நவோதயா
பள்ளிகள் வேண்டாம்!
இந்தித்
திணிப்பு வேண்டாம்!
தமிழ்நாட்டில்
ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள்
அனுமதிக்கப்பட வேண்டும் என தொடுக்கப்பட்ட வழக்கில்,
மாநில அரசு, நவோதயா பள்ளிகளை
அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை
கிளை சொல்லியுள்ளது.
தமிழ்நாட்டில்
நீட் திணிக்கப்பட்ட பின்னணியில், அனிதா படுகொலையின் பின்னணியில்,
திறன் என்ற மேட்டுக்குடி பிதற்றலுக்கு
தீனி போட, வாய்ப்பை பயன்படுத்திக்
கொண்டு நவோதயா பள்ளிகள் வேண்டும்
என்று தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்கள்
சொல்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள் என்றால்
அது தமிழ்நாட்டு மக்களுக்கு கேடானதாக, எதிரானதாகத்தானே இருக்க முடியும்.
நவோதயா
பள்ளிகள் மத்திய அரசால் நடத்தப்படுபவை. தமிழ்நாடு
தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும்
புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் 576 மாவட்டங்களில்
598 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2,47,153 மாணவர்கள்
பயில்கிறார்கள். நவோதயா பள்ளி முறையின்படி,
நாட்டில் உள்ள மாணவர்களில் இந்த
இரண்டரை லட்சம் பேர்தான் திறமையானவர்கள்!
நவோதயா
பள்ளிகள் உறைவிடப் பள்ளிகள். கட்டணம் இல்லா பள்ளிகள்
என்று சாதாரணமாக அறியப்படுகிறது. ஆனால் ஒன்பதாம் வகுப்புக்குப்
பிறகு ஆண் மாணவர்கள் மட்டும்
மாதம் ரூ.200 கட்டணம் செலுத்த
வேண்டும். பெண் மாணவர்கள், தலித்,
பழங்குடியின மாணவர்களுக்கு விலக்கு உண்டு. கிராமப்புறங்களின்
திறமையான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தரமான கல்வி வழங்குவது
இந்தப் பள்ளி முறையின் நோக்கம்.
நுழைவுத் தேர்வு எழுதி ‘தகுதியான’ மாணவர்கள்
ஆறாம் வகுப்பில் இந்தப் பள்ளிகளில் சேர
வேண்டும். இந்தப் பள்ளிகளுக்கு மாநில
அரசு நிலமும் கட்டிடமும் தர
வேண்டும்.
கிராமப்புற
மாணவர்களுக்கு 75% இடம் தரும், மேலான
கல்வி தரும், திறன் வளர்ப்பில்
கவனம் செலுத்தும் பள்ளிகள் இருப்பது நல்லதுதானே, மற்ற மாநிலங்களில் உள்ளவைதானே
என்று வழக்கம்போல் பொதுப்புத்தி நமக்கெதிராக நம்மை பேச வைக்கிறது.
மற்ற மாநிலங்கள் ஒப்புக்கொள்வதால் தமிழக மக்கள் ஒப்புக்கொள்ள
வேண்டும் என்று கட்டாயம் இல்லை.
நமது மாநில தேவைகளுக்கு ஏற்ப
நமது கல்வித் திட்டத்தை வகுத்துக்
கொள்ளும் உரிமை நமக்கு இருக்கிறது.
அதைப் பறிக்கத்தான் மோடி அரசு நம்மை
படாதபாடு பட வைக்கிறது.
ஆறாம் வகுப்பில் சேர்ந்த பிறகு, அய்ந்தாம்
வகுப்பு வரை எந்த மொழியில்
கற்றார்களோ அதே மொழி ஏழு,
எட்டு வகுப்புகளுக்கு, பயிற்று மொழியாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் இந்தியும் ஆங்கிலமும் கற்க ‘தீவிர’ பயிற்சி தரப்படும். பிறகு,
ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னி
ரண்டு வகுப்புகளில் இந்தியும் ஆங்கிலமும் மட்டும் பயிற்று மொழியாக
இருக்கும். மும்மொழி கல்வியாகத் துவங்கி, இறுதியில் இரு மொழிக் கல்வியாக
கல்வி முறை இருக்கும்.அய்ந்தாம்
வகுப்பு வரை தமிழ் கற்ற
மாணவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து வெளியில்
வரும்போது, ஹவ் ஆர் யு
என்றோ கைசே ஹோ என்றோ
நம்மைப் பார்த்து கையசைப்பார்கள்.வணக்கம் என்ற சொல்
கூட மறந்து போயிருக்கும்.இந்தப்
பள்ளிகளில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர்
14 முதல் 28 வரை இந்தி வாரம்
கொண்டாடப்படும்.
ஆக, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளி இந்தித்
திணிப்பை உறுதிப்படுத்தும்.இது சிறு வயதிலேயே
நஞ்சு புகட்டும் நடவடிக்கை. தமிழக அரசு கொள்கைரீதியாக
இந்தப் பள்ளிகளை இதுவரை அனுமதிக்கவில்லை. மாநிலத்தின்
அரசுப் பள்ளிகளில் யோகா கற்றுத் தரப்படும்
என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
சொல்லியுள்ளபோது, உயர்நீதிமன்ற உத்தரவும் இருக்கிறபோது, தமிழக ஆளுங்கட்சி மத்திய
பாஜக அரசின் காலில் விழுந்து
கொண்டிருக்கும்போது, தங்களது கண்காணிப்பால் தமிழக
மக்கள் பாதுகாத்து வந்த கொள்கைகளுக்கு நவோதயா
பள்ளிகளால் கேடு நேரும்.
தமிழ்நாட்டின்
பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள யோகாவில் பயிற்சி மட்டும் கற்றுத்
தரப்படும், அதனுடனான இறை வழிபாடு இருக்காது
என்று இப்போது சொல்கிறார்கள். நாளை
தியானமும் கடவுளை நினை, மனிதனை
மற என்ற முணுமுணுப்பும் சேர்ந்து
வரும். யோகா பயிற்சி என்று
ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் மோசடி
சாமியார்கள் அரசுப் பள்ளிகளுக்குள் வருவார்கள்.
யோகா வரும் முன்னே. இந்துத்துவா
வரும் பின்னே.
நவோதயா
பள்ளிகளில் தமிழுக்கு பங்கம் வராதவாறு பார்த்துக்
கொள்வதாக மத்திய அரசு தரப்பில்
சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகளின் திட்டமே
ஒரு கட்டத்தில் இரு மொழி கல்வி
என்றாகிவிடுகிறது. சீ - சா விளையாட்டில்
ஆர்வமாக உள்ள அஇஅதிமுக ஆட்சியாளர்கள்
வேடிக்கை பார்ப்பார்கள்.
நவோதயா
பள்ளிகளில் திறமையான மாணவர்கள்தான், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் அளவுக்கு திறன்
உள்ளவர்கள்தான் சேர முடியும். அந்த
மாணவர்கள் திறமையை மேலும் வளர்ப்பது
நவோதயா பள்ளிகளின் பணி. ஆனால், திறமையான
மாணவர்கள் திறமையாகத்தானே இருக்கிறார்கள், திறன் குறை மாணவர்களுக்குத்தானே
கூடுதல் கவனிப்பும் சிறப்பு கவனிப்பும் தேவை
என நமக்கு கேள்வி எழுகிறது.
அப்படி திறன்குறை மாணவர்களின் திறனை மேம்படுத்தும் திட்டம்
எதுவும் மத்திய அரசிடம் இல்லை.
மாநில அரசிடமும் இல்லை. திறன் படைத்த
மாணவர்களை மத்திய அரசின் புகழ்பாட
வைத்து மூளைக்கு விலங்கு பூட்டி அடிமைகளாக்கி
பக்கத்தில் வைத்துக் கொள்வதும், திறன்குறைவான மாணவர்களை பயனற்றவர்கள் என்று முத்திரை குத்தி
திறமையான அடிமைகளுக்கு அடிமைகளாக்கி விடுவதும்தான் நடக்கும். இப்போது உள்ள கல்வி
முறையே அடிமைக் கல்வி முறைதான்.
அதை மாற்றி அமைக்க வேண்டும்
என்பதுதான் இங்கு முக்கியமான பிரச்சனை.மேலும் அடிமைத்தனத்தை புகுத்த
முயற்சி செய்வதுதான் நவோதயா பள்ளி முறை.
அது தமிழ்நாட்டுக்கு வேண்டாம்.
இன்றைய
நிலைமைகளில் தமிழ் குழந்தைகள் மத்திய
அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தனியார் பள்ளிகளில் தமிழ்
படிக்காமலேயே படித்து முடித்து விட
முடியும். தமிழ் தெரியாது என்று
பெருமையாகப் பேசும் இளைஞர்களை, அதை
பெருமையாகக் கருதும் பெற்றோர்களை நாம்
நாளும் கடக்கிறோம். தமிழ்நாட்டுக்குள், தமிழ் தெரியாது என்பது
பெருமைக்குரியதாகவும், தமிழ் மட்டும் தெரிந்திருப்பது
ஏளனத்துக்கும் இழிவுபடுத்துதலுக்கும் உரிய விசயமாகவும் ஒரு
நிலை ஏற்கனவே இருக்கும் போது,
அதை பாசிச மோடி அரசுடன்
சேர்ந்து மேலும் வலுப்படுத்தும் கல்வி
முறை எதுவும் இங்கு தேவையில்லை.
தமிழர்கள் நீதிகோரும் வழக்குகளில், தமிழ் வழக்கறிஞர்கள் வழக்காடும்போது,
உயர்நீதி மன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும்
என்ற கோரிக்கையை எழுப்பினால் கூட சிறை, தடை
என்ற நிலையே இன்னும் இங்கு
உள்ளது. இருக்கும் உரிமைகள் பறி போய் கொண்டிருக்கும்போது
புதிதாக ஒரு பிரச்சனை இங்கு
தேவையே இல்லை.
மத்திய
மோடி அரசுக்கு, இங்குள்ள பாஜக தலைவர்களுக்கு உண்மையிலேயே
தமிழக மாணவர்கள் மீது அக்கறை இருந்தால்
அவர்கள் எடுக்க வேண்டிய உடனடி
நடவடிக்கைகள் பல உள்ளன. அவர்கள்
கவனத்துக்கு அவற்றில் சிலவற்றை இங்கு வரிசைப்படுத்தலாம்.
தமிழ்நாட்டில்
பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர்
1,51,95,000 பேர். இவர்களில் 80.99% பேர் எழுதப் படிக்கத்
தெரிந்தவர்கள். இந்த நிலையில் இருந்து
இன்னும் முன்செல்ல வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடியின மக்களுக்கு, பட்டியல் சாதியினருக்கு உண்டி உறைவிடப் பள்ளிகளை
தமிழக அரசு நடத்துகிறது. இங்கு
1,324 ஆதி திராவிட நல விடுதிகளில்
98,539 மாணவர்கள் உள்ளனர். 42 பழங்குடியினர் நல விடுதிகளில் 2,782 மாணவர்கள்
314 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில்
27,652 மாணவர்கள் உள்ளனர்.
நாடு முழுக்க இருக்கிற நவோதயா
பள்ளிகளை விட இந்தப் பள்ளிகளின்
எண்ணிக்கையும், அங்குள்ள ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர் எண்ணிக்கையும்
அதிகம். இந்தப் பள்ளிகளில், விடுதிகளில்
உணவு, கழிப்பறைகள் முதல் எல்லாவிதமான வாழ்நிலைமைகளும்
மிகவும் மோசமானவை. தமிழ்நாட்டின் மாணவர் நலன் காக்க
நவோதயா வேண்டும் என்று சொல்லும் பாஜகவினருக்கு
உண்மையிலேயே தமிழக கிராமப்புற மாணவர்கள்
மீது அக்கறை உள்ளது என்றால்
நவோதயா பள்ளிகளுக்கு ஒதுக்கும் நிதியை எங்கள் மாநில
உண்டி உறைவிடப் பள்ளிகளுக்குத் தந்துவிடுங்கள். நாங்கள் எங்கள் குழந்தைகளை
இன்னும் மேலாக பார்த்துக் கொள்கிறோம்.
நவோதயா பள்ளிகளில் மத்திய அரசு திறன்மிகு
மாணவர்களுக்குத்தான் கல்வி தரப்போகிறது. தமிழ்நாட்டில்,
திறன்மிகு மற்றும் திறன் குறை,
ஆனால், சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்கள் அனைவரையும் இந்தப் பள்ளிகளில் நாங்கள்
பார்த்துக் கொள்கிறோம்.
இடைநிலை
கல்வி கற்கும் தலித் பெண்
மாணவர்களுக்கு ஊக்கத் தொகை தரும்
தேசியத் திட்டம் ஒன்பது ஆண்டுகளுக்கு
முன் துவங்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட
ரூ.370 கோடி தமிழ்நாடு வந்து
சேரவில்லை.எங்கோ சிக்கி நிற்கிறது.
இது அந்த ஒடுக்கப்பட்ட பிரிவு
மாணவர்களுக்குச் சென்று சேர்வதை தமிழக
பாஜக தலைவர்கள் உறுதி செய்யட்டும்.
ஒவ்வோர்
ஆண்டும் 10ஆம் வகுப்பில் சிறந்து
விளங்கும் 320 தலித் பழங்குடி மாணவர்கள்
சிறந்த தனியார் பள்ளிகளில் 11ஆம்
வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். தமிழக அரசு ஒரு
மாணவருக்கு ஓர் ஆண்டில் ரூ.28,000
செலவிடுகிறது. இந்த நிதி தனியார்
பள்ளிகளுக்குச் செல்கிறது. கொள்கையே தனியார் கல்வியை ஊக்குவிப்பதாக
உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு 320 மாணவர்களுக்குத்
தரும் நிதியை அரசுப் பள்ளிகளை
மேம்படுத்த செலவிடுவது மக்கள் மீது அக்கறை
உள்ள அரசு செய்ய வேண்டிய
வேலை. அப்படி ஓர் அரசு
இங்கு இல்லை. எனவே அப்படி
நடப்பதில்லை.
இவை தவிர தொண்டு நிறுவனங்களால்
இந்தப் பிரிவு மாணவர்களுக்கு நடத்தப்படும்
விடுதிகளும் உள்ளன. அவற்றுக்கும் உணவு
கட்டணம் மானியமாகத் தரப்படுகிறது. அரசு விடுதிகளில் உள்ள
மாணவர்களுக்குத் தரப்படுவது போல் வேறு பல
சலுகைகளும் இந்த நிறுவனங்களில் உள்ள
மாணவர்களுக்குத் தரப்படுகிறது. அது அவர்களை சென்று
சேர்வதில் இடைவெளிகள் உள்ளன.
பட்டியல்
சாதி மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு
தரப்பட வேண்டிய உயர்கல்வி உதவித்
தொகை முறையாக வந்து சேர்வதில்லை.
பிறகு சென்று சேர்வதில்லை.வந்து
சேர்வதை உறுதிப்படுத்த, முறைப்படுத்த தமிழ்நாட்டின் பாஜக தலைவர்கள் முதலில்
முயற்சி செய்யட்டும்.
எஸ்சிஎஸ்டி
மாணவர்களுக்கான உயர் கல்வி உதவித்
தொகையை கடந்த ஒன்பது ஆண்டுகளாக
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு முழுமையாக
வழங்கவில்லை. எஸ்சிஎஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை
திட்டத்தை நிறைவேற்ற 2016 - 2017க்கு ரூ.1,279 கோடி
தேவை. இதில் பாதிக்கும் மேல்
இன்னும் மத்திய அரசு தரவில்லை.
முதலமைச்சர் பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு இது
தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில் கடந்த அய்ந்து ஆண்டுகளாக
இந்த வகையில் மத்திய அரசு
இன்னும் ரூ.1,546 கோடி தர வேண்டியுள்ளது
என்கிறார். மத்திய அரசு ரூ.2,500
கோடி தர வேண்டும் என்றும்
தமிழக அரசு திட்டத்தை முறையாக
செயல்படுத்தாததால் ரூ.35 கோடியை மத்திய
அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது என்றும் ஸ்டாலின்
சொல்கிறார். அனிதா படுகொலைக்கு நீதி
கேட்டு தமிழக மக்கள் போராடிக்
கொண்டிருக்கும்போது தமிழக அரசு எஸ்சி
எஸ்டி மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித் தொகையை மூன்றில்
ஒரு பங்காக குறைத்துள்ளது. உயர்
படிப்பில் சேரவுள்ள ஒன்றரை லட்சம் மாணவர்களை
இந்த வெட்டு பாதிக்கும் என்றும்
நிர்வாக ஒதுக்கீட்டில் ரூ.12.5 லட்சம் வரை
பெற்ற மருத்துவ கல்லூரி மாணவர்கள் இனி
ரூ.4 லட்சம் மட்டும் பெறுவார்கள்
என்றும் சொல்லப்படுகிறது. இந்த பாதிப்புகளுக்கு, இழப்புகளுக்கு
மோடி அரசே நேரடிப் பொறுப்பு.
இருக்கிற
பள்ளிகளை மேம்படுத்துங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். நவோதயா
கேட்கவில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
பற்றி குறை சொல்வது பலருக்கும்
வெல்லமாக இனிக்கிறது. அரசுப் பள்ளிகளில் போதுமான
கழிப்பறை வசதிகள், கட்டிடங்கள் இல்லை அதனால் தனியார்
பள்ளிகளுக்கு பெற்றோர் கள் தங்கள் குழந்தைகளை
அனுப்புகிறார்கள் என்று சொல்பவர்கள், இந்த
குறைபாடுகளால் பாதிக்கப்படுவது மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும்தான் என்பதை காணத் தவறுகிறார்கள்.
மின்விசிறிகள் இல்லாத பள்ளிகள் இங்கு
உள்ளன. ஒப்பீட்டுரீதியில் மேலாகவே உள்ள தமிழ்நாட்டு
மாணவர் தரத்தை மேலும் மேம்படுத்த
நாங்கள் தயார். இங்குள்ள பள்ளிகளை சீர்செய்ய நவோதயாவுக்கு தரும் நிதியை தர
நீங்கள் தயாரா? வெறும் 10 நவோதயா
பள்ளிகள் அமைத்துவிட்டால் கல்வியை மேம்படுத்திவிட முடியாது.
கல்வி மேம்பாடு தனியார்மயத்துக்கு முடிவு கட்டுவதோடு தொடர்புடையது.
அதற்கு பாஜகவினர் தயாரா? வாய்வீச்சு அரசியல்
செய்து எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.
சாமான்ய
தமிழர்கள் வங்கிகளுக்குச் சென்று தங்கள் மானியத்தை,
ஊதியத்தை, ஓய்வூதியத்தை, தங்கள் சொந்தக் கணக்கில்
உள்ள பணத்தை வாங்க வேண்டியிருக்கிறது.
வங்கிகளில் பொது மக்கள் தொடர்பு
கொள்ள வேண்டிய இடங்களில், இந்தி
பேசுபவர்கள், தமிழ் தெரியாதவர்கள் இருக்கிறார்கள்.
தமிழகத்தின் ரயில் நிலையங்களில், பயணச்சீட்டு
பரிசோதகர், விசாரணை, உதவி மய்யங்களில் இருப்பவர்கள்
என தமிழ் தெரியாதவர்கள் இருக்கிறார்கள்.நெடுஞ்சாலை மைல் கற்களில் ஆங்கிலம்
அழிக்கப்பட்டு இந்தி எழுதப்படுகிறது. இந்தியை
திணிக்க மோடி அரசாங்கம் எடுக்கும்
முயற்சிகள் தமிழக சாமான்ய மக்களின்
அன்றாட, சாதாரண வாழ்க்கையைக் கூட
சிரமமானதாக ஆக்கிவிட்டது.
பாஜகவினருக்கு
தமிழக மக்கள் மீது அக்கறை
என்று அவர்கள் சொல்வதை தமிழக
மக்கள் என்றும் நம்பப் போவதில்லை.
ஏனென்றால், அதற்கான எந்த செயல்பாடும்
அவர்களிடம் இருக்கப் போவதில்லை. தமிழ்நாடு அவர்களை ஏற்றுக்கொள்ளாது. தமிழக
மக்களின் மரபணுவில் சுயமரியாதை, பகுத்தறிவு, மாநில உரிமைகள், வருணாசிரம
எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு
என சில கூறுகள் உள்ளன.
போராடி
பெற்று பாதுகாத்து வைத்திருந்த பல உன்னதமான விழுமியங்களை
இழந்து நிற்கிறோம். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த
மூன்றரை ஆண்டுகளில் இந்த நாடு இன்னும்
பல ஆண்டுகள் பின்னுக்குப் போய்விட்டது.இழந்தவற்றை மீட்டெடுக்க ஆகும் காலம், அந்த
காலத்தில் இழந்தவற்றை உருவாக்கும் காலம் என இரட்டைச்
சுமையை இந்த நாட்டு மக்கள்
மீது சங் பரிவார் கூட்டம்
சுமத்திவிட்டது. பழையன கழித்து புதியன
புகுத்த வேண்டியிருக்கும் போது பழையனவற்றை புகுத்தி
நாட்டு மக்கள் முன்னேற்றத்தை தடுத்துவிட்டது.
தமிழக மக்கள் மீண்டும் பழைய
சண்டை போட வேண்டும்.
தமிழகத்தின்
மிச்சசொச்ச ஜனநாயக மாண் புகளை
மண்ணில் புதைத்து விட, அவற்றை காவிக்
கூட்டத்தின் காலில் கிடத்தி விட
தயாராகிவிட்ட, மக்கள் வாழ்க்கை, உரிமைகள்,
பற்றி கூருணர்வற்ற, அஇஅதிமுக ஆட்சியின் சரணாகதி அரசியல் அனுமதிக்கப்படக்
கூடாது. இப்போது மக்கள் செல்வாக்கு
கொண்ட எந்த முகமூடியும் அவர்களிடம்
இல்லை. ஆடையில் லாமல் இருப்பதை
மன்னனே ஒப்புக்கொள்ளும் காலம் இது.