COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, October 30, 2017

கார்ப்பரேட் காப்பீட்டுத் திட்டமாகிவிட்ட மோடியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

முந்தைய அய்முகூ அரசு செயல்படுத்தி வந்த பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் இடத்தில் 2016 ஏப்ரலில், பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா) அறிவிக்கப்பட்டது. அது நாட்டின் விவசாயிகள் துயரம் அனைத்தையும் துடைத்துவிடும் என்பதுபோல் பேசப்பட்டது.
இடுபொருட்களின் விலையை குறைப்பது, விளைபொருளுக்கு கட்டுப்படியாகும் விலை தருவது, விவசாயத்தில் கூடுதல் அரசு முதலீடு போன்ற, விவசாயத்தை பாதுகாக்க மிகவும் தேவை யான அடிப்படையான எந்த நடவடிக்கையிலும் எந்தத் துவக்கமும் நிகழ்த்தாமல் வாயில் பந்தல் போட்டார்கள்.
மத்திய விவசாயம், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு துறையின் 2016 - 2017 ஆண்டறிக்கை, 2016ல் திட்டம் அமலான முதல் பருவகாலத்தில் (கரீப் பருவகாலம் - ஜுன் முதல் அக்டோபர் வரை) 3 கோடியே 74 லட்சம் விவசாயிகள் திட்டத்துக்குள் வந்தனர் என்றும் இவர்கள் ரூ.1,41,487 கோடிக்கு காப் பீடு செய்யப்பட்டுள்ளனர் என்றும் சொல்கிறது.
பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்துடன் பருவ காலம் அடிப்படையிலான மறுகட்டமைப்பு செய்யப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டமும் அறிவிக்கப்பட்டது.இந்த இரண்டு திட்டங்களுமே, நெருக்கடியில் சிக்கித் தவிக் கும் விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் தரும்விதம் இல்லை என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மய்யமும் டவுன் டு எர்த் என்ற இணைய பத்திரிகையும் இணைந்து இந்தியாவின் சுற்றுச்சூழல் பற்றிய நிலைமை 2017 என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்படுகிறது.
குஜராத்தில் 4,14,997 விவசாயிகள் திட்டத்தின் கீழ் வருகின்றனர். இவர்களுக்காக அரசாங்கம் காப்பீட்டு நிறுவனங்களுக்கு முன்காப்பீட்டு தொகை செலுத்தியுள் ளது. இவர்களில் 464 பேருக்குத்தான் பயிர்க்காப்பீடு கிடைத்துள்ளது. ராஜஸ்தானில் 18,62,907 விவசாயிகள் திட்டத்தின் கீழ் வருகின்றனர். இவர்களில் 494 பேருக்குத்தான் பயிர்க் காப்பீடு கிடைத்துள்ளது. மீதம் கார்ப்பரேட் காப்பீட்டு நிறுவனத்திற்கு தங்கி விடுகிறது.
இந்த இரண்டு திட்டங்களிலும் நாடு முழுவதும் 2016ல் கிட்டத்தட்ட 3 கோடியே 90 லட்சம் விவசாயிகள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முன்காப்பீட்டுத் தொகையில் 1.5% முதல் 2% வரை விவசாயிகள் செலுத்துவதுபோக, மீதியை மத்திய மாநில அரசாங்கங்கள் காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செலுத்துகின்றன. 2017 - 2018 நிதி நிர்வாகத்தில் இந்தத் திட்டத்துக்கு ரூ.9,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தாலும், இதுவரை ரூ.9,041.25 கோடி முன்தொகையாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு தரப்பட்டுள்ளது. பயிரிழப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ரூ.2,324.01 கோடி இழப்பீடு வேண்டுமென கோரியதில் ரூ.570.10 கோடி மட்டும் அவர்களுக்குத் தரப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் மக்கள் பணத்தில் இருந்து தந்தழுத காப்பீட்டுத் தொகையில் மீதி காப்பீட்டு நிறுவனங்களிடமே உள்ளது.
விவசாயிகள் கேட்ட ரூ.2,324.01 கோடியை தந்து விட்டால் கூட காப்பீட்டு நிறுவனங்களிடம் ரூ.6,717.24 கோடி இருக்கும். ரூ.570.10 கோடி மட்டும் தரப்பட்டுள் ளதால், காப்பீட்டு நிறுவனங்களிடம் ரூ.8,471.15 கோடி இருக்கும். இது நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய இழப்பீடு என்ற பெயரில் தரப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கருவூலத்துக்குப் போய்விட்டது. மோடி அரசாங்கத்தின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சகம், பயிரிழப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ரூ4,270.55 கோடி கோரியதாகவும் 2017 மார்ச் வரை ரூ.714.14 கோடி தரப்பட்டுள்ளதாகவும் சொல்கிறது.
பழைய பயிர்காப்பீட்டுத் திட்டங்களின் இடத்தில் வந்த இந்த இரண்டு பயிர் காப்பீட்டு திட்டங்களின் கீழ், 10 காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு தர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் எஸ்பிஅய் பொது காப்பீட்டு நிறுவனம் தவிர மற்றவை தனியார் காப்பீட்டு நிறுவனங்கள். ரிலையன்ஸ், டாடா, பஜாஜ், அய்சிஅய் சிஅய் ஆகிய மோடியின் பிரிய நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் அடக்கம். இந்த நிறுவனங்களை கொழுக்க வைக்கத்தான், மக்கள் பணத்தை வாரி இந்த நிறுவ னங்களுக்குத் தந்து விடத்தான் மோடியின் ஆட்சி நடக்கிறது என்பதை மோடி அரசின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மீண்டும் மெய்ப்பிக்கிறது.

Search