மக்கள் விரோத, தேசவிரோத மோடி அரசே, பதவி விலகு!
தமிழக அரசே,தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று!
செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 28 வரை கோவை முதல் திருபெரும்புதூர் வரை
பரப்புரை பயணம்
தலைமை: எஸ்.குமாரசாமி
தொகுப்பு: ஜெயபிரகாஷ்நாராயணன்
மோடி அரசே பதவி விலகு, தமிழ்நாடு அரசே தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்று என்ற முழக்கங்களோடு கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் வெகுமக்கள் அமைப்புகளான இடது தொழிற்சங்க மய்யம், மக்களுக்கான இளைஞர்கள், மக்களுக்கான மாணவர்கள், பெண்கள் அதிகாரம், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் பகத்சிங் பிறந்த நாளான செப்டம்பர் 28 வரை கோயமுத்தூர் முதல் திருபெரும்புதூர் வரை பரப்புரை பயணம் மேற்கொண்டன.
செப்டம்பர் 17, கோவை
கம்யூனிஸ்ட் கட்சியின் பரப்புரை பயணத்தின் துவக்க நிகழ்ச்சியாக செப்டம்பர் 17 பெரியார் பிறந்த தினத்தில் பரப்புரை வாகனம் பெரியநாயக்கன்பாளையம் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தோழர்கள் அவரவர் வாகனங்கள் மற்றும் பேருந்து மூலம் அங்கே கூடினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமியுடன் எல்டியுசி பொதுச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ், மாநில நிர்வாகிகள் தோழர்கள் குருசாமி, ஜேபி, நடராஜன், மணிகண்டன், சாமிநாதன், எல்டியுசி ஈரோடு மாவட்டச் செயலாளர் தோழர் புகழேந்தி மற்றும் மாவட்ட முன்னணி தோழர்கள் சேர்ந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பின்னர் பெரியார் சிலைக்கு அருகில் உள்ள பரப்புரைப் பயணத்தின் துவக்க நிகழ்ச்சி தோழர் குருசாமி தலைமையில் நடந்தது. பரப்புரைப் பயணத்தை கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் குழுத் தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி துவக்கி வைத்து உரையாற்றினார்.
தோழர் எஸ்.குமாரசாமி ஆற்றிய துவக்க உரையில் இருந்து: 'கார்ப்பரேட் ஆதிக்கத்தை, சாதி ஆதிக்கத்தை, ஆணாதிக்கத்தை, மதவாத ஆதிக்கத்தை எதிர்த்திட பெரியாரின் கைத்தடியும் தொலைநோக்கு பார்வை கொண்ட அவரது கண்ணாடியும் இன்றும் தேவைப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே திமுக அரசின் கூட்டணி சங்கடத்தில் சிக்காமல் எதிர்க் கட்சி பாத்திரமாற்றுகிறது. ஆளும் திமுக தலைமையிலான அரசு, தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது'.
'பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் நாட்டு மக்களின் சமூக நீதிக்காகவே களமாடினார். திராவிடத்தையும் தமிழர் உணர்வையும் பிரித்து நிறுத்துவது, பேசுவது மதவாத சக்திகள் மேற்கு மண்டலத்தில் பலப்படுவதற்கே வழிவகுக்கும். சிவப்பும் கருப்பும் நீலமும் பச்சையும் ஓரணியில் நின்று மதவாதத்தை இந்த மண்ணில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும்'.
எல்டியுசி பொதுச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ் இறுதியாக பேசி கூட்டத்தை நிறைவு செய்தார். பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு பரப்புரை பயணக் குழு பெரியநாயக்கன்பாளையம் திரும்பியது.
இந்தியாவில் பல கிளைகளைக் கொண்டு பரந்து விரிந்து மிகப் பெரிய சாம்ராஜ்யமாக திகழும் அய்டிசி நிறுவனம் ஆகும். சிகரெட், பேப்பர் என பல்வேறு உற்பத்தியில் ஈடுபடும் இந்த நிறுவனத்தின் கிளைகளில் ஒன்றான அய்டிசி பிஎஸ்பிடி பிளான்ட் மேட்டுபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேக்கம்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வருகிறது.
இந்த பிளான்ட்டில் 166 நிரந்தர தொழிலாளர்கள் 26 பதிலி தொழிலாளர்கள் மற்றும் சுமார் 500 ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். ஏஅய்டியுசி, சிஅய்டியு, எல்பிஎஃப், ஏடிபி, டிஎம்டிகே, அய்என்டியுசி, அய்டிசி எம்பிளாய்ஸ் யூனியன், அய்டிசி எவர்கிரீன் எம்ப்ளாயீஸ் யூனியன் என்ற சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அய்டிசி எவர்கிரீன் எம்ப்ளாயீஸ் யூனியன் சங்கம் மட்டுமே பெரும்பான்மை சங்கமாக செயல்பட்டு வருகிறது.
பெரும்பான்மை சங்கமாக இருக்கும் அய்டிசி எவர்கிரீன் எம்ப்ளாயீஸ் யூனியன், எல்டியுசி தோழர்களுடன் நீண்ட காலமாகவே தொடர்பில் உள்ளது. 2012 வாக்கில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தபோது தோழர் எஸ்.குமாரசாமி அவர்களை கோவையில் சந்தித்து ஆலோசனை கோரினர். தோழர் எஸ்.குமாரசாமி அய்டிசி வாயில் கூட்டத்திற்கு சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினார். அய்டிசி நிர்வாகம் உடனடியாக அய்டிசி எவர்கிரீன் எம்ப்ளாயீஸ் யூனியனை அழைத்து ஒப்பந்தம் பேசி முடித்துக் கொண்டது. அதிலிருந்து வாய்ப்பு கிடைக்கும்போது தோழர் எஸ்.குமாரசாமி கோவை வரும்போது அவரை சந்திப்பது, கம்யூனிஸ்ட் பத்திரிகை சந்தா செலுத்துவது, தேர்தல் நிதி வழங்குவது என அந்தத் தொழிலாளர்கள் தொடர்பில் இருந்து வருகிறார்கள்.
இப்போது 01.07.2020 முதல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட வேண்டும். ஆனால் நிர்வாகம் ஒப்பந்தம் கையெழுத்தாகிற தேதியில் இருந்துதான் புதிய ஒப்பந்தம் அமலுக்கு வரும், ஒப்பந்த காலத்தை நீட்டிப்பது, ஆட்குறைப்பு என ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களைச் சொல்லி இழுத்தடித்து வருகிறது. பழைய ஒப்பந்தம் முடிந்த தேதியிலிருந்துதான் புதிய ஒப்பந்தம் போட வேண்டும், ஆட்குறைப்புக்கு ஒப்புக்கொள்ள முடியாது என சங்கம் விடாப்பிடியாக போராடி வருகிறது.
நிர்வாகம் இழுத்தடிப்பு செய்வதால் தோழர் எஸ்.குமாரசாமி வந்து பேசினால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று தொழிலாளர்கள் அழைத்ததன் பேரில், 17.09.2021 அன்று தோழர் எஸ்.குமாரசாமி பரப்புரை பயண துவக்க நிகழ்ச்சிக்கு கோவை வரும் தேதியில் வாயில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு சொல்லியிருந்தோம். அவர்களும் இரண்டு ஷிப்ட் தொழிலாளர்களும் சந்திக்கும் வகையில் மதியம் 2 மணிக்கு கூட்டம் ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆலை வாயிலுக்கு முன்பாக பரப்புரை வாகனம் சென்றது மழை குறுக்கிட்டதால் அய்டிசி ஆலை கார் ஸ்டாண்டிலேயே கூட்டம் துவங்கியது.
தோழர் எஸ்.குமாரசாமி, பேசிய போது கொரோனா காலத்தில் வெற்றிகரமாக செயல்படும் அய்டிசி நிறுவனம் சொல்கிற புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் அது தொழிலாளர்களின் சம்பள குறைப்புக்கு வழி வகுக்கும் என்றார். அய்டிசி நிறுவனம் மற்ற பிளாண்டுகளில் உள்ள புதிய ஒப்பந்தம் நடைமுறையை இந்த பிளாண்ட்க்கும் கொண்டு வர வேண்டும் என நிர்பந்திப்பது நியாயமற்றது, இங்குள்ள பிளான்ட் தனித்துவமானது. மூலப்பொருள் செலவு குறைவு, அதிக லாபம் கொடுக்கக் கூடியது. 60% முதல் 70% வரை மூலப்பொருட்கள் கழிவுகளில் இருந்து கிடைக்கிறது, இந்தத் துறையில் உள்ள போட்டி நிறுவனங்களான ஜேகே, இமாமி, டிஎன்பிஎல் போன்ற நிறுவனங்களின் சம்பளத்தோடு ஒப்பிடும்போது இங்கு சம்பளம் குறைவு என்று இங்குள்ள தொழிலாளர்கள் சொல்கிறார்கள், அப்படி இருக்கும்போது அய்டிசி நிர்வாகம் ஒப்பந்தத்தை இழுத்தடிப்பது நியாயமற்றது என்றார்.
சென்னையில் 3,500 தொழிலாளர்கள் வேலை செய்யும் நிசான் கார் தொழிற்சாலையில் 2019 முதல் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடிவடையாமல் இழுத்தடிக்கப்பட்டு, அங்குள்ள சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி ஒரு தீர்வு வேண்டும் என முறையீடு செய்தது; சென்னை நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி அவர்களை ஆர்பிட்ரேட்டராக நியமித்து விசாரணை நடைபெற்றது. முன்னாள் நீதிபதி ஜோதி மணி அவர்கள் 16.08.2021 அன்று ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார். 01.04.2019 முதல் மாதம் ரூ.10,000, 01.04.2020 முதல் ரூ.5,000, ஒப்பந்தம் பேசி முடிக்கும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அய்டிசியிலும் பழைய முறையில் ஒப்பந்தம் போடலாம், அடுத்த ஒப்பந்தம் போடும்போது பிராஸ்பெக்டிவ் ஒப்பந்தம் மட்டுமே போட வேண்டும் என நிர்வாகம் சொல்வது நியாயம் தானா என இருதரப்பும் நீதிமன்றத்தை அணுகி 6 மாதங்களில் தீர்வு தரச் சொல்லி கேட்கலாம், நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இரு தரப்பும் நடந்து கொள்ளலாம் என்ற யோசனையை தோழர் எஸ்.குமாரசாமி தெரிவித்தார்.
அப்போது மழையும் நின்றதால், தொழிலாளர்கள் முழக்கத்தோடு பரப்புரை குழுவையும் அழைத்துக் கொண்டு ஆலை வாயில் அருகே சென்றார்கள். கூட்டம் தொடர்ந்தது.
மாலை 5 மணிக்கு பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் பரப்புரை குழுவுக்கு கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கத்தின் சார்பில் வரவேற்பு தரப்பட்டது. கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கத்தின் தலைவர் தோழர் பி.நடராஜன் தலைமை ஏற்று நடத்திய கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சாமிநாதன், கம்யூனிஸ்ட் கட்சி கோவை மாவட்டச் செயலாளர் தோழர் குருசாமி, கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி உரையாற்றினர். தோழர் சக்திவேல் நன்றியுரை கூறினார்.
செப்டம்பர் 18, திருப்பூர்
18.09.2021 மதியம் 2 மணிக்கு பெரியநாயக்கன் பாளையம் அலுவலகத்திலிருந்து பரப்புரை வாகனம் புறப்பட்டது. பரப்புரை வாகனத்தோடு இன்னும் பெரிய ஒரு வாகனத்தில் திருப்பூருக்கு தோழர்கள் அணிவகுத்துச் சென்றனர். திருப்பூரில் ரயில் நிலையம் முன்புள்ள திருப்பூர் குமரன் சிலை அருகில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் மணிகண்டன் தலைமை ஏற்றார். தோழர்கள் ஜேபி, கோவிந்தராஜ் உரையாற்றினர். இறுதியாக தோழர் எஸ்.குமாரசாமி உரையாற்றினார்.
அன்று இரவு பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றங்கரையில் நாமக்கல் மாவட்ட தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த புத்துமாரியம்மன் கோவில் மண்டபத்தில் தங்கினோம்.
செப்டம்பர் 19, ஈரோடு
19.09.2021 காலை ஈரோடு நகரம் வீரப்பன் சத்திரத்தில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஈரோடு நகர பொறுப்பாளர் தோழர் சி.எம்.மணி தலைமை தாங்கினார். தோழர் எஸ்.குமாரசாமி உரையாற்றினார்.
அடுத்து ஈரோடு மாவட்டம் பவானியில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. கூட் டத்திற்கு பவானி பொறுப்பாளர் தோழர் கே.கே. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தோழர் எஸ்.குமாரசாமி நிறைவுரையாற்றினார்.
மதிய உணவு முடித்து பள்ளிபாளையம் மண்டபத்தில் சிறிது ஓய்வு எடுத்து விட்டு மாலை 4.30 மணிக்கு பரப்புரை குழு பெருந்துறை சென்றது. பெருந்துறை பொறுப்பாளர் தோழர் கே.சரவணமூர்த்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தோழர்கள் மோகன், குருசாமி, ஜேபி பேசினார்கள். தோழர் எஸ்.குமாரசாமி நிறைவுரையாற்ற அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இரவு பள்ளிபாளையம் மண்டபத்தில் தங்கினோம்.
செப்டம்பர் 20, நாமக்கல்
20.09.2021 காலை 10 மணிக்கு பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் பரப்புரை பயணம் துவங்கியது. கூட்டத்திற்கு எல்டியுசி நாமக்கல் மாவட்டத் தலைவர் தோழர் புகழேந்தி தலைமை தாங்கினார். தோழர் எஸ்.குமாரசாமி உரையுடன் கூட்டம் நிறைவுற்றது.
அடுத்ததாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம், வெப்படையில், வெப்படை பொறுப்பாளர் தோழர் டேவிட் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தோழர் எஸ்.குமாரசாமி உரையாற்றினார்.
பத்திரிகையாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் பிரிவில் பத்திரிகையாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு வந்ததைடுத்து பரப்புரை வாகனம் அந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்றது. பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக தோழர்கள் எஸ்.குமாரசாமி, கோவிந்தராஜ் உரையாற்றினர். தோழர் மோகனின் கண்டன முழக்கத்தை பத்திரிகையாளர்கள் வரவேற்றதுடன் மீண்டும் மீண்டும் முழக்கமிட வலியுறுத்தி மகிழ்ந்தனர். பத்திரிகையாளர்களின் வாழ்த்துக்களுடன் கூட்டம் நிறைவுற்றது.
மதிய உணவுக்கு பின்னர் பள்ளிபாளையம் மண்டபத்திற்கு வந்து சிறிது ஓய்வெடுத்துவிட்டு மாலையில் குமாரபாளையத்திற்கு பரப்புரை குழு சென்றது. குமாரபாளையம் கமிட்டி உறுப்பினர் தோழர் செல்வராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தோழர்கள் குருசாமி, சக்திவேல், மோகன் உரையாற்றினர். தோழர் எஸ்.குமாரசாமி நிறைவுரையாற்றினார்.
இரவு பள்ளிபாளையத்தில் பரப்புரை குழு தங்கியது. ஈரோடு, நாமக்கல் மாவட்ட பரப்புரை பயண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த முன்னணி தோழர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போதும் கடைசி நேரத்தில் திட்டமிட்டு 2 நாட்களில் 6 கூட்டங்களுக்கும், பரப்புரைக் குழு தங்குவதற்கும், உணவுக்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர். தோழர் மாரியப்பனின் உடல்நிலை சரியில்லாததால், அவரால் பரப்புரை பயணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.
செப்டம்பர் 21, சேலம்
21.09.2021 காலை 6 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு சேலம் கோஆப்டெக்ஸ் தங்க மாளிகைக்கு பரப்புரை குழுவினர் சென்றனர். காலை உணவிற்குப் பின் தங்க மாளிகை முன்பாக கோஆப்டெக்ஸ் விற்பனையாளர்கள் சங்கக் கொடியை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி ஏற்றினார். பரப்புரை குழுவினருக்கு கோஆப் டெக்ஸ் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் துண்டு அணிவிக்கப்பட்டது. வரவேற்பு வாயில் கூட்டம் கோஆப்டெக்ஸ் விற்பனையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தோழர் விஸ்வதநாதன் தலைமையில் நடந்தது. தோழர் விஸ்வநாதன் கோஆப்டெக்ஸ் ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றி பேசினார். பொருளாளர் தோழர் குமார் வரவேற்று பேசினார். இறுதியாக தோழர் எஸ்.குமாரசாமி உரையாற்றினார். பின்னர் கோஆப் டெக்ஸ் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு மதிய உணவிற்குப் பின்னர் பரப்புரை வாகனம் திருச்சி நோக்கி சென்றது.
செப்டம்பர் 21, திருச்சி
21.092021 மாலை திருச்சியில் மத்திய ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் வொர்க்கர்ஸ் வாய்ஸ் அமைப்பின் நெல் கொள்முதல் பிரிவிலுள்ள பருவகால தொழிலாளர்கள் வரவேற்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் தீனதயாளன் வரவேற்று பேசினார். எல்டியுசி மாநிலத் துணைத் தலைவர் தோழர் சண்முகவேல் தலைமையேற்று கூட்டத்தை நடத்தினார்.
கூட்டத்தில் பருவகால நெல் கொள்முதல் பணியாளர்களும் அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களும் கலந்து கொண்டனர். தோழர் எஸ்.குமாரசாமி உரையாற்றினார். மாலை 6 மணிக்கு அருண் ஹோட்டலில் பத்திரிகையாளர் கூட்டம் நடந்தது.
பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து மாலை சிற்றுண்டிக்கு பிறகு பரப்புரை வாகனம் திருவண்ணாமலை நோக்கி சென்றது. திருவண்ணாமலையில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த யாதவர் மண்டபத்திற்கு 22.09.2021 அதிகாலை 2 மணிக்குச் சென்றோம்.
செப்டம்பர் 22, திருவண்ணாமலை
22.09.2021 அன்று காலை 10.30 மணிக்கு திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பாக, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பரப்புரை குழுவினர் சென்றனர். கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக்குழு தலைவர் எஸ்.குமாரசாமி தலைமையிலான பரப்புரை குழுவினருக்கு தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் துண்டு அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பாக பணிநிரந்தரம் உட்பட பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், சமீபத்தில் அரசு அறிவித்துள்ள ரூ.500 சம்பள உயர்வு குறைவானது என்று கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் தோழர் முருகன் தலைமை தாங்கினார். முன்னணி நிர்வாகிகள் உரையாற்றினார்கள். சிறப்பு தலைவர் தோழர் கு.பாரதி, சிறப்புரையாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி வாழ்த்துரை வழங்கினார். மாநில பொதுச் செயலாளர் தோழர் குமார் பேசி கூட்டத்தை நிறைவு செய்தார்.
அக்டோபர் 2 அன்று தென்காசியில் நடைபெறும் மாநில செயற்குழுவில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யபடும் என அறிவிக்கப்பட்டது.
மதிய உணவுக்கு பின்னர் மாலை 5.30 மணிக்கு பரப்புரை குழுவினரிடையே, செப்டம்பர் 17 முதல் நடைபெற்று வரும் பயணங்கள் தொடர்பான கருத்துகள் மற்றும் செப்டம்பர் 28 வரையிலான பரப்புரை பயணத் திட்டங்கள் விவாதிக்கப்பட்டன.
இரவு திருவண்ணாமலையில் தங்கிவிட்டு 23.09.2021 மதியம் 1 மணிக்கு பரப்புரை வாகனம் செங்கல்பட்டு நோக்கி புறப்பட்டது.
செப்டம்பர் 23, செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகில் தலைநகர் மண்டல ஒருமைப்பாடு மன்ற தோழர்கள் பரப்புரை வாகனத்தை வரவேற்கத் தயாராக இருந்தனர். அங்கிருந்து கூட்டம் நடைபெறும் மறைமலைநகருக்கு 40 இருசக்கர வாகனங்களில் செங்கொடி அணிவகுப்புடன் பேரணியாக பரப்புரை வாகனத்தை வரவேற்று அழைத்துச் சென்றனர். தலைநகர் மண்டலத்திற்குள் பரப்புரை வாகனம் செங்கொடி அணிவகுப்புடன் நுழைந்தது.
மறைமலைநகரில் அமைந்துள்ள ஃபோர்டு கார் தொழிற்சாலை மூடப்படுவதற்கு எதிராக ஒருமைமைப்பாடு மன்றம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு பரப்புரை வாகனம் சென்றதும் அங்கிருந்த தொழிலாளர்கள் முழக்கமிட்டு வரவேற்றனர். ஒருமைப்பாடு மன்ற ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜகுரு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் சுரேஷ் (தலைவர், சென்னை ஃபோர்டு எம்பிளாயிஸ் யூனியன்), தோழர் அருண் (செயலாளர், சென்னை ஃபோர்டு எம்பிளாயிஸ் யூனியன்), தோழர் லட்சுமி நாராயணன் (துணைத் தலைவர் பிபிஜி ஏசியன் பெயிண்ட் தொழிலாளர் சங்கம்), தோழர் சின்னதம்பி (முன்னாள் பொதுச் செயலாளர், ஹ÷ண்டாய் (யுயுஎச்இ), தோழர் கார்த்திக் (மேக்னா கிளை சங்கம், எல்டியுசி), தோழர் அர்ஜுன் (துணைத் தலைவர், சான்மினா கிளை சங்கம், எல்டியுசி), தோழர் பாலாஜி கிருஷ்ணா (தலைவர், ரெனோ நிசான் இந்தியா தொழிலாளர் சங்கம்) ஆகியோர் சென்னை ஃபோர்டு ஆலை மூடுவதற்கு எதிராக கண்டன உரையாற்றினார்கள். இறுதியாக கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்றினார்.
தோழர் எஸ்.குமாரசாமி ஆற்றிய உரையில் இருந்து: 'தமிழ்நாட்டில் கருணாநிதி தொடங்கி ஜெயலலிதா, பழனிச்சாமி அனைவரும் முதலீட்டாளர்களுக்கு நிலம், மின்சாரம், வரிச் சலுகை என அனைத்தையும் தந்துவிட்டு, ஆட்டோ, ஆட்டோ காம்போனன்ட் தொழில் பொதுப் பயன்பாட்டு சேவை சட்டப் பிரிவில் கொண்டு வரப்படும் என்ற உறுதிமொழியையும் தந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுகிறார்கள்'.
'இதற்கு எதிராக கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு, நீதிபதி திரு.பார்த்திபன் முன்பு வழக்கு வந்தபோது, சங்கத்தின் தரப்பில், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பொதுப் பயன்பாடு சேவை எவை எவை என்பதை வரையறுத்துச் சொன்னதை எடுத்துச் சொன்னதை ஏற்றுக்கொண்டு, அவர் தடை உத்தரவு கொடுத்துள்ளார்'.
'இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டை முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாற்றப் போவதாக சொல்கிறார். அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும்போது தொழிலாளர்களுக்கு 58 வயது வரை பணி பாதுகாப்பு உத்தரவாதங்கள் போடப்பட வேண்டும். நேற்று நோக்கியா, ஃபாக்ஸ்கான் மூடப்பட்டன. இன்று ஃபோர்டு என்று தொடர அனுமதிக்க முடியாது. ஆலை மூடல் என்பது தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சனை ஆகும். ஃபோர்டு ஆலை மூடுவதற்கு எதிராக ஆனதெல்லாம் செய்வோம். ஒவ்வொருவரும் அனைவருக்குமாக நிற்போம். அனைவரும் ஒவ்வொருவருக்குமாக நிற்போம். திருபெரும்புதூரில் செப்டம்பர் 28 தொழிலாளர் ஒருமைப்பாடு மன்றத்தின் மாநாட்டில் அனைவரும் சந்திப்போம்'.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஃபோர்டு, ரெனோ நிசான், ஹ÷ண்டாய், சான்மினா, மேக்னா, பிபிஜி ஏசியன் பெயிண்ட், டென்னகோ, பின்ஸ்டார், கெனான், கட்ஃபாஸ்ட் ஆகிய ஆலைகளின் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்ததாக பரப்புரை வாகனம் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூருக்கு மாலை 6.30 மணிக்கு சென்றடைந்தது. வண்டலூரில் பரப்புரை பயண குழுவினருக்கு வரவேற்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காட்டாங்குளத்தூர் ஒன்றியச் செயலாளர் தோழர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
பரப்புரை பயணத்தை தலைமையேற்று நடத்தி வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோ சனைக் குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி, பரப்புரை பயணத்தில் இருக்கும் இடது தொழிற்சங்க மய்யத்தின் பொதுச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ், கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன் ஆகியோருக்கு துண்டு அணிவிக்கப்பட்டது.
வண்டலூர், தையூர் ஊராட்சித் தேர்தல் களில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட் டியிடும் வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரி வித்து, பரப்புரை பயண கோரிக்கைகளை விளக்கி தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற் றினார். முன்னதாக, திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், செங்கல் பட்டு மாவட்ட இடது தொழிற்சங்க மய்யத் தின் தலைவர் தோழர் கோபால் ஆகியோர் உரையாற்றினர்.
வண்டலூர் கூட்டம் முடிந்து, பரப்புரை வாகனம் அம்பத்தூர் தோழர் கூடம் சென்றது. தோழர் கூடத்தில் பயணக் குழுவினர் இரவு தங்கினர்.
செப்டம்பர் 24, அம்பத்தூர்
24.09.2021 மதியம் 2 மணிக்கு சென்னை 7வது மண்டல தூய்மைப் பணியாளர்கள் சங்க முதல் மாநாடு நடக்கும் டன்லப் விளையாட்டு மைதானத்திற்கு பரப்புரை வாகனம் இருசக்கர வாகனம் மற்றும் செங்கொடி அணிவகுப்போடு சென்றது.
அம்பத்தூர் தூய்மைப் பணியாளர்கள் மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்த போதும் பெருந்திரள் தொழிலாளர்களை அணிதிரட்டி செங்கொடிகள், சிவப்பு தொப்பிகள், தலைவர்களின் படங்கள் என டன்லப் மைதானமே சிவப்பு வண்ணமாக காட்சியளித்தது. மாநாட்டு தயாரிப்பு தோழர்கள் சாத்தியமானதை மட்டும் செய்யாமல் அவசியமானதை செய்து காட்டியுள்ளார்கள்.
மாநாட்டில் கலந்து கொண்ட தூய்மைப் பணி தொழிலாளர்கள் அம்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு கொடுத்தனர்.
பின்னர் நடத்த மாநாட்டிற்கு தூய்மைப் பணியாளர் அம்பத்தூர் மண்ட சங்க தலைவர் தோழர் அரிபிரசாந்த் தலைமை தாங்கினார். பரப்புரை பயணக் குழுவினருக்கு துண்டு அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாநாட்டு வேலைகள், கையெழுத்து இயக்கம் நிதி வசூல் என முன்னணி பங்காற்றிய 50க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு துண்டு அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 28 வரையிலான பரப்புரை பயணத்திற்கு சென்னை அம்பத்தூர் மண்டல தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பாக ரூ 50,000 நிதி வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், இடது தொழிற்சங்க மய்யத்தின் பொதுச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ் உரையாற் றினார்கள். பரப்புரை குழுவிற்கு தலைமையேற்று நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக்குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்றினார். உழைப்போர் உரிமை இயக்க மாநிலத் தலைவர் தோழர் கு.பாரதி நிறைவுரையாற்றினார்.
கூட்டத்தில் என்யுஎல்எம் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும், இரவுப் பணியில் ஈடுபடும் பெண் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் வேண்டும், பெண் தொழிலாளர்களிடம் ஒருமையில் பேசும், ஆபாசமாக பேசும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர்களிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், ரோசா, பகத்சிங், சிங்காரவேலர், பி.சீனிவாசராவ் ஆகிய தலைவர்களின் வண்ணப் படங்களையும் செங்கொடிகளையும் தூக்கிப் பிடித்த படியும், எல்டியுசி தொப்பியுடனும் தோழர்கள் அமர்ந்திருந்தது, சிறப்புக் கவனத்தைப் பெற்றது.
செப்டம்பர் 25, திருவள்ளூர்
25.09.2021 காலை 9.30 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் அலமாதிக்கு பரப்புரை வாகனம் சென்றது. செங்குன்றத்தில் நடைபாதை வியாபாரி சங்கத்தினர் பரப்புரை வாகனத்திலும் இருசக்கர வாகனங்களிலும் இணைந்து வந்தனர். அலமாதி பேருந்து நிறுத்தம் அருகில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 100 பேர் பரப்புரை பயணக் குழுவினரை வரவேற்றனர். கூட்டத்தில் தோழர் அன்புராஜ் தலைமை தாங்கினார். இடது தொழிற்சங்க மய்யத்தின் மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார் உரையாற்றினார்.
அங்கிருந்து புறப்பட்டு அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையத்திற்கு பரப்புரை வாகனம் புறப்பட்டது. 20க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 50 பேர் பரப்புரை குழுவினரை வரவேற்றனர். கூட்டம் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக்குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்றினார்.
மதிய உணவுக்கு பின்னர் ஜம்போ பேக் ஆலைவாயில் வாயில் வரவேற்பு கூட்டத்திற்கு வாகனம் புறப்பட்டது. ஜம்போ பேக் சங்க தலைவர் தலைமையில் ஆலைவாயில் கூட்டம் நடைபெற்றது. தோழர்கள் அன்புராஜ், எல்டியுசி மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார் உரையாற்றினர். இறுதியாக தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்ற கூட்டம் நிறைவு பெற்றது.
பின்னர் ஜனப்பன்சத்திரம் கூட்டுரோடு கூட்டத்திற்கு பரப்புரை வாகனம் புறப்பட்டது. ஜனப்பன் சத்திரம் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், பெண்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் சீதா உரையாற்றினர். கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அடுத்ததாக காரனோடைக்கு பரப்புரை வாகனம் புறப்பட்டது. கூட்டத்தில் தோழர் அன்புராஜ், மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன் உரையாற்றினர். காரனோடை பகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக கம்யூனிஸ்ட் கட்சி போராடி வெற்றி பெற்ற விவரங்களை அவர் எடுத்துரைத்தார்.
பின்னர் செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் உழைப்போர் உரிமை இயக்க நடைபாதை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு பரப்புரைக் குழு வாகனம் சென்றது. கூட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் மலைராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தோழர்கள் ராமன், எ.எஸ்.குமார் கு.பாரதி உரையாற்றினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக்குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்றினார்.
ஒரே நாளில் 6 கூட்டங்கள், பெருந்திரள் மக்கள் அணிதிரட்டல் என திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற 9ஆவது நாள் பரப்புரை, மாநிலம் தழுவிய பிரச்சார பயணத்தின் குறிப் பிடத்தக்க நிகழ்ச்சியாக அமைந்தது.
9ஆவது நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பரப்புரை குழுவினர், அம்பத்தூர் தோழர் கூடம் வந்து தங்கினர்.
செப்டம்பர் 26, சென்னை
26.09.2021 அன்று 10ஆவது நாள் பரப்புரை கூட்டம் மக்களுக்கான இளைஞர்கள் அமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. மக்களுக்கான இளைஞர் அமைப்பின் மாநில பொறுப்பாளர் தோழர் ஆண்டனி தினகர் தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்றினார்.
தோழர் ஆண்டனி தினகர் பேசிய உடனே செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இடது தொழிற்சங்க மய்யத்தின் மாநில தலைவர் தோழர் எ.எஸ்.குமார் எழுப்பிய உணர்வுபூர்வமான முழக்கம் கூட்டத்தின் எழுச்சியை கூட்டியது. மெட்ராஸ் கிளப்பில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதிய உணவுக்கு பின்னர் பெண்கள் அதிகாரம் சார்பில் மெட்ராஸ் ஜிம்கானா கிளப் வாயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு கூட்டத்திற்கு பரப்புரை குழு வாகனம் சென்றது.
பெண்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சீதா தலைமை தாங்கினார். மக்களுக்கான இளைஞர் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆண்டனி தினகர், எல்டியுசி மாநிலச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ், தோழர் நிவேதா (ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்) உரையாற்றினர். எல்டியுசி மாநில தலைவர் தோழர் எ.எஸ்.குமார் பேசும் போது தலைவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார். பரப்புரை குழுவினைரை கவுரவிக்கும் வகையில், சுதந்திர இந்தியாவின் முதல் தூக்கு மேடை தியாகி பாலுவின் இறுதிநாட்கள் புத்தகத்தை வழங்கினார். முன்னதாக ஜிம்கானா கிளப் கிளை சார்பில் பரப்புரை குழுவினருக்கு துண்டு அணிவித்து வரவேற்பு நடந்தது.
செப்டம்பர் 27, சென்னை
27.09.2021 அன்று காலை 9 மணிக்கு, உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் குழு தோழரும் எல்டியுசி மாநிலச் செயலாளருமான தோழர் பழனிவேல் அவர்களை பரப்புரை குழு சார்பில் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி, தோழர்கள் கோவிந்தராஜ், ஜேபி, சக்திவேல் ஆகியோர் சென்று சந்தித்து, அவரது மனைவியிடம் நலம் விசாரித்து வந்தோம்.
பின்னர் அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையம் முன்பு நடந்த அனைத்து தொழிற்சங்க மறியல் போராட்டத்தில் பரப்புரை குழு பங்கேற்றது.
பகல் 12 மணிக்கு புறப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் வாயில் அருகே ஜனநாயக வழக்கறிஞர்கள் சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு பரப்புரை குழு சென்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக வழக்கறிஞர் சங்கத் தலைவர் தோழர் கு.பாரதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வழக்கறிஞர்கள் மில்டன், சையது ஆரூண், சமூகநீதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் பார்வேந்தன், மூத்த வழக்கறிஞர் விஜயகுமார் ஆகியோர் உரையாற்றினர். தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்றினார்.
பரப்புரை பயண கோரிக்கைகள் வழக்கறிஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன.
செப்டம்பர் 27, காஞ்சிபுரம்
மதிய உணவுக்கு பின்னர் பரப்புரை வாகனம் சுங்குவார்சத்திரத்திற்குச் சென்றது. ஒருமைப்பாடு மன்றம் சார்பில், சான்மினா (எல்டியுசி), மேக்னா (எல்டியுசி), பிபிஜி ஏசியன் பெயிண்ட் (யுஎல்எப்) கிளை தொழிலாளர்களின் வரவேற்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒருமைப்பாடு மன்ற ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜகுரு தலைமை தாங்கினார். கூட்டத்தில் சான்மினா கிளை துணைத் தலைவர் தோழர் அர்ஜ÷ன், பிபிஜி கிளை சங்க நிர்வாகி தோழர் சூர்யா, மேக்னா கிளை தலைவர் தோழர் செல்வம் ஆகியோர் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்றினார்.
அடுத்ததாக பரப்புரை வாகனம் படப்பை சென்றது. படப்பையில் சான்மினா, மேக்னா தொழிலாளர்கள் பரப்புரை பயணக்குழுவுக்கு வரவேற்பு கொடுத்தனர். ஒருமைப்பாடு மன்ற ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜகுரு தலைமை தாங்கினார். கூட்டத்தில் சான்மினா கிளை துணைத் தலைவர் தோழர் அர்ஜ÷ன் உரையாற்றினார். தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது. இரவு காஞ்சிபுரம் மாவட்ட திருபெரும்புதூர் அலுவலகத்தில் பரப்புரை குழு தங்கியது.
செப்டம்பர் 28, திருபெரும்புதூர்
செப்டம்பர் 28 காலை திருபெரும்புதூர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பரப்புரை குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி தலைமையில் இரு சக்கர வாகனங்களில், பிபிஜி ஏசியன் பெயிண்ட் தொழிலாளர் போராட்டப் பந்தலுக்கு சென்று பரப்புரை குழு சார்பாக ஒருமைப்பாடு தெரிவித்தோம். தோழர் எஸ்.குமாரசாமி அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
செப்டம்பர் 28, பகத்சிங் பிறந்த நாளில் நடந்த, பரப்புரை பயணத்தின் நிறைவுநாள் கூட்டத்திற்கு தலைநகர் மண்டல தொழிலாளர்களின் ஒருமைப்பாடு மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாலை 4 முதலே பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், சென்னை 7ஆவது மண்டல தூய்மைப் பணியாளர்கள் குவிய துவங்கினர். நிறைவு நாள் கூட்டத்திற்கு கோவையில் இருந்து தோழர்கள் வந்திருந்தார்கள். கூட்டத்திற்கு அனுமதி அளித்த காவல்துறை, இறுதி வரை கூட்டத்திற்கு கட்டுபாடுகளை விதித்து வந்தது.
கூட்டத்திற்கு தலைநகர் ஒருமைப்பாடு மன்ற ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜகுரு தலைமை தாங்கினார். மக்களுக்கான இளைஞர்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆண்டனி தினகர், தோழர் அருண் (செயலாளர் சென்னை ஃபோர்டு எம்பிளாயிஸ் யூனியன்), கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கத்தின் பொருளாளர் தோழர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், யுஎல்எப் செயற்குழு உறுப்பினர் தோழர் பன்னீர்செல்வம், சான்மினா கிளைத் தலைவர் தோழர் நித்தியானந்தம், சென்னை 7ஆவது மண்டல தூய்மை பணியாளர் சங்கத் தலைவர் தோழர் ஹரிபிரசாந்த், எல்டியுசி மாநில துணைத் தலைவர் தோழர் ஆர்.மோகன், கம்யூனிஸ்ட் கட்சி திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், எல்டியுசி பொதுச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ், பெண்கள் அதிகாரம் மாநில பொறுப்பாளர் தோழர் சீதா, எல்டியுசி மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார், எல்டியுசி மாநிலச் செயலாளர் தோழர் கு.பாரதி உரையாற்றினர். இறுதியாக கட்சி ஆலோசனைக்குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்றினார். முன்னதாக தொழிலாளர் ஒருமைபாடு மாநாட்டிற்கு எல்டியுசி மாநில சிறப்புத் தலைவர் புவனேஸ்வரி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை தோழர் ஆண்டனி தினகர் வாசித்தார்.
இறுதியாக, தமிழக அரசுக்கு சில ஆலோசனைகள்
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் என மேற்கு மண்டல மாவட்டங்கள் கடந்து டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருச்சி வழியாக (நாகை, தஞ்சை மாவட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்) கிராமப்புற மாவட்டமான திருவண்ணாமலை சென்று தலைநகர் மண்டல மாவட்டங்களான செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் என 11 மாவட்டங்களில் 2000 கி.மீ தூரத்திற்கு பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட்டது.
தலைமையகத்திலிருந்து பல்லாயிரக்கணக்கிலும் மாவட்ட மட்டங்களில் பல்லாயிரக்கணக்கிலும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பயணத்தில் மொத்தம் முப்பது பிரச்சார கூட்டங்கள் நடந்தன. இதில் சங்கம் கடந்து தோழமையுடன் தொழிலாளர் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து கலந்து கொண்ட மூன்று கூட்டங்களில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு எதிரான கண்டனம் கூட்டமும் (நாமக்கல் கூட்டம்) அடங்கும்.
பரப்புரை பயணத்தை தலைமையேற்று வழிநடத்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி ஓரிரு கூட்டங்கள் தவிர தவிர அனைத்து கூட்டங்களிலும் உரையாற்றினார்.
தமிழக அரசியல் களத்திற்கு புதிய செய்தியை தோழர் எஸ்.குமாரசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் எதிர்கட்சியாக கம்யூனிஸ்ட்கள் இருக்க முடியும். இருக்க வேண்டும். மதவாத பிஜேபி தமிழகத்தில் காலூன்ற இடம் தரக் கூடாது.
திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் எதிரெதிராக நிறுத்தும் அரசியல் தமிழகத்திற்கு பயன் தராது. அது, கார்பரேட் ஆதிக்க, சாதி ஆதிக்க, ஆணாதிக்க மதவாத பிற்போக்கு தன்மையுடைய வன்முறை கும்பல்களுக்கே சாதகமாக முடியும்.
கம்யூனிஸ்டுகள், பெரியாரின் சமூக நீதி (கருப்பு), அம்பேத்காரின் சாதி ஒழிப்பு (நீலம்) இணைத்து கொண்டு செல்ல வேண்டும். சாதி ஒழிப்பில் கம்யூனிஸ்ட் கட்சி முன் நிற்கும்.
தமிழக அரசுக்கு முக்கியமான பிரச்சனை களில் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனைக் குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி சில ஆலோசனைகள் வழங்கினார்.
1. புதிதாக வந்துள்ள ஆளுனர் ஆர்.என்.ரவி எழுவர் விடுதலைக்கு கையொப்பம் இட வேண்டும். அவர் கையொப்பமிட மறுத்தால் ஆளுனர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு அரசு முழுஅடைப்புக்கு அழைப்பு கொடுக்க வேண்டும்.
2. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாநிலம் முழுவதும் 2 நாட்கள் முழு அடைப்புக்கு அழைப்பு கொடுத்தால், மக்கள் விரோத பாஜக அரசிற்கு எதிரான திமுகவின் உறுதியான எதிர்ப்பு அரசியலுக்கு தமிழ்நாட்டு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள்.
3. சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும். 90% நிரந்தர தொழிலாளர்கள் இருக்க வேண்டும்.
4. அன்று நோக்கியா, ஃபாக்ஸ்கான், இன்று ஃபோர்டு என்ற நிலை தொடராமல் இருக்க, முதலீட்டாளர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும்போது தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு அவர்களின் பணிஓய்வுக் காலம் வரை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்ற சரத்து போடப்பட வேண்டும்.
5. முதலாளித்துவத்தை உயர்த்தி பிடிக்கும் இந்துத்துவா வர்ணாசிரமத்தை கொண்டு எப்படி மக்களை பிரித்து வைத்துள்ளதோ அதேபோல் முதலாளித்துவமும் தொழிலாளி வர்க்கத்தை பதிலி, ஒப்பந்தத் தொழிலாளி, நிரந்தர தொழிலாளி என பிரித்து வைத்துள்ளது. வர்ணாசிரமத்தை எதிர்க்கும் திமுக அரசு பல லட்சக்கணகான கவுரமான நிரந்தரப் பணிகளை உருவாக்க வேண்டும்.