தலையங்கத்துக்குப் பதிலாக
ஒருமைப்பாடு மன்றத்தின் தொழிலாளர் ஒற்றுமை மாநாடு
தலைநகர் மண்டலமான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், தமிழ்நாட்டில் போடப்பட்டுள்ள முதலீட்டின் பெரும்பகுதி இருக்கின்றது.
இந்திய நாட்டின் தொழில்மயமாக்கத்தில், இந்த தலைநகர மண்டலத்திற்கு ஒரு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா, பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என யார் முதலமைச்சராக இருந்தபோதும், இந்த தலைநகர் மண்டலத்தை ஆதாரமாகக் காட்டியே, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள், வாருங்கள் என முதலீட்டாளர்களை அழைப்பார்கள். இப்போதைய முதல்வர், ஹுண்டாய் நிறுவனம் ஒரு கோடி கார்கள் தயாரித்து முடித்த தருணத்தில், தமிழ்நாட்டை முதலீட்டாளர்களை முதல் முகவரியாக்க சபதம் ஏற்றுள்ளார்.முதலமைச்சர், முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்ற உறுதி ஏற்றபோது, தலைநகர் மண்டலத்தின் தொழிலாளர்களை, வர்க்கப் போராட்டத்திற்கான முதல் முகவரியாக தமிழ்நாட்டை மாற்றுமாறு தொழிலாளர் வர்க்கத்திற்கு, ஒருமைப்பாடு மன்றத்தின் ஒற்றுமை மாநாடு அழைப்பு விடுத்தது.
ஒருமைப்பாடு மன்றத்தின் ஒற்றுமை மாநாடு, பகத்சிங் பிறந்த தினமான செப்டம்பர் 28 அன்று நடத்தப்பட்டது. நாடென்றால் மக்கள் என்று போராட்ட அரசியலுக்கு, மக்கள் சார்பு அரசியலுக்கு இலக்கணம் சொல்லித் தந்த, பகத்சிங் பிறந்த நாளன்று நடைபெற்ற மாநாடு, மக்கள் விரோத, தேச விரோத மோடி அரசு பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டது. பணமயமகற்றல் துவங்கி, இப்போது சொத்துக்களை பணமயமாக்குதல் வரை அடாவடி நடவடிக்கைகள் எடுத்து வரும் மோடி அரசு, கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கிறது. ஆனால், சொந்த நாட்டு மக்களை வருமானம், வேலை இழக்க வைக்கிறது. விவசாயத்தை ஒழித்துக் கட்டவும், ஜனநாயகத்தை, ஜனநாயக நிறுவனங்களை அழித்தொழிக்கவும் முயற்சி செய்கிறது. இந்தத் தீய நிகழ்ச்சிநிரலை முன்நகர்த்த, இந்துத்துவ அரசியலை ஆயுதமாக பயன்படுத்துகிறது. பகத்சிங் பெயரால், மோடி அரசை வீழ்த்த ஆனதெல்லாம் செய்யுமாறு, தொழிலாளர்களுக்கு மாநாடு அழைப்பு விடுத்தது.
பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17 துவங்கிய பரப்புரை பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக இந்த நாள் அமைந்தது. சூத்திர இழிவு போக்க, சாதி ஆதிக்கம் தகர்க்க, பெண்ணடிமை ஒழிக்க, மாநில உரிமை, தமிழ் மொழி உரிமை, தமிழ் மக்கள் நலன் காக்க, தமிழ்நாடெங்கும் 8,20,000 மைல் சுற்றி சுற்றி வந்து, 10,700 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, 21,400 மணிநேரம் தமிழ் மக்களிடம் உரையாடிய பெரியாரிடம், அநீதிகளை ஒழித்துக் கட்ட அவரது கைத்தடியை உரிமையோடு வாங்கிக் கொண்டுள்ளதாக மாநாடு சொன்னது. அறமும், அறிவியலும், மகிழ்ச்சியும் நிறைந்த சமத்துவ சமூகத்திற்கான தொலைநோக்குப் பார்வைக்கு, பெரியாரின் கண்ணாடியை வாங்கிக் கொண்டுள்ளதாக மாநாடு சொன்னது.
தமிழ்நாட்டில் இதுவரை இந்துத்துவா வளர முடியாமல் இருப்பதற்கு, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆற்றிய பங்கை மனதில் கொண்டு, தமிழ் தேசியம் எதிர் திராவிடம் என்ற கதையாடல் இந்துத்துவாவிற்கே உதவும் என, மாநாடு எச்சரித்தது. தமிழ்நாட்டின், தமிழ்நாட்டு மக்களின் மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, கல்வி உரிமை, வளங்கள் மீதான உரிமை, மாநில அதிகாரங்கள் காக்க போராடுகிற அதே நேரம், வலதுசாரி அரசியல் பலப்படாமலிருக்க, கம்யூனிஸ்டுகளின் போராடும் எதிர்க்கட்சி பாத்திரத்தை மாநாடு வலியுறுத்தியது.
மாநாடு தேர்தல் வாக்குறுதிகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியது. அனைத்துப் பெண்களுக்கும், ரேஷன் அட்டை அடிப்படையில் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை, எரிவாயு மானியம் ரூ.100, சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியராக்குதல், 3 1/2 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளில் ஆட்கள் நிரப்புதல், 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுமாறு மாநாடு கேட்டுக் கொண்டது.
கண்ணகி - முருகேசன் சாதியாதிக்கப் படுகொலை வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, வரவேற்கத்தக்க தீர்ப்பு வெளியாகியுள்ள பின்னணியில் திருவள்ளூர் மாவட்டத்தின் காரணி கிராமத்தில், அமுல் என்ற தலித் பெண்ணை திருமணம் செய்து கொண்ட கவுதமன் என்ற, வன்னியர் பிரிவைச் சேர்ந்த இளைஞர் அவரது உறவினர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகிறது. இது போன்ற படுகொலைகளுக்கு சமூக நீதி பேணும் தமிழ்நாட்டில் இடம் இருக்கக் கூடாது என்றும் சாதியாதிக்கக் கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசாங்கம் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மாநாடு வலியுறுத்தியது.
நீட் தேர்வை ஒழித்துக் கட்ட, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர, எழுவர் விடுதலைக்காக ஒன்றிய அரசுக்கு எதிராக உறுதியாக போராட மக்களுக்கு அழைப்பு விடுமாறும், முன்கை எடுக்குமாறும், மாநில அரசை மாநாடு வலியுறுத்தியது.
தொழில் நிறுவனங்களோடு மாநில அரசு ஏற்கனவே போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் இனி போடவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும், அனைத்து தொழில் நிறுவனங்களும், நிலையாணைகளுக்கு உட்பட்டு, தொழிலாளர்கள் ஓய்வு பெறும் 58 வயது வரையில் அவர்கள் பணியில் தொடர்வதை உறுதி செய்யவும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவும், நிறுவனத்தின் வேலை வாய்ப்புகளில், 90% நிரந்தர வேலை வாய்ப்புகளாக இருப்பதை உறுதி செய்யுமாறும் ஷரத்துகள் போட மாநாடு வலியுறுத்தியது.
8 மணி நேர வேலை நாள், 5 நாட்கள் வேலை வாரம், மாதம் ரூ.26,000 குறைந்தபட்ச சம்பளம் கொண்ட, பல லட்சக்கணக்கான, நிரந்தரமான, பாதுகாப்பான, கவுரவமான வேலைகள் வேண்டும் என தொடர்ந்து போராட அழைப்பு மாநாடு விடுத்தது.
மனிதக் கழிவை மனிதரே அகற்றும் வேலை உள்ளிட்ட ஆபத்தான, அழுத்தும் சுமையாக உள்ள வேலைகளை இயந்திரமயமாக்க வேண்டும் என மாநாடு வலியுறுத்தியது.
தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கின்ற நான்கு சட்டத்தொகுப்புகளை, கார்ப்பரேட் ஆதரவு இயல்பு கொண்ட விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என மாநாடு வலியுறுத்தியது.
பெண்களின் வீட்டு உழைப்பும், சமூக உழைப்பு என அங்கீகரித்து, ஊதியம் வழங்க வேண்டும் என்றும், பெண் தொழிலாளர்களுக்கு, மாதவிடாய் காலத்தில் இரண்டு நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் எனவும் மாநாடு, வலியுறுத்தியது.
வேலைநிறுத்த உரிமையை அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும் என்றும், தொழிற்தகராறுகளில் காவல்துறை தலையிடக் கூடாது என்றும் மாநாடு வலியுறுத்தியது.
கொரோனா கால வேலை பறிப்புகள் திரும்பத் தரப்பட வேண்டுமென்றும், ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு, எட்டு நாட்கள் சம்பள பிடித்தம் என்ற குரூரமான சட்டப்பிரிவு அகற்றப்பட வேண்டுமென்றும் மாநாடு வலியுறுத்தியது.
தமிழ்நாடெங்கும் அரசுத் துறையில், பொதுத்துறையில், கூட்டுறவுத் துறையில், தனியார் துறையில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் எவரானாலும், இரண்டு வருடங்களில் 480 நாட்கள் பணிபுரிந்தவர்கள் நிரந்தரம் செய்யப்பட வேண்டுமென்றும் மாநாடு வலியுறுத்தியது.
விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கிராமப்புற தொழிலாளர்கள், உழைக்கிற விவசாயிகள் நலன் காக்க, அரசு சிறப்பு சட்டம் போட வேண்டும் என மாநாடு வலியுறுத்தியது.
பழைய ஒப்பந்தம் முடிகிற தேதியில் புதிய ஒப்பந்தம், மூன்றாண்டுகள் தாண்டாத ஒப்பந்தம், ஒப்பந்தத்தின் முதல் தேதியிலிருந்து ஒப்பந்தப் பயன்கள் ஆகிய உரிமைகளை சட்டபூர்வமாக்க மாநாடு வலியுறுத்தியது.
தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்த எந்த வகையிலும் உதவாத, மனிதவள மேம்பாட்டுக்கு, தொழிலாளர்களுக்கு முற்றிலும் எதிராக உள்ள, அனைத்து நிறுவனங்களி லும் செயல்படுகின்ற மனிதவளத் துறையை, மனிதவதை முகாம் என்று அழைப்பது என மாநாடு முடிவெடுத்தது.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டுமென்றும், சென்னையில் உச்சநீதிமன்ற கிளை நிறுவப்பட ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும் வழிவிட வேண்டும் எனவும் மாநாடு வலியுறுத்தியது.
ஃபோர்டு ஆலைமூடலை அரசு தடுக்க வேண்டுமென்றும், சான்மினா, பிபிஜி ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற தொழிலாளர் போராட்டங்களில் அரசு உடனடியாக தலையிட வேண்டுமெனவும் மாநாடு வலியுறுத்தியது.
கொரோனா தணிந்து வரும் காலத்தில், கொரோனாவை விட கொடிய முதலாளித்துவத்திற்கு சவால் விடுத்த மாநாடு, அரசியல்ரீதியாக சிவப்பு, கருப்போடும், நீலத்தோடும், பச்சையோடும் போராட்ட ஒற்றுமை கட்ட வேண் டிய தேவையை வலியுறுத்தி, உழைக்கிற மக்கள் அனைவரும் ஒவ்வொருவருக்காகவும், ஒவ்வொருவரும் அனைவருக்காகவும் நிற்க வேண்டும் என வலியுறுத்தியது.