COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, October 18, 2017

பணியாளர் முறைப்படுத்துதல் குழு

தமிழக அரசு தமிழக மக்களை இன்னுமொரு சுற்று வஞ்சிக்கத் தயாராகிறது

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு வந்தபோது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உயர்வு தந்தபோது எதிர்ப்பு தெரிவித்தது போல், சிலர் எதிர்ப்பு தெரிவித்தது துரதிர்ஷ்டவசமானது. தமிழ்நாட்டின் 12 லட்சம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஊழலில் திளைப்பதுபோல் இந்த எதிர்ப்பு சித்தரிக்கப் பார்க்கிறது. இந்த எதிர்ப்பு ஆளும்வர்க்க கருத்தையே பலப்படுத்தும்.

அரசு ஊழியர்களுக்கு அதிகம் செலவாகிறது என்று சொன்னதால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்ததால்தான் ஜெயலலிதா படுதோல்வி அடைந்தார். அதற்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தபோது, தொடர்வரிசை ஒடுக்குமுறை நடவடிக்கைகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்கள் மீது ஏவியபோதும், மக்கள் நலப்பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் ஆகியோரை வீட்டுக்கு அனுப்பியபோதும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் என்று அரசுப் பணிகளுக்கு ஆட்கள் அமர்த்தியபோதும், அரசு ஊழியர்களின் பணிச்சுமைக்கு தீர்வு காணாமல் கூடுதல் பணிச்சுமையை ஏற்றியபோதும், கடைசி வரை அவர்கள் ஊதியத்தில் கை வைக்கவில்லை. 12 லட்சம் அரசு ஊழியர்கள்தான் இப்போது தமிழக சாமான்ய மக்களுக்கு கிடைக்கிற அற்பசொற்ப சேவைகளையாவது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே, ஒரு சான்றிதழ் வேண்டுமானாலும் கையூட்டு கொடுத்து வாங்கும் நிலையில்தான் உள்ளனர். பிரச்சனை, அரசு ஊழியர்கள் அல்ல, ஊழல் ஆட்சியும் அமைச்சர்களும் அதிகாரிகளும்தான்.
அவர்களுக்கு இரண்டரை மடங்கு ஊதிய உயர்வு, ரூ.2.25 லட்சம் வரை அதிகபட்ச ஊதியம் என்று சொல்லப்படுகிறது. இரண்டும் உண்மைதான். இரண்டரை மடங்கு ஊதியம் என்றாலும் அலுவலக உதவியாளர் முன்னர் பெற்றதைவிட ரூ.4,900 கூடுதலாகப் பெறுவார். பத்தாண்டுகளுக்குப் பிறகு வரும் ஊதிய உயர்வில் இந்த உயர்வு ஒரு தொகையா? இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதில் மாற்றம் வரும். அந்த ரூ.2.25 லட்சம் ஊதியத்தை, ஏற்கனவே பல்வேறு சலுகைகள் பெறும் உயரதிகாரிகள் பெற்றுச் செல்வார்கள். இடைநிலை, கடைநிலை ஊழியர்கள் அதிகபட்சம் ரூ.10,050 உயர்வு பெறுவார்கள்.
அரசுப் பணிகளில் காலியாக உள்ள 5 லட்சம் இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெற்றுக்கொண்டு சலுகைகள், உரிமைகள் எதுவும் இல்லாமல் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தப்படும் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நிரந்தரம் பெற வேண்டும் என்ற குரல் ஒலிக்க வேண்டிய நேரத்தில், காலதாமதமாக, 21 மாதங்கள் பாக்கிகளை தராமல் வழங்கப்படவுள்ள ஊதிய உயர்வு பற்றி கேள்வி எழுப்புவது தமிழக மக்களுக்கு எதிராக கேள்வி எழுப்புவதாக அமையும்.
ஊதிய உயர்வு அறிவித்த பழனிச்சாமி அரசு, பணியாளர் முறைப்படுத்துதலுக்கான குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழு அரசுப் பணியிடங்களில் தேவையில்லாத இடங்கள் எவை என்று ஆய்வு செய்து அந்த இடங்களை நீக்கும். அதாவது அரசு வேலை வாய்ப்பு வெட்டப்படும். அரசு வேலை வாய்ப்பு வெட்டப்படும் என்றால் மக்களுக்கு தரப்படும் சேவைகள் பாதிக்கப்படும். இப்படிச் செய்யும்போது, அரசு வேலைவாய்ப்பு குறைந்து, அரசு ஊழியர் ஊதியத்துக்கு இவ்வளவு செலவு தேவையா என்று இன்று குய்யோ முறையோ என்று கத்துகிறார்களே, அந்த செலவு கணிசமாக குறைந்துபோகும். ஓய்வு பெறுபவர்கள் இடங்கள் நிரப்பப்படாமல் ஒப்பந்த ஊழியர்கள் குறைவான ஊதியத்துக்கு பணிக்கமர்த்தப்படுவார்கள். அந்த வேலைகள் அயல்பணிக்கும் விடப்படலாம். மொத்தத்தில் அரசு மக்களுக்குத் தரும் சேவைகள் குறைக்கப்படும். தொடர்ந்து, அந்தச் சேவைகளின் தரமும் குறைக்கப்படும்.
உண்மையில் தமிழக அரசு, தமிழக மக்களை இன்னுமொரு சுற்று வஞ்சிக்கத் தயாராகிறது. மாநில உரிமைகள் ஏற்கனவே பறிபோய் கொண்டிருக்கும் நேரத்தில், மாநில அரசே மக்கள் மீது போர் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருப்பதாகவே இந்த நடவடிக்கை உள்ளது.

Search