய்வதன் மூலம் எப்படி ஏகாதிபத்திய போர்களை எதிர்கொள்வது என்ற கேள்விக்கு பதில் சொல்வதை தவிர்த்துக் கொண்டே இருங்கள். முதல் போல்ஷ்விக் புரட்சி, இந்த பூமியின் முதல் பத்து கோடி மக்களை, ஏகாதிபத்திய போரில் இருந்தும் ஏகாதிபத்திய உலகத் தில் இருந்தும் பாதுகாத்துவிட்டது. அடுத்து வருகிற புரட்சிகள், அது போன்ற போர்களில் இருந்து, அது போன்ற ஓர் உலகத்தில் இருந்து, எஞ்சியுள்ள மனித இனத்தை மீட்டெடுக்கும்.
தகர்க்கப்பட்டுவிட்ட நிலப்பிரபுத்துவ கட்டிடத்தின் இடத்தில், பகுதியளவு தகர்க்கப்பட்ட முதலாளித்துவ கட்டிடத்தின் இடத்தில், புதிய சோசலிச கட்டிடத்துக்கு பொருளாதார அடிப்படைகளை நிறுவுவது, பொருளாதார வளர்ச்சியை கொண்டுவருவது என்பதுதான், நமது கடைசியான, மிகவும் முக்கியமான, மிகவும் கடினமான, நாம் இன்னும் சிறிதளவே நிறைவேற்றியிருக்கிற கடமை. இந்த மிகவும் முக்கியமான, மிகவும் கடினமான கடமையில்தான் நாம் மிகப்பெரிய பின்னடைவுகளை சந்தித்திருக்கிறோம். நிறைய தவறுகள் செய்திருக்கிறோம். உலகத்தில் மிகவும் புதிதான ஒரு கடமையை பின்னடைவுகள் இல்லாமல் தவறுகள் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும் என்று ஒருவர் எப்படி எதிர்ப்பார்க்க முடியும்! ஆனால் நாம் அதைத் துவங்கி விட்டோம். நாம் அதைத் தொடரப் போகிறோம். இந்தக் கணத்தில், நமது புதிய பொருளாதார கொள்கை மூலம் நாம் பல தவறுகளை சரி செய்துகொண்டிருக்கிறோம். ஒரு சிறுவீத விவசாய நாட்டில், தவறுகள் ஏதும் இழைக்காமல் சோசலிச கட்டிடத்தை எப்படி தொடர்ந்து கட்டுவது என்று நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம்.
மிகப் பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன. மிகப்பெரிய பிரச்சனைகளை சமாளிப்பதற்கு நாம் பழகிவிட்டோம். ‘பாறை போல் உறுதியானவர்கள்‘, ‘உறுதி வழி கொள்கையை முன்நகர்த்துபவர்கள்’ என்று நமது எதிரிகள் அழைப்பதில் பொருள் இல்லாமல் இல்லை. ஆனால், புரட்சியில் மிகவும் சாரமான மற்றொரு கலையை நாமும் ஓரளவுக்காவது கற்றுக்கொண்டோம்; அது நெளிவுசுளிவு. புறநிலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப செயல்தந்திரத்தில் துரிதமான, திடீர் மாற்றங்கள் மேற்கொள்வது, ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் முந்தைய பாதை பொருந்தாதது, சாத்தியம் அற்றது என்று மெய்ப்பிக்கப்படுமானால், நமது இலட்சியத்தை அடைய வேறு ஒரு பாதையை தேர்ந்தெடுப்பது என்ற திறன் அது.
ஆர்வமெழுச்சியின் அலைகளின் முகடுகளில் பிறந்த, முதலில் மக்களின் அரசியல் ஆர்வத்தை எழச்செய்து, பிறகு ராணுவ ஆர்வத்தை தூண்டிய நாம், நேரடியாக இந்த ஆர்வத்தின் மீது சார்ந்திருந்து அரசியல் கடமைகளை, ராணுவ கடமைகளை நிறைவேற்றியதைப் போலவே பொருளாதார கடமைகளையும் நிறைவேற்றி விடுவோம் என எதிர்ப்பார்த்தோம். ஒரு சிறுவீத விவசாய நாட்டில், பாட்டாளி வர்க்க அரசின் நேரடி உத்தரவில், கம்யூனிஸ்ட் வழியில், பண்டங்களின் அரசு உற்பத்தியையும் அரசு விநியோகத்தையும் கட்டமைக்கும் திறன் பெற்றிருப்போம் என்று நாம் எதிர்ப்பார்த்தோம்; அது பற்றி போதுமான அளவு சிந்தித்துக் கூடப் பார்க்காமல் அனுமானித்துக் கொண்டோம் என்று சொல்வது இன்னும் உண்மையானதாக இருக்கும். நாம் எதிர்ப்பார்த்தது தவறு என்று அனுபவம் மெய்ப்பித்தது. கம்யூனிசம் நோக்கிச் செல்ல, பலப்பல மாறிச் செல்லும் கட்டங்கள் - அரசு முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் - நோக்கிய ஆயத்தத்துக்கு, பல ஆண்டுகால பல முயற்சிகளுடனான ஆயத்தத்துக்கு, அவசியம் என்று தெரிகிறது. ஆர்வத்தின் மீது நேரடியாக சார்ந்திருக்காமல், ஆனால் மகத்தான புரட்சி உருவாக்கியுள்ள ஆர்வத்தின் துணைகொண்டு, தனிப்பட்ட ஆர்வம், தனிப்பட்ட ஊக்கம், வர்த்தக கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், முதலில், அரசு முதலாளித்துவத்தின் ஊடே, சோசலிசம் நோக்கிச் செல்வதற்கான திண்மமான தனிப் பாதையை கட்டமைக்கும் பணியில் நாம் இறங்க வேண்டும். இல்லையெனில் நாம் கம்யூனிசத்தை அடையவே முடியாது; பல கோடிக்கணக்கான மக்களை கம்யூனிசம் நோக்கி அழைத்துச் செல்ல முடியாது. அனுபவம், புரட்சி வளர்ந்து எழுந்த புறநிலை சார்ந்த போக்கு, இதைத்தான் நமக்கு கற்பித்திருக்கிறது.
கடந்த மூன்று, நான்கு வருடங்களாக, (திடீர் மாற்றங்கள் தேவைப்படும்போது) அரங்கங்களில் திடீர் மாற்றங்கள் செய்ய சிறிதளவே கற்றிருந்த நாம், வைராக்கியத்துடன், கவனமாக, கடின உழைப்புடன், புதிய பொருளாதாரக் கொள்கை என்ற ஒரு புதிய அரங்க மாற்றம் செய்ய கற்றுக்கொள்ள துவங்கியிருக்கிறோம். பாட்டாளி வர்க்க அரசு எச்சரிக்கையான, கவனமான, சாதுரியமான ‘தொழிலதிபராக’ மாற வேண்டும்; ஒழுக்கமான நடைமுறைகள் கொண்ட ஒரு வியாபாரியாக மாற வேண்டும்; இல்லையென்றால், இந்த சிறுவீத விவசாய நாட்டை பொருளாதாரரீதியாக அதன் சொந்தக் காலில் நிற்க வைக்க, அதனால் முடியாமலேயே போய்விடும். இருக்கிற நிலைமைகளில், முதலாளித்துவ மேற்கத்திய நாடுகளுடன் (தற்போதைக்கு முதலாளித்துவ நாடுகள்) அக்கம்பக்கமாக நாம் வாழ்ந்து கொண்டிருப்பதால், கம்யூனிசம் நோக்கி முன்னேற இதைத் தவிர வேறு வழியில்லை. பூமியில் இருந்து சொர்க்கம் தூரத்தில் இருப்பதுபோல், ஒரு பொருளாதார மாதிரி என்ற பொருளில், ஒரு மொத்த வியாபாரி, கம்யூனிசத்தில் இருந்து மிகவும் தொலைவில் இருப்பவராக தெரியலாம். ஆனால், அது, நிஜ வாழ்க்கையில், ஒரு சிறுவீத விவசாய பொருளாதாரத்தை, அரசு முதலாளித்துவத்தின் ஊடாக, சோசலிசம் நோக்கி இட்டுச் செல்லும் முரண்பாடுகளில் ஒன்று. தனிநபர் ஊக்கம் உற்பத்தியை அதிகரிக்கும்.நாம் முதலில், மிகவும் முதன்மையாக, எல்லா விதங்களிலும் முயற்சி செய்து, உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மொத்த வியாபாரம் பொருளாதாரரீதியாக கோடிக்கணக்கான விவசாயிகளை ஒன்றிணைக்கிறது. அது அவர்களுக்கு தனிப்பட்ட ஊக்கம் தருகிறது; அவர்களை ஒன்றிணைத்து, அவர்களை அடுத்த அடிக்கு, அதாவது, உற்பத்தி இயக்கப்போக்கிலேயே பல்வேறு வடிவங்களிலான ஒன்றிணைவுகளுக்கு, கூட்டணிகளுக்கு, இட்டுச் செல்கிறது. நமது பொருளாதார கொள்கையில் தேவையான மாற்றங்கள் செய்ய ஏற்கனவே துவங்கிவிட்டோம்; இதில் ஏற்கனவே சில வெற்றிகளும் பெற்றுள்ளோம்; அவை சிறியவைதான், பகுதியளவானவைதான் என்றாலும் அவை வெற்றிகளே. ‘கற்றுக்கொள்வது’ என்ற இந்த புதிய களத்தில் நமது ஆயத்த வகுப்பை நாம் ஏற்கனவே முடித்திருக்கிறோம். விடாப்பிடியான, கவனமான கல்வி மூலம், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நடைமுறை அனுபவம் என்ற பரிசோதனைக்கு உட்படுத்தி, நாம் ஏற்கனவே துவங்கிவிட்டதை, மீண்டும் மீண்டும் மாற்ற வேண்டியிருப்பதில் அச்சம் கொள்ளாமல், நமது தவறுகளை சரி செய்து கொண்டு, அவற்றின் முக்கியத்துவத்தை மிகவும் கவனமாக பகுப்பாய்வு செய்து, நாம் அடுத்தடுத்த உயர் வகுப்புகளுக்குச் செல்வோம். உலகப் பொருளாதாரத்தின், உலக அரசியலின் தற்போதைய நிலைமைகள், அந்த முழுமையான படிப்பு போக்கை, நாம் விரும்பியதை விட மிகவும் நீண்டதாக, மிகவும் கடினமானதாக மாற்றியிருந்தாலும், நாம் அந்த ‘முழு படிப்பையும்’ படிப்போம். என்ன விலை தந்தேனும், அந்த மாறிச் செல்லும் கால கட்டத்தின் துன்பங்கள் எவ்வளவு கடுமையானவையாக இருந்தாலும், பேரழிவு, பஞ்சம், கேடு என என்ன வந்தாலும் நாம் தடுமாற மாட்டோம். நமது லட்சியத்தை அதன் இலக்கு நோக்கி வெற்றிகரமாக எடுத்துச் செல்வோம்.
- அக்டோபர் 14, 1921

Search