சோவியத்
சோசலிச முகாம் ஏன் சரிந்தது?
எஸ்.குமாரசாமி
ஏற்றத்தாழ்வுகள்
அகற்றுவது, வேலையின்மை, விலைஉயர்வுக்கு முடிவு கட்டுவது, மொழி
தேசிய பால் இன சமத்துவம்
நிறுவுவது, பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தில் ஊன்றி
நிற்பது, உண்மையான மக்களாட்சி தருவது என்ற மாபெரும்
வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்திய, முதலாளித்துவத்தை விட எல்லா விதங்களிலும்
சோசலிசம் மேலானது என சில
பத்தாண்டுகளுக்கு நிறுவிய, சோசலிஸ்ட் முகாம், கத்தியின்றி ரத்தமின்றி,
ஒரு துப்பாக்கி தோட்டா கூட வெடிக்காமல்,
வீழ்ந்தது.
சோசலிஸ்ட் முகாமின் ஒவ்வொரு கண்ணியும், பின்னர்
அதன் மொத்தச் சங்கிலியும் அறுந்து
விழுந்தன. சோசலிச முகாமையும் ஏகாதிபத்திய
முகாமையும் பிரித்து நிறுத்திய பெர்லின் சுவர் சடசடவெனச் சரிந்தது.
முதலாளித்துவ அறிஞர் ஃபிரான்சிஸ் ஃபூகியாமா,
‘வரலாறு முடிந்துவிட்டது’ எனக் கொக்கரித்தார். அதாவது, மார்க்சி யர்கள்
சொல்லும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறு முடிந்து விட்டது
என்றார். சோசலிசம் நிரந்தரமாய்த் தோற்றுவிட்டது, முதலாளித்துவம் நிரந்தரமாய் வென்றுவிட்டது, ஆகவே உலகில் இனி
வர்க்கப் போராட்டம், பொய்யாய்ப் பழங்கதையாய் ஆகிவிட்டது, தாராளவாத முதலாளித்துவம் என்ற சமூக வடிவம்
தாண்டி, இனி வேறெந்த சமூக
வடிவத்தையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது,
இனி, ஏற்றத்தாழ்வுகளுக்கான ஆதாரமாக, இயற்கையாகவே நிலவும் திறமைகளின் சமத்துவம்
இன்மை, பொருளாதாரரீதியில் அவசியமான வேலைப் பிரிவினை, கலாச்சாரம்
ஆகியவற்றை மட்டுமே காட்ட முடியும்
என்றார். அவர் கூற்றுப்படி கூலி
உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் இடையிலான போர், ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணமாக
இருக்க முடியாது.
சோசலிச
முகாம் தகர்ந்து கால் நூற்றாண்டுக்கும் மேல்
ஆகிவிட்டது. உலகெங்கும் உள்ள மார்க்சிய ஆதரவாளர்கள்,
அந்த துவக்க கால அதிர்ச்சியைக்
கடந்துவிட்டார்கள். ஆனால், முதலாளித்துவம் வழங்குகிற
வாழ்க்கைதான் கொடும் கனவாகிவிட்டது. இன்று
முதலாளித்துவம் வீழட்டும் சோசலிசம் வெல்லட்டும் என்ற முழக்கங்கள் எழும்போதே,
20ஆம் நூற்றாண்டு சோசலிசத்திலிருந்து மாறுபட்ட 21ஆம் நூற்றாண்டு சோசலிசம்
வேண்டும் என்ற குரலும் சேர்ந்து
ஓங்கி ஒலிக்கிறது.
20ஆம் நூற்றாண்டின் சோவியத் முகாம், சீன
சோசலிச மாதிரிகள் ஏன் தோற்றன? ஏன்
தோற்றன எனக் கண்டறிந்து, 21ஆம்
நூற்றாண்டு சோசலிசத்தை மேலானதாக வெற்றிகரமானதாக மாற்ற வேண்டும் என்ற
விருப்பம், இந்தக் கேள்விக்குள் பொதிந்துள்ளது.
20ஆம் நூற்றாண்டு புரட்சிகளில் இருந்து முற்றிலும் துண்டித்துக்
கொண்டு, 21ஆம் நூற்றாண்டு புரட்சி
அமைய முடியுமா? முந்தைய நூற்றாண்டு புரட்சிகளின்
தொடர்ச்சியையும், அவற்றில் இருந்து மாற்றங்களையும் கொண்டுதானே,
இந்த நூற்றாண்டின் புரட்சி அமைய முடியும்.
மார்க்ஸ்,
முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறிச் செல்லும் காலகட்டம்
பற்றிப் பேசினார். வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று வளர்ச்சி பற்றி, வர்க்கங்களின் பொருளாதார
உடற்கூறியல் பற்றி, தமக்கு முன்பே
முதலாளித்துவ வரலாற்றாளர்களும் பொருளாதார அறிஞர்களும் விவரித்துவிட்டனர் என்றும், தாம் புதிதாக நிரூபித்தது
பின்வரும் விசயங்களே எனவும், வெஸ்டெமேயருக்கு 05.03.1852 அன்று எழுதிய
ஒரு கடிதத்தில் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்:
1. உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களோடு வர்க்கங்களின் இருத்தல் பிணைக்கப்பட்டுள்ளது.
2. வர்க்கப் போராட்டம் அவசியமாய் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இட்டுச்
செல்லும்.
3. இந்த சர்வாதிகாரமும், வர்க்கங்களை
இல்லாமல் செய்வது, வர்க்கமில்லாத சமூகம் ஆகியவை நோக்கிய
மாறிச் செல்லும் கட்டமே ஆகும்.
மார்க்சியர்களால்,
முதலாளித்துவ சமூகத்தின் முழுமையான மறுப்பாக, கம்யூனிச சமூகமே காணப்படுகிறது. ஓர்
இடைவழி இடைக்கால அமைப்பாகவே, சோசலிசம் காணப்படுகிறது. சோசலிச சமூகத்தில் உற்பத்தி
சாதனங்கள் பொது உடைமை ஆகும்,
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலவும்,
மய்யப்படுத்தப்பட்ட திட்டமிடுதல் இருக்கும் என 20ஆம் நூற்றாண்டு
மார்க்சியம் கருதியது.
தேவைக்கேற்ப
அல்லாமல், அவரவர் செய்த வேலைக்கு
ஏற்பவே அவரவர்க்கு சமூக உற்பத்தியிலிருந்து தரப்படும்
என்ற முதலாளித்துவ விதி, கம்யூனிசத்திற்கு முந்தைய
சமூகத்தில் இருக்கும். ஒவ்வொருவரும் அவர் ஆற்றலுக்கு ஏற்ப
பங்களிப்பு செய்வதும், தேவைக்கேற்ப பெறுவதும், கம்யூனிச சமூகத்தில்தான் நடக்கும். ‘வேலைக்கேற்ப தருவது’ என்ற முதலாளித்துவ விதி,
அப்போது விடை பெற்றுக் கொண்டுவிடும்.
அதேபோல், கம்யூனிச சமூகத்தில்தான், வர்க்கங்கள் இல்லாமல் போய், அரசு உலர்ந்து
உதிர்ந்து போகும். கம்யூனிசத்திற்கு முந்தைய
அமைப்பில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், அதாவது
பரந்த உழைக்கும் மக்களுக்கு உண்மையான ஜனநாயகம் சாத்தியமாகும், அதுவும் ஓர் அரசு
வடிவில் இருக்கும் என்றே 20ஆம் நூற்றாண்டு
மார்க்சியம் வலியுறுத்தியது.
இந்த மாறிச் செல்லும் சோசலிச
கட்டத்தில், பணம், விலைகள், சந்தை
உறவுகள் என்ற பண்ட உற்பத்திப்
பொருளாதாரத்திற்கு மேலான நிலையில், திட்டமிட்ட
பொருளாதாரம் இருக்கும். அது பொது உடைமையின்
முதன்மைப் பொருளாதார அம்சமாக இருக்கும். இந்தக்
காலகட்டம் நெடுக, பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரம், சோசலிச ஜனநாயகமாக மக்கள்
பங்கேற்புடன் தழைத்து ஓங்கும். இவையும்,
20ஆம் நூற்றாண்டு மார்க்சிய கருத்துக்களே.
ஏகாதிபத்திய
முகாமுக்கு சவால்விட்டு வளர்ந்த, மக்கள் வாழ்க்கைத் தரத்தை
இடைவிடாது மேம்படுத்திய, சந்தை சார்பு பொருளாதாரமாக
அரசியலாக இல்லாமல், மக்கள் சார்பு பொருளாதாரமாக
அரசியலாகத் திகழ்ந்த, சோவியத் சோசலிச முகாம்
ஏன் சரிந்தது?
இகக(மாலெ)யின் முன்னாள்
பொதுச் செயலாளர் தோழர் வினோத் மிஸ்ரா
சொன்ன விசயங்களைக் காண்போம்:
இரண்டாம் உலகப் போருக்குப் பின்,
முதலாளித்துவம் தன் பின்னடைவுகளைக் கடந்து,
தன்னைப் புதுப்பித்துக் கொண்டது. தன் வளர்ச்சியின் ஒரு
குறிப்பிட்ட கட்டத்தில், சோசலிசம், நல்விளைவுகள் தருவதில் தோல்வி கண்டு தேங்கிப்
போனது. மக்களும் தொழிலாளர்களும் கூட இந்த சோசலிச
மாதிரியை நிராகரித்துவிட்டார்கள்.
ஏகாதிபத்திய தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள
அணு ஆயுதங்களை குவிப்பது, இராணுவ சம நிலை
அடைவது, அதனையும் தாண்டுவது என்பதே சோசலிச அரசின்
குறிக்கோளானது.
சோசலிச பொருளாதார அடித்தளம்,
அதன் மேல், மேலாதிக்க வல்லரசு
என்ற வினோதம் அரங்கேறியது.
உலகளாவிய அளவில் சோசலிச முகாமுக்கும்
ஏகாதிபத்திய முகாமுக்கும் இடையிலான முரண்பாடே பிரதான முரண்பாடு எனச்
செயற்கையாக முன்வைத்தது, ஆகச் சிறந்த (சூப்பர்) கட்சி, ஆகச்
சிறந்த (சூப்பர்) அரசு, ஆகச் சிறந்த
(சூப்பர்) தலைவர் போன்ற போக்குகளுக்கு
இட்டுச் சென்றது.
இராணுவச் செலவினங்கள் அதிகரிப்பால், மக்கள் தேவைகளுக்கான தயாரிப்பில்
அடி விழுந்தது.
சோசலிச அமைப்பு உள்ளுக்குள்
அதன் துடிப்பை இழந்தது. கெட்டித்தட்டிப் போனது. சிதைவு இயக்கப்
போக்கை, வீங்கிப் பெருத்த வல்லரசு மனோபாவம்
மறைத்தது.
சோசலிச ஜனநாயகம் சீர்குலைவுக்கு
உள்ளானது.
‘வல்லரசு’‘வளர்ந்த சோசலிசம்’‘துவக்க நிலை கம்யூனிசம்’ எனப் பேசிக் கொண்டிருந்த போதே,
கட்சியும் ஆட்சியும் மக்களிடம் இருந்து விலகி ஊழலுற்று
சீரழிந்தன.
மாவோ, ஒரு சோசலிச
நாடு எப்படி முதலாளித்துவம் நோக்கிச்
செல்லும் என்ற ஒரு சித்திரத்தைத்
தந்தார்.அவர் கூற்றுப்படி, சோசலிச
சமூகத்திற்குள்ளும் வர்க்கப் போராட்டம் உண்டு. முதலாளித்துவம் தன்னை
கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அமைப்பாக்கிக் கொள்கிறது. கட்சித் தலைமையிலிருந்தே முதலாளித்துவப்
பாதையாளர்கள் எழுகிறார்கள்.
பால் எம்.சுவீசி, சார்லஸ்
பெட்லஹீம், தோழர் மாவோ கருத்துக்கள்
நவம்பர்
1917 சோவியத் புரட்சிக்குப் பிறகு, வீழ்த்தப்பட்ட ஆளும்
வர்க்கங்கள் துணை கொண்டு நடந்த
சுற்றிவளைப்பு, தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு என்ற
பின்னணியில், சோவியத் ஒன்றியத்தால் அனைத்தும்
தழுவிய பொது உடைமை மற்றும்
மிகப் பெரும் வீச்செல்லை கொண்ட
மய்யப்படுத்தப்பட்ட திட்டமிடுதல் நோக்கிச் செல்ல முடியவில்லை. பெரும்தொழில்கள்,
வங்கிகள், ரெயில்வே போன்றவை மட்டுமே அரசு
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன.துவக்க
நிலை, குறைந்த வீச்செல்லை கொண்ட
மய்யப்படுத்தப்பட்ட திட்டமிடல் மட்டுமே இருந்தது.
நாட்டுப்
பொருளாதாரத்தில் பெரும் பகுதி, விவசாயிகள்,
சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் தனியார் வர்த்தகர்களிடமே
இருந்தது. மதிப்பு விதி அடிப்படையிலான
பண்ட உற்பத்தியே மேலோங்கி இருந்தது. இந்த பண்ட உற்பத்தியை
அடக்குவதற்கு மாறாக, மக்கள் பிழைத்திருக்க வேண்டுமென்பதற்காக, அதனை ஊக்கப்படுத்தி, விரிவுபடுத்த
வேண்டியிருந்தது.
சோவியத்
மீது ஏகாதிபத்திய நாடுகளும் தோல்வி அடைந்த உள்நாட்டு
பிற்போக்காளர் களும் கிட்டத்தட்ட நான்காண்டுகள்
போர் தொடுத்தனர். சோசலிச புரட்சி, வளர்ச்சி
பெற்ற முதலாளித்துவ நாட்டில் நடக்காமல் மிகவும் பின்தங்கிய முதலாளித்துவ
நாட்டிலேயே நடந்தது, இங்கு பாட்டாளிகள் எண்ணிக்கையும்
குறைவு என்ற பின்னணியில் சோவியத்
யூனியனின் துவக்க கட்ட நடவடிக்கைகளைக்
காண வேண்டி உள்ளது.
சோவியத்
புரட்சிக்கு நேர்ந்த, மற்றொரு மாபெரும் துயரமும்,
கணக்கில் கொள்ளப்பட வேண்டும். 1905, 1917 புரட்சிகளைக் கண்ட, வழிநடத்திய, ஏறத்தாழ
20, 25 ஆண்டுகள் பாட்டாளி வர்க்க அரசியல் போராட்ட
அனுபவம் கொண்ட, பாட்டாளி வர்க்க
முன்னோடி கள், லட்சக்கணக்கில் போர்
முனையில் கொல்லப்பட்டனர். கட்சியால் தொழிற்சங்க, பிற நிர்வாகப் பணிகளுக்கு
அனுப்பப்பட்டனர். பஞ்சம் அச்சுறுத்த, தொழில்துறை
தகர்ந்து விட, அவர்கள் நகரங்களை
விட்டு பெரும் எண்ணிக்கையில் வெளியேறினர்.
அந்த அச்சு அசல் பாட்டாளி
வர்க்க முன்னோடிகள் அழிந்து போயினர். அல்லது
சிதறடிக்கப்பட்டனர். அய்சக் டூட்சர் எழுதியது
கவனிக்கத்தக்க விசயம்: ‘பழைய, சுயசார்புள்ள, வர்க்க
உணர்வுள்ள தொழிலாளர் வர்க்க இயக்கம், தனது
பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுடன், தொழிற்
சங்கங்களுடன், கூட்டுறவு சங்கங்களுடன், கல்விக் கழகங்களுடன், உரத்த
உணர்ச்சிமய விவாதங்களால், அரசியல் நடவடிக்கையால் துடிப்பு
கொண்டதாக இருந்தது. அது வெறும் கூடானது’.
சிறிய எண்ணிக்கையிலான ஆலை பாட்டாளி வர்க்கம்,
புரட்சிகரமான கட்சியின் தலைமையின் கீழ், சரியான தந்திரங்களுடன்,
நவம்பர் 17 புரட்சியில் முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்தி அதிகாரத்திற்கு வந்தது. 1913ல் 1 கோடியே 10 லட்சம்
என இருந்த தொழிலாளர் வர்க்க
எண்ணிக்கை, 1922ல் 13.6 கோடி மக்கள்
தொகையில், தொழில்துறை பாட்டா ளிகள் 20 லட்சம்
பேர் எனக் குறைந்தது. விவசாயிகளும்
குட்டி முதலாளித்துவத்தினரும் நிறைந்த நாட்டில், வழிநடத்திய
போல்ஷ்விக் கட்சியின், அனுபவம் நிறைந்த பாட்டாளி
வர்க்க அடித்தளம் சுருங்கிப் போகவே செய்தது. 1918க்குப்
பிறகு கட்சியில் சேர்ந்த மென்ஷ்விக்குகளில் 99% பேரை, 1,70,000 பேரை,
அதாவது கட்சியின் 25% உறுப்பினர்களை, கட்சி 1921ல் வெளியேற்றியது.
அக்டோபர்
24, 1891ல் ஏங்கெல்ஸ் பெபலுக்கு, ஜெர்மனியில் அதிகாரத்திற்கு வருவது தொடர்பாக எழுதினார்:
‘சரியான நேரத்துக்கு முன்பாகவே, போர் நம்மை அதிகாரத்திற்குக்
கொண்டுவந்தால், தொழில்நுட்பவியலாளர்களே நமது முதன்மை எதிரிகளாக
இருப்பார்கள். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அவர்கள் நம்மை ஏமாற்றுவார்கள்,
நமக்கு துரோகம் செய்வார்கள். நாம்
அவர்களுக்கு எதிராக பயங்கரத்தை ஏவ
வேண்டும்.அப்போதும் வஞ்சிக்கப்படுவோம்’. புரட்சி
முடிந்த சோவியத் ஒன்றியத்தின் இராணுவத்தில்,
உற்பத்தியில், நிர்வாகத்தில், சில பத்து லட்சம்
(மில்லியன்) தொழில்நுட்பவியலாளர்கள் இருந்தனர். கட்சிக்கு உள்ளும் புறமும் 1917லிருந்து
1921 வரை இத்தகைய நிலைமைகள் இருந்தன.
1922 - 1928, சோவியத்
சமூகம் நெடுக பேரார்வமும் துடிப்பும்
உற்சாகமும் நிலவிய காலம். கலை,
இலக்கியம், கல்வி, பாலியல் உறவுகள்,
சமூக விஞ்ஞானம் என எல்லா துறைகளிலும்
துடிப்பாற்றல் நிலவியது. அது, கோடானுகோடி மக்களைச்
சென்று சேர்ந்தது.
பின்னர்,
சோசலிசத்தை அடைய, திட்டமிட்ட பொருளாதாரம்
கொண்ட அரசுத் துறைக்கும், பண்ட
உற்பத்தி தனியார் துறைக்கும் இடையில்
கடும் போராட்டம் நடந்தது. விவசாயத்தில் கூட்டுப் பண்ணைகள், 1928 முதல் அய்ந்தாண்டுத் திட்டம்
துவங்கி, திட்டமிடுதல் ஆகியவை பெருமளவுக்கு நடக்க,
அரசு துறை தனியார்துறை மீது
வெற்றி கண்டது. பெரும் அளவுக்கு
உற்பத்தி சாதனங்களின் மீது பொது உடைமை
நிறுவப்பட்டது. நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் முதல் சோவியத் குடியரசு
உழைக்கும் மக்களுக்கு பெருமிதம் தந்தது.
இரண்டாம்
உலகப் போர் துவங்கும் முன்,
அரசியல் தலைமையின் முதன்மையான கடமை, சோசலிச பொருளாதாரத்தில்
அதிகபட்ச வளர்ச்சியை உறுதி செய்வதாகவே அமைந்தது.
அந்நிய முதலாளித்துவ சக்திகளை வீழ்த்த, கம்யூனிசம் நோக்கி முன்னேற, உற்பத்தியிலும்
நுகர்விலும் பிரம்மாண்டமான மாற்றம் கொண்டு வரும்
பொருளாயத அடிப்படையை நிறுவுவது என்பதே அழுத்தமாக அமைந்தது.
இந்தக் கடமைகளில் சோவியத் ஒன்றியம் பெரிய
வெற்றிகள் பெற்றது. இந்த காலகட்டத்தில், ஏகாதிபத்திய
நெருக்கடியின் மோசமான விளைவாக, இத்தாலி,
ஜெர்மனி, ஜப்பானில், ஆகப்பிற்போக்கான வலதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. ஜெர்மனி, சோவியத்
யூனியன் மீதான ஆபரேசன் பார்போசா
தாக்குதலுக்குப் பல ஆண்டுகளாக தயாராகி
வந்தது. ஜெர்மானிய உளவாளிகள், அய்ரோப்பா எங்கும் ஊடுருவினர். இந்த
கால கட்டத்தில், அந்நிய உளவாளிகளுக்கு எதிரான
போரில் சோவியத் ஒன்றியத்திலும் 1937, 1938 ஆண்டுகளில் சில
அத்துமீறல்கள் நடந்தன.
இரண்டாம்
உலகப் போரில், சோவியத் ஒன்றியத்தின்
பங்கை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அய்க்கிய அமெரிக்கா வின் ராணுவ தலைமை
தளபதி ஜார்ஜ் சி. மார்ஷல்,
தமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சருக்கு தந்த அறிக்கையில் குறிப்பிட்டார்:
‘ஜெர் மானிய ராணுவம் வோல்காவை,
சூயசை நெருங்கிய அந்த இருண்ட நாட்களை,
இந்த தலைமுறை அமெரிக்கர்களால் நினைவுபடுத்திக்
கொள்ள முடியும். அந்த நேரம், ஜெர்மனியும்
ஜப்பானும் மொத்த உலகத்தின் மீதான
முழுமையான கட்டுப்பாடு கொள்வதை நெருங்கியிருந்தனர். நேச
நாடுகள், எப்படி நூலிழையில் பிழைத்தன
என அறிந்துகொள்வது, இப்போதும் கடினமாகவே உள்ளது. அந்த நெருக்கடியான
நாட்களின் பேராபத்தை தவிர்த்ததற்கு, இந்த தேசம், தனது
மனச்சாட்சியில் கைவைத்துக் கொண்டு, எந்த உரிமையும்
கோர முடியாது. பிரிட்டிஷ் மற்றும் ரஷ்ய மக்கள்,
தோல்வி தவிர்க்க முடியாதது என நம்ப மறுத்தனர்.
அவர்கள் செயலே, மானுட சமூகம்
பிழைப்பதற்கான மகத்தான காரணமாக இருந்தது’.
அய்க்கிய
அமெரிக்காவை காட்டிலும் பிரிட்டன் கூடுதலாக பங்காற்றியது என்றாலும், அது, சோவியத் ஒன்றியம்போல்
பிரம்மாண்டமான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகவில்லை. சோவியத் மக்கள் தமது
நாட்டை, தமது அரசை, தமது
சோசலிச சமூகத்தைக் காக்க, அங்குலம் அங்குலமாய்
அனைத்துத் தியாகங்களும் செய்து போராடி வெற்றி
பெற்றனர். சோசலிச முகாம் ஒன்று
உருவானது.
அய்ந்தாண்டுத்
திட்ட சாதனைகள், மக்கள் வாழ்க்கைத் தரத்தை
மேம்படுத்துவது, ஹிட்லர் மீதான மகத்தான
வெற்றி, சீனத்துக்கு உதவுவது என்பவற்றோடு, பேரழிவுப்
போருக்குப் பிறகு, சோவியத் ஒன்றியம்
பொருளாதாரரீதியாக, மிக விரைவாகவே மீண்டு
எழுந்தது.
போருக்கு
முன்னும் போருக்குப் பின்னும்
மாபெரும்
தொழில்மயமாதல் மூலம், ஏகாதிபத்திய தாக்குதல்களை
எதிர்கொள்ளத் தயாரானபோது, பொருளாதாரமே ஆணையில் வைக்கப்பட்டதால், பொருளாதார
அரசியல் தளங்களில், அதிகாரத்துவம் பரவியது. சோவியத் அரசு, மக்களை
பிரதிநிதித்துப்படுத்துவது
மெல்ல மெல்ல மறைந்து, அதிகாரத்துவ
பிரிவினர் அனைத்துத் துறைகளிலும் வேரூன்றினர். அரசு தன்னை, பாட்டாளி
வர்க்க சோசலிச சர்வாதிகாரம் என
அழைத்துக் கொண்டாலும், அதிகாரம் பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் இல்லை. அதிகாரத்துவ
மேட்டுக்குடியினர் கைகளிலேயே குவிந்தது.
புதிதாக
முதலாளித்துவம் நோக்கிய ஒரு பிரிவினர்
உருவாவதும் சந்தை விரிவடைவதும் அக்கம்பக்கமாய்
நடந்தன. அதிகாரத்துவ ஆளும் பிரிவு உறுதிப்பட்டது.
அதனோடு கூடவும், அதன் விளைவாகவும், மக்கள்,
அரசியல் அகற்றுதலுக்கு ஆளானார்கள்.
புரட்சிகர
உற்சாகமும் வெகுமக்கள் பங்கேற்பும் இல்லாததால், மத்தியத்துவப்படுத்தப் பட்ட திட்டமிடுதல், இறுக்கமும்
அதிகாரத்துவமும் நிறைந்ததாக மாறியது. பலதரப்பட்ட பொருளாதார சிரமங்களும் தோல்விகளும் தலை தூக்கின. ஆள்வோர்,
முதலாளித்துவ தொழில்நுட்ப அணுகுமுறைகளையே, தீர்வுக்கு தேர்வு செய்தனர். பொருளாதார
நிறுவனங்களின் நிர்வாகங்களிடம், மேலும் மேலும் கூடு
தல் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. வழிகாட் டுதலுக்கும் கட்டுப்பாட்டுக்கும்,
மய்யப்படுத்தப்பட்ட திட்டமிடுதலை சார்ந்திருப்பதற்கு பதிலாக, சந்தை நிர்ப்பந்தங்களே
கூடுதல் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டது. உற்பத்தி
சாதனங்கள் மீது பொதுவுடைமை,
சம்பிரதாய அரசு உடைமையாக நிலவியபோதும்,
சாராம்சத்தில் முதலாளித்துவம் நோக்கி நகர்ந்தவர்களே அதிகாரத்தில்
இருந்தனர்.
குருஷ்சேவ்,
பிரெஷ்னெவ் காலங்களில் தீவிரமடைந்த முதலாளித்துவமயமாதல் தோழர் ஸ்டாலின் காலத்திலேயே,
வேர் விடத் துவங்கியது. உற்பத்தி
சாதனங்களில் தனி உடைமை இல்லை
என்றான பிறகு, எங்கே வர்க்கங்கள்,
எங்கே வர்க்கப் போராட்டம் என்று கேட்பதுபோல், தோழர்
ஸ்டாலினின் அணுகுமுறை இருந்தது என்றார் மாவோ. சோவியத்
ஒன்றியத்தில் வாசனை மலர்கள் மட்டுமே
மலர்வதாக தோழர் ஸ்டாலின் நம்பியதால்,
நச்சுக் கொடிகள் பரவிப் படர்வதை
அவரால் காண முடியாமல் போனது.
1936ல் சோவியத்துகளின் ஏழாவது காங்கிரசில் தோழர்
ஸ்டாலின் சொன்னார்: ‘தொழில்துறையில் முதலாளித்துவம் இனி இல்லை. விவசாயத்
துறையில் குலக் வர்க்கம் இனி
இல்லை. வர்த்தகத் துறையில் வணிகர்களும் லாபம் குவிப்போரும் இனி
இல்லை. ஆக, எல்லா சுரண்டும்
வர்க்கங்களும் ஒழிக்கப்பட்டுவிட்டன’. இந்த
இயக்க மறுப்பியல் பார்வை, இயல்பாக மேலெழுந்த
பல முரண்பாடுகளையும் பகை முரண்பாடுகளாக காண
வைத்தது. பகை முரண்பாடு, நட்பு
முரண்பாடு ஆகியவற்றை கையாள்வதில் வேறு வேறு அணுகுமுறைகள்
மேற்கொள்ளப்படவில்லை.
முதலாளித்துவ
மீட்சியைப் பலப்படுத்த ஒரு வழியும் அதனை
எதிர்த்துப் போராட ஒரு வழியும்
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி முன் இருந்தது.
கூடுதல் சமத்துவம், அதிகாரத்துவத்துக்கு குறைவான முன்னுரிமைகள், அதிகாரத்துவப்
பிரிவினரை பலவீனப்படுத்துவது, மக்கள் மீது கூடுதல்
நம்பிக்கை, மக்களை அரசியல்படுத்துவது, தொழிலாளர்களிடம்,
மக்களிடம் அதிகரித்த முன்முயற்சிகளை ஒப்படைப்பது என்ற சரியான வழி
தேர்வு செய்யப்படவில்லை. கூடுதல் திறன் கொண்ட,
‘சோசலிசப் பொருளாதாரம்’ நிறுவ, பொருளாதாரத்தில், கூடுதல்
லாபம் ஈட்டும் சந்தை முறைகளுக்கு
அழுத்தம் வைப்பது, தொழிலாளர்களிடம், நீங்கள் நிறைய நுகர
வேண்டுமானால், இன்னும் கடுமையாக உழையுங்கள்
என உபதேசம் செய்வது என்ற
முதலாளித்துவ பயணப் பாதையே பலப்பட்டது.
குருஷ்சேவ்,
பிரெஷ்னெவ் வழியாக கோர்ப்பசேவ் வரை
தோழர் ஸ்டாலின் 05.03.1953ல் மரணம் அடைந்தார்.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளராக இருந்த
குருஷ்சேவ், கட்சியின் 20ஆவது காங்கிரசின்போது, பிப்ரவரி
24 - 25, 1956ல், ஸ்டாலினின் தனிநபர் வழிபாடு கலாச்சாரமே
சோவியத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்
என்றார். தோழர் ஸ்டாலினை முற்றிலுமாக
மறுதலித்து, திரிபுவாத வெள்ளம் அணை உடைத்து
கட்சிக்குள் பெருக்கெடுத்து ஓட வழியமைத்தார். ஏகாதிபத்தியத்திடம்
சமாதான சகவாழ்வு காணப் புறப்பட்டு பாட்டாளி
வர்க்க சர்வதேசியத்துக்கு விடை கொடுத்தார். உள்நாட்டில்
முதலாளித்துவ மீட்சி பலப்பட உந்துதல்
தந்தார்.
பிரெஷ்னெவ்
காலத்தில் சோவியத் பொருளாதாரம் தேங்கிப்
பின்தங்கியது. ஏகாதிபத்தியத்துக்கும் சோசலிச முகாமுக்கும் இடையிலான
முரண்பாடே சர்வதேச முரண்பாடுகளில் முதன்மையானது
என முன்னிறுத்தி உலக கம்யூனிச இயக்கத்துக்கு
ஊறு விளைவிக்கப்பட்டது. முழுச்சுற்று முதலாளித்துவ மீட்சி முடிந்த இந்த
காலத்தில்தான் ஆப்கன் தலையீட்டால் சோசலிச
முகாமின் முடிவு துவக்கி வைக்கப்பட்டது.கோர்ப்பசேவ், குதிரை லாயத்தை விட்டு
ஓடியபின் கதவை பூட்ட முயன்றார்.
ஏகாதிபத்தியத்திடம் பரிதாபமாகச் சரணடைந்தார். நேரடியாக முதலாளித்துவ ஆட்சியை பிரகடனம் செய்த
யெல்ட்சினுக்கு கோர்ப்பசேவே வழியமைத்துத் தந்தார்.
சீனம்
புரட்சிகர
கம்யூனிஸ்டுகள் நிறுவிய சோசலிச அடித்தளம்
மீது உருவான பிரம்மாண்ட வளர்ச்சியால்
இன்றைய சீனா உலகின் இரண்டாவது
மிகப்பெரிய பொருளாதாரமாகியுள்ளது. அய்க்கிய அமெரிக்காவோடு உரசல்கள் கொண்ட தேசியம், பல்துருவ
உலகுக்கு உதவுவது ஆகியவையே இன்றைய
சீனத்தின் சாதகமான பக்கங்கள். ஆனால்,
இன்றைய சீனத்தின் பொருளாதாரம் சர்வதேச மூலதனத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.
உலகின் ஆகக் கூடுதல் டாலர்
பில்லியனர்களால், பிரம்மாண்ட செல்வம் மற்றும் வருமான
ஏற்றத்தாழ்வுகளால், சோசலிச ஜனநாயகமின்மையால் சீனம்
குறிக்கப்படுகிறது.
இருபத்தியோராம்
நூற்றாண்டு ஆட்கொல்லி முதலாளித்துவத்தை அனைவரும் காண்கிறோம். முதலாளித்துவம் வீழட்டும், சோசலிசம்
வெல்லட்டும் என்ற முழக்கத்தில் நம்பிக்கை
உள்ளவர்கள், சோசலிச பரிசோதனைகளில் இருந்து
உரிய படிப்பினைகள் பெற்று, இருபத்தியோராம் நூற்றாண்டு
சோசலிசத்தை மேலானதாக கட்டி எழுப்ப தயாராவோம்.