கொரோனா கால கல்வி
வே.சீதா
கொரோனா என்ற பேரிடர் நாட்டையும், மக்களையும் அனைத்து வகையிலும் புரட்டிப் போட்டுவிட்டது. நாட்டின் அனைத்து பிரிவு மக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டனர்.
கல்வியை காசுக்கு விற்றுக் கொண்டிருக்கும் பெருமுதலாளிகள், அரசியல்வாதிகள் என வசதி படைத்தோர் நடத்துகின்ற பள்ளிகள் ஆன்லைன் கல்வி முறை என்ற ஒன்றை கையிலெடுத்தனர். அது எந்த அளவிற்கு முழுமையாக மாணவர்களிடம் சென்று சேரும் என்பதையெல்லாம் தாண்டி அதில் மாணவர்கள் பங்கேற்கவும் வைக்கப்பட்டனர். அதன் வீச்சு அரசு பள்ளிகளுக்கும் தொடர்ந்தது. கல்வி வியாபாரிகள் நடத்தும் பள்ளிகளில், பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களின் குழந்தைகள் படிக்கவே பெருமளவு வாய்ப்புண்டு. ஏழை எளிய மக்கள் அரசு பள்ளிகளையே நம்பியுள்ளனர். அரசு பள்ளிகளின் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை கையாளும் அளவிற்கு பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே, ஆன்லைன் வகுப்புகள் எப்போதும் தனியார் பள்ளிகளுக்கு உகந்தவையாகவே இருந்தன.
தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அதற்கான செலவுகளை சகித்துக் கொள்ளவும் முடிந்தது.
ஆன்லைன் வகுப்புகளில் எல்லாத்தரப்பு மாணவர்களும் பங்கேற்கவில்லை, அதற்கான வாய்ப்புகளும் இல்லை என்று யுனேஸ்கோ மற்றும் யூனிசெப் ஆய்வுகள் சொல்கின்றன. அப்படியானால் கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலமாக கல்வி மிகச் சிலரைத் தவிர பலரைச் சென்று சேரவில்லை. ஆனால் எந்த தனியார் கல்வி நிறுவனங்களும் கல்விக் கட்டணத்தை குறைத்ததாகவோ அல்லது வசூலிக்காமல் இருந்ததாகவோ தகவல்கள் இல்லை. அரசின் உத்தரவுகளையும் மீறி கல்வி கட்டணம் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 30 மாதங்கள் முடங்கிக் கிடந்த மாணவர்களின் கல்வி, ஆன்லைன் வகுப்பு என ஒரு மாற்று முயற்சியை கொண்டு வந்து மாணவர்கள் மீது திணித்தாலும் கூட அதில் மாணவர்களும் பெற்றோர்களும் மிகப் பெரும் அளவிற்கு பாதிக்கப்படவே செய்தனர். யுனெஸ்கோ, யூனிசெப் ஆய்வறிக்கையின் படி ஆன்லைன் வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 2 எம்பி வேக அளவிற்கு இணையதள வசதி தேவைப்படுகிறது. அதிலும் நாளொன்றுக்கு செல்போன் நிறுவனங்கள் டேட்டாவாக தரும் அதிகபட்ச அளவை தாண்டி உபயோகிக்க முடியாது. எனவே அற்றைய அளவு எம்பி முடிந்து விட்டால் அத்துடன் அந்த ஆன்லைன் வகுப்பு இடைநிறுத்தம் ஆகும். நேரடி கல்வி முறைகளில் மாணவர்களுக்கு புரிந்துகொள்வதில் சிரமங்கள் இருப்பதற்கு அனைத்து வாய்ப்புகளும் இருக்கையில், இதுபோன்று இடைநிறுத்தம் எவ்வாறு மாணவர்களின் கற்றலை முழுமைபடுத்தும் என்ற கேள்வி இயல்பாக எழுத்தால் செய்கிறது. மேலும் இந்த ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதற்காக மாதாந்திர டேட்டா செலவாக குறைந்தபட்சம் 500 முதல் 700 வரை ஆகலாம். நாட்டின் இன்றைய சூழலில் ஒருநாளில் ரூ.32க்கு குறைவாகவே 22 கோடி பேரால் செலவு செய்ய முடிகிறது. ஆன்லைன் வகுப்புகளுக்கான டேட்டா சேவையை பெற இந்த வகைப்பட்ட மக்களால் எப்படி செலவு செய்ய முடியும்? ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் அளவிற்கு தகுதியான, தரமான செல்போனை வாங்க குறைந்தபட்சம் ரூ.10,000 செலவிட வேண்டும். நாளொன்றுக்கு ரூ.32 ரூபாய்க்கு குறைந்த அளவே செலவிட முடிகின்ற வருமானம் கொண்ட மக்களால் இவ்வளவு பெரும் தொகையை மொத்தமாக கொண்டு செல் போன் வாங்குவது எப்படி சாத்தியமாகும்?
நாடெங்கும் பரவி கிடக்கின்ற மக்கள், மலையடிவாரங்கள், மலைப்பிரதேசங்கள் போன்றவற்றில் வசிக்கத்தான் செய்கின்றனர். இன்னும் பல மலைவாழ் கிராமங்களுக்கு மின் வசதிகள் கூட கிடையாது. யூனிசெப், யுனெஸ்கோ ஆய்வுகளின் அடிப்படையில் கணக்கிட்டால், கிட்டத்தட்ட 35 கோடி பேருக்கு டிஜிட்டல் தொடர்பே கிடையாது. டிஜிட்டல் தொடர்பே இல்லாத இடங்களுக்கு டேட்டா சேவைகள் மூலம் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகள் எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியானதே. ஓரளவிற்கு மேம்பட்ட பொருளாதாரத்தில் வாழ்க்கையும், டிஜிட்டல் சேவைகளுக்கு மிக அருகில் வாழும் நகர்ப்புற மாணவர்களில் 24% பேருக்கு மட்டுமே ஆன்லைன் கல்வி என்பது சாத்தியமாகியுள்ளது. கிராமப்புறங்களில் வெறும் 8% மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற முடிந்துள்ளது. யுனெஸ்கோ, யூனிசெப் ஆய்வறிக்கையின்படி, கிராமப்புறங்களில் 37% மாணவர்கள், நகர்ப்புறங்களில் 19% மாணவர்கள் கல்வி கற்பதற்கான சூழல் இல்லாமல் படிப்பை விட்டு வெளியேறிவிட்டனர். இதன் வெளிப்பாடு நகர்ப்புறங்களிலும் ஆன்லைன் கல்விகள் மாணவர்களை முழுமையாக சென்றடையவில்லை என்பதை தெரிவிக்கின்றன.
ஆன்லைன் வகுப்புகளால் பெரும்பாலான மாணவர்களிடம் கல்வியை கொண்டு சேர்க்க முடியவில்லை என்பதற்கான விபரங்கள் பின்வருமாறு:
மூன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள நகர்ப்புற மாணவர்கள் சில எழுத்துகள் தாண்டி படிக்க முடியாதவர்கள் 35% பேர். இதே வகுப்புகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் சில எழுத்துகள் தாண்டி படிக்க முடியாதவர்கள் 42% பேர்.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் சில எழுத்துகள் தாண்டி படிக்க முடியாதவர்கள் நகர்ப்புறங்களில் 12%. கிராமப்புறங்களில் 13%.
16 முதல் 18 வயதுள்ள மாணவர்களின் கல்வியும் மிகப் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 80% மாணவர்கள் கல்வி கற்பதை விட்டு வெளியேறி வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டதாக தரவுகள் உள்ளன.
சுமார் 2 கோடி மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாறுவதாகவும், கணித மற்றும் அறிவியல் கல்வி பலத்த அடி வாங்கி உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆகஸ்ட் 2021 எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சில சொற்களுக்கு மேல் படிக்க இயலவில்லை என்பதே எதார்த்தம்.
நாடெங்கிலும் ஒரு லட்சம் பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் இருக்கிறார். மொத்தமுள்ள 15,50,000 பள்ளிகளில், 11 லட்சத்து 16 ஆயிரத்து 846 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், இதில் 69% கிராமப்புறங்களில் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் யுனெஸ்கோ ஆய்வறிக்கை சொல்கிறது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒய்.வி.சந்திரசூட், வி.வி.நாகரத்தினம் அமர்வம் பெருந்தொற்று காலத்தில், கல்வி கற்பதில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் பிளவு, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு, அவர்கள் மின்னணு சாதனங்களை வாங்க முடியாததால் கல்வி உரிமை மறுக்கப்படுவதை பற்றி குறிப்பிட்டுள்ளது. இந்த நாட்டின் எதிர்காலமாகிய, இளம் குழந்தைகளின் தேவைகளை புறக்கணிக்க முடியாது. பொருளாதார வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு மாறாக, அவர்களுக்கு கல்விக்கான வாய்ப்பு இருக்க ஏதாவது தீர்வு காணப்படவேண்டும். இது ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பாகும் என சொல்லியுள்ளது.
நாடு முழுக்க ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மாணவர்களின் கல்வியை மிகப் பெரும் அளவிற்கு பின்னோக்கி இழுத்துள்ளது என்பது மறுக்க முடியாததே! ஆன்லைன் வகுப்புகள் நேரடி கல்வி போல் மாணவர்களிடம் கல்வியை, பாடங்களை கொண்டு சேர்க்க முடியவில்லை. நேரடி கல்வியில் சற்று புரிந்து கொள்ளும் திறனில் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை ஆன்லைன் வகுப்புகள் பெருமளவுக்கு பாதித்துள்ளது. நேரடி கல்வியின் மூலம், மாணவர்களின் நேரடி உரையாடல் மூலம், மாணவர்களின் தேவையை உணர்ந்து, அவர்களின் கேள்விகளை புரிந்து ஆசிரியரால் தீர்க்கவோ, தெளிவுறவோ செய்ய முடியும். ஆனால் ஆன்லைன் வகுப்புகளில் இது மாதிரியான வாய்ப்புகள் இல்லாமல் போனதும் மேலும் ஆன்லைன் வகுப்புக்கான உபகரணங்கள், டேட்டாவை பெறுவதற்கான வசதிகள் என சாதாரண குடும்பங்களில் பூர்த்தி செய்து கொள்ள முடியாத சூழலும், பெருமளவிற்கு மாணவர்களுக்கும் கல்விக்குமான இடைவெளி அதிகரிக்க காரணமானது. பேரிடர் காலம் மாணவர்களுக்கும் கல்விக்கும் இடையே ஒரு பெரிய இடை வெளியை உருவாக்கி உள்ளது. பின்னோக்கி இழுக்கப்பட்டுள்ள மாணவர்களின் கல்வியில், அரசு சிறப்பு கவனம் செலுத்துவது இன்றியமையாதது. கூடுதல் ஆசிரியர்களை நியமித்து, காலிப்பணியிடங்களை நிரப்பி, கல்விக்கூடங்களை மேம்படுத்த, கற்றல் திறனை அதிகரிக்க அரசு ஆவண செய்ய வேண்டும். தனியார் கல்விக் கூடங்களிலிருந்து அரசு பள்ளிக்கூடங்களை நோக்கி மாணவர்கள் வருவதை கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த கவனத்தையும் கல்விக் கூடங்களில் குவித்து, தரமான கல்வி மாணவர்களை சென்றடைய செய்திட வேண்டும்.
நாடு முழுக்க கொரோனாவை கையாளுவதில் இயலாமையை வெளிப்படுத்தியது போல அல்லாமல், மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க, பாதிக்கப்பட்ட, கல்வி கற்பதை விட்டு வெளியேறிய மாணவர்கள் வரை கல்வியை கொண்டு சேர்ப்பதற்கு அரசு முழு கவனம் செலுத்தினாலொழிய கல்வியை மீட்டெடுக்க முடியாது. கொரோனா கால கல்வி முறை கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சாடியுள்ளது. மாணவர்களின் கல்வியை மீட்க தேவையான திட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, மாணவர்களின் வாழ்வாதாரமான கல்வி மீட்டெடுக்கபடவேண்டும். மாணவர்களின் கல்வி மற்றும் கற்றல் திறனை எப்பாடு பட்டாவது உயர்த்தி ஆகவேண்டும்.